ஹீரோயின் ஸ்மார்ட் ஃபோன்ல இருக்கிற ஒரு சாஃப்ட்வேர்!



‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ - இது ‘அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா’ நடிக்கும் படத்தோட டைட்டில்! ஆமாம், அப்படித்தான் படக்குழு தங்கள் ஹீரோ சிவாவுக்கு பட்டம் கொடுத்து மகிழ்கிறது. போஸ்டரில் சிவா கிட்ஸ்களின் ஃபேவரைட் கேரக்டர்களான ஹல்க், அயர்ன்மேன் கன்ட்ரோலில் இருப்பது போல் கலர்ஃபுல்லாக சித்தரிக்கப்பட்டிருந்தது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா புன்னகையுடன் நம்மை வரவேற்றார்.ஸ்கூல் முடிச்சுட்டு படம் பண்ண வந்த மாதிரி இருக்கீங்களே..?

பிறந்தது, வளர்ந்தது எல்லாமே சென்னைலதான். டென்த்ல ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தேன். ப்ளஸ் டூவுல மேத்ஸ் சப்ஜெக்ட்ல சென்ட் பர்சன்ட் மார்க் எடுத்தேன். நல்லா படிக்கிற பையன் என்பதால் மெரிட்ல என்ஜினியரிங் சீட் கிடைச்சது. காலேஜ் டைம்லதான் எனக்குள் இருக்கும் சினிமா ஆர்வத்தை புரிஞ்சிக்க ஆரம்பிச்சேன். செகண்ட் இயர் படிக்கும்போது என்னுடைய முதல் ஷார்ட் ஃபிலிம் பண்ணினேன். ‘நிழல் பேசும் காதல்’ என்ற அந்த ஷார்ட் ஃபிலிமை முழுக்க முழுக்க ஷேடோஸ் வெச்சு உருவாக்கினேன். ஷூட்டிங் ஸ்பாட் என்னுடைய காலேஜ் கேம்பஸ். அதுல வர்ற எல்லா கேரக்டரும் ஷேடோஸாதான் வருவாங்க.

தொடர்ந்து, ஏழெட்டு ஷார்ட் ஃபிலிம் பண்ணியிருப்பேன். சில ஷார்ட் ஃபிலிமுக்கு விருதுகளும் கிடைச்சது. கோலிவுட் இயக்குநர்களில் மோகன்ராஜா சார் பாராட்டினார்.
காலேஜ் முடிச்ச பிறகு வேலைக்கு போகணும்னு தோணல. அந்த சமயத்துல விளம்பரப்படங்கள் இயக்கும் வாய்ப்பு கிடைச்சது. நான் இயக்கிய விளம்பரப்படங்களில் ப்ரியா பவானி சங்கர், கோபிநாத், தர்ஷன், பவித்ராலக்ஷ்மி போன்ற பிரபலங்கள் நடிச்சிருக்காங்க. சின்ன வயசுலேயே கல்லா கட்ட ஆரம்பிச்சுட்டேன்னு நினைக்கலாம்.

நான் சம்பாதிச்ச எல்லா பணத்தையும் ஷார்ட் ஃபிலிம் எடுக்க யூஸ் பண்ணிக்கிட்டேன். ஏன்னா, ஷார்ட் ஃபிலிம் பண்ண பட்ஜெட் இருக்காது. சில ஃப்ரெண்ட்ஸ் உதவி செய்வாங்க. வீட்லயும் பணம் கேட்க முடியாது. அதனால நானே சம்பாதிச்சு ஷார்ட் ஃபிலிம் எடுக்க ஆரம்பிச்சேன்.இதற்கிடையே சினிமா பண்ணுவதற்காக ஸ்டோரியும் ரெடி பண்ணி வெச்சேன். என் மீது நம்பிக்கை வெச்ச காரணத்தால வீட்லயிருந்தும் பெரிய எதிர்ப்பு வரல.

முதல் பட வாய்ப்பு எப்படி கிடைச்சது?

‘நம்முடைய முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து பண்ணினாலே வாழ்க்கையில் அதிசயங்கள் நடக்க ஆரம்பித்துவிடும்’ - இது யார் சொன்ன தத்துவம்னு கேட்கிறீங்
களா? இது எனக்கு நானே சொல்லிக்கொண்டது. சந்தானம் சார் நடிச்ச ‘பாரீஸ் ஜெயராஜ்’ படத்தை தயாரிச்ச குமார் சார்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். ஒருமுறை குமார் சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது. ஃபர்ஸ்ட் மீட்டிங்ல படத்தோட அவுட்லைன் சொன்னேன்.

