லலிதம் சுந்தரம்
ஒரு நல்ல ஃபீல் குட் மூவி பார்க்க விருப்பமா? உங்களுக்கான சாய்ஸ், ‘லலிதம் சுந்தரம்’ எனும் மலையாளப்படம். ‘ஹாட்ஸ்டாரி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. தாஸ் - மேரி தம்பதியினருக்கு சன்னி, ஜெர்ரி என்று இரு மகன்களும், ஆன்னி என்ற ஒரு மகளும் இருக்கின்றனர். மூன்று பிள்ளைகளும் பெரியவர்கள் ஆனபிறகு ஒவ்வொரு திசைக்குச் சென்றுவிட்டனர். சன்னிக்கும், ஆன்னிக்கும் கல்யாணமாகிவிட்டது. ஆன்னிக்கு குழந்தைகள் இருக்கின்றனர். சன்னிக்கு மனைவியுடன் பிரச்னை. தனது கேர்ள் ஃபிரண்டுடன் வாழ்ந்துவருகிறான் ஜெர்ரி.
 இப்படி மூன்று பிள்ளைகளும் தங்களது வேலையில் மூழ்கிவிட்டதால் பெற்றோரைப் பார்க்க வீட்டுக்கே வருவதில்லை. மேரி இறந்துவிடுகிறாள். தாஸ் தனிமையடைகிறார். ஒவ்வொரு வருடமும் தன்னுடைய இறந்த நாளன்று மூன்று பிள்ளைகளும் வீட்டுக்கு வரவேண்டும் என்பது மேரியின் ஆசை. அதனால் மேரியின் இறந்த நாளன்று சன்னி, ஜெர்ரி, ஆன்னி மூவரும் வீட்டுக்கு வருகின்றனர். அவர்கள் ஒன்றாக இருக்கும் நாட்களில் என்ன கற்றுக்கொள்கிறார்கள் என்பதே நெகிழ்வான திரைக்கதை.சன்னியாக பிஜு மேனனும், ஆன்னியாக மஞ்சு வாரியரும் கலக்கியிருக்கின்றனர். மஞ்சு வாரியரின் அண்ணனான மது வாரியர்தான் இப்படத்தின் இயக்குநர்.
 ஜுண்ட்
விளையாட்டை மையப்படுத்திய சிறந்த இந்தியப் படங்களைப் பட்டியலிட்டால் ‘ஜுண்ட்’ எனும் இந்திப்படம் முதன்மையான இடத்தைப் பிடிக்கும். ‘ஜி 5’ல் காணலாம். நாக்பூரைச் சேர்ந்த விஜய் பார்ஸே என்ற உன்னத மனிதரின் வாழ்க்கைக் கதை இது. நாக்பூரில் உள்ள ஒரு கல்லூரியில் விளையாட்டுத் துறை பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் விஜய். ஒரு நாள் மழை பெய்துகொண்டிருக்கும்போது நனையாமல் இருப்பதற்காக ஒரு குடிசைப் பகுதியில் ஒதுங்குகிறார் விஜய். அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த சிறுவர்களும், இளைஞர்களும் தண்ணீர் கேனை கால்பந்தாக்கி விளையாடு வதைப் பார்க்கிறார் விஜய்.
அந்த சிறுவர்களும், இளைஞர்களும் சின்னச் சின்ன குற்றச் செயல்களில் ஈடுபட்டு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருப்பவர்கள். அவர்களுக்கு கால்பந்து விளையாட்டைக் கற்றுக்கொடுத்து, அவர்களின் வாழ்க்கையை எப்படி மீட்டெடுக்கிறார் விஜய் என்பதே இப்படத்தின் திரைக்கதை. விஜய் பார்ஸேவின் வாழ்க்கையினூடாக, விளையாட்டு ஒரு மனிதனுக்குள் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதை இப்படம் ஆழமாக சித்தரித்திருக்கிறது. கால்பந்தின் மூலம் ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கையை மீட்டெடுத்த விஜய்யின் செயல் போற்றுதலுக்கு உரியது. பேராசிரியர் விஜய்யாக வாழ்ந்திருக்கிறார் அமிதாப்பச்சன். அருமையான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் நாக்ராஜ் மஞ்சுளே.
