ஐஏஎஸ் தேர்ச்சியில் தமிழக மாணவர்கள் பின்தங்குவது ஏன்..?
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை. யானை தேய்ந்து பூனையான கதை. உங்களுக்குப் பிடித்த வேறு தேய்ந்த கதைகளையும் இத்தோடு சேர்த்துக்குங்க.கடந்தவாரம் இந்தியாவின் பெருமைமிகு, சீர்மிகு, எல்லோரின் ட்ரீமிலுமே வரும் கலெக்டர் கனவான சிவில் சர்வீஸ் எனும் குடிமைப் பணிக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டது. ஆனால், கண்ணால் பார்க்கமுடியவில்லை. பார்த்தால் மூளைக்குள் ஏறவில்லை.
 எல்லாம் சூன்யமாக இருந்தது. சுமார் 685 இந்திய வெற்றியாளர்களில் 27 தமிழர்கள் மட்டுமே வெற்றியாளர்கள் என கொட்டை எழுத்தில் இருந்ததை ஜீரணிக்கமுடியவில்லை. கூகுள் ஆண்டவரை தரிசித்தால் ஆண்டு வாரியாக தமிழகத்தின் தேர்ச்சியை சதவீதத்தில் தருகிறது. 2014ல் 10, 2015ல் 8, 2016ல் 7, 2017ல் 4, 2018ல் 5, 2019ல் 7, 2020ல் 4.7, 2021ல் 3.9. இந்த 3.9 சதவீதம் தேர்ச்சிதான் கடந்தவாரம் தமிழ்நாட்டின் தலையெழுத்தை தலைகீழாக எழுதியிருக்கிறது.
ஒருகாலத்தில் நிஜத்திலும் திரைப்படங்களிலும் ஒரு குழந்தையைக் கேட்டால்கூட ‘நான் கலெக்டராக வருவேன்...’ என்று சொல்லும் காலம் இருந்தது. ஆனால், இதெல்லாம் 90கள் வரைதான்.
சுமார் 30 ஆண்டுகளில் தமிழகத்தின் - இந்தியாவின் சரித்திரமே மாறிக்கிடக்கிறது. 90களில் முகம் காட்டிய உலகமயமாக்கலும், திறந்தவெளிப் பொருளாதாரமும் அடுத்த தலைமுறைகளை ஓட ஓட விரட்டிக்கொண்டிருக்கிறது. சிவில் சர்வீஸ் பணியில் தமிழர்களின் தொடர் தோல்வி கிராஃப் நல்ல அடையாளமா, கெட்ட சகுனமா எனும் ரீதியில் இதுதொடர்பான ஆர்வலர்களைப் பிடித்து விசாரித்தோம்.
 ‘‘சிவில் சர்வீஸ் தேர்வில் மெயின் பேப்பர் மற்றும் இண்டர்வியூவின் மார்க்குகளின் கூட்டுத்தொகைதான் ஒரு மாணவனின் வெற்றிவாய்ப்பைத் தீர்மானிக்கிறது. மெயின் எழுத்துத் தேர்வு. இண்டர்வியூ பேச்சு. எழுத்துத் தேர்வில் உச்சபட்ச மதிப்பெண்னை பெற்று பேச்சில் முழுவதுமாக சொதப்பினால் வெற்றிவாய்ப்பு அம்போ. அதேபோல எழுத்தில் சொதப்பி, பேச்சில் பிரமாதப்படுத்தினாலும் வெற்றிவாய்ப்பு குறைவு. எழுத்தில் சிறப்பாக ஸ்கோர் செய்து பேச்சில் ஓரளவாவது தேறினால்தான் வெற்றி நிச்சயம்.
 தமிழக மாணவர்களின் இந்த ரிசல்ட்டைப் பார்க்கும்போது எழுத்திலும், பேச்சிலும் மிக சுமாராகத்தான் செய்திருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது...’’ என்று பிரச்னையின் ஆணிவேரைப் பிடித்து பேசும் வைஷ்ணவி, சென்னை சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குனர். ‘‘இதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. முதன்மையானது பொருளாதார சூழல். ஒருகாலத்தில் 5 அல்லது 8 அட்டம்ப்ட் எழுதியாவது ஐஏஎஸ் பாஸாகியே தீருவேன் என்று தமிழக மாணவர்கள் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தனர்.
ஆனால், இன்று வறுமையும், விலைவாசியும் பிள்ளைகளை இத்தனை வருடங்கள் படிக்க வைக்க வேண்டுமா... வேலைக்காகக் காத்திருக்க வேண்டுமா... என்ற கேள்வியை பெற்றோரிடம் எழுப்பியிருக்கிறது.அதாவது படித்ததும் வேலை என்பது இன்றைய பெற்றோரின் விருப்பம் மட்டுமல்ல... பிள்ளைகளின் கனவும். இதைப் பூர்த்தி செய்யும் வகையில் ஐடி வேலைகளும் தாராளமாகக் கிடைக்கின்றன. ஒருவேளை ஒரு மாணவன் சிவில் சர்வீஸ்தான் எழுதுவேன் என்றால்கூட ‘பார்ட் டைமாக ஒரு வேலையைப் பார்த்துக்கொண்டு சிவில் சர்வீசுக்கு படி’ என்றுதான் பெற்றோர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள்.