சாருக்கு அது பிடிக்கவே, பவுண்டட் ஸ்கிரிப்ட்டோடு வரச் சொன்னார். அதையும் படிச்சுட்டு படம் பண்ணலாம்னு சொன்னார். சினிமாவைப் பற்றிய புரிதல் இருந்ததால் முழு சுதந்திரம் கொடுத்தார்.

சிவாவை எப்படி ஹீரோவாக செலக்ட் பண்ணீங்க?

லாக்டவுன் சமயத்துலதான் சிவா சாரிடம் கதை சொன்னேன். ‘நேர்ல வந்து கதை சொல்லட்டுமா சார்’னு கேட்டேன். ‘பரவாயில்லப்பா, ஃபோன்ல சொன்னாலும் என்ன மாதிரி கதைனு தெரிஞ்சுடும்’னு சொன்னார்.  ஃபோன்ல கதை சொல்லப்போறோம் என்பதாலும், கிடைச்ச வாய்ப்பை மிஸ் பண்ணிடக்கூடாது என்ற எண்ணமும் இருந்ததால நெர்வஸா இருந்துச்சு. ஏன்னா, அந்த சான்ஸை விட்டுட்டா, மறுபடியும் அவரிடம் கதை சொல்வதற்கு சிறிது காலம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்துச்சு. மறுபடியும் லாக்டவுன் வருமா, வராதா என்ற குழப்பமும் அப்ப நிலவிச்சு. ஒருவழியா ஃபோன்லேயே ஒன்றரை மணி நேரம் கதை சொன்னேன். கதை கேட்டதும் ஓகே சொல்லிட்டார்.

படத்துல ஃபுட் டெலிவரி பாயா வர்றார். அதுக்காக வெயிட் குறைக்கச் சொன்னேன். அவரும் ‘சரி’ன்னு சொன்னார். ஆனா, அவர் உடல் எடையை குறைப்பார்னு நானும் நம்பல, புரொடியூசரும் நம்பல. ஷூட்போகும் போது 12 கிலோ எடை குறைச்சுட்டு வந்தார். ‘டெலிவரி பாய் கெட்டப்புக்காக வெயிட் குறைக்க வெச்சிட்டீங்க பிரதர்’னு கலாய்த்தார்.
லொகேஷன்ல அவர் இருந்தால் ஜாலிக்கு பஞ்சமே இருக்காது. டென்ஷன் என்ற பேச்சுக்கே இடமிருக்காது. காலையில் வந்ததும் இரண்டு பேரும் அன்றைக்கு எடுக்கப்போகும் காட்சியைப் பற்றி டிஸ்கஸ் பண்ணுவோம். அதன் பிறகு ஃபுல் ஃப்ளோவுல எடுக்க ஆரம்பிச்சுடுவோம். இதுல ‘சிங்கிள்’ சங்கர் கேரக்டருக்கு நியாயம் செய்திருந்தாலும் வழக்கமான சிவாவையும் பார்க்கலாம்.

மேகா ஆகாஷ்?

மேகாவுடைய அம்மாவிடம் எனக்கு அறிமுகம் இருக்கு. நான் அப்ரோச் பண்ணிய சமயத்துல மேகா பிஸியாக இருப்பதாகச் சொன்னார். ‘கதையைக் கேட்ட பிறகு முடிவு பண்ணுங்க’னு சொன்னேன். அவரும் கதை கேட்டதும் இம்ப்ரஸாகி, ‘பண்ணலாம்’ என்றார். படத்துல அவங்க கேரக்டர் பேர் ‘ஸ்மார்ட் ஃபோன்’ சிம்ரன். ஸ்மார்ட் ஃபோன்ல இருக்கிற ஒரு சாஃப்ட்வேராக வருவார்.

