Bio Data-மின்சாரம்
 பெயர் : மின்சாரம். வேகம் : ஒரு நொடிக்கு சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர்.
மின் ஆலை : நியூயார்க்கில் 1882ம் வருடம் முதல் மின் ஆலையை அமைத்தார் எடிசன். இங்கு உற்பத்தியான மின்சாரம் 85 கட்டடங்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இன்று 167 நாடு களில் 35 ஆயிரத்துக்கும் அதிகமான மின் ஆலைகள் உள்ளன.
 வரலாறு : ‘‘இயற்கையிலிருந்து கிடைக்கும் ஒருவகை ஆற்றல்தான் மின்சாரம். அதனால் மனிதக் கண்டுபிடிப்பு என்று மின்சாரத்தைச் சொல்ல முடியாது. பெஞ்சமின் பிராங்க்ளின் மின்சாரத்தைக் கண்டுபிடித்ததாக சிலர் சொல்கின்றனர். இது தவறான கருத்து. அவருடைய சோதனை மின்சாரத்துக்கும், மின்னலுக்கும் இடையிலான தொடர்பை அறியவே உதவியது. அவ்வளவுதான்...’’ என்று அறிவியல் செய்திகளை வெளியிடுகிற ‘யுனிவர்ஸ் டுடே’ என்கிற தளம் சொல்கிறது.
 கிரேக்கர்கள் கி.மு.600லேயே மின்சாரத்தைக் கண்டுபிடித்ததாகச் சொல்கின்றனர். தவிர, 2000 வருடங்களுக்கு முன்பு ரோமானியர்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தி பேட்டரி தயாரித்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், 17-ம் நூற்றாண்டில்தான் மின்சாரம் தொடர்பான கண்டுபிடிப்புகள் ஆரம்பமாயின. 1600களில் மின்சாரம் தொடர்பான ஆராய்ச்சியில் இருந்த இயற்பியலாளர் வில்லியம் கில்பர்ட் முதல் முதலாக ‘Electricus’ என்ற லத்தீன் வார்த்தையைப் பயன்படுத்தினார்.
 கில்பர்ட்டைப் பின்பற்றி ஆராய்ச்சி செய்துவந்த விஞ்ஞானி தாமஸ் பிரவுனி என்பவர் தனது புத்தகங்களில் ‘Electricity’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அதுவே இன்றும் நிலைத்துவிட்டது. 1752ல் பெஞ்சமின் பிராங்க்ளின் மின்சாரம் குறித்த ஆய்வை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தினார். 1800ல் இத்தாலியைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி அலெசாண்ட்ரோ வோல்ட்டா என்பவர் குறிப்பிட்ட வேதியியல் மாற்றங்களால் மின்சாரம் உருவாகிறது என்பதைக் கண்டறிந்தார்.
 தவிர, முதன்முதலாக எலெக்ட்ரிக் பேட்டரியை வடிவமைத்தார். 1831ல் மைக்கேல் பாரடே எலெக்ட்ரிக் டைனமோவைக் கண்டுபிடிக்க, தொழில்நுட்பத்திலும் மின்சாரத்தின் பயன்பாடு விரிவடைந்தது. இதன் விளைவாக எடிசன் பல்பைக் கண்டுபிடித்தார். தவிர, சுவிட்ச் உட்பட மின்சாரம் சார்ந்த ஏராளமான பொருட்களையும் கண்டுபிடித்தார் எடிசன். இன்னொரு பக்கம் மின்சாரத்தில் பெரிய புரட்சியே செய்தார் விஞ்ஞானி டெஸ்லா. மின்சாரத்தை வணிகப் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தவரும் டெஸ்லாதான்... என்று நீள்கிறது மின்சாரத்தின் வரலாறு.
