75 வயதில் கின்னஸ் சாதனை!



சாதிக்க வயது தடையில்லை என்பதற்கு இன்னுமொரு உதாரணமாகத் திகழ்கிறார் டோனி. கனடாவைச் சேர்ந்த டோனிக்கு ஏதாவது ஒரு சாதனையைப் படைக்க வேண்டும் என்ற எண்ணம் 55 வயதில் தோன்றியிருக்கிறது.
உடனே ஒரு ஜிம்மில் சேர்ந்து ஒர்க் அவுட்டைச் செய்ய ஆரம்பித்துவிட்டார். அன்றிலிருந்து இரவில் சீக்கிரமாகத் தூங்கி, அதிகாலையில் எழுந்துவிடுவார். எழுந்தவுடன் 15 முதல் 20 நிமிடங்கள் நிற்காமல் ஓடுவார்.

பிறகு 20 புஷ் அப்களை எடுப்பார். தவிர, ஜிம் ஒர்க் அவுட் வேறு. இதை நாள் தவறாமல் செய்துவந்தார். ஒரு நாள் ஜிம்மில் தலையை நிலத்தில் ஊன்றி தலைகீழாக நிற்க பயிற்சி செய்தார். தொடர்ந்து இரண்டு வார பயிற்சிகளுக்குப் பிறகு அவரால் தலைகீழாக நிற்க முடிந்தது.

எந்த வித தயக்குமுமின்றி நண்பர்கள், குடும்பத்தின் முன்பு தலைகீழாக நின்றுகாட்டி பாராட்டுகளை அள்ளினார். மட்டுமல்ல, பூங்கா, தேவாலயம்... என செல்லும் இடங்களில் எல்லாம் தலைகீழாக நிற்பது அவரது வாடிக்கை. இப்போது டோனியின் வயது 75. சமீபத்தில் தலைகீழாக நின்று காட்டுவதில் உலகிலேயே அதிக வயதானவர் என்ற கின்னஸ் சாதனையைத் தன்வசமாக்கியிருக்கிறார் டோனி.

சக்தி