பயோடேட்டா - ஹெல்மெட்
பெயர் : தலைக்கவசம். மக்களின் வழக்கத்தில் ஹெல்மெட். பிறந்த இடம் : இந்த இடத்தில்தான் என்று துல்லியமான தகவல் இல்லை. பிறந்த தேதி : கி.மு.2500ம் வருடத்துக்கு முன்பு.
 வரலாறு : போரின் போது தலையில் அடிபடாமல் இருப்பதற்காக கி.மு.2,500களில் உலோகத்தால் ஆன ஹெல்மெட்டுகள் தயாரிக்கப்பட்டன. இதை படைத்தளபதிகள் உட்பட உயர்ந்த பொறுப்பில் இருந்தவர்கள் மட்டுமே அணிந்தனர். போர் வீரர்கள் அணியவில்லை. கி.மு.900களில் அசிரியன் போர்வீரர்கள் முதன் முதலாக வெண்கலத்தால் ஆன ஹெல்மெட்டுகளை அணிந்து போரிட்டனர். எதிரிகளின் வாள்வீச்சு மற்றும் அம்பிலிருந்து தலைகளைக் காத்துக் கொள்வதற்காக அசிரியன் போர்வீரர்கள் ஹெல்மெட் அணிந்ததாக வரலாறு சொல்கிறது.
 இதைத் தொடர்ந்து ஹெல்மெட்டின் அவசியம் உலகம் முழுவதுமான போர்வீரர்களின் மத்தியில் பிரபலமானது. பிறகு 18ம் நூற்றாண்டில் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டவர்கள் சுரங்கத்தில் எதிர்பாராமல் நிகழும் அசம்பாவிதங்களில் இருந்து தலைகளைப் பாதுகாக்க உலோகத்தால் ஆன ஹெல்மெட்டுகளை அணிய ஆரம்பித்தனர். இந்த ஹெல்மெட்டுகள் உருண்டையாக தொப்பி வடிவில் வடிவமைக்கப்பட்டிருந்தன.
 அடுத்து அணை, கப்பல் கட்டுதல் போன்ற கட்டுமானப்பணிகளில் ஈடுபடுபவர்களுக்கான ஹெல்மெட்டுகள் உருவாயின. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பங்களில் தோலினால் ஆன ஹெல்மெட்டுகள் பிரபலமாயின. குறிப்பாக இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி, இத்தாலியைச் சேர்ந்த விமானிகள் தோலினால் ஆன ஹெல்மெட்டுகளைத்தான் அணிந்திருந்தனர்.
 முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரின்போது உலோகத்தால் ஆன ஹெல்மெட்டுகளும் பயன்பாட்டில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. பிறகு வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான பிரத்யேகமான ஹெல்மெட்டுகள் வந்தன. ஒரு காலத்தில் போர் வீரர்கள் மட்டுமே பயன்படுத்திவந்த ஹெல்மெட்டுகளை, இன்று தலைக்கு ஆபத்துள்ள செயலைச் செய்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணிவது கட்டாயமாகிவிட்டது. அவர்களின் செயல்பாட்டுக்குத் தகுந்த மாதிரி ஹெல்மெட்டுகளின் வடிவமும் மாறிவிட்டன. வெண்கலம், தோலிலிருந்து கார்பன் ஃபைபரில் எடை குறைவான, பாதுகாப்பான ஹெல்மெட்டுகள் தயாரிக்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டது.
 மோட்டார் சைக்கிள் ஹெல்மெட்: இரண்டு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துபவர்களுக்கான பிரத்யேகமான ஹெல்மெட் இது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் பலருக்கு புகைப்படங்களில் மட்டுமே இரண்டு சக்கர வாகனங்களைப் பார்க்கக்கூடிய வாய்ப்பு இருந்தது. அதனால் பெரிய அளவில் விபத்துகள் நிகழவில்லை. வாகனங்கள் ஓடும் வேகமும் குறைவு என்பதால் விபத்து நிகழ்ந்தாலும் பெரிதாக அடிபடவில்லை.
 இரண்டு சக்கர வாகனங்களின் உற்பத்தி, அதன் வேகம் மற்றும் விற்பனை அதிகரிக்க, பந்தயங்களும் நடந்தன. அப்படி பந்தயங்களில் ஈடுபட்டவர்கள் கீழே விழுந்து அடிபடும் அசம்பாவிதங்களும் நிகழ்ந்தன. இந்தப் பந்தயங்கள்தான் மோட்டார் சைக்கிள் ஹெல்மெட் உருவாக மூலகாரணம். ஆம்; 1914ல் இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர் எரிக் கார்டினரிடம் வாரத்துக்கு இரண்டு பேராவது பந்தயத்தில் ஈடுபடும்போது அடிபட்டு சிகிச்சைக்காக வந்தனர். அவர்களில் எல்லோருக்குமே தலையில் காயங்கள் இருந்தன.
