அன்பு... வெறுப்பு... இரண்டையும் தேடிப்போனா என்ன நடக்கும் என்பதுதான் ‘வேழம்
‘‘நான் கமல் சார் ஃபேன். ‘ஹேராம்’ படத்துல ஒரு பாடலில் ‘மதம் கொண்ட வேழம்’னு ஒரு வரி வரும். யானைக்கு இன்னொரு பேர்தான் வேழம். காட்ல சிங்கம்தான் பலசாலினு சொல்வாங்க. என்னுடைய பார்வையில் மதம் கொண்ட யானையின் முன் யாருமே நிற்க முடியாது. மதம் பிடிச்ச பிறகு யானை எதைப்பத்தியும் யோசிக்காது.
 யானையின் நேர் எதிரான இன்னொரு குணம் அதன் அன்பு. மாறுபட்ட இரண்டுவிதமான குணத்தையும் என்னுடைய ஹீரோ எப்படி பிரதிபலிக்கிறார் என்பதைச் சொல்வதற்காகத்தான் ‘வேழம்’னு டைட்டில் வெச்சேன்...’’ என்று நிதானமாக பேச ஆரம்பித்தார் அறிமுக இயக்குநர் சந்தீப் ஷியாம். தமிழ் சினிமாவில் அதிவேகமாக வளர்ந்துவரும் அசோக்செல்வன் இதன் நாயகன்.  சினிமா சான்ஸ் எப்படி கிடைச்சது..?
ஒரு தனியார் நிறுவனத்துக்கு விளம்பரப் படம் எடுத்தேன். அதன் உரிமையாளர் கேசவன். என்னுடைய விளம்பரப் படங்கள், என்னுடைய ஒர்க்கிங் ஸ்டைல் அவருக்குப் பிடிக்கும். புதியவர்களை என்கரேஜ் பண்ணுவது, திறமையானவர்களுக்கு வேலை வாய்ப்பு தருவது அவருடைய கேரக்டர். அவரிடம் டைரக்ஷன் பண்ணுவதற்கான முயற்சியில் இருக்கிறேன் என்று சொல்லியிருந்தேன். ஒருமுறை ‘வேழம்’ படத்தோட அவுட்லைன் சொன்னேன். கேசவன் சாருக்கு நான் சொன்ன கதை பிடிச்சிருந்ததால் யோசிக்காமலேயே நானே தயாரிக்கிறேன்னு முன்வந்தார்.
‘வேழம்’ என்ன மாதிரியான படம்?
இது த்ரில்லர் கலந்த ரொமான்ஸ் படம். ஒரு சராசரி இளைஞனைப் பற்றிய கதை. நிஜ வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முகம் உண்டு. டோட்டலா ஒருத்தர் நல்லவராகவும் இருக்க முடியாது; கெட்டவராகவும் இருக்க முடியாது. மனிதர்கள், வித்தியாசமான சூழ்நிலைகளில் எப்படி ரியாக்ட் பண்ணுகிறார்கள் என்பதைச் சொல்லியிருக்கிறேன். இது ஹீரோ கேரக்டருக்கு மட்டுமல்ல, படத்துல வர்ற எல்லா கேரக்டர்களிடமும் இந்த குணம் இருக்கும். ஒரு தனி மனிதன், தனக்கு ஏற்படும் பிரச்னைகளை எப்படி எதிர்கொள்கிறார் என்பது படத்தோட ஒன் லைன்.
 அசோக் செல்வன் எப்படி படத்துக்குள் வந்தார்?
என்னுடைய நண்பர்கள் சிலர், அசோக் செல்வன் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆர்வமா இருப்பார்னு சொல்லியிருக்காங்க. அவரும் டைம் ஒதுக்கி கதையை பொறுமையா கேட்டார். முழுசா கதையைப் புரிஞ்சிக்கிட்ட பிறகுதான் ஓகே சொன்னார். இவ்வளவுக்கும் நான் முதன் முதலா ஒரு ஹீரோவிடம் கதை சொன்னது அதுதான் முதல்முறை.
