அரண்மனை குடும்பம்-19



காருக்குள் இருந்து நடந்தவைகளைப் பார்த்தபடி இருந்த குலசேகர ராஜா முகத்தில் தீவிர சிந்தனை!ஒரு முயற்சிக்கு இரண்டு முயற்சிகளும் எதிர்வினையாகி விட்டது. அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்பதைவிட அப்போதைக்கு என்ன செய்தால் கணேசன் சந்தேகப்படாமல் இருப்பான் என்று யோசித்தவர் உடனேயே கணேசனுக்குத்தான் போன் செய்தார்.
கணேசனும் காரில் சென்றபடியே பேசினான்.

“ராஜா இப்ப எங்க இருக்கே?”

“கார்ல திரும்பிக்கிட்டிருக்கேன் மாமா... ஒரு இரண்டு நிமிஷத்துல பங்களாவுக்கு போயிடுவேன். அப்புறம் நானே உங்க கூட பேசணும்னுதான் இருந்தேன். செத்துப்போன அந்த மார்ட்டினாலயும் சரி, இந்த சதீஷாலயும் சரி... நான் போலீசுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்குது. அந்த மார்ட்டினை இங்க எதுக்கு வேலைக்கு வெச்சீங்க..? அதான் நாச்சிமுத்து, பங்கஜம்னு ரெண்டுபேர் இருக்காங்க இல்ல..?”

இருக்காங்கப்பா... ஆனா, எஸ்டேட் வேலைக்கு அவங்க சரிப்பட்டு வர மாட்டாங்கன்னுதான் நான் மார்ட்டினை அனுப்பினேன்... இவங்க பங்களாவுக்கு மட்டும்தான் பொறுப்பு...”
“அப்புறம் இந்த சதீஷ் எதுக்கு..? எத்தனை வேலைக்காரங்க மாமா...”

“நாளைக்கே அந்த ஆத்தூர் மணியனோட எஸ்டேட்ட வாங்கிப் போடும்படியானா அப்ப ஆட்கள் தேவைப்படுவாங்களே..? பை த பை, நான் இப்ப ஏற்காட்லதான் இருக்கேன். நம்ப பங்களாவுக்குக் கூட வந்தேன். நீ கிளம்பலைன்னா உன்கூட வரலாம்னு நினைச்சேன். ஆனா, அதுக்குள்ள நீ கிளம்பிட்டே... அப்புறம் கொஞ்ச நேரம் இருந்துட்டு கிளம்பிட்டேன். இப்ப போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்க் கிட்டு இருக்கேன்...’’

“என்ன மாமா சொல்றீங்க..? நான் வந்துகிட்டிருக்கேன், வெயிட் பண்ணுன்னா பண்ணியிருப்பேனே... ஆனா, நீங்க அப்படி சொல்லவேயில்லையே..?”
“ஒரு சஸ்பென்ஸ் கொடுப்போம்னு நினைச்சேன் ராஜா. அவ்வளவுதான்...”“இதுல எல்லாம் என்ன மாமா சஸ்பென்ஸ் வேண்டிக் கிடக்கு?”
“போகட்டும் விடு... அந்த சதீஷ் பாடிய ஆம்புலன்ஸ் வந்து எடுத்துக்கிட்டு போயிட்டாங்களா..?”

“போயிட்டாங்க... இந்த சாவை எஸ்.ஐ.சாமிக்கண்ணு கொலையா இருக்குமோன்னும் சந்தேகப்பட்றாரு. இந்த சதீஷ் கூட இன்னொருத்தனும் வந்துருக்கான். அவன நானும் பார்த்தேன். சேலம் பஸ் வரவும் இறங்கி ஓடிட்டான்னு சொன்னேன்ல..? அவனைப் பத்தி சொல்லவும் சாமிக்கண்ணு சாரோட போலீஸ் புத்தி சந்தேகப்பட ஆரம்பிச்சிடிச்சி.

