26 முறை எவரெஸ்ட்டில் ஏறி சாதனை!



உலகிலேயே உயரமான சிகரம், எவரெஸ்ட். இதன் உயரம் 8,848.86 மீட்டர். வாழ்வில் ஒருமுறையாவது எவரெஸ்ட்டின் உச்சியைத் தொட்டுவிட வேண்டும் என்பது மலையேறும் ஒவ்வொருவரின் கனவு. ஆனால், அசால்ட்டாக 26 முறை எவரெஸ்ட்டின் உச்சியைத் தொட்டு சாதனை படைத்திருக்கிறார் காமி ரிட்டா ஷெர்பா. எவரெஸ்ட் சிகரத்தில் அதிக முறை ஏறியவரும் இவரே. நேபாளத்தைச் சேர்ந்த காமி 35 வருடங்களுக்கு மேலாக மலையேறுவதில் அனுபவம் வாய்ந்தவர்.

முதல் முறையாக 1994-ம் வருடம் எவரெஸ்ட்டின் உச்சியைத் தொட்டார். அதற்குப் பிறகு வருடத்துக்கு ஒரு முறையாவது எவரெஸ்ட்டின் உச்சியில் கால்பதித்துவிட வேண்டும் என்பது அவரது வழக்கமாகிவிட்டது. கடந்த மே மாதத்தின் முதல் வாரத்தில் ஒரு குழுவுக்கு வழிகாட்டியாக எவரெஸ்ட்டில் ஏறியிருக்கிறார் காமி. 17 வயதிலேயே மலையேறத் தொடங்கிய காமியின் வயது 52. எவரெஸ்ட் மட்டுமல்லாமல் உயரமான பல மலைகளில் ஏறி பல சாதனைகளைத் தன்வசம் வைத்திருக்கிறார் காமி ரிட்டா.

த.சக்திவேல்