புலி காதலர்



‘‘எனக்கு விலங்குகள்ல புலி ரொம்பப் பிடிக்கும். புலிகள் இருக்கிற காடுகளே சிறந்த காடுகள்னு சொல்வாங்க. ஏன்னா, புலிகள்தான் நமது உணவுச் சங்கிலியில் முக்கியமான பங்கு வகிக்குது. அதனால, என் போட்டோகிராபியில் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்து புலிகளைப் படம் பிடிக்கிறேன்.
அப்ப கிடைக்கிற த்ரில்லிங் ரொம்ப அலாதியானது...’’ நிறைய அனுபவங்களுடன் பேசுகிறார் நாச்சிராஜ் ராமனாதன்.வொய்ல்ட் லைஃப் போட்டோகிராபி எனப்படும் வனவிலங்குகள் புகைப்படக்கலையில் அசத்திக் கொண்டிருக்கும் அசாத்திய இளைஞர். புலிகள் மட்டுமில்லாமல் இவரின் கேமராவில் சிக்கிய யானைகள், மான்கள், ஓநாய்கள், பறவைகள், அரிய வகை பாம்புகள் மற்றும் தவளையினங்கள் உள்ளிட்டவை பார்ப்பவர்களைப் பரவசப்படுத்துபவை.

இவரின் காலடித் தடம் படாத தேசிய பூங்காக்களே இல்லை. அந்தளவுக்கு இந்தியாவிலுள்ள பெரும்பாலான தேசிய பூங்காக்களுக்குச் சென்று, சஃபாரி மேற்கொண்டு வனவிலங்குகளை நுணுக்கமாகப் புகைப்படங்கள் எடுத்து வருகிறார். ‘‘கடந்த ஒன்பது ஆண்டுகளா இந்த வொய்ல்ட் லைஃப் போட்டோகிராபியில் இருக்கேன். ஒரு பொழுதுபோக்கா ஆரம்பிச்சதுதான். ஆனா, அதை வெறுமனே போகிற போக்கில் எடுக்காமல் மனசுக்குப் பிடிச்சு ஈடுபாட்டுடன் செய்றேன். என்னை உயிர்ப்புடன் வச்சிருக்கிறதே இந்தப் போட்டோகிராபிதான்...’’ உற்சாகமாக பேசத் தொடங்கினார் நாச்சிராஜ்.

‘‘சொந்த ஊர் நாமக்கல் மாவட்டத்துல இருக்கிற குமாரபாளையம். அப்பா ராமனாதன் ஸ்டீல் ஃபர்னிச்சர் உற்பத்தி பண்ற நிறுவனம் நடத்துறார். நான் பி.இ., எம்பிஏ முடிச்சிட்டு அப்பாவுடன் பிசினஸ்ல இருக்கேன். எனக்கு போட்டோகிராபி மேல் ஆர்வம் வர்றதுக்கு காரணமே அப்பாதான். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கிறப்ப அப்பா சிங்கப்பூர்ல இருந்து யாஷிகா 35 எம்எம் கேமரா வாங்கிட்டு வந்தார்.

அந்த ஃபிலிம் கேமரா மூலம் வீட்டுல நடக்கிற விழாக்கள், சுற்றுலா இடங்கள்னு நிறைய படங்கள் எடுத்தேன். பள்ளி முடிக்கிறவரைக்கும் இந்தக் கேமராதான். அப்புறம், கல்லூரிக்கு வந்தேன். அங்கேயும் நான் மட்டுமே கேமரா பயன்படுத்திட்டு இருப்பேன். போட்டோஸ் எடுத்து அதை பிரிண்ட் போட்டு பார்க்கிறது அலாதியான சுகமா இருந்துச்சு.

2004ல் கல்லூரி முடிச்சதும் ஆறு ஆண்டுகள் அப்பாவுடன் பிசினஸ்ல மட்டுமே கவனம் செலுத்தினேன். இதுக்கிடையில், டிஜிட்டல் கேமரா வந்தப்ப 2007ல் என் நண்பர் அமெரிக்காவுல இருந்து சோனி கேமரா வாங்கிட்டு வந்தார். அதை பயன்படுத்தினேன். அப்புறம், 2010ல் பாயிண்ட் அண்ட் ஷூட் கேமரா வாங்கி ஜூமில் பயிற்சி எடுத்தேன்...’’ என்கிற நாச்சிராஜ், வொய்ல்ட் லைஃப் போட்டோகிராபிக்குள் வந்தது பற்றிச் சொன்னார்.  ‘‘2013ல் கோயமுத்தூர்ல ஒரு போட்டோகிராபி கோர்ஸ் நடந்துச்சு.