அவனைப் பிடிக்க கீழ இருக்கற செக்போஸ்ட் போலீசுக்கு தகவல் கொடுத்துருக்காரு. அவன பிடிச்சு குடையப்போறாங்க. தேவைப்பட்டா நானும் போய் அவன்தான்னு சொல்லவேண்டியிருக்கும்...”பிடாரன் போதிமுத்து பற்றி கணேசன் குறிப்பிடவும் குபீர் என்று வியர்த்துவிட்டது குலசேகர ராஜாவுக்கு. சில வினாடிகள் பேச்சு வரவில்லை அவரிடம்.

அதற்குள் பங்களா வரவும் உள் நுழைந்து போர்ட்டிகோவில் நின்றவன் காரை விட்டு இறங்காமல் காருக்குள் இருந்தபடியே தொடர்ந்து பேசினான்.
“மாமா... நான் பங்களாவுக்கு வந்துட்டேன். என்ன உங்க கிட்ட பேச்சைக் காணோம்..?”“அது... சதீஷ் சாவை போலீஸ் சந்தேகப்படுதுன்னு சொல்லவும் எனக்கு ஒரு மாதிரியாயிடிச்சு... அதான்... ஆமா, கூட வந்த அந்த நபரை உனக்கு அடையாளம் தெரியுமா..? அவன் உன்கூட என்ன பேசினான்..?”

“முகமெல்லாம் ஞாபகமில்ல மாமா... அந்தி சந்தி இருட்டுல என்னத்தப் பார்க்க? ஆனா, குரல் ஞாபகத்துல இருக்கு... அப்படி ஒண்ணும் அவனை சந்தேகப்படவும் இடமில்லை. ஏன்னா அவன்தான் என் காரையே நிறுத்தி உதவி கேட்டவன். அவன் தப்பானவனா இருந்தா உதவியே கேட்டுருக்க மாட்டானே? காப்பாத்த முடியாதுன்னு தெரியவும் போலீஸ் என்கொயரிக்கு பயந்து ஓடிட்டான். இதுதான் என்னோட கருத்து...”“அப்படி ஓடினா யாருக்குமே சந்தேகம் வரத்தானே செய்யும்? அதுலயும் போலீசுக்கு வராம இருக்குமா?”

“அது சரி மாமா... உதவி செய்யப்போன என்னையும்ல சந்தேகத்தோட பாத்து... நீங்க எங்க இங்க வந்தீங்க... அதுவும் இவன பாம்பு கடிச்ச சரியான நேரத்துலன்னு அந்த எஸ்.ஐ. குடையத் தொடங்கிட்டாரு...”“நோ பிராப்ளம் ராஜா... நான் இப்ப ஸ்டேஷனுக்குதான் போறேன். அந்த எஸ்.ஐ.ய பார்த்து நான் பேசறேன்... போலீஸ் இனி எதுக்காகவும் உன்கிட்ட வரமாட்டாங்க... நீ பயப்படாதே...”“மாமா... நான் பயப்படலை! பயப்பட நான் என்ன விவரமில்லாத குழந்தையா? ஆனா, எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்கல மாமா... இப்பகூட ஒரு வீணாப்போன, எதுக்கும் உதவாத எஸ்டேட்டை பாக்கத்தான் நீங்க என்னை போகச் சொல்லியிருக்கீங்க.

அந்த எஸ்டேட்டை சும்மா கொடுத்தாகூட யாரும் வாங்க மாட்டாங்க. அங்க அவ்வளவு பிரச்னைங்க வேற இருக்குது. நீங்க என் டயத்தை எவ்வளவு வேஸ்ட் பண்ணியிருக்கீங்க

தெரியுமா?”“சாரி ராஜா... வெரி சாரி... என்ன மன்னிச்சிடு... எனக்கொரு நப்பாசை... அந்த அருணாச்சலம் அதை எங்க வாங்கிடப் போறானோன்னு...”

“அவன் வேண்டாம்னு சொல்லிட்டதாதான் நான் அங்க கேள்விப்பட்டேன்... நீங்க அவனுக்கு தேவையில்லாம முக்கியத்துவம் கொடுக்கறீங்களோன்னுதான் எனக்கு தோணுது...”
‘‘அப்படி எல்லாம் இல்லை... ஒரு எச்சரிக்கைதான்! எனக்கு நம்ப குடும்பம் எப்பவும் நல்லா இருக்கணும்... இது ஆண்ட குடும்பம்.