இதற்காக பெற்றோரைக் குற்றம்சாட்ட முடியாது...’’ என்ற வைஷ்ணவியிடம், அட்டம்ப்ட் செய்யும் மாணவர்களும் ஏன் எழுத்திலும் பேச்சிலும் முன் எப்போதும் இல்லாத அளவில் குறைபாடு உடையவர்களாக இருக்கிறார்கள் என்றோம்.‘‘தமிழக மாணவர்கள் திறமையானவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், இன்றைய காலத்தில் குடும்ப சூழ்நிலைகளையும் தாண்டி எழுத வரும் மாணவர்கள் வெளி உலக எக்ஸ்போஷரில் குறையுள்ளவர்களாக இருக்கிறார்கள். இதனால் அவர்களிடம் நம்பிக்கை வறட்சி மிகுந்திருக்கிறது.
அதேபோல இந்தத் தேர்வுக்கு அத்தியாவசியமான ஜெனரல் நாலேட்ஜும் இந்த மாணவர்களிடையே குறைவாக இருக்கிறது. தவிர முன்பு போலில்லாமல் சில அட்டம்ப்டிலேயே பாஸாகிவிடவேண்டும் என்று இந்தத் தேர்வுக்கு இப்போது அவர்கள் பயிற்சி எடுப்பதால் படிப்பில் ஆழம் காணமுடியாமல் இருக்கிறார்கள்.
இத்தோடு கொரோனா காலமும் இந்த வீழ்ச்சிக்கு முக்கிய பங்காற்றியிருக்கிறது. எங்களைப் போன்ற பயிற்சி நிலையங்கள் கடந்த இரண்டு வருடங்களாக ஆன்லைன் மூலமாக பயிற்சி அளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாயின. இதனால் எங்களாலும் அவர்களது குறைகளை ஆராய்ந்து சரிசெய்ய முடியாத நிலை. தனிப்பட்டு கவனம் எடுத்து பயிற்சி தர இயலாத சூழல்.
இந்தக் குறைகள் எல்லாம் இனிவரும் காலங்களில் சரிசெய்யப்படும்...’’ என்ற வைஷ்ணவியிடம், பொருளாதார சூழலும், கொரோனா போன்ற பிரச்னைகளும் தமிழகத்துக்கு மட்டுமே உரியவை அல்லவே என்றோம். ‘‘மறுக்கவில்லை. ஆனால், இப்பிரச்னைகள் தென்னிந்தியாவுக்கே மிகப் பொருத்தமாக இருக்கிறது. மொத்த வெற்றியாளர்களில் தென் இந்தியாவில் இருந்து தேர்வானவர்கள் 100க்கும் குறைவானவர்கள் என்ற உண்மை இதைத்தான் உணர்த்துகிறது.
வட இந்தியாவைப் பொறுத்தளவில் சிவில் சர்வீசுக்கு தில்லிதான் கேப்பிட்டல் என்று மாறிவிட்டது. தில்லி என்றால் தில்லி மட்டுமல்ல. சுற்றியுள்ள மாநிலங்களான உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத், இமாச்சலப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான்... மாணவர்கள் எல்லாம் தில்லியில்தான் கும்பலாகக் கூடி படிக்கிறார்கள். அங்கே பியர் பிரஷர் என்ற ஊக்கம் இருக்கிறது. தில்லியில் ஐந்தில் ஒரு மாணவனாவது சிவில் சர்வீஸ் படிப்பவனாக இருப்பான். இச்சூழல் ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் போட்டியை உருவாக்குகிறது. இதனால்தான் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகமாக சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள். அதுபோலவே நம் மாணவர்கள் இண்டர்வியூவுக்காக தில்லிக்கு போகும்போது தங்களுக்குத் தெரிந்த ஆங்கிலத்தைக்கூட மறக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
இந்தத் தடைகளை எல்லாம் மீறித்தான் நம் மாணவர்கள் ஜெயிக்க வேண்டியிருக்கிறது. மற்றபடி கலெக்டர் கனவு என்பது தமிழ்நாட்டில் அப்படியேதான் இருக்கிறது. ஆனால், அந்தக் கனவை நிறைவேற்றும் முயற்சிகளை மாணவர்கள்தான் சீரியஸாக மேற்கொள்ள வேண்டும்...’’ என்று வைஷ்ணவி முடிக்க, இப்பிரச்னையை அடி ஆழத்தில் சென்று பார்க்கிறார் கல்வியாளரான பிரின்ஸ் கஜேந்திரபாபு.‘‘ஒருகாலத்தில் இந்தியாவின் சமூக மேம்பாட்டுக்கான தேவை என்ன... அதற்கு எப்படி செயல் வடிவம் கொடுப்பது... அதை எப்படி நிறைவேற்றுவது... என்ற ஒரு சமூக நோக்கம் உள்ள வேலையாக ஐஏஎஸ் மற்றும் பிற சிவில் சர்வீஸ் பணிகளைப் பார்த்தோம்.
