ரஜினி 169ல் நடிக்கிறேனா... பாடலாசிரியராக வரும் வருமானத்தை நா.முத்துக்குமார் குடும்பத்துக்கு வழங்குகிறேனா..?



சிவகார்த்திகேயன் ஓபன் டாக்

இளைஞர்களின் எடுத்துக்காட்டு, இன்ஸ்பிரேஷன், ரோல்மாடல் என இவரை எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். காரணம், கண்முன்னே தனி ஒருவனாக இவர் கடந்து வந்த பாதை நிச்சயம் ஒவ்வொரு இளைஞருக்கும் எனர்ஜி டானிக்தான்.
விஜே டூ நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர்... என இவர் அடுத்தடுத்து எடுக்கும் அவதாரங்கள் தமிழ் சினிமாவை மட்டுமில்லாமல் மற்ற மொழி சினிமா பிரபலங்களையும் கூட ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. ‘டான்’ வெளியாகி குடும்பங்கள் கொண்டாட ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் நம்மிடம் பேசினார் சிவகார்த்திகேயன்தமிழ் சினிமாவின் ‘டான்’?

ஹாஹா.. இப்படித்தான் எல்லாரும் நம்மள கோர்த்துவிடுறாங்க. மேடையில் உதயநிதி சார் சொல்லும்போதே எழுந்து நின்னு ‘சார் வேண்டாம் சார்...’ன்னு பதறிட்டேன். தமிழ் சினிமாவுக்கே ‘டான்’ ஆகற அளவுக்கெல்லாம் நாம பெரிய ஆள் கிடையாது. ஒரு நல்ல நடிகர்னு பெயர் வாங்கணும்... அதுக்குத்தான் இப்ப வரைக்கும் ஓடிக்கிட்டு இருக்கேன்.
ஸ்கூல் ஸ்டுடண்ட், காலேஜ் ஸ்டுடண்ட்... இதுக்கு எப்படி ‘டான்’ படத்துல ரெடியானீங்க?

ரொம்ப பெரிய டயட் எல்லாம் இல்ல. டயட்னாலே என்னைப் பொறுத்தவரையிலும் பிரியாணி, ஐஸ்கிரீம் ரெண்டையும் கட் பண்ணிடுவேன். ஆனா, இதுல பெரிய டாஸ்க் என்னன்னா நம்மகூட கிளாஸ்ல உட்கார வெச்ச அத்தனை பசங்களும் உண்மையாவே காலேஜ் ஸ்டுடண்ட்ஸ்! ‘தம்பி நீ என்னப்பா பண்ற’ன்னு கேட்டா, ‘சார்... நான் ஃபைனல் இயர் படிக்கிறேன்’னு சொல்லுவாங்க!

இயக்குநர் சிபி கிட்டவே கேட்டேன்... ‘ஏம்பா நீ இவ்வளவு ரியலா படம் எடுக்கணுமா’ன்னு. ஆனா, ஒரு பக்கம் யோசிக்கும் போது அந்தப் பசங்களுக்கு மத்தியில உட்காரும்போதுகூட நம்ம வயசு பெரிய மைனஸா தெரியலை... அந்த அளவுக்கு நாம நம்மள பார்த்துக்கறோம்னு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு.

40+ கேரக்டரில் ‘கனா’ படத்தில் நடிச்சீங்க... இப்ப டீன் ஏஜ் பையனாவும் நடிச்சிருக்கீங்க... எது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு?

ஸ்கூல் ஸ்டுடண்ட்டா நடிக்கும்போது கஷ்டமா தெரியல. ஆனா, சேலஞ்சா இருந்துச்சு.  நாம முதல்ல நம்ம மனசை செட் பண்ணிக்கணும். ஸ்கூல் ஸ்டுடண்ட் கேரக்டர் நமக்கு பொருத்தமா இருக்குனு நாம முதல்ல நம்பணும். அந்த நம்பிக்கை வர்றதுக்கு எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. சோகம் என்னன்னா... அங்கேயும் நம்ம பக்கத்தில் உட்கார்ந்தது உண்மையான ஸ்கூல் ஸ்டுடண்ட்ஸ்தான்!

சிவகார்த்திகேயன் இப்ப எப்படி கதைகளை தேர்வு செய்கிறார்..?  

அப்பவும் சரி இப்பவும் சரி... இந்த படம் எப்படியாவது ஓடிடும் என்கிற நம்பிக்கையில்தான் கதையை செலக்ட் செய்யறேன். மக்கள் ரசனை மாறல. ஆனா, பார்க்கற ஐடியா மாறி இருக்கு. மொபைல்ல, ஓடிடினு... படங்கள் பார்க்கற வசதிகள் அதிகரிச்சிருக்கு. இதுக்கிடையில நம்ம படங்களும் ஓடணும்னா இன்னும் கவனமாக கதை தேர்வு செய்யணும்னு பார்த்து செலக்ட் செய்யறேன்.

