இந்த ஷூவின் விலை ரூ.1,42,982!



நூறு வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் முன்னணி ஃபேஷன் நிறுவனம், ‘பலன்சியாகா’. பாரிஸ் நகரில் இதன் தலைமையகம் செயல்பட்டு வருகிறது. ஹாலிவுட் நட்சத்திரங்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரையிலான உலகப் பிரபலங்கள்தான் இதன் முக்கிய வாடிக்கையாளர்கள். கடந்த வாரம் புது வகையான ஷூக்களை அறிமுகப்படுத்தியுள்ளது, ‘பலன்சியாகா’. இதன் விலை 48 ஆயிரம் ரூபாயில் ஆரம்பித்து 1.4 லட்சம் வரை நீள்கிறது.

இந்த வகை ஷூக்களில் 100 ஜோடிகள் மட்டுமே தயாரிக்கப்போகிறது. முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே விநியோகம் செய்யப்படும். அப்படி அந்த ஷூவில் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா? சமீப வருடங்களில் நைந்து, கிழிந்து, அழுக்கான ஜீன்ஸ் பேன்ட்கள் எப்படி ஃபேஷனின் அடையாளமாக மாறியதோ அதே மாதிரி இந்த ஷூக்களும் ஃபேஷனில் புதிய அத்தியாயத்தை எழுதப் போகிறது என்கின்றனர் ஃபேஷன் நிபுணர்கள்.

ஆம்; நைந்து, கிழிந்து, அழுக்கடைந்து, பல வருடங்கள் பயன்படுத்தியது போல  தோற்றமளிக்கும் வகையில் இந்த ஷூக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்கு இவ்வளவு விலையா என்று வாயடைத்துப் போயிருக்கின்றனர் நெட்டிசன்கள்.

த.சக்திவேல்