MUST WATCH
தூள்சிதாஸ் ஜூனியர்
ஒரு நல்ல ஃபீல் குட் மூவி பார்க்க வேண்டுமா? ‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகியிருக்கும் இந்திப்படமான ‘தூள்சிதாஸ் ஜூனியரை’ப் பாருங்கள். பிரபலமான ஸ்னூக்கர் விளையாட்டு வீரர் தூள்சிதாஸ். தனது 13 வயது மகன் மிடி எனும் தூள்சிதாஸ் ஜூனியருக்காக ஸ்னூக்கர் விளையாடுகிறார். ஒரு முக்கியமான ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது.
 இதன் இறுதிப்போட்டியில் ஜிம்மி தாண்டனும், தூள்சிதாஸும் மோதுகின்றனர். இந்தப் போட்டியை மகன் கண்முன்னே ஆடுகிறார் தூள்சிதாஸ். அவர் வெற்றி பெறும் நிலையில் இருக்கும்போது பிரேக் வருகிறது. அந்த பிரேக்கில் தூள்சிதாஸுக்கு மது கொடுத்து அவரை தன்வசப்படுத்துகிறார் ஜிம்மி.
இறுதியில் மோசமாகத் தோல்வியடைகிறார் தூள்சிதாஸ். வெற்றி பெறும் ஜிம்மி தூள்சிதாஸையும், அவரது மகனையும் அவமானப்படுத்துகிறார். தன்னுடைய அப்பாவை அவமதிப்புக்குள்ளாக்கிய ஜிம்மியை 13 வயதான தூள்சிதாஸ் ஜூனியர் எப்படி ஸ்னூக்கர் போட்டியில் வெற்றிகொள்கிறான் என்பதே இன்ஸ்பிரேஷன் திரைக்கதை.
எந்த இடத்திலும் நிற்காமல் விறுவிறுவென்று செல்கிறது திரைக்கதை. சமீபத்தில் வெளியான விளையாட்டு சம்பந்தமான படங்களில் முக்கிய படமாகத் திகழ்கிறது ‘தூள்சிதாஸ் ஜூனியர்’. சஞ்சய் தத் முக்கிய ரோலில் கலக்கியிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களின் தேர்வும் கச்சிதம். படத்தின் இயக்குநர் மிருதுள் மகேந்திரா.
பாலா தந்தனானா
தெலுங்குப் படத்துக்கே உரிய அத்தனை அம்சங்களுடனும் வெளியாகியிருக்கிறது ‘பாலா தந்தனானா’. ‘ஹாட்ஸ்டாரி’ல் காணலாம். பிரபலமான பத்திரிகையாளர் சசிரேகா. நேரடியாக களத்தில் இறங்கி குற்றங்களுக்குப் பின்னணியில் இருக்கும் உண்மைகளைக் கண்டுபிடித்து வெளியிடுவதில் கில்லாடி. ஓர் அனாதை ஆசிரமத்தில் ரெய்டு நடப்பதாகக் கேள்விப்பட்டு அங்கே என்ன நடக்கிறது என்பதைக் காணச்செல்கிறார். அங்கிருக்கும் அக்கவுண்டன்ட் சந்திரசேகரிடம் லஞ்சம் கொடுத்து சசிரேகாவை மௌனமாக்கப் பார்க்கிறார் அந்த ஆசிரமத்தை நடத்துபவர்.
வலுக்கட்டாயமாக லஞ்சத்தைத் தவிர்த்துவிடுகிறார் சசி. லஞ்சம் கொடுத்ததை செய்தியாக வெளியிடும் முனைப்பில் இருக்கிறார் சசி. இந்தச் செய்தியை வெளியிட்டால் ஆசிரமத்துக்கு வரும் நன்கொடைகள் நின்றுவிடும். அதனால் அங்கிருக்கும் குழந்தைகள் பாதிக்கப்படுவர் என்று சசியை சமாதானப்படுத்துகிறார் சந்திரசேகர். சசிக்கும் சந்திரசேகருக்கும் இடையில் காதல் மலர்கிறது. உண்மையில் சந்திரசேகர் யார் என்பதே திடுக்கிடும் திரைக்கதை. காதல், ஆக்ஷன், டுவிஸ்ட்… என நல்ல கலவையாக வந்திருக்கிறது இந்தப் படம். சசிரேகாவாக கேத்தரின் தெரசாவும், சந்திரசேகராக ஸ்ரீவிஷ்ணுவும் நடித்திருக்கின்றனர். படத்தின் இயக்குநர் சைதன்யா தந்துலூரி.