மிஷன் இம்பாசிபிள்
எல்லாவற்றையும் மறந்து வயிறு குலுங்க சிரிக்க வேண்டுமா? உடனே ‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகியிருக்கும் ‘மிஷன் இம்பாசிபிள்’ எனும் தெலுங்குப் படத்தைப் பாருங்கள். திருப்பதிக்கு அருகிலுள்ள ஒரு குக்கிராமம். அங்கே வாழ்ந்து வரும் ராகவா, ரகுபதி, ராஜாராம் ஆகிய மூன்று சிறுவர்களுக்கும் பெரிய கனவுகள் இருக்கின்றன.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமைப் பிடித்துத் தருபவர்களுக்கு 50 லட்ச ரூபாய் பரிசு என்ற தொலைக்காட்சிச் செய்தி மூன்று சிறுவர்களின் காதுகளை எட்டுகிறது. தாவூத் இப்ராஹிமைப் பிடித்து, 50 லட்ச ரூபாயை அள்ளுவதற்காக மூன்று பேரும் வீட்டைவிட்டு வெளியேறுகின்றனர். இன்னொரு பக்கம் பத்திரிகையாளர் சைலஜா ஒரு குழு அமைத்து குழந்தைக் கடத்தல் செய்யும் பெரும் புள்ளியைப் பிடிக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்.
சிறுவர்களும், சைலஜாவும் எந்தப் புள்ளியில் இணைகின்றனர்? சைலஜாவின் குழு அந்தப் பெரும்புள்ளியைப் பிடித்ததா? சிறுவர்கள் தாவூத் இப்ராஹிமைப் பிடித்தனரா... என்பதே சுவாரஸ்யமான திரைக்கதை. சிறுவர்களின் திட்டமிடலும், அதற்குப் பின்னிருக்கும் வெகுளித்தனமும் சிரிக்க வைக்கின்றன. அத்துடன் குழந்தைக் கடத்தல் பற்றியும் பேசியிருப்பது சிறப்பு. சைலஜாவாக மனதில் நிற்கிறார் டாப்ஸி. படத்தின் இயக்குநர் ஸ்வரூப் ஆர்எஸ்ஜே.
டியர் ஃபாதர்
சமீபத்தில் ‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது ‘டியர் ஃபாதர்’ எனும் குஜராத்தி மொழிப்படம். முதியவர் ஒருவர் வீட்டின் பால்கனியிலிருந்து கீழே விழுந்துவிடுகிறார். பலத்த அடிபடும் அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்படுகிறது. அந்த முதியவரின் மகனும், மருமகளும் பால்கனியிலிருந்து தவறி விழுந்துவிட்டார் என்று இந்தச் சம்பவத்தை வெளியே பரவவிடாமல் மூடிவிடுகின்றனர்.
மகன்களால் பாதிக்கப்பட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் தனிப்பட்ட ஆர்வத்தால் முதியவரைக் குறித்து விசாரணையில் இறங்குகிறார். அந்த முதியவரின் மகனும், மருமகளும் சேர்ந்து கீழே தள்ளியிருப்பார்களா அல்லது கத்தியில் குத்தி கீழே தள்ளியிருப்பார்களா... அவர் எப்படி கீழே விழுந்தார்... என்ற கோணத்தில் அந்த அதிகாரி விசாரணையை ஆரம்பிக்க, சூடுபிடிக்கிறது திரைக்கதை.
முதியவர்களின் தனிமையையும், அடுத்த தலைமுறையுடன் இணங்கிப் போக முடியாத அவர்களின் நிலையையும் அழுத்தமாகப் பதிவு செய்யும் இந்தப் படம், குடும்பத்தில் முதியவர்களின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டுகிறது. முதியவருக்கும் அவரது மருமகளுக்கும் இடையே நடக்கும் உரையாடல்களும், முரண்பாடுகளும் கவனத்துக்குரியவை. நடிகர்களின் தேர்வு கச்சிதம். படத்தின் இயக்குநர் உமங் வியாஸ்.
தொகுப்பு: த.சக்திவேல்
|