ஒவ்வொரு காவல் நிலையமும் எனக்கு லேண்ட்மார்க்!



22 ஆண்டுகளாக போலீஸ் தொப்பி தைக்கும் இளைஞர்

காக்கி நிறத்தில் ஒரு பழைய டிராவல் பேக். கூடவே நீலநிறத்தில் ஒரு தோள் பை. தோள் பையில் தனக்குத் தேவையான உணவு, உடை, தண்ணீர் பாட்டில் இதர பொருட்களையெல்லாம் வைத்திருக்கிறார் அந்த இளைஞர். டிராவல் பேக்கில் ஊசி, நூல், அங்குஸ்தான், பல்வேறு அட்டைகள், கூடவே அரைகுறையாய் தைத்து விடப்பட்ட போலீஸ் தொப்பிகளை எடுத்து கடை விரிக்கிறார். அவரைச்சுற்றி ஏகப்பட்ட போலீஸ்காரர்கள்.‘‘பாய் நேரமாச்சு. முதல்ல தைச்சுக் கொடுங்க!’’ என்கிறார் ஒரு போலீஸ்காரர்.

‘‘தைச்சுட்டு போன் செய்யுங்க... நான் வந்து வாங்கிக்கிறேன்!’’ என்று தன் கையில் இருக்கும் தொப்பியை கொடுத்துப் போகிறார் இன்னொரு போலீஸ்காரர். ‘‘பாய்... பாய்... இந்த தொப்பியில் ஒரே ஒரு பட்டன்தான் போயிருக்கு. கையோடு வச்சுக் கொடுத்திருங்க. ட்யூட்டி நேரம்!’’ என அவசரப்படுகிறார் மற்றொரு போலீஸ்காரர்.
இன்னும் பல போலீஸ்காரர்கள் தம் தொப்பிகளை கழற்றிக் கொடுத்து விட்டு ஓரமாய் இருக்கும் சிமெண்ட் திண்ணையில் காத்திருக்கிறார்கள்.‘‘எப்பவும் போலீஸ் ஸ்டேஷனுக்கே போயிருவேன்... இன்னைக்கு வரச்சொன்ன ஏட்டய்யா விதிவிலக்கா நேரா ரயில்வே ஸ்டேஷன் வரச்சொல்லிட்டார். அதுதான் வந்தேன். நான் வர்றதுக்குள்ளே யார் யாரோ நான் இங்கே வரப்போறத மத்த போலீஸ்காரங்களுக்கு போன் செஞ்சு சொல்லீட்டாங்க.

அதுதான் அத்தனை போலீஸ்காரர்களும் நேரா இங்கேயே வந்துட்டாங்க. இனி பொழுது சாயிர வரைக்கும் நான் இங்கிருந்து நகர முடியாது!’’ என்று ஊசியையும் நூலையும் அங்குஸ்தான் வைத்து ஒரு போலீஸ் தொப்பிக்குள் வைத்து பிரஸ் செய்து குத்திக் கொண்டே பேசும் இவர் பெயர் மீரான். கிட்டத்தட்ட தன் 17 வயதிலிருந்து 22 வருடங்களாக போலீஸ் தொப்பி தைப்பதையே தொழிலாக வைத்துள்ளார் சொந்த ஊர் கரூர்.
போலீஸ் வேலைக்குப் போகவேண்டுமென்று ஆசைப்பட்டார். ஆனால், பள்ளிக்கூடப்படிப்பு கூட தாண்ட முடியவில்லை. எப்படி போலீஸ் வேலைக்குப் போவது? அண்ணனுக்கு போலீஸ் தொப்பி தைப்பதுதான் தொழில். அவர் கடையில் நிறைய போலீஸ் தொப்பிகள். கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர் வரை அணியும் அழகழகான தொப்பிகள். அவற்றை அணிந்தாலே தனி கம்பீரம். அதையெல்லாம் போட்டுப் போட்டு அழகு பார்த்தார்.