இன்னொரு ஹீரோயினா அஞ்சு குரியன் வர்றாங்க. தமிழ்ல ‘இக்லூ’ வெப் சீரிஸ், ‘சென்னை டூ சிங்கப்பூர்’ பண்ணியிருக்கிறார். மலையாளத்துல பகத் பாசிலுடன் ‘எஞ்சான் பிரகாஷன்’ பண்ணியவர். பாடகர் மனோ, ஹீரோவுடைய அப்பாவா வர்றார். அவருடன் வேலை செஞ்சது சந்தோஷமான அனுபவம். மனோ சார் செட்ல இருந்தால் ஃபன்னுக்கு பஞ்சமிருக்காது. ப்ரேக்ல அவருடைய ஹிட்ஸ் பாடுவார். டீமுக்காக வீட்லயிருந்து லஞ்ச் கொண்டு வருவார்.

சிவா ஃப்ரெண்டா மா.கா.பா.ஆனந்த் வர்றார். பக்ஸ், ஷாரா, டிவி புகழ் பாலா, கல்கி ராஜா, திவ்யா கணேஷ்னு படத்துல வர்ற எல்லாருக்கும் முக்கியத்துவம் இருக்கும். இவர்களுடன் கிட்ஸ் ஃபேவரைட் ஹல்க், அயர்ன் மேன் கேரக்டர்ஸ் முக்கியமான இடத்துல வரும்.உங்க கேமராமேன் கமல், பாலா என்று ஆளுமைகளுடன் ஒர்க் பண்ணியவர்...

இதுல எப்படி?

எங்க கேமராமேன் ஆர்தர் வில்சன் சார் ஒரு லெஜண்ட். ‘அன்பே சிவம்’, ‘நான் கடவுள்’ மாதிரியான படங்கள் பண்ணியவர். அழுத்தமான கதைகள் பண்ணியவர் என்பதால் அதை ப்ரேக் பண்ண இந்தப் படத்தை செலக்ட் பண்ணியதாகச் சொன்னார். ‘இரவின் நிழலு’க்குப்பிறகு இந்தப் படம் பண்ணினார். சார் எப்பவுமே அமைதியாக இருப்பார்.

வேலை மட்டும் டக்... டக்...னு நடக்கும். அவரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். ஒரு அண்ணனுடன் வேலை செய்வது போல இருக்கும். தமிழ் சினிமாவின் முக்கியமான ஒளிப்பதிவாளராக இருந்தாலும், என்னை அறிமுக இயக்குநர் என்று பார்க்காமல் ஒரு இயக்குநருக்கான மரியாதையைக் கொடுத்தார். ஃப்ரேமிங், லைட்டிங் எல்லாமே

வித்தியாசமாகவும், கலர்ஃபுல்லாகவும் பண்ணியிருக்கிறார். மியூசிக் லியோன் ஜேம்ஸ். ‘ஓ மை கடவுளே’ படத்துல சூப்பரா ஸ்கோர் பண்ணியிருந்தார். என்னுடைய கதைக்கு பொருத்தமா தெரிஞ்சதால அவர்கிட்ட போயிட்டேன். கதைக்கு என்ன தேவையோ அதை சரியா கொடுத்தார். 4 பாடல்கள். மேகா ஆகாஷ், அந்தோணிதாஸ், லியோன் ஜேம்ஸ், பரத்  பாடியிருக்காங்க.  
எடிட்டிங் பூபதி செல்வராஜ். ‘ஓ மை கடவுளே’ பண்ணியவர். ஒவ்வொரு ‘கட்’ஸையும் ஃபீல் பண்ணி முடிச்சுக் கொடுத்தார். சாண்டி மாஸ்டர் கோரியோ பண்ணிய ‘சோறுதான் முக்கியம்...’ வைரலாகுமளவுக்கு பிரமாதமா வந்திருக்கு.

சினிமா - விளம்பரப் படம்; என்ன வித்தியாசம் தெரிஞ்சது?

மேக்கிங் விஷயத்துல எதுவும் தெரியல. அதுக்கு காரணம் சிவா, ஆர்தர் வில்சன் தரப்புல இருந்து நல்ல சப்போர்ட் கிடைச்சதுதான். முதல் படத்துக்குரிய சில சவால்களும் இருந்தது. அதையும் தாண்டி படத்தை சிறப்பா முடிச்சிருக்கோம். அடுத்து, பெரிய ஹீரோக்களுக்கு பண்ணும் ஐடியா இருக்கு. நம்முடைய வேலையை சரியா செஞ்சா நமக்கான பாதையை இந்த பிரபஞ்சம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கு.

எஸ்.ராஜா