COFFEE TABLE



ஆசம் ஆசனாஸ்!

இந்தி நடிகை தீபிகா படுகோனே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னைப் பின்பற்றுகிறவர்களுக்கு சில யோகாசன போஸ்களைப் பகிர்ந்து கலவரப்படுத்தியிருக்கிறார்.
தீபிகா பல்வேறு திறமைகள் கொண்டவர். உடலை ஃபிட்னஸாக வைப்பதில் அதிக கவனம் செலுத்துபவர். குறிப்பாக யோகாவில் அதீத நாட்டம் கொண்டவர். இதனாலேயே தன்னுடைய ரசிகர்களுக்காக இந்த ஆசன போஸ்களைப் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த கணவரும் நடிகருமான ரன்வீர் சிங் வியந்து பாராட்டியுள்ளார். மற்றவர்களும் ஆச்சரியத்துடன், ‘ஆசம் ஆசனாஸ்’ என லைக்குகளைக் குவித்துள்ளனர்.

 ஒட்டகத்துக்கு ஆர்டர் செய்யுங்கள்!

விரைவில் இந்தியா, ஆப்பிரிக்க நாட்டிலுள்ள மிகப்பெரிய பாலைவனமான சஹாரா போலாகிவிடும் என ஒரு ஆய்வை வெளியிட்டிருக்கிறது ஐ.நா! உண்மையில் உலகளவில் வறட்சி எப்படி இருக்கிறது என்றுதான் இந்த ஆய்வு கவனம் செலுத்தியது. அதில்தான் இந்த சஹாரா மேட்டர் வெளியே வந்திருக்கிறது.

2000ம் ஆண்டு முதல் இப்போது வரை கடந்த இருபது ஆண்டுகளில் உலகின் வறட்சியானது 29 சதவீதம் உயர்ந்திருப்பதாக சொல்கிறது ஆய்வு. இந்தியாவைப் பொறுத்தளவில் 30 சதவீதம் நிலம் சீரழிவு, மூன்றில் இரண்டு பேர் வறட்சியால் பாதிப்பு, லட்சக்கணக்கானோர் இறப்பு என்று ஒரு தினுசாக வறட்சியை நோக்கிச் செல்வதால் தண்ணீர், உற்பத்தி, இறப்பு போன்ற பிரச்னைகள் மேலும் அதிகரிக்கலாம் என்கிறது. அதனால், இந்தியா, சஹாராவுக்கு போட்டியான ஒரு பகுதியாக மாறிவருகிறது என ஆரூடம் சொல்கிறது இந்த ஆய்வு. எதற்கும் ஒரு ஒட்டகத்துக்கு அமேசானில் ஆர்டர் போட்டுவைப்பது வருங்காலத்துக்கு உதவும்.

போரினால் டால்ஃபின்களுக்கு ஆபத்து!

ரஷ்யப் படைகள் உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடங்கி கிட்டத்தட்ட மூன்று மாதங்களை நெருங்கும் வேளையில் உக்ரைன் நாட்டின் வளங்கள் அதிகளவில் அழிக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான இறப்புகள், அழிக்கப்பட்ட வீடுகள், மாசுபட்ட மண் போன்ற பல பிரச்னைகளை மக்கள் எதிர்கொண்டு வரும் நிலையில் விலங்குகள், குறிப்பாக டால்ஃபின்களின் உயிருக்கு இந்தப் போர் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆம். கருங்கடலின் கரையோரங்களில்  சிக்கித் தவிக்கும் அதிக எண்ணிக்கையிலான செட்டேசியன் ( cetacean -  திமிங்கிலங்கள், டால்ஃபின்கள் மற்றும் போர்போயிஸ்கள்) போரினால் ஏற்படும் ஒலி மாசுபாடு காரணமாக  அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவதாக துருக்கி கடல் ஆராய்ச்சி அறக்கட்டளையின் (துடாவ்) ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். போர் தொடங்கியதில் இருந்து இன்று வரை கருங்கடலை ஒட்டிய துருக்கி கடற்கரைகளில் 80 டால்ஃபின்கள் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தாமஸ் கோப்பை வென்ற இந்திய அணி...

முதல்முறையாக இந்திய பேட்மிண்டன் அணி தாமஸ் கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியிருக்கிறது. இங்கிலாந்தின் புகழ்பெற்ற பேட்மிண்டன் சாம்பியன் ஜார்ஜ் ஆலன் தாமஸ் பெயரில் கடந்த 73 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் கோப்பை இது. உலக ஆண்கள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் என ரசிகர்களால் அழைக்கப்படும் முக்கியமான கோப்பை. இதனை இதுவரை இந்திய அணி வென்றதேயில்லை. முதல்முறையாக அந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.

போட்டிகள் தாய்லாந்தில் நடந்தன. இதில் இறுதிப் போட்டியில் 14 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேஷிய அணியை இந்திய அணி எதிர்கொண்டது. ஐந்து போட்டிகள் கொண்ட ஆட்டத்தில் 3 - 0 என நேர்செட்களில் வென்றது இந்திய அணி. இதில் ஒற்றையர் பிரிவில் கடாம்பி ஸ்ரீகாந்த், பிரணாய், லக்சயா சென் ஆகிய மூவரும்; இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ், சிராக், அர்ஜுன், துருவ் ஆகிய நால்வரும் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தனர். முதலில் நடந்த ஒற்றையர் பிரிவில் லக்சயா சென் வெல்ல, அடுத்து நடந்த இரட்டையர் பிரிவில் சாத்வித், சிராக் ஜோடி வென்றது. மூன்றாவது போட்டியில் ஸ்ரீகாந்த் வெற்றியைத் தன்வசமாக்கி இந்திய அணியை வரலாறு படைக்க வைத்தார்.

தொகுப்பு: குங்குமம் டீம்