இப்ப அதிகாரம் நம்ம கைல இல்லேன்னாலும் செல்வாக்குல குறை வந்துடக் கூடாது... அரண்மனை குடும்பம்னா தில்லி வரை ஒரு மதிப்பு இருக்குல்ல? அது குறைஞ்சிடக் கூடாது...”
“குறையாது மாமா... கொஞ்சமும் குறையாது!

அதிகாரமும் கைக்கு வரத்தான் போகுது. அதை கூடிய சீக்கிரம் நீங்க பாப்பீங்க. தயவுசெய்து இனி என்னை இந்த எஸ்டேட் வாங்கற விஷயத்துல எல்லாம் ஈடுபடுத்த நினைக்காதீங்க.அந்த அருணாச்சலத்தையும் நான் சும்மா விட்றதா இல்லை. ஒரு ப்ராெஜக்டுக்கான உதவி கேட்டு என் நண்பர் ஒருத்தர் போயிருக்கார்.

அஞ்சு கோடி ரூபா லஞ்சம் கேட்டுருக்கான்! அதை அவர் ரெக்கார்ட் பண்ணிட்டார். அதை வெச்சே அவன் இமேஜை காலி பண்ணி அரசியலவிட்டே ஓடவைக்கறேன் பாருங்க...”
“சரி ராஜா... நீ போய் ரெஸ்ட் எடு! பங்களாவுல ரத்தி, குழந்தைய பார்த்தேன். பரவால்ல, குழந்தை நல்லா குணமாயிட்டா! என்னால நம்பவே முடியல. மலைய விட்டு இறங்கின உடனே திரும்ப வந்துடாம இருக்கணுமேன்னு சாமிய வேண்டிக்கிட்டேன். அப்ப நான் வெச்சுடட்டுமா?”

“ஓ.கே. மாமா...” ஒரு நெடிய தொலைபேசி உரையாடலை முடித்துவிட்டு காரில் இருந்து இறங்கிய கணேசன் எதிரில், தோளில் தியாவோடு நின்று கொண்டிருந்தாள் ரத்தி.
“ஏய்ய்... ஏன் இங்க பனியில நின்னுகிட்டிருக்கே? உள்ள இருக்காம..?”  என்று கணேசன் கேட்கவும், “டாடி...” என்று தியா அவனை நோக்கி கைகளை நீட்டித் தாவினாள்.
அவனும் அவளை வாங்கிக் கொண்டு உள்ளே செல்லத் தொடங்கினான்.

மௌனமாய் இறுக்கமாய் அவனைப் பின்தொடர்ந்தாள் ரத்தி. ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்த கணேசன், “ரத்தி... ஒரு காபி கொண்டுவரச் சொல்லு...” என்றான் தியாவை மடிமேல் அமர்த்தியபடியே.ரத்தி சமையல்கட்டு நோக்கி நடந்தாள்.“நீ எங்க போறே... எங்க பங்கஜம்? அவளைக் கொண்டுவரச் சொல்லு...” என்றவனை மெல்லத்
திரும்பிப் பார்த்தாள் ரத்தி.“என்னடா... எதுக்கு அப்படி பாக்கறே?”

“பங்கஜம், நாச்சி முத்து ரெண்டு பேரையும் உங்க மாமா வந்து சேலத்துல இருக்கற நம்ம தோட்டத்துக்கு அனுப்பிட்டாரு...”
“அப்படியா..! இதை மாமா என்கிட்ட சொல்லவே இல்லையே..?”