அதோடு நிற்கவில்லை. அண்ணன் தைக்கும் போலீஸ் தொப்பியையே, தானும் தைக்கத் தொடங்கினார். அதுவே தொழிலாகி பிழைப்பையும் கொடுக்கிறது. வீட்டில் தொப்பியின் ஆரம்ப கட்டப் பணியை மனைவி செய்து கொடுக்க, இவர் ஃபினிஷிங் செய்து போலீஸ் ஸ்டோர்ஸுக்கு சப்ளை செய்து விடுகிறார்.

தவிர மாதத்தில் பத்து நாட்கள் வெளியூர் கிளம்பி விடுகிறார். ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி என எந்த மாவட்டத்தில் எந்த ஸ்டேஷனிலிருந்து போலீஸ்காரர்கள் அழைக்கிறார்களோ, அங்கெல்லாம் அடுத்தநாளே ஆஜர் ஆகி விடுகிறார். அவர்கள் தரும் பழுதான தொப்பிகளை அங்கேயே அமர்ந்து தைத்துக் கொடுத்து விடுகிறார்.

ஒரு போலீஸ்காரருக்கு தெரிந்தால் போதும். ‘‘நம்ம தொப்பி பாய் வந்திருக்கிறார். இந்த இடத்தில் இருக்கிறார். தொப்பி ரிப்பேர் என்றால் உடனே கொண்டு வந்து கொடுங்கள்!’’ என்று வாக்கி டாக்கியை விட வேகமாக தகவல் பறக்கிறது. மீரான் பாயின் தயவு தேவைப்படுபவர்கள் உடனே சம்பந்தப்பட்ட ஸ்டேஷனுக்கு வந்து விடுகிறார்கள். தொப்பி தைப்பதற்கான சாதனங்களை எல்லாம் தன் பைக்குள் வைத்திருக்கிறார். பெரும்பாலும் எல்லா ஊர்களுக்கும் தன் பைக்கிலேயே சுற்றுப்பயணம் செய்கிறார்.

‘‘தமிழ்நாட்டிலேயே ஆறேழு பேர்தான் இந்த போலீஸ் தொப்பி தைக்கும் தொழிலில் ஈடுபட்டு வர்றாங்க. கரூரிலிருந்து கொண்டு கோவை மண்டலத்திற்கு நான் மட்டுமே தொப்பி தைக்கிறேன். இதில் தொப்பி தைப்பவர்களுக்குள் ஒரு லிமிட் உண்டு. திருச்சி மண்டலத்தில்  ஒருவர் இருக்கிறார்.

அங்கே நான் போக மாட்டேன். சென்னை, மதுரைக்கு வேறு ஆள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் இங்கே வரமாட்டார்கள். ஆனால், அத்தனை பேரும் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை ஸ்டேஷனையும் தெரிந்து வைத்திருப்பார்கள். தொப்பி தைக்க எப்ப வருவீங்கன்னு யாராவது கேட்டால் எந்த ஊர்னு கேட்டுட்டு அந்த லிமிட் தொப்பி தைப்பவர்கள் நம்பரைக் கொடுத்து விடுவார்கள்.

பெரும்பாலும் அந்தப் பிரச்னையே இப்பவெல்லாம் வர்றதில்லை. ஒவ்வொரு மண்டலத்திலும் யார் தன் லிமிட்டில் தொப்பி தைப்பவர்கள் என்று போலீஸார் தெரிந்தே வைத்திருக்கிறார்கள்.
எனக்கும் அப்படித்தான், தமிழகம் முழுக்க 90 சதவீதம் போலீஸ்காரர்களைத் தெரியும்.