படத்துல அவர் கேரக்டர் பேர் அசோக். என்னுடைய ஷார்ட் ஃபிலிம் படங்களில் ஹீரோவுடைய கேரக்டர் பேர் அசோக்னு வெச்சிருப்பேன். அசோக் செல்வன் சாரும் அப்படியே இருக்கட்டும்னு சொல்லிட்டார்.
படத்துல தனியார் நிறுவன ஊழியரா வர்றார். ஆனா, இந்தக் கேரக்டரை கேஷுவலான கேரக்டர்னு சொல்லிட முடியாது. ஒரு கோணத்துல ஜாலியாவும், இன்னொரு கோணத்துல யார் மீதும் நம்பிக்கை வைக்காம லட்சியத்தை நோக்கி ஓடும் கேரக்டராவும் இருக்கும். உடல்ரீதியா உழைப்பு தேவைப்படும் ரோல். சில இடங்களில் அசோக் செல்வனின் லுக்ல மாற்றம் வரும். அதுக்கு டைம் எடுத்துக்கொண்டோம். தயாரிப்பாளர் அதற்கும் ஓகே சொன்னார்.
அசோக் செல்வன் சார் வேலை விஷயத்துல ரொம்ப சின்சியர். கதை என்ன மாதிரி உழைப்பைக் கேட்டாலும் அதைக் கொடுக்கத் தவறமாட்டார். இந்தப் படம் கோவிட்னால பல அப்ஸ் அண்ட் டவுன்ஸை பார்த்துடுச்சு. அந்த மாதிரி சமயங்களிலும் அசோக் செல்வன் சார் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்.
கலர்ஃபுல்லா ரெண்டு ஹீரோயின்ஸ்..?
ஒருவர் ஜனனி. ‘தெகிடி’ல அசோக்செல்வனுடன் நடிச்சவர். இன்னொரு ஹீரோயின் ஐஸ்வர்யா மேனன். ரெண்டு ஹீரோயின் இருந்தால் பிரச்னை வராதானு சிலர் என் காதுபடவே பேசினாங்க. எனக்கு அப்படி எதுவும் நடக்கல. நிஜத்துல ரெண்டு பேருமே நல்ல தோழிகள். இதுல ஹீரோவுக்கு மட்டுமல்ல, கதையில் எல்லாருக்கும் முக்கியத்துவம் இருக்கும். ஒருத்தர் கேரக்டரை எடுத்துவிட்டால் கதை நகராது. அந்த மாதிரி ஸ்டோரி இது.
நடிச்சவங்க எல்லாரும் கதையில் அவங்களுக்கான வேல்யூஸை புரிஞ்சு நடிச்சாங்க. அதுக்கு காரணம், எல்லாருமே முழுக் கதையை நேரம் ஒதுக்கி படிச்சாங்க. ப்ரீ புரொடக்ஷன் ஒர்க் நிறைய பண்ணியதால ஷூட் டைம்ல குழப்பம் ஏற்படல. ரெண்டு ஹீரோயினுக்குமே தமிழ் தெரியும் என்பதால் சொந்தக் குரலில் பேசியிருக்காங்க. மராத்தி நடிகர் மோகன் அகாஷே நடிச்சிருக்கிறார். ‘மனிதன்’ படத்துல முக்கியமான ரோல் பண்ணியவர். ‘பத்மஸ்ரீ’, சாகித்ய அகடமி போன்ற விருதுகள் வாங்கியவர்.
இவர்களுடன் என்னுடைய ஷார்ட் பிலிம்களில் நடிச்ச ஷியாம் சுந்தர், கிட்டி, சங்கிலிமுருகன், தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், ஆர்ட் டைரக்டர் கிரண் இருக்கிறார்கள். சக்தி அரவிந்த் ஒளிப்பதிவு. ஜார்ஜ் வில்லியம்ஸ் மாணவர். ‘ராஜா ராணி’, ‘தெறி’ படங்களுடைய அசோசியேட் கேமராமேன். இது ஊட்டி, கோயமுத்தூர் பின்னணியில நடக்கும் கதை. அந்த ஊர் அழகையும், அடர்ந்த காடுகளின் இயற்கைக் காட்சிகளையும் அற்புதமா படம்பிடிச்சுக் கொடுத்தார்.