“அப்ப அவர் இங்க வந்துட்டு போனது உங்களுக்கு தெரியுமா?”“இப்பதான் நான் கார்ல வரும்போது சொன்னாரு... அதேசமயம் வர்ற வழியில ஒரு ஆக்சிடெண்ட்...”
“ஐயோ ஆக்சிடெண்ட்டா? என்ன ஜீ சொல்றீங்க?” ரத்தி மிக நெருங்கி வந்து பதற்றம் பரவ கேட்டாள்.“நீ பதட்டப்படாதே... ஆக்சிடெண்டா இல்ல இன்சிடெண்ட்டா... எப்படி சொல்றதுன்னு தெரியல? ஆனா, ஒரு உயிர் போயிடிச்சு. அதுவும் ஒரு பாம்பு கடிச்சு..!”“பாம்பு கடிச்சா?”“ஆமாம்... நாம கார்ல வரும்போது ஒரு இடத்துல பாம்பு ஒண்ண பார்த்தோமே... ஞாபகம் இருக்கா?”
“அதுக்கென்ன ஜீ?”

“கிட்டத்தட்ட அந்த இடத்துலதான் ஒருத்தன் பாம்பு கடிச்சு செத்துக் கிடந்தான். ஒருத்தன் அதைப் பார்த்துட்டு எப்படி சும்மா வர முடியும்..? கடைசில பார்த்தா அவனும் நம்ப மாமா ஃபிக்ஸ் பண்ணியிருக்கற ஒரு வேலைக்காரன்தான்! யூரின் பாஸ் பண்ண இறங்கின இடத்துல இருட்டுல அதை மிதிச்சிருப்பான் போல இருக்கு... கணுக்கால்லயே நல்லா போட்ருச்சு. பல் தடயங்கள நானும் பாத்தேன். பகீர்னுச்சு.நீ போய் அது முன்னால விழுந்து கும்பிட்டியே... அதுதான் ஞாபகம் வந்தது! நல்ல வேளை உன்னை அது கடிக்கல!”
“அது தெய்வங்க... கும்பிடறவங்கள எல்லாம் கடிக்காதுங்க...”

“கும்புட்றவன், மிதிக்கறவன் எல்லாருமே அதுக்கு ஒண்ணுதான் ரத்தி. தன்னை தற்காத்துக்க மட்டும்தான் அதுக்கு தெரியும். தான், கடிச்சா ஒரு உயிர் போயிடும்கறதுகூட அதுக்கு தெரியாது...

உனக்கு நான் எப்படி சொல்லி புரிய வைக்கப்போறேன்னு தெரியலியே?” கணேசன் சற்று அலுத்துக் கொண்டான். “நீ... நீங்க சொல்றத எல்லாம் கேட்டா எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஜீ. உங்க மாமா வேற நீங்க அந்தப் பக்கமா போகவும் இந்தப் பக்கமா வந்துட்டார். வந்தவர் இங்க என்கிட்ட நடந்துகிட்ட விதம்கூட என்ன பயமுறுத்தற மாதிரிதான் ஜீ இருந்தது..!”“என்ன சொல்றே ரத்தி... அவர் எதுக்கு உன்னை பயமுறுத்தணும்..?”

“அவர் எதுக்குங்க உங்கள எஸ்டேட்டை பாக்கச் சொல்லி அனுப்பிட்டு, தான் மட்டும் தனியா இங்க வரணும்?”“நானும் இந்த கேள்விய கேட்டேன். ஒரு சஸ்பென்சா இருக்கட்டுமேன்னு சொன்னாரு. தட்ஸ் ஆல்! ஆமா... உன்கிட்ட அவர் அப்படி என்ன தப்பா நடந்துகிட்டாரு?”‘‘அவர் வந்த பிறகு இங்க பல தடவை கரண்ட் போச்சுங்க. நானும் தியாவும் ரூம்ல இருட்டுலதான் கிடந்தோம். அவரோ யார் கூடவோ போன்ல வெளிய நின்னு பேசிக்கிட்டே இருந்தாரு...”“கரண்ட் போனதுக்கு அவர் என்ன பண்ணுவார் ரத்தி?”

