அரண்மனை குடும்பம் - 22



ஒரு வித்தியாசமான தோற்றத்துடன் செக்போஸ்ட் வாசலில் வந்து நின்ற ஜல்லியை கான்ஸ்டபிள் மாணிக்கம் பார்த்துவிட்டு நெருங்கி வந்து “யாருய்யா நீ... என்ன விஷயம்?” என்று அவனை அதட்டினார்.“கும்புடறேன் சாமி...” என்றான் ஜல்லி பதிலுக்கு.“விஷயத்த சொல்லு... இங்க எங்க வந்தே?”“உள்ளார கைய கட்டிக்கிட்டு வெலவெலத்துப் போய் நிக்கானே போதிமுத்து... அவன் என் கூட்டாளிங்க...”“ஓ... நீயும் பாம்பு பிடிக்கற பிடாரப்பயலா..?”“இல்லீங்க... நான் வைத்யனுங்க...” ஜல்லி, மாணிக்கத்திடம் தன்னைப்பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கும்போது சாமிக்கண்ணுவின் கைபேசி வழியாக அவரோடு பேசத் தொடங்கியிருந்தார் குலசேகர ராஜா.

“தம்பி... நான் குலசேகர ராஜா பேசறேன். நீங்க போன காரியம் என்னாச்சுன்னு நான் தெரிஞ்சிக்கலாமா..?” என்று அவர் ஆரம்பிக்கவும், சாமிக்கண்ணு, சதாசிவத்தை ஒரு மாதிரி பார்த்தபடியே, “அதான் இங்க நடந்த என்கொயரி அவ்வளவையும் நம்ப சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சார் போன் மூலமா கேட்ருப்பீங்களே சார்... ஒண்ணும் தெரியாத மாதிரி என்னக் கேட்டா என்ன சார் அர்த்தம்?” என்று ஒரே போடாகப் போட்டார்.

குலசேகர ராஜா அதை எதிர்பார்க்கவில்லை என்பது நன்றாகத் தெரிந்தது. சதாசிவமும் அதை எதிர்பார்க்கவில்லை. அதிர்வும் ஆச்சரியமுமாய்ப் பார்த்தார்.
சாமிக்கண்ணுவும் தொடர்ந்தார். “என்ன சார் பேச்சக் காணோம். பட்டுன்னு போட்டு உடைக்கவும் பதிலுக்கு பேச முடியலியோ?”“ஆமாம்யா... நான்தான் சதாசிவத்தை அனுப்பி வைச்சேன். அரண்மனை குடும்பம் மேல மதிப்பும் மரியாதையும் உள்ள ஒரு விசுவாசமான போலீஸ்யா அவர்... அதான் அவரை அனுப்பி அவன் யாரு... யாரைக் கொலை பண்ண வந்தான்னு தெரிஞ்சிக்க ஆசைப்பட்டேன்...” சமாளிக்க முயன்றார் குலசேகர ராஜா.

“அதான் யாரையும் தெரியாதுன்னு கிளிப்பிள்ளை கணக்கா சொன்னதையே திரும்பச் சொல்லிக்கிட்டிருக்கானே?”

“நானும் கேட்டேன்... அவனை இனியும் போட்டு நோண்ட வேண்டாம். அவனை அனுப்பிடுங்க...”“அப்ப யாரைக் கொலை பண்ண வந்தான்... யார் அனுப்பினதுங்கற விவரமெல்லாம் தெரிய வேண்டாமா..?”“அதான் எனக்கு தெரியாதுங்கறானே... செத்துப்போன சதீஷும் அழுத்தமானவன்... இவன்கிட்டல்லாம் யாரு, எதுக்குன்னு சொல்லியிருக்க மாட்டான்னுதான் எனக்குத் தோணுது. அதான் அவனைப் போட்டு குடையறது பிரயோஜனமில்ல... விட்றுங்கன்னு சொல்றேன்...”“இவனுக்காக நீங்க இப்படி போன் பண்ணி பேசறது எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்குய்யா...”சற்று சிரித்தபடி சாமிக்கண்ணு சொன்ன விதத்தில் அவர் குலசேகர ராஜாவை சந்தேகப்படத் தொடங்கி விட்டது அப்பட்டமாகத் தெரிந்தது.

