COFFEE TABLE
ரன்வீருடன் சமந்தா!
கதீஜாவாக கலக்கிய சமந்தாவுக்கு சமீப காலமாகவே ஏறுமுகம்தான். ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்திற்குப் பின் தொடர்ந்து கைநிறைய படங்களுடன் பிஸி மோடில் இருக்கும் சமந்தா ‘ஊ சொல்றியா மாமா’ பாடலில் பட்டி தொட்டி எங்கும் ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்துக் கொண்டார். ‘சாகுந்தலம்’ என்னும் வரலாற்றுப் படம், ‘யசோதா’ என்னும் திரில்லர் படம், விஜய் தேவரகொண்டாவுடன் ‘குஷி’... என சமந்தாவுக்கு அடுத்தடுத்து படங்கள் காத்திருக்கின்றன.  இந்நிலையில் பாலிவுட்டின் டாப் நடிகர் ரன்வீர் சிங்குடன் போஸ் கொடுத்து செல்ஃபி ஒன்றை பகிர்ந்துள்ளார். ரன்வீர் சிங் நடிக்கும் படத்தில் சமந்தா நடிப்பது இதன்மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. புகைப்படத்தில் சமந்தா விமானப் படை ஆபீசர் கெட்டப்பில் இருக்கிறார். மேலும் புகைப்படத்தில் ‘அழகான ஒன்று ஆரம்பித்துள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார். களிமண் தரையின் நாயகன்
களிமண் தரையில் நடக்கும் டென்னிஸ் போட்டிகளில் ரபேல் நடாலை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியிருக்கிறது. ஆம்; சமீபத்தில் நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் தனிநபர் பிரிவில் பட்டத்தைத் தட்டி களிமண் தரையின் ராஜா என்று நிரூபித்திருக்கிறார் ரபேல்.
 இதன் இறுதிப்போட்டியில் நார்வேயைச் சேர்ந்த இளம் வீரர் கேஸ்பர் ருட்டை வீழ்த்தி சாம்பியனாகியிருக்கிறார். இதன் மூலம் பிரெஞ்ச் ஓபனின் தனி நபர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற அதிக வயதானவர் என்ற பெருமையும் அவர் வசமாகிவிட்டது. விரைவில் நடால் ஓய்வு பெறப்போகிறார் என்ற கிசுகிசுக்களுக்கு நடுவே அவர் சாம்பியனாகியிருப்பது அவர் மீதான விமர்சனங்களை உதாசீனப்படுத்தியிருக்கிறது. தவிர, தனி நபர் பிரிவில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் டென்னிஸ் வீரர் என்ற சாதனையையும் தன்வசமாக்கிவிட்டார் ரபேல். 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மண்டல அளவிலான சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு கோப்பையைத் தட்டியபோது அவரது வயது 8. அப்போது கால்பந்து விளையாட்டு வீரனாகவேண்டும் என்பது ரபேலின் கனவாக இருந்தது. 12 வயதில் சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்றார்.
15 வயதில் தொழில்முறை டென்னிஸ் வீரராக பரிணமித்தார். 2008ல் பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவிலும், 2016ல் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக்கில் இரட்டையர் பிரிவிலும் தங்கப்பதக்கம், களிமண் தரையில் நடந்த தனிநபர் போட்டிகளில் தொடர்ந்து 81 முறை வெற்றி, இருபது வயதுக்குள் 16 பட்டங்களை வென்று உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இளம் வீரர் என்ற சிறப்பு, கடினமான தரை, புல் தரை, களிமண் என மூன்று விதமான மைதானங்களில் பட்டம் வென்ற முதல் வீரர், ஐந்து முறை டேவிஸ் கோப்பையை ஸ்பெயின் வெல்வதற்குப் பங்களிப்பு... என நடாலின் சாதனைகள் நீள்கின்றன. மட்டுமல்ல, இதுவரையிலான டென்னிஸ் விளையாட்டில் அதிகமான பரிசுத் தொகையைப் பெற்றவர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார் ரஃபேல். முதல் இடத்தில் ஜோகோவிச்சும், மூன்றாம் இடத்தில் ரோஜர் பெடரரும் உள்ளனர். நடால் வென்ற பரிசுத்தொகையின் மதிப்பு ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டும்.
40 லட்சம் பார்வைகளை அள்ளிய வீடியோ!
சமூக வலைத்தளங்களை நெகிழ்ச்சிப்படுத்தி வருகிறது ஒரு வீடியோ. அந்த வீடியோவைப் பார்த்தவர்கள் எல்லோரும் மனம் உருகி பின்னூட்டங்களை இட்டு வருகின்றனர். அப்படி அதில் என்ன இருக்கிறது என்கிறீகளா? கடந்த மாதம் இரண்டு சிம்பன்சி குட்டிகளுக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது.
இருவரும் சகோதரர்கள். இரண்டு பேருக்கும் ஒரே இடத்தில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை. அதனால் 20 நாட்களுக்கு மேலாக வெவ்வேறு இடத்தில் சிகிச்சை பெற்று வந்தனர். சமீபத்தில் இருவரின் உடல்நிலையும் நன்றாக குணமடைந்தது. இருவரும் சந்திக்க மருத்துவர்கள் ஏற்பாடு செய்தனர். அந்த சிம்பன்சி குட்டிகள் சந்தித்தபோது கட்டித்தழுவி தங்களின் சகோதர பாசத்தை வெளிப்படுத்தினர். இந்தக் காட்சிதான் வீடியோவாக்கப்பட்டு, டுவிட்டரில் வெளியாகி வைரலாகிவருகிறது.
தொகுப்பு : குங்குமம் டீம்
|