லைட்டிங்தான் என் லைஃப்! சொல்கிறார் சாணிக் காயிதம் யாமினி யக்ஞமூர்த்தி
வித்தியாசமான லைட்டிங், தனித்துவமான ஃபிரேம், ஆச்சரியப்படுத்தும் விஷுவல் என ‘சாணிக் காயிதம்’ படத்தின் மேக்கிங் அந்த ஒளிப்பதிவாளர் யார் என்னும் கேள்வியை எழுப்பியது. பதிலும் கிடைத்தது. யாமினி யக்ஞமூர்த்தி.
 ‘‘சொந்த ஊர் சென்னைதான். அப்பா நேஷனல் இன்சூரன்ஸில் வேலை செய்து ரிட்டையர்ட் ஆகிட்டார். அம்மா ஹோம் மேக்கர். நான் படிச்சது டிஜி வைஷ்ணவா கல்லூரியில் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன். தொடர்ந்து கிராஃபிக் டிசைனரா ரெண்டு வருஷங்கள் வேலை செய்தேன்.  அப்பறம் கமர்ஷியல் ஃபுட் புராடக்ட் போட்டோகிராபராக வேலை செய்துட்டு இருந்தேன். ஆனாலும் சின்ன வயசுல இருந்தே இந்த லைட்டிங், லைட்டிங் டெக்னிக் பத்தி கத்துக்கணும்னு ஆசை. அதனால என்னுடைய முந்தின புராஜெக்ட், புரொபைல் எல்லாத்தையும் பி.சி.ராம் சாருக்கு அனுப்பினேன். அதுவும் சமூகவலைத்தளம் வழியா! ‘உங்ககிட்ட அசிஸ்டெண்ட்டா சேரணும் சார்’னு கோரிக்கை வைச்சேன்.அவர் என் மெசேஜை பார்ப்பார்னு எனக்கு நம்பிக்கையில்ல. ஆனாலும் கேட்காம இருக்க முடியலை. கேட்டேன். என்னாலயே நம்ப முடியலை... என் புரொஃபைல் எல்லாத்தையும் பார்த்துட்டு ஆபீஸ் வரச் சொன்னார்.
 இப்படித்தான் சார் கூட ‘சைக்கோ’ படத்துல வேலை செய்யற சான்ஸ் கிடைச்சது...’’ என்னும் யாமினி தன்னுடைய முதல் பட அனுபவம் பற்றி பகிர்ந்தார். ‘‘சினிமான்னு எதுவுமே நான் பிளான் செய்யல... எந்த வேலையா இருந்தாலும் ஓகே... ஆனா, அது லைட்டிங் கூட செய்கிற வேலையா இருக்கணும்னு தெளிவா இருந்தேன். பிசி ராம் சார் கூட ‘சைக்கோ’ல அசிஸ்டெண்ட்டா வேலை செய்துட்டு இருந்தப்பதான் இயக்குநர் ஹலிதா ஷமீம் என்னை அழைச்சாங்க. அந்த சந்திப்பு என்னை ஒளிப்பதிவாளரா உயர்த்தியது.
ஹலிதா ஷமீம் இயக்கிய ‘சில்லுக்கருப்பட்டி’ படம்தான் ஒளிப்பதிவாளரா எனக்கு முதல் படம். இந்தப் படத்துல என்னுடைய ஒர்க்கை பார்த்துட்டுதான் அருண் மாதேஸ்வரன் என்னை தன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய கூப்பிட்டார். அப்படித்தான் எனக்கு ‘சாணிக் காயிதம்’ பட சான்ஸ் கிடைச்சது. இதுதான் கதை... இதுதான் கதைக்களம்னு அருண் மாதேஸ்வரன் முழுமையா எனக்கு தெளிவுபடுத்தினார். அவருக்கு என்ன தேவை என்பதையும் என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது. அப்படித்தான் இந்த படத்தின் விஷுவல் சாத்தியமாச்சு...’’ என்னும் யாமினி, சினிமா துறையில் பெண் டெக்னீஷியன்கள் குறித்து பேசினார்.
‘‘எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் வேலை செய்த எந்த இயக்குநரும் என்னை ஒரு பொண்ணா ட்ரீட் பண்ணவே இல்ல. ஒரு டெக்னீஷியனாதான் நடத்தினாங்க. சென்னைலயே என்னை மாதிரி நிறைய டெக்னீஷியன்ஸ் இருக்காங்க... அவங்க பேரெல்லாம் சொல்லணும்னு விரும்பறேன். சரண்யா சந்தர், ஷ்ரயந்தி, அபூர்வா சிவலிங்கம், ப்ரீத்தா ஜெயராமன்... இப்படி சினிமா டெக்னீஷியன்ஸை இப்ப பார்க்க முடியுது. ஹேப்பியா இருக்கு...’’ மகிழும் யாமினி, தன்னைப் பொறுத்தவரை கேமரா என்றால் என்ன... என்பதையும் பகிர்ந்து கொண்டார்.
‘‘அப்பா அம்மாவுக்கு ‘சாணிக் காயிதம்’ ரொம்ப பிடிச்சிருந்தது. இந்தப் படம் மூலமா ஒரு ஆக்ஷன் படத்திற்கான ஃபிரேம் என்ன... எப்படி லைட்டிங் வைக்கணும்... இப்படி நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். அதுக்கு திலீப் மாஸ்டர் பெரிய உதவியா இருந்தார். கேமரா வெறும் ஒரு கருவி தான். அதை நாம எப்படி பயன்படுத்தறோம் என்பதுதான் நாம யாருனு வெளி உலகத்துக்கு காட்டும்.
அடுத்ததா ஒரு தெலுங்குப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துட்டு இருக்கேன்... இன்னும் சில புராஜெக்ட்ஸ் பேச்சு வார்த்தைல இருக்கு...’’ என்னும் யாமினி, ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணனை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். இவரும் ‘சில்லுக்கருப்பட்டி’ படத்தில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர். மேலும் ‘டார்லிங் 2’, ‘ஆடை’, ‘டாக்டர்’, ‘சிந்துபாத்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக வேலை செய்தவர் என்பது கூடுதல் தகவல்.
ஷாலினி நியூட்டன்
|