குடும்ப வன்முறைகளால் ஆண்களுக்கும் பாதிப்பு!



தீர்ப்பு வெளியானபோது ஜானி டெப் கோர்ட்டில் ஆஜராகவில்லை...

ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் வழக்கில் அமெரிக்க கோர்ட்டின் அதிரவைத்த தீர்ப்பு, குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் ஆண்களும் உள்ளனர் என்பதை  அழுத்தந்திருத்தமாக தெரிவித்துள்ளது. ஹாலிவுட்டின் பிரபல நடிகர் ஜானி டெப். ‘பைரேட்ஸ் ஆஃப் கரீபியன்’ சீரிஸ் படங்களின் கதாநாயகன்.
உலகம் முழுவதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  
இவர் கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரியில் தன்னைவிட 22 வயது குறைவான ஆம்பர் ஹேர்ட்டை திருமணம் செய்து கொண்டார். இவரும் பிரபல நடிகைதான். கடந்த 2009ம் ஆண்டு இருவரும் இணைந்து, ‘த ரம் டைரி’ என்ற திரைப்படத்தில் நடித்தனர். அப்போது இருவருக்குமிடையே காதல் தீ பற்றிக் கொண்டது. சில வருடங்கள் டேட்டிங்கில் இருந்து விட்டு, பின்னர் திருமணம்  செய்துகொண்டனர்.

ஆனால், இவர்களது திருமண வாழ்க்கை 15 மாதங்களில் முடிவுக்கு வந்தது. ‘‘ஜானி டெப் என்னை அடித்து, கொடுமைப்படுத்துகிறார்... அவருடன் சேர்ந்து வாழ முடியாது...’’ என்று கூறி ஆம்பர் ஹேர்ட், விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை தொடங்கிய போது, முகத்தில் காயத்துடன் ஆம்பர் ஹேர்ட் கோர்ட்டுக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
வழக்கு நடந்து கொண்டிருந்த போதே இருவரும் சுமுகமான முடிவுக்கு வந்தனர். ஆம்பர் ஹேர்ட்டுக்கு ரூ.54 கோடி இழப்பீடாக ஜானி டெப் கொடுத்தார். இருவரும் பிரச்னையில்லாமல்  பரஸ்பர விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.

அதன் பின்னர்  2 ஆண்டுகள் கழித்து, ‘த வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் எடிட்டோரியல் பக்கத்திற்கு அடுத்த பக்கத்தில், ஆம்பர் ஹேர்ட் எழுதிய கட்டுரை, பெரும் பரபரப்பை ஏற்
படுத்தியது. அந்தக் கட்டுரையில், குடும்ப வன்முறைகளால், தான் பாதிக்கப்பட்டதை விரிவாக எழுதியிருந்தார். அப்போது அதை எதிர்கொள்ள முடியாமல் திணறியபோது, தனக்கான ஆதரவு பொதுவெளியில் கிடைக்கவில்லை என்றும், மேலும் குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஆதரவான பிரதிநிதி என்றும் தன்னை முன்னிலைப்படுத்தியிருந்தார்.
ஆனால், அந்தக் கட்டுரையில் அவர் எங்கும் ஜானி டெப்பின் பெயரைக் குறிப்பிடவில்லை.

இந்த கட்டுரை பெரும் புயலைக் கிளப்பியது. இதனால் ஜானி டெப்பின் சினிமா வாழ்க்கை  கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. அப்போது அவர் ‘பைரேட்ஸ் ஆஃப் கரீபியனின்’ 6வது சீரிஸ் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். ஆம்பர் ஹேர்ட்டின் கட்டுரை வெளியானதும், உடனடியாக அவரை அந்தப் படத்தில் இருந்து நீக்கி விட்டனர். மேலும் ‘பென்டாஸ்டிக் பீஸ்ட்’ உள்ளிட்ட அவர் நடித்துக் கொண்டிருந்த படங்களில் இருந்தும், புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த படங்களில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

இதையடுத்து உடனடியாக ஆம்பர் ஹேர்ட் மீது அவதூறு வழக்கு தொடர்ந்த அவர், தனக்கு ரூ.380 கோடி அவர் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அதில் கோரினார்.
அதைவிட இருமடங்கு தொகை இழப்பீடு கோரி, பதிலுக்கு ஆம்பர் ஹேர்ட்டும், ஜானி டெப் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நியூயார்க் நகருக்கு அருகே உள்ள ஃபேர்பாக்ஸ் நகரில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வந்தது. உலகமெங்கும் ஏராளமானோர் இந்த வழக்கை உன்னிப்பாகக் கவனித்து வந்தனர்.