மியூசிக் ஜானுசந்தர். என்னுடைய ஸ்கூல்மேட். கிடார் ஸ்பெஷலிஸ்ட். சந்தோஷ் நாராயணன் படங்களுக்கு வாசிச்சிருக்கிறார். ‘கபாலி’யில் ‘நெருப்புடா...’ பாடலில் வரும் கிடார் பிட் இவருடையதுதான். ஓடிடில வெளிவந்த ‘நிலா’வுக்கு மியூசிக் பண்ணியிருக்கிறார். சினிமாவா இதுதான் முதல் படம். நான்கு பாடல்கள். பிரதீப் குமார் ஒரு பாடலை எழுதி பாடியுள்ளார். சக்திஸ்ரீ, தீபிகா பாடியிருக்கிறார்கள். எடிட்டர் பிரசாத். என்னுடைய விளம்பரப் படங்களுக்கு எடிட் பண்ணியவர். படத்துல வேற என்ன ஸ்பெஷல்?
இது கமர்ஷியல் படமா இருந்தாலும் யதார்த்தத்தை மீறாத படமா இருக்கும். இதுதான் படத்தோட USP. ஆர்ட்டிஸ்ட்ஸ் பெர்ஃபாமன்ஸுக்காக படத்த பார்க்கலாம். அசோக் செல்வன் நடிப்பு புது டைமன்ஷன்ல இருக்கும். மத்தபடி, இது புதிய கதைக்களம் என்பதைவிட சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் புதுசா இருக்கும்.மனிதனுக்கும் விலங்கிற்கும் வித்தியாசம் இருக்கானு கேட்டால், விலங்குகள் உணவு, தற்காப்பு இந்த ரெண்டு விஷயத்துக்காகத்தான் போராடும். முதுகுக்குப் பின்னாடி குத்தாது. ஆனா, மனிதன் முதுகுக்குப் பின்னாடி குத்துவான்.
ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன புகழ்பெற்ற வாசகம் ‘what you choose in your life’. ஒரு மனிதன் தன் வாழ்க்கையை பாசிட்டிவ்வாகவும் பார்க்கலாம், நெகட்டிவ்வாகவும் பார்க்கலாம். அன்பையும் தேடிப் போகலாம், வெறுப்பையும் தேடிப் போகலாம். இந்த இரண்டையும் தேடிப் போனால் என்ன நடக்கும் என்பதை சுவாரஸ்யமா சொல்லியிருக்கிறேன். படத்துல ஒரு டயலாக் இப்படி வரும்... ‘ஒரு விஷயத்தை ரசிச்சு அதையே தேடிப் போனால் அதுதான் நடக்கும்...’
ஷார்ட் ஃபிலிம், விளம்பரப் படம்னு சொல்றீங்க. இதற்கு முன் யார்கிட்ட வேலை பார்த்தீங்க?
படிச்சது, வளர்ந்தது சென்னைல. எம்பிஏ முடிச்சதும் மல்டி நேஷனல் கம்பெனியில் வேலை கிடைச்சது. சினிமா நிறைய பார்ப்பேன் என்பதைத்தாண்டி எனக்கு எந்த சினிமா கனெக்ஷனும் இல்ல. வேலையில ஜாயின் பண்ணினாலும் சினிமா மீதான ஆர்வம் அதிகமானது. வீட்ல என்னுடைய விருப்பத்தை சொன்னேன்.
அவர்களும் ‘சரி, முயற்சி பண்ணிப் பார்’னு வாழ்த்தினாங்க. நான் யார்கிட்டயும் சினிமா கத்துக்கல. சொந்தமா விளம்பரக் கம்பெனி ஆரம்பிச்சேன். விளம்பரப் படங்கள், ஷார்ட் ஃபிலிம்னு எடுத்தேன். என்னுடைய நோக்கம் சினிமா என்பதால் கதைகளை ரெடி பண்ணிவைச்சேன். அதுல க்ளிக்கானதுதான் ‘வேழம்’.
எஸ்.ராஜா
|