பாடகர் கேகேவின் மரணம் சந்தேகத்துக்கு உரியதா..?
பிரபல பின்னணிப் பாடகர் கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத், கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்குப் பிறகு திடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்தார். உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
 இந்தியத் திரையுலகின் பல்துறைப் பாடகர்களில் ஒருவரான கேகே, இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களைப் பதிவு செய்துள்ளார். குறிப்பாக தமிழ் சினிமாவில் 66க்கும் மேற்பட்ட பாடல்களை கேகே பாடியுள்ளார். 
அதில் ‘காதல் வளர்த்தேன்...’ (மன்மதன்), ‘அப்படிப் போடு...’ (கில்லி), ‘காதலிக்கும் ஆசை...’ (செல்லமே), ‘நினைத்து நினைத்து...’ (7ஜி ரெயின்போ காலனி), ‘உயிரின் உயிரே...’ (காக்க காக்க), ‘ஸ்ட்ராபெர்ரி கண்ணே...’ (மின்சாரக் கனவு), ‘ஒல்லிக்குச்சி உடம்புக்காரி...’ ( ரெட்) உள்ளிட்ட பாடல்கள் அடங்கும்.
53 வயதான பாடகர் கேகே திரைத்துறையில் அறிமுகமாவதற்கு முன்னர் 3,500 விளம்பரங்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார். கேரளத்து தம்பதிக்கு மகனாகப் பிறந்த இவர் தமிழில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், யுவன் சங்கர் ராஜா, தேவா, வித்யாசாகர், மணிசர்மா மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் இசையிலும் பாடியுள்ளார். இவை எல்லாம் அவரைக் குறித்த குறிப்புகள். ஆனால், அவரது மரணம் ஏற்படுத்தும் கேள்விகள்..? ஆமாம்... சமூகவலைத்தளங்களில் கேகேவின் ரசிகர்கள் தொடர்ந்து அவரது மரணம் குறித்த வினாக்களை எழுப்பி வருகின்றனர்.
ஏனெனில், இறப்பதற்கு சிலமணி நேரங்களுக்கு முன்புவரை, தான் பங்கேற்ற நிகழ்ச்சி பற்றிய புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.
எனவே, இப்போது அவரது இறப்புக்குப் பிறகு பாடல் நிகழ்ச்சி நடத்திய நிறுவனத்துக்கு எதிராக பல்வேறு அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை சமூக ஊடகங்களில் பலரும் முன்வைத்து வருகின்றனர்.
குறிப்பாக இசை நிகழ்ச்சி நடைபெற்ற அந்த அரங்கம் திறந்தவெளியில் அமையவில்லை... அங்கு ஏசி வேலைசெய்யவில்லை என்றும், அளவுக்கு அதிகமாக கூட்டம் சேர்ந்ததால் கேகே தொடர்ந்து ஏசியை ஆன் செய்ய வலியுறுத்தி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.மூடப்பட்ட அரங்கத்தில் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை கட்டுப்படுத்த ஏசியை இயக்குவது மிகமிக அவசியம். இல்லாவிட்டால் வெப்பப் பக்கவாதம் மற்றும் நீரிழப்பு போன்ற பிரச்னைகள் பெரும்பாலும் ஏற்படும். இது வயதானவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட வழிவகுக்கும்.
நிகழ்ச்சி முடிந்தபிறகு வியர்க்க விறுவிறுக்க கே.கே நடந்துசெல்லும் வீடியோ ஒன்றை ரசிகர் ஒருவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருக்கிறார். அவர், கூட்டநெரிசல் குறித்தும், கேகே தொடர்ந்து ஏசியை ஆன்செய்யக் கூறியும், நிர்வாகம் செவிசாய்க்கவில்லை என்கிறார். ‘‘நஸ்ருல் மான்சாவில் ஏசி வேலை செய்யவில்லை. நேற்று அங்கு அவர் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவருக்கு அளவுக்கு அதிகமாக வியர்த்ததால் அதுகுறித்து புகாரும் தெரிவித்தார்.