“உண்மைல கரண்ட்டெல்லாம் போகலீங்க... பக்கத்து பங்களாவுல எல்லாம் விளக்கு எரிஞ்சிகிட்டுதான் இருந்தது... டிவி ஓட்ற சத்தமும் நல்லா
கேட்டது...”“அப்ப நம்ப பங்களாவுல மட்டும் எப்படி போச்சு?”
“உங்க மாமாதான் மெயின் ஸ்விட்சை அணைச்சு அணைச்சு போட்ருக்காரு...”
“என்ன சொல்றே நீ... ஆமா நீ அவர் அப்படி செய்யும்போது பார்த்தியா?”
“நான் பாக்கல... ஆனா, அவர் அப்படிதான் செய்துருக்கணும்...”

“அதுல அவருக்கு என்ன லாபம்?”“தெரியல... ஆனா, ஆரம்பத்துல இருந்தே சொல்றேன் நமக்கு இப்ப நல்ல நேரம் இல்லைன்னு... ஆனா, நீங்கதான் கேட்க மாட்டேன்னுட்டீங்க.”
“ஓ... நீ இப்ப அந்த பழைய பல்லவிகிட்ட வந்துட்டியா? ஐ ஆம் சாரி... விட்டா நீ உன் கற்பனைகளை எல்லாம் சொல்லி என்ன முட்டாளாக்க பார்ப்பே. வேண்டாம் ரத்தி... விட்ரு... மாமாவையும் தப்பா நினைக்காதே!நாம லவ் மேரேஜ் பண்ணிக் கிட்டதுக்காக அவர் நம்மை வெறுத்தது என்னவோ உண்மை. ஆனா, அவர் இன்னும் அதே ஸ்டாண்ட்ல இருக்கறதா நான் நினைக்கல. என்கிட்டல்லாம் சகஜமாதான் பேசறார்.

அரண்மனைக் குடும்பம்... அதோட மானம் மரியாதைன்னு அவர் ரொம்பவே அக்கறையாவும் இருக்காரு. அதான் எஸ்டேட் வாங்கற விஷயத்துல என்னை அனுப்பினாரு...”கணேசன் குலசேகர ராஜா மேல் எள்முளையளவு சந்தேகமும் இன்றி பேசினான். ரத்திக்கும் அதற்குமேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை. இருந்தும் கேட்டாள்“அப்ப நம்ம வீட்டுக்கு மட்டும் கரண்ட் ஏங்க போய்ட்டு போய்ட்டு வந்துச்சி..?”

“தெரியலியே... அப்படியே கரண்ட் போனாலும் இன்வெர்ட்டர் இருக்கே?”“அதுவும் ஆஃப் பண்ணப் பட்டிருந்திச்சுங்க...”“அப்படியா... நீ போய் பார்த்தியா?”
“பார்த்தேன்... ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்திச்சு. ஆன் பண்ணிட்டு வந்தேங்க!”“ஐசீ... அப்ப செயற்கையா ஒரு இருட்டை உருவாக்கி அந்த இருட்டுல என் மாமா உங்கள ஏதோ செய்ய நினைச்சார்னு சொல்லப் போறியா?”ரத்தி அதற்கு மிக மெதுவாக தலையை ஆட்டி ஆமோதித்தாள். அதைப்பார்த்த மறுவினாடி கணேசன் சிரித்து விட்டான்.

“என்ன ஜீ சிரிக்கிறீங்க?”“சிரிக்காம... அப்படி எதாவது அவர் பண்ணிட்டு மாமா என்கிட்ட இருந்து தப்பிட முடியும்னு நீ நினைக்கறியா?” என்று அழுத்தமாய்க் கேட்டான்.
“அது எனக்கு தெரியாதுங்க... ஆனா, என்னை உங்க குடும்பத்துல யாரும் முழுசா இன்னும் ஏத்துக்கலேன்னு எனக்கு நல்லா தெரியும் ஜீ.

அதுலயும் உங்க மாமா துளியளவு கூட சமாதானமாகலைன்னு நான் சத்தியம் பண்ணிக் கூட சொல்வேன்...”“சரி ரத்தி... இந்தப் பேச்சை இதோட விடு... உனக்கு நான் ஒரு உறுதி தரேன். உன்னை மட்டும் யாரும் என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது... நீ என் ஸ்வீட் ஹார்ட், தியா என் டார்லிங்...” என்று அவளை முத்தமிட்டான்.