ரன்
‘நெட்பிளிக்ஸி’ல் வெளியாகி அதிர்வுகளைக் கிளப்பிக் கொண்டிருக்கும் ஆங்கிலப்படம், ‘ரன்’. பதின்பருவத்துப் பெண் குலோயி. அவளால் எழுந்து நடக்க முடியாது. தவிர, குலோயிக்கு மூச்சுத்திணறல், இதயப் பிரச்னை... என உடல் ரீதியாக நிறைய பிரச்னைகள் உள்ளன. சக்கர நாற்காலி இல்லாமல் அவளால் எங்கேயும் நகர முடியாது. அவளுக்கு எல்லாமுமாக இருக்கிறாள் அம்மா டயான். காலையில் எழுவது, காலைக் கடன்களை முடிப்பது, சாப்பிடுவது, ஹோம் ஸ்கூலிங் முறையில் கல்வி கற்பது... என வீட்டுக்குள்ளேயே குலோயின் அன்றாட வாழ்க்கை சுழல்கிறது.
இந்நிலையில் எதிர்பாராத ஒரு சம்பவம் நடக்கிறது. அந்தச் சம்பவத்தின் மூலம் டயான் தனது அம்மா இல்லை, குழந்தையாக இருந்தபோது தன்னால் நன்றாக நடக்க முடியும், இப்போதைய சக்கர நாற்காலி வாழ்க்கைக்கு டயான்தான் காரணம் என்பதை அறிகிறாள் குலோயி. அந்தச் சம்பவம் என்ன... டயானைப் பற்றி அறிந்த பிறகு குலோயி என்ன முடிவெடுக்கிறாள்... தன்னைப் பற்றிய உண்மை தெரிந்தபிறகு டயான் எப்படி நடந்துகொள்கிறாள்... என்பதே திரில்லிங் திரைக்கதை.மெதுவாக நகர்ந்தாலும் நல்ல ஒரு திரில்லிங் படமாக மிளிர்கிறது ‘ரன்’. அம்மாவாகவும், மகளாகவும் நடித்தவர்களின் நடிப்பு அருமை. படத்தின் இயக்குநர் அனீஷ் சகண்டி.
மிட்நைட்
‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி டிரெண்ட் அடித்துக்கொண்டிருக்கிறது ‘மிட்நைட்’ எனும் கொரியன் படம். நள்ளிரவு நேரத்தில் ஏதாவது ஒரு சாலையில் தனது வாகனத்தை நிறுத்தி, அந்த வழியாக வருபவர்களைக் கொலை செய்வது அந்த சீரியல் கில்லரின் வாடிக்கை. சீரியல் கில்லர் தங்களின் கையில் கிடைத்தாலும் அவனைப் பிடிக்காமல் தப்பிக்க விடுகின்றனர் காவல்துறையினர். அந்தளவுக்குப் பொறுப்பில்லாமல் போலீசார் இருக்கின்றனர்.
அதனால் எந்தவித பயமும் இல்லாமல் சீரியல் கில்லர் கொலைகளைத் தொடர்கிறான். ஒரு நள்ளிரவில் இளம் பெண் ஒருத்தி சீரியல் கில்லரிடம் மாட்டிக்கொள்கிறாள். அவளைக் கத்தியால் குத்திவிடுகிறான். அந்தப் பெண் சாகும் நிலையில் இருக்கிறாள். அப்போது மீயும், அவளது அம்மாவும் அந்த வழியாக வருகின்றனர். மீக்கும், அவளது அம்மாவுக்கும் காது கேட்காது; வாய் பேச முடியாது.
சீரியல் கில்லரையும், அவனிடம் ஒரு பெண் மாட்டிக்கொண்டிருப்பதையும் பார்த்துவிடுகிறாள் மீ. தன்னைப் பற்றி மீக்குத் தெரிந்துவிட்டது என்று மீயைத் துரத்துகிறான் சீரியல் கில்லர். ஒரு கொடூர கொலைகாரனிடமிருந்து அப்பாவியான மீ தப்பித்தாளா என்பதே திரில்லிங் திரைக்கதை. அடுத்தது என்ன நடக்கும் என்கின்ற சுவாரஸ்யத்தைக் கூட்டி நம்மை சீட் நுனிக்கே அழைத்துச் செல்கிறது இந்தப் படம். படத்தின் இயக்குநர் குவான் ஓ- சியாங்.
தொகுப்பு: த.சக்திவேல்
|