 மோட்டார் சைக்கிளை ஓட்டும்போது தலையைக் காப்பது அவசியம் என்பதை அறிந்தார் எரிக். அந்த வருடத்திலேயே எரிக்கின் ஆலோசனைப்படி தோலினால் ஆன மோட்டார் சைக்கிள் ஹெல்மெட் உருவானது. ஆனால், இந்த ஹெல்மெட் பந்தயங்களில் ஈடுபடும் வீரர்களில் ஒருசிலரைத் தாண்டி மற்றவர்களை ஈர்க்கவில்லை. குறிப்பாக மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தும் சாதாரண மக்களைச் சென்றடையவே இல்லை. இருந்தாலும் ஹெல்மெட்டின் அவசியத்தை வலியுறுத்திக்கொண்டே இருந்தார் எரிக்.
திருப்புமுனை : இங்கிலாந்தைச் சேர்ந்த தொல்லியலாளர், ராணுவ வீரர், அரபு கிளர்ச்சியாளர், எழுத்தாளர்... என பன்முகங்களைக் கொண்ட ஆளுமை டி.இ.லாரன்ஸ். இவருக்கு ‘லாரன்ஸ் ஆஃப் அரேபியா’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. இவரது வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான ‘லாரன்ஸ் ஆஃப் அரேபியா’ எனும் ஆங்கிலப்படம் பல ஆஸ்கர் விருதுகளை அள்ளியது.
1935ம் வருடம் நிகழ்ந்த ஒரு வாகன விபத்தில் மரணித்தார் லாரன்ஸ். இந்த துயரச் சம்பவம்தான் இங்கிலாந்து மக்கள் மத்தியில் மோட்டார் சைக்கிளை ஓட்டும்போது ஏற்படும் விபத்து களையும், அந்த விபத்துகளில் இருந்து தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதையும் எச்சரிக்கை செய்தது.
முக்கியமாக இந்த விபத்து லாரன்ஸுக்கு சிகிச்சையளித்த மருத்துவர் ஹியூ செய்ரன்ஸை வெகுவாக பாதித்தது. விபத்து குறித்து ஆராய்ந்த அவர், மோட்டார் சைக்கிள் விபத்துகளில் அதிகமாக தலையில்தான் அடிபடுகிறது என்பதைக் கண்டறிந்தார். இதுகுறித்து பத்திரிகையில் எழுதிய முதல் மருத்துவரும் இவரே.
ஹியூவின் ஆராய்ச்சியின் விளைவாக இங்கிலாந்து ராணுவ வீரர்கள் அனைவரும் ஹெல்மெட் அணியத் தொடங்கினர். தவிர, பொதுமக்கள் மத்தியில் ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு உண்டானது. ரப்பர் மற்றும் கார்க்கால் ஆன ஹெல்மெட்டுகள் தயாரிக்கப்பட்டன. இரண்டு சக்கர வாகனங்களின் விற்பனைக்கு இணையாக ஹெல்மெட்டுகளின் விற்பனையும் அதிகமானது. ஐரோப்பிய நாடுகளில் ஹெல்மெட் அணிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. முக்கிய பயன்: மோட்டார் சைக்கிள் விபத்தின்போது தலையில் அடிபடுவதுதான் மரணத்துக்கு மூலகாரணம். ஹெல்மெட் அணிவதால் விபத்தின்போது மரணம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் 40 சதவீதம் குறைகிறது. தவிர, தலையில் பலமாக அடிபடுவது 70 சதவீதம் கட்டுப்படுத்தப்படுகிறது.
சட்டம் : 155க்கும் மேற்பட்ட நாடுகளில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனரும், பயணியும் ஹெல்மெட் அணிவது கட்டாயம். ஆனால், மூன்றில் ஒருவர்தான் இதைக் கடைப்பிடிக்கின்றனர்.
வகைகள் : ஃபுல் ஃபேஸ், மாடூலர், ஆஃப் - ரோட், ஹாஃப், மோட்டோகிராஸ், ஓப்பன் ஃபேஸ், டூயல் - ஸ்போர்ட், ஃபிலிப் அப், ஸ்மார்ட் ஹெல்மெட்ஸ் என ஒன்பது வகை களில் நவீன ஹெல்மெட்டுகள் கிடைக்கின்றன.
டிரெண்ட் : சமீபத்தில் ஒரு இளைஞர் தனது இரண்டு சக்கர வாகனத்தின் முன்பகுதியில் பூனையை வைத்துக்கொண்டு பயணிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பெரும் டிரெண்டானது. காரணம், அந்த வாகனத்தின் ஓட்டுநர் மட்டுமின்றி பூனையும் ஹெல்மெட் அணிந்திருந்தது. பூனைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அந்த ஹெல்மெட் செம வைரலானது.
இந்தியா : இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் ஹெல்மெட்டு களுக்கான உலகின் மிகப்பெரிய சந்தை இந்தியாதான். ஒவ்வொரு வருடமும் சுமார் 2 கோடி இரண்டு சக்கர வாகனங்கள் விற்பனையாகின்றன. இந்திய சாலைகளில் 25 கோடி இரண்டு சக்கர வாகனங்கள் பயணிக்கின்றன. 2018ல் 2.1 கோடி ஹெல்மெட்டுகள் விற்பனையாகின. 2018ம் வருடத்துடன் ஒப்பிடும்போது 2021ல் ஹெல்மெட் விற்பனை குறைந்துவிட்டது. காரணம், கார் விற்பனை அதிகரிப்பு. தவிர, தெற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு அதிகளவு ஹெல்மெட்டுகளை ஏற்றுமதி செய்வது இந்தியாதான்.
த.சக்திவேல்
|