‘ரஜினி 169’ படத்தில் நீங்க இருக்கிறதா ஒரு நியூஸ் வருதே..?

அட நீங்க வேற! ஊருக்கு போனா எங்க பெரியம்மா ‘வாழ்த்துக்கள் தம்பி... தலைவர் படத்துல நடிக்கிறியாமே’னு கேட்டாங்க. ‘உங்க வரைக்கும் தெரிஞ்சிடுச்சா... எனக்கு தெரியல பாருங்களே’னு சொன்னேன். இதுவரைக்கும் என்கிட்ட யாரும் கேட்கல. நானும் நெல்சன் கிட்ட எதுவும் கேட்கல. ஆனா, நியூஸ் ஓடுது... எங்க பெரியம்மா வரைக்கும் ரீச் ஆகியிருக்கு!
பொழுதுபோக்கான கமர்ஷியல் படங்கள் - சமூகத்துக்கு கருத்து சொல்கிற படங்கள்... சிவகார்த்திகேயன் சாய்ஸ் எது?  

ஒரு பொழுதுபோக்கு கலைஞராதான் சினிமாவுக்குள்ள வந்தேன். அதனால் படங்களிலும் அதில்தான் முதலில் கவனம் செலுத்துவேன். அதையும் தாண்டி ‘வேலைக்காரன்’, ‘ஹீரோ’, ‘கனா’ மாதிரியான படங்களும் செய்து அப்பப்ப பேலன்ஸ் செய்துட்டே இருப்பேன். ஆனா, பிரதானம் பொழுதுபோக்குதான்.

கல்லூரி டானா நடிச்சுட்டீங்க... கேங்ஸ்டர் டானா நடிக்கிற ஐடியா இருக்கா?

ஒருவேளை அந்த கேரக்டர், நான் ஏற்று நடிக்கிற அளவுக்கு இருந்தா நிச்சயம் என்னை நானே அதுக்கு தயார்படுத்திக்கிட்டு நடிப்பேன். எல்லாமே டைரக்டர் கைலதான் இருக்கு. எனக்குத் தெரிஞ்சு ‘டாக்டர்’ மாதிரி ஒரு கேரக்டர் எனக்கு செட்டாகும்னு இதுவரைக்கும் நான் நெனச்சதில்ல. ஆனா, அந்த கேரக்டர் ஸ்கிரீனில் ஒர்க்அவுட் ஆச்சு. அதுமாதிரி ஒரு கேரக்டர் பண்றது இயக்குநருடைய பொறுப்பு.

எப்ப Pan இந்தியா நடிகராக மாறப் போறீங்க..?  

நீங்கதான் பார்த்து சப்போர்ட்  செய்யணும். அதுக்கு நான் என்னை தயார் செய்யணும். அதற்கான கதைகள் முதலில் அமையணும். எல்லா மொழிகள்லயும் அதை ஏத்துக்கணும். சும்மா நானும் நடிக்கிறேன்னு ஏதோ ஒரு படத்தில் நடிச்சு எல்லா மொழியிலும் கொடுக்க முடியாது. உதாரணத்துக்கு ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ முழுக்க முழுக்க நம்ம தமிழ், தமிழ் கலாசாரத்துக்கு உரிய படம். அந்தப் படத்தை இந்தியா முழுக்க கொண்டு போனா ஏத்துக்க மாட்டாங்க.

‘அயலான்’ படம் எப்ப ரிலீஸ்?

இந்த வருட இறுதிக்குள் ரிலீஸ் செய்யணும்னு பிளான் பண்ணி வேலை செய்துட்டு இருக்கேன். இப்ப கிராபிக்ஸ் வேலைகள் எல்லாம் போயிட்டு இருக்கு.
அனுதீப் சந்திப்பு எப்படி நடந்தது? அனுதீப் இயக்கத்தில் ‘SK20’ தமிழ், தெலுங்கு இருமொழிப் படம் எப்படி வந்துகிட்டு இருக்கு?

இப்ப வரைக்கும் அந்தப் படம் தமிழ் மொழிப் படமாகத்தான் உருவாகிட்டு இருக்கு. முடிஞ்ச பிறகு தெலுங்கு டப்பிங் மட்டும்தான் செய்யப்போறோம். காரணம், அவருடைய முந்தைய படம் தெலுங்கு படம். தெலுங்கில் நல்ல ஹிட். அதன் அடிப்படையில் தெலுங்குமொழியிலும் டப் செய்யலாம்னு மட்டும்தான் திட்டமிட் டிருக்கோம்.  ஓடிடி தளமும் பெரியளவில் வளர்ந்துட்டு இருக்கு... நிறைய பெரிய ஹீரோக்கள் வெப்சீரிஸ்  கூட நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க...

