படித்தது மைக்ரோபயாலஜி... செய்வது விவசாயம்!



தர்மபுரி, கிருஷ்ணகிரியில் 34 பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்திருக்கிறார் இந்த 26 வயது இளைஞர்...

‘‘எல்லோரும் ஆரோக்கியமான நல்ல சோறு சாப்பிடணும் என்பதுதான் என்னுடைய நோக்கமே... அதுக்காகவே கிராமம் கிராமமா அலைஞ்சு திரிஞ்சு நம்முடைய பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து அதை பரவலாக்கிட்டு இருக்கேன். இன்னும் நிறைய பண்ண வேண்டியிருக்கு...’’ அத்தனை களைப்பிலும் அலுப்பில்லாமல் உற்சாகமாகப் பேசுகிறார் அமர்நாத். 26 வயதே நிரம்பிய இளைஞர்.

மைக்ரோபயாலஜி முடித்துவிட்டு அப்படியே இயற்கை விவசாயம் நோக்கி நகர்ந்தவர். பிறகு பாரம்பரிய காய்கறி மற்றும் சிறுதானிய ரக விதைகள் சேகரிப்பாளராகி, அதீத தேடலால் தன் சொந்த மாவட்டமான தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகளில் மட்டும் 34 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்துள்ளார்.‘‘சொந்த ஊர் தர்மபுரி பக்கத்துல இருக்கிற ஜெ.பாளையம்னு ஒரு கிராமம். கடந்த ஐந்தாண்டுகளா பாரம்பரிய விதைகள், நெல் ரகங்கள் சேகரிப்புல இருக்கேன். என்னுடைய பணி மரபு விதைகளை சேகரிக்கிறதும், அதை பயிர் செய்றதும், அப்புறம், விவசாயிகள்கிட்ட கொண்டு போய் சேர்க்கிறதும்தான்.

2016ல் சென்னையில் மைக்ரோபயாலஜி முடிச்சதும் பெருசா வேலை எதுவும் கிடைக்கல. அந்நேரம், நமக்குதான் கிராமத்துல ஒன்றரை ஏக்கர் நிலம் இருக்கே... அதுல விவசாயம் பண்ணலாம்னு வந்துட்டேன். ஆனா, வீட்டுல, பட்டினம் போய் பட்டப்படிப்பு படிச்சிட்டு இப்படி விவசாயம் பண்ணப் போறேன்னு சொல்றானேனு வருத்தம். என் தாத்தா விவசாயம் பண்ணினார். என் அப்பா செல்வம் அவருக்கு உதவியாக இருந்துட்டே பில்டிங் கான்டிராக்ட் பணிகள் செய்றார். இதனால, விவசாயம் பயனளிக்காதுனு பயம்.

ஆனா, நான் விவசாயத்திற்குள் போவோம்னு தைரியமா இறங்கினேன். இப்ப ரொம்ப திருப்தியாகவும், மனநிறைவாகவும் இருக்கேன்...’’ என நம்பிக்கையுடன் சிரிக்கிறார் அமர்நாத்.
‘‘எங்க பகுதியில் சிறுதானியம்தான் அதிகம் விளைவிப்பாங்க. அப்புறம் நெல் போடுவாங்க. முன்னாடி இவங்க மாட்டுச் சாணம் உள்ளிட்டதை உரமா போட்டு விவசாயம் செய்தாங்க. அப்புறம், யூரியா பயன்படுத்தினாங்க. செயற்கை ரசாயன உரம் ரொம்ப குறைவுதான்.  