 தெருவிளக்கு : பிப்ரவரி 3, 1879ம் வருடம் வடக்கு இங்கிலாந்தில் வீற்றிருக்கும் நியூகேஸல் நகரில் அமைந்துள்ள மோஸ்லே வீதியில் உலகின் முதல் மின்சார தெருவிளக்கு ஒளிர்ந்தது. இந்த மின் விளக்கைக் கண்டுபிடித்தவர் விஞ்ஞானி ஜோசப் ஸ்வான். அதே வருடம் ஜூலை மாதத்தில் ஆங்கிலேயர்கள் கல்கத்தாவில் மின்சார விளக்கை ஒளிரவிட்டு இந்தியாவில் மின்சாரத்தை அறிமுகப்படுத்தினர்.
 மின் உற்பத்தி : காற்று, தண்ணீர், சூரிய சக்தி, தாவரக் கழிவுகள், ஹைட்ரோ எலெக்ட்ரிக், நியூக்ளியர், நிலக்கரி... என பல வழிமுறைகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நிலக்கரியிலிருந்துதான் அதிகளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது.
எலெக்ட்ரிக் கார் : அமெரிக்காவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர் வில்லியம் மோரிசன் என்பவர் 1891ம் வருடம் வெற்றிகரமாக உலகின் முதல் எலெக்ட்ரிக் காரை வடிவமைத்தார்.
நுகர்வு: அதிக வெப்பத்தின் காரணமாக இந்தியாவில் மின்சார நுகர்வு அதிகரித்துள்ளது. 2020ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் 84.55 பில்லியன் யூனிட்டாக இருந்த நுகர்வு, 2021ம் வருடத்தின் ஏப்ரல் மாதத்தில் 117.08 பில்லியன் யூனிட்டாக உயர்ந்தது. கடந்த ஏப்ரல் மாதம் மின்சார நுகர்வு 13.6 சதவீதம் உயர்ந்து 132.98 பில்லியன் யூனிட்டாக உள்ளது.
உற்பத்தி : அதிகளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது இந்தியா. முதலிடத்தில் வீற்றிருக்கிறது சீனா. கடந்த ஏப்ரல் மாதத்தில் 127,129 GWh (Gigawatt hours) மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆனால், மார்ச் மாதத்தில் உற்பத்தி 123,921 GWh ஆக இருந்தது.
நகரம் : மார்ச் 31, 1880ம் வருடம் அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்திலுள்ள வபாஸ் நகரத்தில் மின்சார விளக்குகள் ஒளிர ஆரம்பித்தன. இது ஒரு சோதனை முயற்சிதான். இருந்தாலும் உலகில் முதன்முதலாக மின்மயமாக்கப்பட்ட நகரம் என்ற பெருமையைத் தன்வசமாக்கியிருக்கிறது வபாஸ். இந்தியாவில் முதல் மின்மயமாக்கப்பட்ட நகரம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது பெங்களூரு. ஆகஸ்ட் 5, 1905ம் வருடம் பெங்களூருவின் தெருக்களுக்கு மின் விளக்குகள் வந்துவிட்டன. பெங்களூருவை மின்மயமாக்க அப்போதே 6 லட்ச ரூபாய் செலவாகியிருக்கிறது. வருடந்தோறும் பராமரிப்புச் செலவு 50 ஆயிரம் ரூபாய்.
வசதி : உலகளவில் சுமார் 94 கோடிப் பேர் மின்சார வசதியில்லாத சூழலில் வாழ்ந்துவருகின்றனர். தெற்கு சூடானில் 7 சதவீத மக்களுக்கு மட்டுமே மின்சார வசதி கிடைக்கிறது. மின்சார வசதி குறைவாகக் கிடைக்கும் தேசமும் தெற்கு சூடான்தான். இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா என பெரும்பாலான நாடுகளில் அனைத்து மக்களுக்கும் மின்சார வசதி கிடைக்கிறது.
யூனிட் : இந்தியாவில் ஒரு யூனிட் என்பது 1000 வாட்ஸ் மின்சாரத்துக்குச் சமம்.
மரணம் : 2019ம் வருடத்தில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கின்படி இந்தியாவில் தினமும் சுமார் 30 பேர் மின்சாரம் பாய்ந்து மரணிக்கின்றனர்.
த.சக்திவேல்
|