உங்களுக்கு அந்த ஐடியா இருக்கா?
சின்ன வயசுல இருந்தே பெரிய திரையைப் பார்த்து வளர்ந்தவன். பெரிய திரைக்கான திரைப்படங்களில்நடிக்கணும் என்பதுதான் முதல் குறிக்கோள். இப்போதைக்கு வெப்சீரிஸ் திட்டம் எல்லாம் இல்ல. ஆனா, ஒரு தயாரிப்பாளரா யோசிக்கும்போது சில கதைகள் கேட்டுக்கிட்டு இருக்கேன். நாம நடிக்கலைன்னாலும் மத்தவங்க நடிப்பில் உருவாக்கும் எண்ணமிருக்கு.

100 கோடி வசூல் ஆட்டத்தில் நீங்களும் சேர்ந்துட்டீங்க... இந்த அழுத்தம் எப்படி இருக்கு?

100 கோடி வசூல் படமெடுக்கப் போறேன்னு சொல்லிட்டு எல்லாம் எடுக்க முடியாது. மக்களுக்கு பிடிச்சாதான் அது 100 கோடி படம். 100 கோடி வசூல் என்பதை எப்பவும் தலையில் ஏத்திக்க விரும்பல. மக்களுக்கு பிடிக்கிற மாதிரி கதைகள் தேர்வு செய்தாலே நிச்சயம் அது பாக்ஸ் ஆபீஸில் பெரிய அளவில் ஹிட் கொடுத்து, தானாகவே 100 கோடி வசூல் எடுக்கும்.

அதென்ன உங்களுக்கும் அனிருத்துக்கும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி..?

நாங்க ரெண்டு பேருமே சினிமா உலகத்துல என்ன செய்யப்போறோம்னு தெரியாமதான் உள்ள என்ட்ரி கொடுத்தோம். ரெண்டு பேரும் ஒண்ணாவே டிராவல் ஆனோம். என்னுடைய வளர்ச்சியைப் பார்த்து அவரும்; அவருடைய வளர்ச்சியைப் பார்த்து நானும் எப்பவும் சந்தோஷப்படறோம். என் படத்துல அவர் மியூசிக் செய்யலைனாலும் கூட முதல் நாள் முதல் ஷோ பார்த்துட்டு அவரே கூப்பிட்டு நிறை குறைகளைச் சொல்லுவார். அந்தளவுக்கு எங்க ரெண்டு பேருக்குள்ளயும் ஒரு பெரிய புரிதலும் நட்பும் இருக்கு.

கமல்ஹாசன் - சிவகார்த்திகேயன் - ராஜ்குமார் பெரியசாமி இந்த இணைப்பு நடந்தது எப்படி?

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியும் நானும் ஒண்ணா டிவியில் வேலை பார்த்தவர்கள். அதைப்போல கமல் சாருக்கும் அவருக்கும் அதே டிவி மூலமா சந்திப்பு கிடைக்க... அப்புறமா உள்ளே வந்தவன்தான் நான். அப்படித்தான் இந்த இணைப்பு ஏற்பட்டுச்சு. பெரிய கனவு மாதிரி இருக்கு. இப்போதைக்கு இந்த ப்ராஜெக்ட் அறிவிப்பில் இருக்கு. பாடலாசிரியரா நீங்கள் எழுதும் பாடல்கள் மூலமா கிடைக்கிற வருமானத்தை நா.முத்துக்குமார் குடும்பத்திற்கு கொடுத்துட்டு இருக்கீங்களே... என்ன காரணம்?

முதன்முதலில் ‘கோலமாவு கோகிலா’ படத்துலதான் நான் பாட்டு எழுதினேன். அங்க ஆரம்பிச்சதுதான் இது. என்னுடைய முதல் படத்துக்கு முதல் பாடல் எழுதினது நா. முத்துக்குமார் சார்தான். அவருடைய பெரிய ரசிகன் நான்.

கல்லூரி நாட்கள்ல யுவன் ஷங்கர் ராஜா - நா. முத்துக்குமார் காம்போதான் என்னுடைய அத்தனை உணர்வுகளுக்கும் வடிகாலா இருந்துச்சு. நா.முத்துக்குமாரை இரண்டு முறை நான் பார்த்திருக்கேன்; பேசியிருக்கேன். அவர் மரணத்துக்கு போகும்போது என் கண்ணில் பட்டது ஒண்ணே ஒண்ணுதான். அவருடைய குழந்தை பக்கத்துல உட்கார்ந்திருந்துச்சு.

அது என்னை ரொம்ப பாதிச்சது. இதை பெரிய உதவியா எல்லாம் பார்க்கல... அவரை நான் ரசிச்சிருக்கேன்... எந்தப் பாடலா இருந்தாலும் 15 நிமிஷத்தில் எழுதுவார்னு சொல்லுவாங்க. அப்படிப்பட்டவருக்கு ஒரு மரியாதையா இதைச் செய்துட்டு இருக்கேன். எந்த இயக்குநர்கூடவாவது வேலை செய்யணும்னு ஆசை இருக்கா? ஷங்கர் சார் கூட பணிபுரியணும் என்கிற ஆசை அப்பவும் இப்பவும் இருக்கு.

ஷாலினி நியூட்டன்