அதனால நான் எதுவும் போடாமல் இயற்கை விவசாயம் பண்ணுவோம்னு நினைச்சேன். அதுல சின்ன வயசுல நான் பார்த்த தக்காளி, கத்திரி, வெள்ளரி எல்லாம் செய்வோம்னு தோணுச்சு. அப்படி ஆரம்பிச்சதுதான் என் பயணம். காய்கறிகளுக்கான மரபு விதைகள் தேடிப் போனேன். முதல்ல என் சொந்த கிராமத்துல இருந்தே தொடங்கினேன். அப்ப நிறைய பேர்கிட்ட பேசும்போது நெல் ரகங்கள் பத்தி சொன்னாங்க. கார் நெல், வெள்ளைக்கார், குள்ளக்கார் எல்லாம் விளைவிச்சோம்னு பெருமைப்பட்டாங்க. அடுத்து சவுல் சம்பா, கிச்சடினு பலவிதமான நெல் ரகங்கள் விளைவிச்சதை குறிப்பிட்டாங்க.

சரினு ஊருக்கான விதைகள் அது நெல் ரகமா இருந்தாலும் சரி, காய்கறி, சிறுதானிய ரகமா இருந்தாலும் சரி, என்னவெல்லாம் இருக்குதோ அதைத் தேடுவோம்னு போனேன்.
என் குடும்ப நண்பர் ஒருத்தர் மோதூர் கிராமத்திற்கு வழிகாட்டினார். இந்த ஊர்ல என்னை மாதிரியான இளைஞர் ஒருவர், அவங்க தாத்தா காலத்துல விளைஞ்ச நெல் ஒன்றை அது அழியாமல் இருக்க விளைவிச்சிட்டு இருந்தார். அதன் பெயர் கார் நெல்.

அந்த நெல்லுக்காக ரொம்ப நாட்கள் அலைஞ்சேன். அவங்களுக்கு நல்ல அறிமுகமான பிறகே அந்த இளைஞர் எனக்கு நெல்லினை கொடுத்தார். அதுக்கு நான் மோதூர் கார் நெல்னு ஊர் பெயரை சேர்த்து வச்சேன். குழந்தைகளின் வளர்ச்சிக்கு இந்த அரிசியின் சத்து ரொம்ப பயனுள்ளதா இருக்கும்னு சொன்னாங்க.

அடுத்து தொடர்ந்து அறுபது வயது கடந்த பெரியவர்கள்கிட்ட பேசிக்கிட்டே இருக்கிறப்ப நிறைய தகவல்கள் தந்தாங்க. அப்படியாக அரசம்பட்டியில் ஒரு விவசாயியை சந்திச்சேன். அவர் பாரூர் பக்கம் ஒருத்தர் 35 ஆண்டுகளா மானாவாரி நெல் ரகம் பண்ணிட்டு இருக்கார்னு சொன்னார். அங்க போனேன்.

அவங்க அந்த பாரம்பரிய நெல் ரகத்தை கொட்ட அரிசி, சிவப்பு அரிசினு வெவ்வேறு பெயர்கள்ல அழைச்சாங்க. இதை ஆண்டுக்கு நாலு போகம் போடலாம்னு சொன்னாங்க. சும்மா விதைச்சிட்டு வந்தால்போதும். அதுவாகவே விளைஞ்சு நிற்கும். பிறகு அறுவடைக்கு மட்டும் போகணும்னு தெரிஞ்சுகிட்டேன். அதை சேகரிச்சேன்.

அப்புறம், தேவிராஹள்ளினு ஒரு கிராமத்துல கருப்பு நெல்னு ஒரு பாரம்பரிய ரகம் சேகரிச்சேன். இது சர்க்கரை நோய்க்கு சிறந்த ரகம். அங்க ஒரு அம்மா எனக்கு நிறைய தகவல்கள் கொடுத்தாங்க. அதாவது, கறிவிருந்து படைக்கறப்ப எல்லாம் தூதாசினு ஒரு நெல் ரகத்தை பயன்படுத்தியிருக்காங்க. அவ்வளவு சுவை தருமாம். அதைத் தேடிட்டு இருக்கேன். அப்புறம் தர்மபுரி மாவட்டத்துல ஒவ்வொரு விசேஷத்திற்கும் ஒருபடி பாரம்பரிய நெல்லை வச்சு பலகாரம் செய்திருப்பதும் தெரிஞ்சது.

