பளீச் பந்தானா!



பந்தானா... தலையில், கழுத்தில், கைமணிக்கட்டில், போனி டெயில் ஜடையில்... என வித விதமாக கட்டும் ஒரு குட்டி மெட்டீரியல் ஆக்ஸசரிஸ் இது. ஜேம்ஸ் பாண்ட் பட நாயகிகள் துவங்கி நம்மூர் ஷாருக்கான், சல்மான்கான்… ஏன் ‘கே.ஜி.எஃப்’ ஹீரோ யாஷ் வரையிலும் கூட பந்தானா செம டிரெண்ட். எப்படி இது ஃபேஷன் அடையாளமாக  மாறியது என ஜாலி டீடெய்ல்களை அடுக்கினார் ஸ்டைலிஸ்ட் மற்றும் டிசைனர் பேன்சி ராஜா.

‘‘என்னைக்கு நம்ம ஊர்ல வெயிலடிக்க ஆரம்பிச்சதோ, என்னைக்கு அமெரிக்கா மாதிரியான நாடுகள்ல குளிரடிக்க ஆரம்பிச்சதோ அன்னைக்கே இந்த டிரெண்ட் ஆரம்பிச்சிடுச்சு. ஆம்; குளிருக்காக காதுகளை மறைக்கவும், வெயிலுக்குத் தலையை கவர் செய்யவும் பயன்படுத்தப்பட்ட பேண்ட், ஸ்கார்ஃப்களின் அடுத்த வெர்ஷன்தான் இந்த பந்தானா. 60- 80களில் இந்திய சினிமாக்களிலும் இது படு ஃபேமஸ். ரெட்ரோ டிரெண்டில் எப்படி பிளவுஸ் முடிச்சுகள், பெல் பாட்டம் எல்லாம் தவிர்க்க முடியாதோ அதே பாணியில் இதையும் தவிர்க்க முடியாது.

60-70கள்ல கழுத்திலே ஹீரோயின்கள் கட்டியிருப்பதைப் பார்க்கலாம். அதே டிரெண்ட் 80கள்ல தலையில் பேண்ட்களா மாறுச்சு. அப்பறம் ‘ஊலாலாலா…’ பாட்டு மூலம் கஜோல் கட்டின போனி டெயில் கர்ச்சீஃப் வைரல் மோடுக்கே போச்சு. அடுத்து ‘ரட்சகன்’ படத்தில் சுஷ்மிதா சென் அணிந்து வர செம ஹிட்டாச்சு. பிறகு நம்ம சூப்பர் ஸ்டார் ‘பாபா’வில் கட்டி வர மாஸ் டிரெண்டானது...’’ என்ற பேன்சி,  பந்தானாவில் இருக்கும் மறைமுக பயன்களைப் பற்றியும் விவரித்தார்.

‘‘சின்ன வயதில் ஸ்கூலுக்குப் போகும்போது கர்ச்சீஃபை சட்டையில் குத்தி அனுப்புவாங்க. வியர்த்தாலோ, ஜலதோஷம்  வந்தாலோ துடைக்கப் பயன்படும். அதுவே பின்னாளில் கோட், சூட்களில் ஒரு சின்ன மெட்டீரியலை பாக்கெட்களில் முக்கோண வடிவத்துல வெச்சு ஃபேஷன் ஐகானா மாத்தினாங்க. வெள்ளைச்சட்டை அல்லது லைட் கலர் சட்டைக் காலர்கள்ல அழுக்கு படியாம இருக்க காலரைச் சுற்றி மடிச்சு வச்சாங்க. கர்ச்சீஃப் தொலைஞ்சு போகக்கூடாது என்கிறதுக்காக கை மணிக்கட்டில் கட்டினாங்க. அடுத்து கஜோல் ஸ்டைல் ஜடைகளில் பயன்படுத்தினோம்.

கிட்டத்தட்ட கர்ச்சீஃப், டிஸ்யூ பேப்பர்களில் என்னென்ன பயன்கள் இருக்குமோ அத்தனையும் இந்த பந்தானாக்களில் உண்டு. மட்டுமல்ல, விளையாட்டு வீரர்கள், பாடி பில்டர்கள், ஒர்க் அவுட் செய்கிற வர்கள் வியர்வை வழிஞ்சு கண்கள்ல விழாம இருக்க இந்த ஹெட் பேண்ட் பயன்படுத்தினாங்க...’’ - என்கிற பேன்சி, பந்தானாவை எந்தெந்த ஸ்டைல்களில் பயன்படுத்தலாம் என்று விளக்கினார்.

‘‘தலை முழுக்க கவர் செய்தாற் போல் சைஃப் அலிகான் ஸ்டைல், அமீர்கான் ஸ்டைல் எனில் கழுத்தில் முடிச்சு போட்டுக்கொள்ளலாம். ஷாருக் ஸ்டைல் எனில் தலையில் பாதிப் பகுதி கவர் செய்த மாதிரி கட்டிக்கலாம். இங்கே சிம்ரன்தான் அதிகமா இந்த டிரெண்டை பயன்படுத்தினாங்க. பெரும்பாலும் டிராவல் அதிகம் செய்கிற மக்கள் தங்களுடைய ஜிப்ஸி ஃபேஷன் கூட இந்த பந்தானாவையும் சேர்த்துப்பாங்க. இப்போ இன்னொரு டிரெண்டா ஹேண்ட் பேக்ல பொண்ணுங்க முடிச்சு போட்டு வெச்சிருக்கறதைப் பார்க்க முடியுது.

குறிப்பா ஹெல்மெட்டுக்கும், தலைமுடிக்கும் இடைப்பட்ட பாதுகாப்பே இந்த பந்தானாக்கள்தான். ஜாலியா, டிரெண்டியா, தன்னை ஃபேஷன் விரும்பின்னு காட்டிக்க நினைக்கறவங்க, மேலும் வயசைக் குறைவா காட்டி செம ஜாலியான ஆளுன்னு காட்டிக்கவும் கூட இந்த பந்தானா பயன்படும்...’’ என்று அழுத்தமாக முடித்தார் பேன்சி ராஜா.

ஷாலினி நியூட்டன்