ஸ்மார்ட் வாட்டர் பாட்டில்!



ஸ்மார்ட் டி.வி, ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்ஹோம் வரிசையில் புதிதாக இணைந்திருக்கிறது ஸ்மார்ட் வாட்டர் பாட்டில். இந்த நவீன வாழ்க்கை முறையில் தாகம் எடுத்தால் கூட நாம் சரியாக தண்ணீர் குடிப்பதில்லை. அந்தளவுக்கு பல்வேறு வேலைகளில் மூழ்கிக் கிடக்கிறோம். அப்படியே குடித்தாலும் நம் உடலுக்குத் தேவைப்படுகிற தண்ணீரை நாம் எடுத்துக்கொள்வதில்லை.
நம் உடல் ஆரோக்கியமாக இயங்க நீர்ச்சத்தை சரியான முறையில் பராமரிப்பது அவசியம். அதற்கு தேவையான அளவு தண்ணீரை நாம் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த விஷயத்தைக் கண்காணித்து நமக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருப்பதற்காக வந்திருக்கிறது ஸ்மார்ட் வாட்டர் பாட்டில். இந்த நூற்றாண்டின் முக்கிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாக ஸ்மார்ட் வாட்டர் பாட்டிலைச் சுட்டிக்காட்டுகின்றனர் நிபுணர்கள்.

‘ஹைட்ரேட் ஸ்பார்க்3’, ‘லைஃப் ஃப்யூவல்ஸ் ஸ்மார்ட் பாட்டில்’, ‘ஐஸ் வாட்டர் 3 இன் 1’... என பல பிராண்டுகளில் ஸ்மார்ட் வாட்டர் பாட்டில்கள் சந்தையில் கிடைக்கின்றன. நல்ல தரமான ஸ்மார்ட்  வாட்டர் பாட்டிலின் விலை 5 ஆயிரம் ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது. நாம் வாங்கும் பிராண்டுக்கு என்று பிரத்யேகமான ஆப்கள் இருக்கின்றன.
அந்த ஆப்கள் ஐபோனிலும், ஆண்ட்ராய்டிலும் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்த ஆப்பை டவுன்லோடு செய்துவிட்டு வாட்டர் பாட்டிலுடன் இணைத்துவிட்டால் போதும். நம் உடலின் நீர்ச்சத்தைக் கணக்கிட்டு நாம் எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை வாட்டர் பாட்டில் நினைவுபடுத்தும்.

இப்படி நினைவுபடுத்துவதற்காகவே வாட்டர் பாட்டிலில் ஒரு மினிபல்பைப் பொருத்தியிருக்கிறார்கள். மட்டுமல்ல, பாட்டிலுக்குள் இருக்கும் சென்சார் தினமும் நீங்கள் எத்தனை முறை தண்ணீர் குடிக்கிறீர்கள், எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்கள் என்பதை ஆப்பில் பதிவு செய்துகொள்ளும்.

அத்துடன் உங்களின் உடல் செயல்பாட்டைக் கணக்கிட்டு தினமும் நீங்கள் எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்பதை பரிந்துரை செய்யும். உடலில் நீர்ச்சத்து குறைந்துவிட்டால் உடனே எச்சரிக்கை மணியை அடிக்கும்.  நம் உடலின் நீர்ச்சர்த்தை மேலாண்மை செய்வதில் ஒரு மருத்துவரைப் போல செயல்படுகிறது இந்த ஸ்மார்ட் வாட்டர் பாட்டில்.

த.சக்திவேல்