Coal இந்தியாவுக்கு நோ... இறக்குமதி நிலக்கரிக்கு ஜே!



ஒன்றிய அரசு உருவாக்கும் மின்தட்டுப்பாட்டின் ரகசியம்

கொளுத்தும் கோடையில் இரண்டு ஃபேன் இருந்தால்தான் உறக்கமே வருகிறது. கொஞ்சம் வசதியானவர்கள் பாடு பரவாயில்லை, சில்லென்ற ஏசி காற்றில் சுகமாக உறங்குவார்கள்.
நள்ளிரவில் மின்தடையால் பட்டென இரவு விளக்கும், மின்விசிறியும் கண் மூடும்போது உருவாகும் கடுப்பு இருக்கிறதே... அது சொல்ல முடியாத சோகம். நாளெல்லாம் பாடுபட்டுவிட்டு இரவில் நிம்மதியாய் உறங்கலாம் என்று அலுத்து சலித்து படுத்தால் உடனே பீஸைப் பிடுங்கிவிடுகிறார்கள். இப்படிப் புலம்பாத பொதுஜனமே இல்லை.

காரணம் கேட்டால் நிலக்கரித் தட்டுப்பாட்டால் மின் உற்பத்தி குறைவு என்கிறது மத்திய அரசு. ‘இன்னமும் மூன்று நாட்களுக்குத்தான் நிலக்கரி கையிருப்பு இருக்கிறது... ஒரு வாரத்துக்குத்தான் இருக்கிறது...’ என வாட்ஸ் அப் பார்வேடுகள் கதிகலங்க வைக்கின்றன. மின்சாரத்தால் சுவாசிக்கப் பழகிவிட்ட நவீன காலத்தில் அதைத் தயாரிக்கத் தேவையான நிலக்கரி இல்லை என்றால் என்ன செய்ய? பொருளாதாரமே ஸ்தம்பித்துவிடாதா, புழுக்கத்துக்கு தெருவில் படுக்க வந்தவர்கள் வாழ்க்கை முழுக்கவும் தெருவுக்கு வந்துவிட்டதா என்று எண்ணற்ற கேள்விகள் நம் மனதைக் குடைந்துகொண்டிருக்கின்றன.

நாம் இப்படிப் புலம்பிக்கொண்டிருக்க மறுபுறம் நிலக்கரியைத் தயாரிக்கும் கோல் இந்தியா நிறுவனம், ‘இந்த வருடம் நாங்கள் போன வருடத்தைவிட அதிகமான நிலக்கரியைத்தான் உற்பத்தி செய்திருக்கிறோம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படியானால் உற்பத்தியான நிலக்கரியை வாங்கவில்லையா? வாங்குகிறார்களாம். ஆனால், அவை மின் உற்பத்தி நிலையங்களுக்குச் செல்ல தாமதமாகிறதாம். ரயில்வே துறையால் இந்தத் தாமதம் என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.

அனைத்திந்திய ஆற்றல் பொறியியலாளர்கள் அமைப்பு (All India Power Engineers Federation - AIPEF) தலைவர் சைலேந்திர துபே இது தொடர்பாக காட்டமான கேள்விகளை மத்திய அரசின் எரிசக்தித்துறை அமைச்சகத்திடம் எழுப்பியிருக்கிறார். ‘‘நாங்கள் எங்கள் நிலக்கரிகளை மின் உற்பத்தி நிலையங்களுக்குக் கொண்டு செல்ல போதுமான ஏற்பாடுகளை செய்திருக்கிறோம். ஆனால், அவை தாமதமாகின்றன. ஆனால், தனியார் நிறுவனங்களிடம் உள்ள இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி மட்டும் எப்படி சரியான நேரத்துக்கு மின் உற்பத்தி நிலையங்களை அடைகின்றன?’’ என்று கேட்டிருக்கிறார்.

கடந்த மாத இறுதியில் மத்திய அரசின் எரிசக்தித் துறை அமைச்சகத்திடமிருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறதாம். இரண்டு கோடியே இருபது லட்சத்து நாலாயிரத்து தொள்ளாயிரம் டன் நிலக்கரி அரசின் அனல் மின் நிலையங்களுக்காகவும்; ஒரு கோடியே ஐம்பத்தொன்பது லட்சத்து முப்பத்தாறாயிரம் டன் நிலக்கரி தனியார் மின் தயாரிப்பு நிலையங்களுக்கும் இறக்குமதி செய்யவேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறதாம்.

நன்கு கவனியுங்கள்... இறக்குமதி செய்யுங்கள் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. கோல் இந்தியாவிலிருந்து வாங்குங்கள் என்று சொல்லப்படவில்லை.ஒருபுறம் ஒன்றிய அரசு தனியார் நிறுவனங்களிடமிருந்து இறக்குமதி நிலக்கரியை வாங்குங்கள் என்று மாநில அரசின் அனல்மின் நிலையங்களிடம் சொல்லியிருக்கிறது. ஆனால், தனியார் அனல்மின் நிலையங்களுக்கு இப்படியான நிபந்தனையை விதிக்கவில்லை. ஆனால் அவர்கள்தான் வழக்கமாக இறக்குமதி நிலக்கரியை வாங்குகிறார்கள்.