ஜானி டெப்பும், ஆம்பர் ஹேர்ட்டும் நேரிலும், காணொளி மூலமாகவும் ஆஜராகி, ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அடுக்கி, கடும் விவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த வழக்கு விசாரணை, மக்கள் கவனத்தை அதிகம் ஈர்த்தது. வழக்கு நடந்து கொண்டிருந்த போதே, பொது வெளியில் ஜானி டெப்புக்கு ஆதரவு கூடியது.

அவரது ரசிகர்களும் கச்சை கட்டிக் கொண்டு, அவருக்கு ஆதரவாக சமூக வலைத் தளங்களில் கருத்துக்களைக் கொட்டினர். சுமுகமான முறையில் விவாகரத்து பெற்றபோது, ‘எந்த தாக்குதலுக்கும் உள்ளாகவில்லை’ என்று இருவருமே சேர்ந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தனர். அதனால் ஆம்பர் ஹேர்ட் நாடகமாடுகிறார் என்று மக்கள் சொல்லத் தொடங்கினர்.

‘‘குடும்ப வன்முறைகளால் நான்தான் பாதிக்கப்பட்டுள்ளேன். என் வாழ்நாளில் நான் ஹேர்ட்டை மட்டுமல்ல, எந்தப் பெண்ணையும் தாக்கியதே இல்லை...’’ என்று ஜானி டெப் தெரிவித்தார்.
இதனால் அதிர்ந்து போன ஹேர்ட், உடனடியாக தனது செல்வாக்கை மீட்டெடுக்கும் முயற்சிகளில் இறங்கினார். ஒரு குழுவையே ஏற்பாடு செய்து, சமூக வலைத்தளங்களில் தனக்கு ஆதரவான கருத்துகளை தினமும் வெளிவரச் செய்தார்.

ஆனால், அது பலனளிக்கவில்லை. இடையே உளவியல் மருத்துவக் குழுவினர் அவரை பரிசோதனை செய்தனர். அதில், ‘அவர் பெர்சனல் டிஸ்ஆர்டரினால் (முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகள்) பாதிக்கப்பட்டுள்ளார். அது அவர் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கி உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கு மேலும் சூடுபிடித்தது.

இவ்வளவு பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பு இப்போது வெளியாகி உள்ளது. 7 ஜூரிகளின் தொடர் விசாரணைக்கு பிறகு, ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளனர்.
அந்தத் தீர்ப்பில், ‘இருவருமே அவதூறு வழக்கு தொடர தகுதியானவர்கள்தான். ஆனால், அதிகம் பாதிக்கப்பட்டவர் ஜானி டெப்தான். அவர் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நிற்கிறார். அவருக்கு  ரூ.115 கோடி இழப்பீடாக, ஆம்பர் ஹேர்ட் வழங்க வேண்டும்’ என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இந்தத் தீர்ப்பைக் கேட்டதும், ‘எனது இதயம் சுக்குநூறாக நொறுங்கி விட்டது. இந்தத் தீர்ப்பு எனக்கு மட்டுமல்ல, குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள அத்தனை பெண்களுக்கும் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது...’ என்று ஆம்பர் ஹேர்ட் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.தீர்ப்பு வெளியானபோது ஜானி டெப் கோர்ட்டில் ஆஜராகவில்லை. ‘இந்தத் தீர்ப்பின் மூலம் என்னுடைய வாழ்க்கையை எனக்கு நீதிபதிகள், திருப்பிக் கொடுத்திருக்கின்றனர்...’ என்று இன்ஸ்டாகிராமில் ஜானி டெப் பதிவு செய்துள்ளார்.

எலான் மஸ்க்குடன், ஹேர்ட் டேட்டிங்!

விவாகரத்து பெற்ற போது ‘கிடைத்த தொகையில், ஒரு பகுதியை அறக்கட்டளை ஒன்றுக்கு கொடுப்பேன்’ என்று ஆம்பர் ஹேர்ட் கூறியிருந்தார். ஆனால், அவர் கூறியபடி அந்தத் தொகையை அறக்கட்டளைக்கு கொடுக்கவில்லை. இந்த பிரச்னை பெரிதாக பேசப்பட்டதும், இழுத்தடித்து கொஞ்சம் கொஞ்சமாக சில தவணைகளில் அந்தப் பணத்தைக் கொடுத்தார். ஆனாலும் இன்று வரை அவர் கூறிய தொகையில் பாதியைக் கூட கொடுக்கவில்லை. தவிர எலான் மஸ்க்குடன், ஆம்பர் ஹேர்ட் தொடர்ந்து டேட்டிங்கில் இருந்தார். இதுபோன்ற நடவடிக்கைகளால் அவர் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது.

பி.முத்து