அவர்கள் இன்ன  ஸ்டேஷனுக்கு வரச் சொல்லி அந்த ஸ்டேஷன் நம்பரை பி.1, பி.2, பி.3, பி.4 என்று சொன்னால் போதும்... அங்கே இடம் மாறாமல் போய் நிற்பேன். மற்ற இடங்கள் லேண்ட் மார்க் சொன்னால் எனக்குத் தெரியாது. உதாரணமாக ‘கோவை வெரைட்டி ஹால் போலீஸ் ஸ்டேஷன்’ என்றால் எனக்கு சட்டென்று நினைவுக்கு வராது. அதுவே ‘பி.8’ன்னு சொன்னா போதும். உடனே அது தெரியும். அங்கேயே போயிருவேன்!

ஜென்ட்ஸ் டைலர், லேடீஸ் டைலர், பனியன், ஜட்டி தைப்பவர்கள், கூடை வலைப்பை தைப்பவர்கள் எல்லாம் ஊருக்கு ஊர் தடுக்கி விழுந்தால் கிடைப்பார்கள். போலீஸ் தொப்பி தைப்பவர்கள் கிடைப்பது அரிது. இந்தத் தொழிலைப் பழகுவதும் கஷ்டம். அவ்வளவு சுலபமாக தொப்பியின் கெட்டித் துணிக்குள், வைபவர் அட்டைக்குள் ஊசி நுழைந்து விடாது.

அங்குஸ்தானை கையில் வைத்து ஊசிக்கு கீழாக வைத்து அழுத்தி ஒரு நேக்காக ஊசியை குத்தி எடுக்க வேண்டும். இதை சொல்லிக் கொடுத்தால் பத்துப் பேருக்கு ஒன்பது பேர் உடனே ஓடிப் போய் விடுகிறார்கள். எனவேதான் இந்தத் தொழிலில் ஈடுபடும் ஆட்கள் குறைவாக இருக்கிறார்கள்!’’ என்று சொல்லும் மீரான் புதுத் தொப்பி என்றால் ஒரு நாளைக்கு கணவனும் மனைவியும் சேர்ந்து 20 தொப்பிகள் வரை தைத்து விடுவார்களாம்.

ஒரு புது தொப்பி ரூ.300 விலை வைக்கிறார்கள். அதுவே ரிப்பேர் தொப்பி என்றால் வேலைக்குத் தகுந்த மாதிரி போலீஸ்காரர்களே ஒரு தொகையை கொடுத்து விடுவார்களாம்.
‘‘ஆமாம்... கூலியை சரியாக் கொடுத்துவிடுவார்கள். போலீஸ்காரர்கள் என்றாலே மாமூல்தான் பொதுவாக நினைவுக்கு வரும். டீக்கடையில்,  ஹோட்டலில் புகுந்தால் சாப்பிட்டு விட்டு காசு தரமாட்டார்கள்...  மளிகைக்கடையில் காய்கறிக்கடையில் அங்கே ஒண்ணு இங்கே ஒண்ணு என்று அள்ளிப்  போட்டுக் கொண்டு பணம் தரமாட்டார்கள் என்பதுதான் நம் மக்களிடம் புழக்கத்தில்  இருக்கும் எண்ணம். சினிமாக்களும் அதையே கேலி கிண்டலுடன் படம் போட்டுக்  காட்டுகின்றன.

இதில் உண்மை இல்லை. என் அனுபவத்தில் ஆயிரக்கணக்கான ஸ்டேஷன்களுக்கு தொப்பி தைக்கப் போயிருக்கிறேன். பல்லாயிரக்கணக்கான போலீஸ்காரங்களை பார்த்திருக்கிறேன். ஒருத்தர் கூட எனக்கு ஒரு ரூபாய் கடன் சொன்னதில்லை. பாக்கி வச்சதும் இல்லை. மாமூல் என்ற பேச்சுக்கே இடமில்லை. இன்னும் சொல்லப் போனால் ஒரு ஸ்டேஷனுக்கு போய் தொப்பி தைக்க ஆரம்பிச்சுட்டன்னா அடுத்தடுத்து போலீஸ்காரங்க வந்து வேலை கொடுத்துட்டே இருப்பாங்க. நானும் தைச்சுட்டே இருப்பேன். அதைப் பார்த்து ஒவ்வொரு போலீஸ்காரங்களும் கேட்கிற கேள்வி, ‘சாப்பிட்டீங்களா பாய்’ என்பதுதான்.