“நான் அவனுக்காகப் பேசலய்யா... எங்க குடும்பத்து கணேச ராஜாவுக்காக பேசறேன். நீ இவன் மேல கேஸ் ஃபைல் பண்ணி எஃப்ஐஆர் போட்டு கோர்ட்டுக்கு கொண்டு போனா... சாட்சி சொல்ல எங்க ராஜாவுமுல்ல வரணும்? அவனுக்கு இருக்கற வேலைக்கு இதுக்கெல்லாம் எங்க இருக்கு நேரம்? அவன்தான் எனக்கு போன் பண்ணி இத பெரிசுபடுத்தாம் அப்படியே விட்ற சொன்னான்... அதனாலதான் பேசிக்கிட்டு இருக்கேன். இல்லேன்னா எனக்கெதுக்கு இந்தக் கண்றாவியெல்லாம்..?” மிகப் போலியாக அலுத்துக்கொண்டார் குலசேகர ராஜா.

“அதுக்கு அவரே எனக்கு போன் பண்ணி என்னை இதுல சம்பந்தப்படுத்தாதீங்கன்னு சொல்லியிருக்கலாமே..! அவர் சொல்லப் போய்தானே இவனப்பத்தியே தெரிய வந்து நாங்களும் மடக்கிப் பிடிச்சிருக்கோம்..?”சாமிக்கண்ணு, குலசேகர ராஜாவுக்கு அடங்குவதாகவே தெரியவில்லை. அது குலசேகர ராஜாவுக்கும் புரிந்து போனது. இதற்குமேல் இந்த மனிதனிடம் பேசினால் அது மேலும் பலவீனப்படுத்தி விடும் என்பதை மிக வேகமாய் புரிந்து கொண்டவர், “சரிய்யா... நீ உன் போக்குல போய்க்கோ... என்ன செய்யணுமோ செய். நான் மேலிடத்துல பேசிக்கறேன்...’’ என்று போனை கட் செய்து விட்டார்.

சாமிக்கண்ணுவும் சிரித்தபடி செல்போனை பாக்கெட்டில் போட்டுக் கொண்டே சதாசிவம் பக்கம் திரும்பினார். சதாசிவம் முகத்தில் சற்று அசடு வழிந்து கொண்டிருந்தது.
“சம்பந்தமே இல்லாம நீங்க இங்க எனக்கு முந்தி வந்து நிக்கும் போதே நினைச்சேன் சார்... இது சாதாரண கேஸ் இல்ல, பெரிய இடம் இதுல சிக்கியிருக்குன்னு...” என்று அவரிடம் ஆரம்பித்தார்.
சதாசிவத்துக்கு சுருக்கென்றது. “பெரிய இடம்னு நீங்க யாரைச் சொல்றீங்க சாமிக்கண்ணு?” என்று மிக வேகமாகக் கேட்டார்.

“அது போகப் போகத்தானே சார் தெரியும்... இன்னும் நம்ம பாணி விசாரணையே தொடங்கல... தொடங்கினாதானே தெரியும்? ஆனா, அதுக்குள்ள அவனை விட்றுங்க, கேஸையும் பெருசுபடுத்தாதீங்கன்னா என்ன சார் அர்த்தம்..?”“அப்ப நீங்க இவனை விட்றதா இல்லை... அப்படித்தானே..?”“ஆமாம் சார்... இது சாதாரண கேஸ் இல்ல சார். உறுதியா சொல்றேன்... இருபது வருஷமா போலீஸ்காரனா இருக்கேன்.

அந்த அனுபவத்துல சொல்றேன்... இதுல குறியும் பெருசு. குறி வெச்சவனும் பெரியவன்...”சாமிக்கண்ணுவும் சதாசிவமும் பேசப்பேச போதிமுத்துவுக்கு இருட்டிக்கொண்டு வந்தது. அதே சமயம் இடையில் தனக்காக ஜல்லி வந்து வாசலில் நிற்பதும், கான்ஸ்டபிள் மாணிக்கம் அவனை உள்ளே விடாமல் பேசிக் கொண்டிருப்பதும் காதில் கேட்டது.அந்த சப்தம் சாமிக்கண்ணுவின் காதிலும் விழுந்து, “மாணிக்கம்... அங்க என்ன சப்தம்?” என்று கேட்கவும் வைத்தது.