ரத்திக்கு அப்படி அவன் பேசியதே அப்போதைக்கு போதுமானதாகவும், மிக இதமாகவும் இருந்தது!போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ. சாமிக்கண்ணுவின் போன் சிணுங்கவும் காதைக் கொடுத்தார்.“சார்... அந்த ஆளைப் பிடிச்சிட்டோம் சார்... அவன் பேர் போதிமுத்து... அவன் ஒரு பாம்புப் பிடாரன் சார்...” என்று வந்த செய்தி சாமிக்கண்ணுவின் சரிந்த முதுகெலும்பை செங்குத்தாக நிமிர்த்தியது!

(தொடரும்)

ஞானமணிதேசிகர் தொடர்பாக தனக்குள் எழும்பிய கேள்விகளை அசோகமித்திரன் அங்கேயே அப்போதே கேட்கவும் செய்தார்.“ரியலா நான் இதை ஒரு பெரிய வொண்டரா ஃபீல் பண்றேன். இவரை ஒரு ஸ்கேன்னிங் மெஷின்னு நீங்க சொன்னது பெரிய உண்மை. எனக்கிருக்கற வியாதியை நான் ஒரு வார்த்தை கூட சொல்லாம, இவர் சொன்ன விதமும், எனக்கு அதுக்காக மருந்தும் கொடுத்ததை நினைச்சு நான் சந்தோஷப்பட்றேன்.

இவர் சொன்ன சிக்கல்லதான் நான் இப்ப இருக்கேன். மருந்து மாத்திரையாலதான் நடமாட முடியுது. அதிகபட்ச செலவும் கூட..!” என்று அசோகமித்திரன் கூறவும், கனபாடிகள் பதிலுக்கு சிரித்தபடியே பேசினார்.“இப்ப இந்த மருந்தை மட்டும் சாப்பிடுங்க... ஒரே மண்டலத்துல பூரண குணமடைஞ்சிடுவீங்க... மனுஷனோட சகல வியாதிகளுக்கும் சரியான மருந்து உள்ளேயும் இருக்கு, வெளியேயும் இருக்கு. அதைக் கண்டறிஞ்சு சரியான விகிதத்துல கொடுக்கறதுலதான் இவரோட வெற்றி இருக்கு. நமக்குள்ள இருக்கற சில சுரப்பிகளைத் தூண்டிவிட்டும் இவர் குணப்
படுத்துவார்.

இவர் ஒரு பரம்பரை வைத்யர். அடுத்து யோகி! அதனால இவர் தன் உடம்புல சுழல்ற இயக்க சக்ரங்களை ஒரே நேர் கோட்டுலயும், அது அதுக்குண்டான வேகத்தோடயும் மெய்ன்டெயின் பண்றார்! நான் ஒரு விஷயம் சொன்னா நீங்க நம்பாம ஆச்சரியப்படுவீங்க. இவர் உடம்பு வியர்வை நாற்றமடிக்காது. இவர் சிறுநீர்ல குடிநீருக்கான அம்சங்களே அதிகம். சுருக்கமா சொல்லப்போனா இவர் தன் உடலை நூறு சதவிகிதம் தன் கட்டுப்பாட்டுல வெச்சுகிட்டிருக்கார்.

இவரால தண்ணி மேல தக்கை போல மிதிக்க முடியும்! அதிகபட்ச கொதிநிலை கொண்ட நீருக்குள்ளயும் கைய விட முடியும்! அதேபோல காற்றை பல நிமிஷங்கள் வரை நெஞ்சுல இவரால கட்ட முடியும். மொத்தத்துல பஞ்ச பூதங்களை இவர் தன் கட்டுப்பாட்டுல வெச்சிருக்கார். ஆனா, நான் நீங்கள்லாம் அதோட கட்டுப்பாட்டுல இருக்கறவா!” என்றார் கனபாடிகள்.