அது திறந்தவெளி அரங்கமும் அல்ல; அதிக பணம் செலுத்தி ஓர் இடத்தை பதிவுசெய்யும்போது அங்குள்ள அனைத்தும் சரியாக இயங்குகிறதா என்பதையாவது அவர்கள் உறுதிசெய்யவேண்டும். அந்த வீடியோவை நன்கு கவனித்தால் தெரியும், அவருக்கு எப்படி வியர்க்கிறது... அவர் தொடர்ந்து எப்படி துடைத்துக்கொண்டே இருக்கிறார்... என்று. அவர் தொடர்ந்து ஏசியை ஆன் செய்ய கேட்டுக்கொண்டே இருந்தது மட்டுமின்றி, சில லைட்டுகளையாவது அணைக்கச்சொல்லி கேட்டுக்கொண்டே இருந்தார்.
மக்கள் நுழைவாயில் கதவை உடைத்துக்கொண்டு பாஸ் இல்லாமலே உள்ளே நுழைந்தவண்ணம் இருந்தனர். அப்போதும் நிர்வாகம் என்ன செய்துகொண்டிருந்தது? பாதுகாவலர்கள் எங்கே சென்றார்கள்?
கொல்கத்தாவின் வெப்பநிலையை கருத்தில்கொள்ளுங்கள். அவ்வளவு கூட்டநெரிசலுக்கு மத்தியில் ஏசியும் வேலைசெய்யவில்லை; அதன் நடுவே குரலை உயர்த்திப் பாடினால் நிலைமை என்னவாகும்? அந்த மாரடைப்பு சாதாரணமாக நடந்தது அல்ல; நான் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக உள்ளேன். என்ன சொல்வதென்று தெரியவில்லை...’’ இப்படி ஒரு ரசிகர் தனது சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இப்போது மொத்த நாடே வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதீத வெப்பம் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதுடன், இதயத்துடிப்பின் வேகத்தையும் அதிகரிக்கும். இது ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட வழிவகுக்கும். இதனால்தான் பகல் நேரங்களில் மிகவும் பாதுகாப்பாக இருக்கச்சொல்லி நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பார்வையாளர்கள் நிரம்பி வழிந்த அந்த அரங்கத்திற்குள் சிலர் தீயணைப்பானை அடித்ததாகவும், மேலும் பலர் நுழைவுச்சீட்டு இன்றி உள்ளே வந்ததாகவும் பலரும் குறிப்பிடுகின்றனர். கூடவே, நிரம்பி வழியும் கூட்டத்திற்கு மத்தியில் தீயணைப்பானை அடித்ததால் அது கேகேவுக்கு கண்டிப்பாக மூச்சுத்திணறலை ஏற்படுத்தி இருக்கும் என்கின்றனர்.எல்லாவற்றுக்கும் ஹைலைட் டாக அளவுக்கு அதிகமாக வியர்த்துக்கொண்டிருந்த அவர் பார்க்கும்போதே அசௌகர்யமாகக் காணப்பட்டார்... அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லாமல் ஹோட்டல் அறைக்கு அழைத்துச்சென்றது ஏன்... என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இவையெல்லாம் யூகங்களால் எழுப்பப்படும் வினாக்களா அல்லது உண்மையா என்பது விசாரணையின் முடிவில்தான் தெரிய வரும்.எது எப்படியோ... இளம் வயதில் ஒரு தலைசிறந்த சினிமா பாடகரை நாம் இழந்துவிட்டோம் என்பது மட்டும் உண்மை.இதற்கிடையில் கேகேவின் மனைவி ஜோதி, தன் கணவரை ஓவியமாக வரைந்து தன் இன்ஸ்டாகிராமில் இரண்டு வருடங்களுக்கு முன்னால் பதிவிட்டிருந்தது இப்போது வைரலாகிக் கொண்டிருக்கிறது.\
கூடவே கேகேவின் மகள் தாமரா தன்னுடைய இன்ஸ்டாவில், தன் அப்பாவின் இறுதிச்சடங்கு தொடர்பான தகவல்களைப் பகிர்ந்திருப்பதோடு, ‘நான் உங்களை எப்போதும் நேசித்துக்கொண்டே இருப்பேன் அப்பா...’ என்று நெகிழ்ந்திப்பதும் ரசிகர்களை உருக்கியிருக்கிறது.தாமராவும் பாடகி என்பதால், அப்பாவின் இசைப்பயணம் மகள் வழியாகத் தொடரும் என்று ரசிகர்கள் தங்களைத் தாங்களே சமாதானப்படுத்தி வருகிறார்கள்.
ஜான்சி
|