மாணிக்கமும் ஜல்லியோடு உள்ளே வந்தார். மாணிக்கத்தின் கையில் வேர்த்துண்டு ஒன்றும் இருந்தது.“என்ன மாணிக்கம்... யார் இது..? என்ன கைல..?”“சார்... இவர் பெரிய வைத்தியர் சார். இந்த பிடாரனோட கூட்டாளியாம் சார்...”“கூட்டாளியா..?”“ஆமாங்க... போதி முத்து என் கூட்டாளிங்க சாமி. நீங்க பிடிச்சு வைச்சிருக்கறத பாத்துட்டு ஓடி வந்தேங்க...”
“நாங்க பிடிச்சு வெச்சிருக்கறது உனக்கு எப்படித் தெரியும்..?”“நான் இந்தப் பக்கம்தாங்க மூலிகை பறிக்க போவேன். அப்படி போறப்போ போதியோட குரல் கேட்டு ஓடிவந்தேங்க...”
‘‘கூட்டாளிங்கறே... அப்ப இவன் யாரு... எப்படிப்பட்டவன்னு எல்லாம் உனக்கு நல்லா தெரியும்தானே?”“நல்லா தெரியும் சாமி... இவன் ஒரு அப்ராணிங்க...”

“அப்ராணியா... அப்ராணி எங்கேயாவது விஷப் பாம்புங்கள தைரியமா பிடிப்பானா..?”
“அது தொழிலுங்க...”“எது தொழிலு... பாம்பு பிடிச்சு அதை வெச்சே கொலை செய்ய முயற்சி செய்யறதா..?”

“அப்படி எல்லாம் செய்யறவன் கிடையாதுங்க என் சினேகிதன்...” ஜல்லி பேசிக்கொண்டே சட்டைப்பையில் இருந்து ஒரு டப்பாவை எடுத்து அதைத் திறந்து விபூதிபோல் உள் இருந்ததை ஒரு சிட்டிகை எடுத்து மனதுக்குள் ஏதோ முணுமுணுத்து ஒரு வினாடி கூட தாமதிக்காமல் சாமிக்கண்ணு நெற்றியில் அந்த விபூதியை இட்டான்.

“சித்தங்குறிச்சி மலச்சாமி விபூதிங்க... இத பூசிக்கிட்டா படபடப்பு அடங்கும். மனசும் ஒழுங்கிடும்... நீங்க இப்ப குழப்பத்துல இருக்கீங்க... உங்களுக்கு இப்ப தேவை அமைதி...” என்றவன் அடுத்து சதாசிவம் பக்கம் திரும்பவும் அவர், “என்னய்யா இது... பூசாரி மாதிரி விபூதியெல்லாம் வெச்சு உட்டுக்கிட்டு... இது என்ன போலீஸ் செக்போஸ்ட்டா இல்ல உடுக்கு அடிக்கற இடமா..?” என்று அவனுக்கு அடங்காமல் ஒரு போலீசுக்கான தன்மையோடு கேட்டார்.“சாமி... இது சாதாரண விபூதி இல்லிங்க... சித்தங்குறிச்சி மலச்சாமி விபூதி. ஒன்பது மூலிகை, ஒன்பது வகை ரசம், ஒன்பது வகைல ஸ்புடம் போட்டு தயாரிச்சது.

இது நெத்தியில இருக்க எதுக்க போய் நின்னா முட்டவர்ற மாடு கூட பணிஞ்சு நிக்கும்ங்க... யாரை தேடிப் போறோமோ அவங்க, தானா எதிர்ல வருவாங்க. மனசுக்குள்ளயும் எந்த பாரமும் இல்லாம அப்படியே காத்து மாதிரி லேசா இருக்குமுங்க... வெச்சி உட்றேன் பாத்துட்டு சொல்லுங்க...” என்றான். அந்தப் பேச்சிலேயே பாதி அடங்கிவிட்டார் சதாசிவம். மீதி,நெற்றியில் விபூதி பூசவும் அடங்கிப் போனது.அதுவரை ஒரு மார்க்கமாய் இருபது வருட அனுபவம் அது இது என்று அமர்க்களமாய் பேசிக்கொண்டிருந்த சாமிக்கண்ணுவும் ஒரு மனமாற்றம் அடைந்தவராக  “சாமி... நீங்க உக்காருங்க... நின்னுக்கிட்டே இருக்கீங்களே..?” என்று ராகம் மாறியிருந்தார்.