ஆனால், இன்று இந்தத் தேர்வே அப்படிப்பட்ட சமூக நோக்கமுள்ள மனிதர்களை விலக்கிவிட்டு, அரசாங்கத்துக்கு யார் எல்லாம் வாய் பொத்தி, கை கட்டி வேலை செய்வார்களோ அவர்களை எல்லாம் வடிகட்டி தேர்ந்தெடுக்கும் தேர்வாக மாறியிருக்கிறது.கடினமான சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழக மாணவர்கள் மட்டும் ஏன் கோட்டைவிடுகிறார்கள் என்பதை அரசு அதிகாரிகள், கல்வியாளர்களைக் கொண்டு தமிழக அரசு ஆராய்ந்து அறிக்கை தயாரித்திருக்க வேண்டும்.
சென்ற அதிமுக ஆட்சி இதைச் செய்யவில்லை. இன்றைய திமுக அரசு இப்பணியை மேற்கொண்டு ஆவன செய்யும் என்று நம்புகிறேன்...’’ என்று சொல்லும் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழகத்தின் இந்தத் தோல்விக்கு மாணவர்களின் மொழி ஆற்றல், எழுத்தாற்றலில் குறைகள் இருப்பதாக பல ஐஏஎஸ் பயிற்சி மையங்களும் கல்வியாளர்களும் சொல்வதை ஓரளவுக்கு ஏற்கிறார்.
‘‘இதில் சில உண்மைகள் இருக்கின்றன. உதாரணமாக, தமிழகத்தில் 12ம் வகுப்பு வரை ஆங்கிலம் ஒரு பாடமாக இருக்கிறது. அப்படி இருந்தும் மாணவர்கள் ஏன் ஆங்கிலத்தில் தடுமாறுகிறார்கள் என்ற கேள்வி எழுகிறதல்லவா..? அப்படி என்றால் ஆங்கிலப் பயிற்சியில் குறை இருக்கிறது என்றுதானே அர்த்தம்?அரசு கல்விக்காக செலவழிக்கிறது என்பது உண்மைதான்.
ஆனாலும் முன்பைவிட குறைவாக செலவழிக்கிறது. இதனால்தான் கல்விக்கு ஆடிட் வேண்டும் என்கிறேன். அப்போதுதான் எங்கே ஓட்டை இருக்கிறது என்பதைக் கண்டறிந்து சரிசெய்ய முடியும். இதோடு தமிழகத்தில் மொழிக்கான பிரத்யேக ஆசிரியர்களே பெரும்பாலும் இல்லை. மற்ற பாடங்களை எடுக்கும் ஆசிரியர்கள்தான் ஆங்கிலத்தையும் எடுக்கிறார்கள்.
ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரையில் ஆங்கிலத்துக்கு என தனியாக ஆசிரியர்கள் இல்லை என்றால் உயர் வகுப்புக்கு செல்லும் மாணவர்கள் தடுமாறவே செய்வார்கள்...’’ என்ற பிரின்ஸ் கஜேந்திரபாபு, தனியார் வேலைகள் இந்த சிவில் சர்வீஸ் கனவுகளை கானல் நீராக்கிவிட்டதாக சொல்லப்படுவதை ஏற்கவில்லை.
‘‘தனியார் வேலையைத் தேடுபவர்களை விட்டுவிடுவோம். ஆர்வத்துடன் சிவில் சர்வீஸ் எழுத வருபவர்களை நாம் காப்பாற்றி கரை சேர்க்க வேண்டுமல்லவா? எழுத வரும் மாணவர்கள் பல தடைகளைத் தாண்டித்தான் இன்று தேர்வு எழுதுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு முதலில் உணவளிக்க வேண்டும். பிறகு தங்கும் இடம், இலவசப் புத்தகங்கள் என்று அரசு அரவணைத்து ஆதரிக்க வேண்டும். சென்னையில் மட்டும்தான் அரசு பயிற்சி நிலையங்கள் என்பதை மாற்றி மாவட்டங்கள் - மண்டல வாரியாக இந்த பயிற்சி மையங்களை உருவாக்கி ஊக்கம் கொடுக்கவேண்டும். இன்றைய திமுக அரசு இதையெல்லாம் செய்யும் என்ற நம்பிக்கை இருக்கிறது...’’ என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
இந்த இதழுடன் வழங்கப்படும் ‘மாயோன்’ திரைப்பட இணைப்பிதழ், முழுக்க முழுக்க விளம்பர இணைப்பு. அதில் வெளியாகியிருக்கும் அனைத்து செய்திகளும் ‘மாயோன்’ திரைப்படக் குழுவினருக்கு உரியவை.
டி.ரஞ்சித்
|