இந்தக் கருப்பு நெல்லை கோடியனூர், சந்தூர், ஏரியனூர்னு பக்கத்துல இருந்த கிராமங்களும் பரவலா பண்ணியிருக்காங்க. இதன்பிறகு மாவட்டம் முழுக்க உள்ள தெரிஞ்சவர்களிடம் அவங்க ஊர்ல என்ன நெல் விளைஞ்சதோ அதைப்பற்றின தகவல்கள் வேணும்னு கேட்டேன். அடுத்து மலைக் கிராமங்களை நோக்கி பயணிச்சேன்.

தர்மபுரி டவுன்ல இருந்து 20 கிமீ தொலைவுல வத்தல்மலைனு ஒரு மலைக்கிராமம் இருக்குது. அங்க ஒரு நெல் விளையுது. அதை சேகரிச்சு அதுக்கு வத்தல்மலை நெல்னு பெயர் வச்சேன். இந்த வத்தல்மலை நெல் ரகம் தசைகளுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கக் கூடியது. இது எங்க ‘தமிழர் மரபு சந்தை’ ஒருங்கிணைப்பாளர் உமாசங்கர் அய்யா மூலமா கிடைச்சது. இவர்தான் என் ஆசான், வழிகாட்டி எல்லாமே. எனக்கு பாரம்பரிய ரகங்களை சேகரிக்க பக்கபலமாக இருப்பவர்.

அப்புறம் தேன்கனிக்கோட்டை, பெட்டமுகிலாலம், சித்தேரி மலைனு நிறைய கிராமங்களுக்குப் போனேன். இதுல சித்தேரிமலையில் வெள்ளை நெல், தூங்ரா நெல்னு ரெண்டு ரகங்கள் விளைவிக்கிறாங்க. இதுல வெள்ளை நெல் நீண்ட வாழ்நாளை தரக்கூடிய ரகம். தூங்ரா நெல் ரகம் தூக்கத்திற்கு உன்னதமானது. இப்படியாக நான் 34 பாரம்பரிய நெல் ரகங்களை எங்க தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி பகுதிகள்ல மட்டும் சேகரிச்சேன். இதுல ஆச்சரியம் என்னனா, இந்த 34 நெல் ரகங்களும் செம்மண், வண்டல், கரிசல் மண்ணுனு எந்த மண்ணுல போட்டாலும் வளருது. இதை சோதிச்சு பார்த்தே சொல்றேன்...’’ என்கிறவர், நிதானமாகத் தொடர்ந்தார்.

‘‘இதுக்கிடையில் காய்கறிகள், சிறுதானியம் உள்ளிட்டவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து மரபு விதைகளைத் தேட ஆரம்பிச்சேன். ஏன்னா என் தாத்தா, ‘நம்மூர்ல ஒரு வரகு விளையும். அதன் கதிர் ஓரடி வரை இருக்கும். எவ்வளவு தண்ணீர் இருந்தாலும் அது வளரும்’னு சொன்னார். இப்பவரை அதைத் தேடிட்டு இருக்கேன். கிடைக்கல. ஆனா, பெருவரகு தேடிக் கண்டுபிடிச்சேன். என் கிராமத்துல கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு பெருவரகு விளைவிச்ச நபர் நான்தான். ஆனா, தாத்தா சொன்னது மூணு மாச வரகுப் பயிர்.

இதேபோல எங்க பகுதியில் இருந்த ஒரு கத்திரி ரகத்தைத் தேடிட்டு இருக்கேன். அதை கரும்புத் தோட்டத்துல மட்டுமே விளைவிச்சு இருக்காங்க. ஏழடி உயரம் வளரக்கூடியதுனு சொல்றாங்க. ஒரு ஏக்கருக்கு நூறு டன் விளைச்சல் தந்திருக்கு. இப்ப உள்ள ஒட்டு ரக கத்திரி விதை, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விட மூன்று மடங்கு மகசூல் கொடுத்திருக்கு. ஊடு பயிரா போட்டும் நல்ல விளைச்சலை எடுத்திருக்காங்க. அப்புறம், ஆறடியில் விளையக்கூடிய கொத்தவரங்காயும் எங்க பகுதியில் இருந்திருக்கு.