அங்க சீனிவாசன்னு ஒரு சார் எனக்கு போட்டோகிராபி முழுவதும் கற்றுத் தந்தார். அவர்தான் என் குரு. அங்கே கத்துக்கிட்டப்ப என் கூட படிச்சவங்க நண்பர்களானாங்க. எல்லோரும் ஒண்ணு சேர்ந்து முதல்ல பறவைகளை வாட்ச் பண்ணலாம்னு பெங்களூர் பக்கத்துல இருக்கிற ரங்கணத்திட்டு பகுதிக்குப் போனோம். அங்க பறவைகளைப் பத்தியும், எப்படி அதை புகைப்படமாக்குறது என்கிற விஷயங்களையும் அனுபவமா படிச்சோம். இதுல ரொம்ப ஆர்வமாகி வாரா வாரம் கோயமுத்தூர் பக்கத்துல பறவைகளைப் பார்க்கப் போறது... நம்மள சுத்தி இருக்கிற பறவைகளைக் கவனிக்கிறதுனு ஆரம்பிச்சேன்.

அப்படியே வனவிலங்குகள் மேல ஆர்வமாகி வொய்ல்ட் லைஃப் போட்டோகிராஃபிக்குள்ள வந்தேன். 2014ல் கர்நாடகாவுல கபினி காட்டுல இருக்கிற நாகரஹோளே தேசிய பூங்காவுக்கு ஒரு ட்ரிப் போனோம்.

அப்போதிலிருந்து இப்ப வரை இந்தியா முழுவதும் உள்ள பெரும்பாலான வனவிலங்குகள் சரணாலயங்களுக்குப் போயிட்டு வந்திட்டு இருக்கேன். ஓராண்டுக்கு மூணு அல்லது நான்கு ட்ரிப்பாவது போயிடுவேன். ஒவ்வொரு முறையும் பத்து நாட்கள் வரை தங்கி சஃபாரி செய்வேன். ஒரு சஃபாரிக்கு குறைஞ்சது பத்தாயிரம் ரூபாய் செலவாகும். இருந்தும் எனக்கு பிடிச்ச விஷயம் என்கிறதால செலவை பெரிசா பொருட்படுத்தல.

இதுல எனக்கு புலிகள் ரொம்பப் பிடிச்சது. காரணம், நமது உணவுச் சங்கிலியை பாதுகாக்கிறதுதான். அதனாலயே வனத்துறை புலிகள் பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்திட்டு இருக்காங்க.

ஒரு புலி இருந்தால் அந்தக் காட்டுல மான்களின் எண்ணிக்கை குறைவாகும். அப்பதான் காடு காடுகளா இருக்கும். மான் இனம் அதிகமிருந்தால் செடி, கொடி, புற்களின் நுனிப்
பகுதி வரை சாப்பிட்டு மழைநீரை பூமிக்கடியில் சேகரம் ஆகாதபடி செய்திடும். இந்த மழைநீர்தான் நிலத்தடி நீராகி ஆறாக பெருக்கெடுக்கும்.

ஆக, மான்கள் புலிகளால் வேட்டையாடப்படுவதன் மூலம் காடு சமநிலை அடையுது. அதுக்கு புலிகள் முக்கிய காரணியா இருக்குது. புலிகள் தவிர்த்து சிறுத்தை, ஓநாய், நரி போன்ற விலங்குகளும் நம் உணவுச் சங்கிலியில் முக்கியமான பங்கு வகிக்குது. இந்தச் சமநிலை தவறினால், நம் உணவுச் சங்கிலியில் பெரிய பாதிப்பு ஏற்படும்.

இப்ப இந்தியாவில் 3,300 புலிகளே இருக்குது. அதைப் பாதுகாக்க வேண்டியிருக்கு. நான், மானை வேட்டையாடிவிட்டு வாயில் அதைத் தூக்கிக் கொண்டு வரும் புலி ஒன்றை புகைப்படம் எடுத்தேன். தன் குட்டிகளுக்காக ஐந்து கிமீ தூரம் அந்த மானை வாயில் கவ்வியபடியே வந்தது...’’ என ஆச்சரியம் விரிய சொன்னவர், நிதானமாகத் தொடர்ந்தார்.