“இதுக்கு நான் எவ்வளவு பணம் தரணும்?” என்று அசோகமித்திரன் கேட்டதற்கு, உண்டியல் ஒன்றைக் காட்டி, ‘‘உங்களால முடிஞ்சதை அதுல போடுங்க. அதுதான் ஃபீஸ்... காலணா தரலேன்னாலும் பாதகமில்லை.

வைத்தியம் நம்ப யோகியைப் பொறுத்தவரை ஒரு சேவை! இந்த உலகத்துல வைத்யன்கறவன் நடமாட்ற, கண்ணுக்கு தெரியற கடவுள்னு சொல்றவர்! உடம்பைக் கொடுத்தவன் கடவுள் - அதோட வலியை போக்கறவனும் கடவுள்தானே? அதனால அப்படிப்பட்ட கடவுள், காசு பணத்தை ஜெயிச்ச மகா சக்திமானா இருக்கணும்னு சொல்வார்...”என்று ஞானமணி தேசிகர் சார்பில் கனபாடிகளே பேசினார். அசோகமித்திரனும் பர்ஸில் இருந்து ஒரு ஆயிரம் ரூபாயை எடுத்து உண்டியலில் போட்டார்.

“பூரண குணமானபின்னே திரும்ப வந்து என் மனசு சொல்ற ஒரு பெரிய தொகையை இந்த உண்டியல்ல போடுவேன்...” என்றார்.“நிச்சயமா ஆகும். சந்தேகமே வேண்டாம்...” என்றார் கனபாடிகள். அப்போது ஞானமணி தேசிகர் சிலேட்டில் “அடைக்கப்பட்ட குளிர்பானங்கள், காபி, டீ மற்றும் பொட்டுக்கடலை, கொண்டைக் கடலை தவிர்க்கவும். தூதுவளை, பிரண்டை, கீரையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சேர்க்கவும். மென்று நிதானமாக சாப்பிடவும். காலை 8 மணி, மதியம் 1 மணி, மாலை 7 மணிக்கு ஆகாரத்தை முடித்துவிடவும். ஒரு நிமிட தாமதமும் கூடாது. அருள்கூர்ந்து தரையில் அமர்ந்து சப்பணங்காலிட்டு சாப்பிடுங்க.

சாப்பிடும்போது நீர் அருந்த வேண்டாம். வாரம் ஒருமுறை பாகற்காய் கசப்பும், அன்றாடம் மதியம் தாம்பூலம் தரிப்பதையும் சில மாதங்கள் பின்பற்றுக. ஒரே வருடத்தில் உருக்கு போன்ற மனிதராகி விடுவீர்...” என்று எழுதிக்காட்டினார். அதே வேகத்தில் சைகையில், ‘இது உங்களுக்கு மட்டும் பொருந்தும் வழிமுறை. மற்றவர்களுக்கு கிடையாது’ என்று உணர்த்தவும் அசோகமித்திரனும் புரிந்துகொண்டார்.

அப்போது கிட்டத்தட்ட 100 பொட்டலங்கள் கொண்ட ஒரு மருந்துப் பையை தேசிகரின் உதவியாளன் மடிப்பிச்சை என்பவன் தயாராக எடுத்து வந்து நீட்டினான்.
அதை வாங்கிக்கொண்டு அசோகமித்திரன், ஒரு பெரிய வணக்கத்துடன் புறப்பட்டார்.தெருவில் இறங்கி நடக்கும்போது அசோகமித்திரனிடம் பெரிய அளவில் மனதில் மாற்றங்கள்.
“சாமி... எனக்கு இந்த அனுபவம் ரொம்ப புதுசு. இன்னமும் என் பிரமிப்பு நீங்கலை..” என்றார்.“நீங்க எங்க நாடி ஜோதிடர் கற்பக விநாயகத்தை சந்திச்சா உங்க பிரமிப்பு இன்னமும் அதிகமாகும். பாக்கறீங்களா?” என்று கேட்டார் கனபாடிகள்.அந்த அனுபவமும் தனக்கு தேவைதான் என்றே அசோகமித்திரனும் நினைத்தார்!

இந்திரா சௌந்தர்ராஜன்

ஓவியம்: வெங்கி