இப்பவும் குறிப்பிட்ட சிலர் இதை விளைவிக்கிறாங்க. வேர்ல இருந்து நுனி வரைக்கும் காய் வைக்கும். இதுல ஒரு மரபு ரகத்தை நான் கண்டுபிடிச்சு சேகரிச்சேன்.
இப்ப 60 வகையான கத்திரி ரகமும், 40 வகையான பூசணிக்காய் ரகமும் சேகரிச்சிருக்கேன். தவிர வெண்டை, அவரைனு நிறைய காய்கறிகளின் மரபு விதைகளும் கிடைச்சது. எங்க பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொடிக் காய்கறிகள் இருந்திருக்கு. அவரையில் மட்டும் குறைஞ்சது 200 ரகங்கள் இருக்கும். இப்ப வழக்குல 150 அவரை இருக்குது. இதுல பெரும்பாலும் விதைகள் கிடைக்காது.

அவங்களுக்கே தெரியாமல் கொண்டு வந்தால்தான் உண்டு.ஏன்னா, இங்குள்ள பெண்கள் விதை ரகங்களை லட்சுமி தெய்வமா கருதுவாங்க. பணத்தைக் கூட கொடுப்பாங்க. ஆனா, காய்கறி விதைகள், நெல், சிறுதானிய விதைகள்னு எதையும் தரமாட்டாங்க. இதைக் கொடுத்தால் உணவுப் பஞ்சம் வந்திடும்... நமக்கு ஏதாவது கெட்டது நடக்கும்னு நம்பிக்கைகள் வச்சிருக்காங்க. அந்த ஊர் அல்லது சுற்றுவட்டாரம் தாண்டி அந்த ரகம் வெளியே போகாது.

நான் இந்த விதைகளை சேகரிச்சு முந்நூறு முதல் நானூறு நாற்றுகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கும் வேண்டியவர்களுக்கும் கொடுத்திடுவேன். விதைகளாகவும் கொடுக்குறேன். நாத்துகளாகவும் வழங்குறேன். இந்த 34 ரக நெல்லையும் உயிர்ப்புடன் வச்சிருக்கணும் என்பதே என் எண்ணம். இதுதவிர நான் தமிழகம், கேரளா, வடமாநிலங்கள்ல 250 வகை நெல் ரகங்களைச் சேகரிச்சு வச்சிருக்கேன். இது நண்பர்கள் வழியா சேகரிச்சது.என்னைப் பொறுத்தவரை எனக்கு இதை பாதுகாக்கணும் என்பதைவிட பரவலாக்கணும் என்பதே ஆசை. என் குடும்பத்துல அண்ணன், தம்பி, பங்காளி எல்லாம் தலா ஐந்து ரகங்கள் போட்டாங்கனா குறைஞ்சது 50 மரபு ரக நெல்களைக் காப்பாத்த முடியும். அதேபோல ஒவ்வொரு குடும்பமும் ஒரு நெல்லை பயிரிட்டாலே போதும். அது பரவலாகும்.

என் இலக்கு எல்லாம் எதிர்காலத்துல குறைஞ்சது ஆயிரம் பேர்கிட்டயாவது பாரம்பரிய நெல், காய்கறி, சிறுதானிய ரகங்களை கொண்டு போய்ச் சேர்க்கணும் என்பதுதான். அப்படி செய்திட்டால் நான் நினைக்கிறமாதிரி இங்க எல்லோருக்கும் ஆரோக்கியமான நல்ல சோறு கிடைக்கும்...’’ நம்பிக்கை மிளிர சொல்கிறார் அமர்நாத்.

பேராச்சி கண்ணன்