‘‘நம்ம தமிழகத்துல முதுமலையில் மட்டுமே சஃபாரிஸ் இருக்கு. மற்ற மாநிலங்கள்ல தேசிய பூங்காக்கள்ல சஃபாரி வைச்சிருக்காங்க. அங்கெல்லாம் 20 சதவீதம் அடர்ந்த காடுகள்ல சுற்றுலா செல்ல அனுமதி வழங்குறாங்க. அங்க அரசே சஃபாரியும் பண்றாங்க. அங்கெல்லாம் போய் பல வனவிலங்குகளைப் புகைப்படங்கள் எடுத்தேன்.

எனக்கு புலிகள் பிடிச்சிருந்தாலும் குட்டி மான்ல இருந்து தவளை வரை எல்லா உயிரினங்களையும் படங்கள் எடுப்பேன். மேற்குத் தொடர்ச்சி மலையில் அரிதான புல்விரியன் பாம்பு, தவளைகள்னு அழிவின் விளிம்பில் உள்ள பல இனங்களை புகைப்படங்கள் எடுத்திருக்கேன்.

ஒவ்வொரு டைம் போகும்போதும் ஒவ்வொரு விதமான அனுபவம் கிடைக்குது. தவிர, வெவ்வேறு விதமான புகைப்படங்களும்  கிடைக்கும். அப்புறம், வனவிலங்குகளின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல விஷயங்களை அனுபவமா படிக்க முடியும். இங்க நம்மூர்ல ஒரு புலியைப் பார்த்துட்டு அதைக் கடந்து போயிடுறாங்க. ஆனா, வடஇந்தியாவுல ஒரு புலி இருந்தா அதுக்கொரு பெயர் வச்சு அதைத் தொடர்ந்து கண்காணிப்பாங்க. இப்ப நானும் ஒவ்வொருமுறையும் போறப்ப கண்காணிக்கிறேன். கவனிக்கிறேன். இதெல்லாம் ரொம்ப உற்சாகம் கொடுக்குது.  

அதேமாதிரி இதுல கொஞ்சம் ரிஸ்க்கும் இருக்கு. ஏன்னா, சில நேரங்கள்ல விலங்குகள் கோபமாகி கத்தும். குறிப்பா, யானைகளை நாம கணிக்கவே முடியாது. திடீர்னு துரத்த ஆரம்பிச்சிடும். அந்த மாதிரி சம்பவங்கள் நிறைய நடந்திருக்கு. அப்புறம், புலிகள் எப்பவாவது முகத்தை ஆக்ரோஷமா காட்டி பயமுறுத்தும். அப்ப எல்லாருமே மௌனமா இருப்போம். சிலநேரங்கள்ல அந்த ஆக்ரோஷ தருணத்தையும் கூட நான் புகைப்படங்கள் எடுத்திருக்கேன்.

இந்தப் புகைப்படங்கள் எதையும் இதுவரை நான் கேலரியில் வைக்கல. பிசினஸ் இருக்கிறதால அதை நோக்கியே போயிட்டு இருக்கேன். எனக்கு திருமணமாகி ரெண்டு குழந்தைகள் இருக்காங்க. என் மனைவி முழு சப்போர்ட் கொடுக்குறதாலயே என்னால ட்ரிப் போகமுடியுது. இதன்மூலம் எனக்கு எந்த வருமானமும் துளியும் கிடையாது. ஒரு பொழுதுபோக்கு. அவ்வ
ளவுதான். ஆரம்பத்துல அப்பா ரொம்ப பயந்தார். அப்புறம், என் ஆர்வத்தைப் பார்த்துட்டு சரின்னுட்டார்.

இப்ப என் குறிக்கோளெல்லாம் மக்கள்கிட்ட வனவிலங்குகள் பத்தியும் அவை நம் சமூகத்துக்கு எவ்வளவு முக்கியம் என்பது பத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தணும் என்பதுதான். அதுக்காக, ஒரு புத்தகம் பண்ணலாம்னு இருக்கேன். அப்புறம், இந்தியாவுல இதுவரை நான் போகாத தேசிய பூங்காக்களுக்குப் போய் புகைப்படப் பதிவு செய்யணும். அடுத்து பிள்ளைங்க வளர்ந்ததும் உலகம் முழுவதும் உள்ள காடுகள்ல சஃபாரி மேற்கொள்ளணும்...’’ என உற்சாகமாகத் தன் ஆசைகளை அடுக்குகிறார் புகைப்படக் கலைஞர் நாச்சிராஜ் ராமனாதன்.

பேராச்சி கண்ணன்