சரி... அவர்கள்தான் இறக்குமதி நிலக்கரியை ஏற்கெனவே அதிக விலைக்கு வாங்கிக்கொண்டிருக்கிறார்களே... மறுபடியும் எதற்கு ஆணையிட வேண்டும் என்று நமக்குத் தோன்றலாம்.

அரசின் நிலக்கரி வளத்தை தனியாருக்குத் திறந்துவிடுவதற்கான ஏற்பாடாகவும் இது இருக்கலாம் என்று காதைக் கடிக்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். அதாவது அரசு நிலக்கரி குறைவான விலையில் தனியார் நிறுவனங்களுக்கும், இறக்குமதி நிலக்கரி அதிக விலைக்கு அரசு அனல்மின் நிலையங்களுக்கும் போகும். இதுதான் இதன்பின் இருக்கும் சூட்சுமம்.

இந்தியாவில் நிலக்கரி விற்கும் தனியார் நிறுவனம் யாருடையது என்று உலகுக்கே தெரியும். நம் பிரதமரின் நண்பருடையதுதான் அது. ‘அந்த’ நிறுவனம் நிலக்கரியை இறக்குமதி செய்து அதனை மாநில அரசுகளுக்குச் சொந்தமான அனல்மின் நிலையங்களுக்கு விற்கிறது. இவர்கள் நிலக்கரி மட்டும் எப்படி நேரத்துக்கு அனல்மின் நிலையங்களுக்குப் போகிறது என்ற கேள்விக்கு அவர்கள் கடலோரம் நிறுவனங்களை வைத்திருக்கிறார்கள்; இறக்குமதி செய்வது எளிது என்கிறார்கள்.

இறக்குமதி செய்தாலும் அதையும் ரயிலில்தானே உள்ளூர் அனல்மின் நிலையங்களுக்கு அனுப்ப இயலும். அப்படியானால், அந்த ரயில்கள் மட்டும் எப்படி தாமதமின்றி பறக்கிறது என்பது மில்லியன் டாலர் கேள்வி.கோல் இந்தியா என்ற இந்திய அரசின் நிலக்கரி உற்பத்தி நிறுவனம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பதினைந்து சதவீதத்துக்கு மேல் நிலக்கரியை உற்பத்தி செய்திருக்கிறோம் என்றே சொல்கிறது. உற்பத்தியில் குறைவில்லை. பகிர்மானத்தில் சிக்கல் என்றால் அது யார் பொறுப்பு?

கடந்த 31ம் தேதி இந்தியாவில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களுக்கும் இறக்குமதி நிலக்கரி வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இவ்வருட ஜூன் மாதம் அதில் குறிப்பிட்ட அளவில் ஐம்பது சதவீதமும், ஆகஸ்ட்டில் நாற்பது சதவீதமும் எஞ்சிய பத்து சதவீதத்தை இவ்வருட அக்டோபரிலும் வாங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் உள்ள அன்பாரா அனல்மின் நிலையம் எட்டு லட்சத்து ஐம்பத்தி மூன்று டன்னும்; ஓப்ரா, ஹர்துகஞ்ச், பரிச்சா அனல் மின் நிலையங்கள் தலா பனிரெண்டு லட்சத்து எண்பதராயிரம் டன்களும் நிலக்கரியை இறக்குமதி செய்யவேண்டும் என்பது உத்தரவு.

உத்திரப்பிரதேசம் மட்டுமல்ல எல்லா மாநில அனல்மின் நிலையங்களுமே ‘அந்த’ நிறுவனத்திடம் இறக்குமதி நிலக்கரியை வாங்க வேண்டும் என்று ஒன்றிய அரசு அழுத்தம் கொடுப்பதாகக் குற்றம் சாட்டுகிறார் துபே.கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘அந்த’ நிறுவனம் ஆஸ்திரேலியாவில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றை வாங்கியிருப்பதாக ஒரு செய்தி வந்தது.

அதைத் தொடர்ந்து கோல் இந்தியாவின் நிலக்கரிகள் அனல் மின் நிலையங்களை அடைவதில் தாமதம்... அதனால் நிலக்கரித் தட்டுப்பாடு என்ற சேதி வருகிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாக வருகிறதா?

கடந்த மாதம் ஆந்திர அரசு ‘அந்த’ நிறுவனத்தின் இறக்குமதி நிலக்கரியை வாங்காது என்று ஜெகன்மோகன் அறிவித்தார். அந்நிறுவனம் நிலக்கரியை அதிக விலைக்கு விற்கிறது என்பது அவர் சொன்ன காரணம்.

இப்படியாக, செயற்கையாக நிலக்கரித் தட்டுப்பாட்டை உருவாக்கி, அதனைக் காரணமாக்கி இறக்குமதி நிலக்கரியை இந்தியா முழுதும் கொண்டு செல்ல ‘அவர்’ விரல் சொடுக்குகிறார். மோடி அரசு அதற்கேற்ப ஆடுகிறது. யாரோ சுரங்கத்தில் யாரோ நிலக்கரி தோண்டி அரசுக்கு விற்று கல்லா கட்ட நாம் இரவில் வெக்கையிலும் பகலில் மின்வெட்டில்லா வேலையிழப்பிலும் திண்டாட வேண்டியிருக்கிறது. எங்கே செல்லும் இந்தப் பாதை..?

இளங்கோ கிருஷ்ணன்