அதோடு நிற்கமாட்டார்கள். காலையில் டிபன், மதியம் சாப்பாடு, பிரியாணி, இரவு டிபன் என்று ஆர்டர் செய்து யாரையாவது வாங்கி வரச்சொல்லி சாப்பிட வைத்து விட்டுத்தான் நகருவார்கள். அதிலும் டீ, காபி வந்துகொண்டேயிருக்கும். எந்த இடத்திலும் இதற்கெல்லாம் தனியா கணக்குப் போட்டு தொப்பி தைக்கும் கூலியில் கழித்துக் கொண்டதில்லை. செஞ்ச வேலைக்கு பத்து ரூபாய் அதிகமாகக் கொடுப்பார்களே ஒழிய குறைவாகக் கொடுத்ததில்லை.

முந்தியெல்லாம் வேலை அதிகமா இருந்து ஊருக்குப் போக நேரமாயிட்டா ஸ்டேஷன்லயே படுத்துக்கச் சொல்லி பாய் தலையணை எல்லாம் கொடுத்திருவாங்க. கொஞ்சகாலமாகத்தான் சென்சிடிவ் சூழல் கருதி படுக்க வைக்கறதில்லை. அப்படியே நேரம் ஆனாலும் ஓட்டல்ல ரூம் போட்டு தங்க வச்சிருவாங்க!’’ நெகிழும் மீரான், ‘ஆலமரம்’ என்ற திரைப்படத்தில் சப்-இன்ஸ்பெக்டராக நடித்துள்ளார். அப்படத்தின் டைரக்டர் தங்கதுரை இவருக்கு பால்யகால நண்பராம். 15 ஆண்டுகளுக்கு முன்பு சினி ஃபீல்டுக்கு அவர் போகும்போதே, ‘மாப்பிள்ளை, நீ படம் எடுக்கும்போது அதுல ஒரு சான்ஸ் எனக்கும் கொடுக்கணும்!’ என்று சொல்லி அனுப்பியிருந்தாராம்.

அதை மறக்காமல் இவருக்கு அப்படத்தில் வாய்ப்பு தந்திருப்பதாகவும், இன்னமும் பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார். ‘‘அப்படி சினிமா வாய்ப்பு வந்து பிரபல்யமாகி விட்டாலும் கூட இந்த போலீஸ் தொப்பி வேலையை விடமாட்டேன்... அதற்காக ஒரு ஸ்டோர் போட்டு விடுவேன். என் மனைவியை பொறுப்பாக வைப்பேன்!’’ என்கிறார் மீரான்.  போலீஸ் தொப்பி தைப்பதன் மூலம் மீரானுக்கு கான்ஸ்டபிள் முதல் கமிஷனர் வரை நல்ல பரிச்சயம்.

‘போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு காரியம் ஆகணும்னா உங்ககிட்ட வந்தா செய்து கொடுப்பீங்கல்ல?’ என்று கேட்டால், ‘‘அது எப்படி சார் முடியும்? நம்ம மேல டிபார்ட்மெண்ட்டே நம்பிக்கை வச்சிருக்கு. ஒரு நல்ல காரியத்துக்குன்னா போலாம். செஞ்சு கொடுப்பாங்க. மத்த விஷயங்களுக்குப் போறது தப்பில்லைங்களா? அப்படி இதுவரைக்கும் நான் எதுக்கும் போனதில்லை!’’ என்று சொல்லி தன் வேலையில் மும்முரமானார் மீரான்.

கா.சு.வேலாயுதன்