கான்ஸ்டபின் மாணிக்கமும் அங்குள்ள ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டான்.“இருக்கட்டும்... இருக்கட்டும்... என் சினேகிதன் ஒரு பாவமும் அறியாதவன்... அவனை விட்றுங்க சாமிங்களா...” என்றான் ஜல்லி சற்று கெஞ்சலாய்.“இது... நாங்க பொழுது போகாம அப்படியே பேசிக்கிட்டிருக்கோம்... எலேய்... உன் பேர் என்ன சொன்னே?” என்று போதிமுத்துவைப் பார்த்துக் கேட்டார்.

“போதிமுத்துங்க...”“எலேய் போதிமுத்து... அப்ப நீ கிளம்பு. மணி பத்து தாண்டிடிச்சு பார்... போய் படுத்து தூங்கி எந்திரிச்சி உன் பொழப்பப்பாரு... நாங்களும் போய் எங்க வேலையைப் பாக்கறோம். கிளம்பு... கிளம்பு...”சாமிக்கண்ணு சொல்லவும் போதிமுத்துவும் எழுந்து கும்பிட்டவனாக, “சாமி... நீங்க நல்லாருக்கணும்... நல்லாருக்கணும்... நான் வர்றேங்க...” என்று சொல்லிக்கொண்டு வேகமாகக் கிளம்பினான்.

“அப்ப நானும் வரேனுங்க...” என்று ஜல்லியும் அவனோடு கிளம்பி சாலையில் இறங்க... இருவரும் நடக்கத் தொடங்கினர். சாலையில் நடக்கையில் போதிமுத்துவிடம் ஒரே படபடப்பு.“ஜல்லி... சரியான நேரத்துக்கு வந்தே வே... சாயங்காலமா நான் அந்த சதீஷுங்கறவனோட போறப்பவே சொன்னே, சகுனம் சரியில்ல, இந்த காரியம் வௌங்காதுன்னு...

அது அப்படியே நடந்துடிச்சி! இப்ப மட்டும் நீ வராம போயிருந்தா அந்த ஏற்காட்டு சப் இன்ஸ்பெக்டரு என் கிண்ணியை பேத்துருப்பான்... உனக்கு நான் ரொம்ப கடமைப்பட்டவன் சல்லி... ஆமா... நீ விபூதி வெக்கவும் மழைக்கோழிங்க மாதிரி ரெண்டு பேரும் அப்படியே அடங்கிட்டானுங்களே அது எப்படி சல்லி..?”கும்மிருட்டில் விறுவிறுவென நடக்கையில் போதிமுத்து கேட்ட கேள்விக்கு ஜல்லியிடம் சில வார்த்தைகளில் பதில்...“அதான்வே பீதாம்பர ஜாலம்!”

(தொடரும்)

அசோகமித்திரனும் கனபாடிகளும் கட்டிலில் அமர்ந்திருக்கும் நிலையில் பேசிக்கொண்டிருக்கும்போது கனபாடிகள் கைபேசிக்கு ஒரு அழைப்பு. காதைக் கொடுக்கவும் ஆச்சரியமாகிப்போனது அவர் முகம்.“அடடே நம்ப ஜோதிடரா..?” என்று கேட்டதிலேயே அவர் நாடி ஜோதிடர் கற்பகவிநாயகம் என்பது தெளிவாகிவிட்டது. அவர் என்ன பேசினாரோ தெரியாது. “நீங்க ஒரு மணி நேரம் கழிச்சு வாங்கோ... அந்த அசோகமித்ரன்கறவர் என்கூடதான் இருக்கார். நம்ப ஊரைப் பார்த்து ஆச்சரியம், குழப்பம்னு எல்லாமுமா இருக்கார்...” என்று முடித்தார்.

அப்படியே அசோகமித்திரனைப் பார்த்தவர், “நான் சொன்னேனே கற்பகவிநாயகம்னு ஒரு நாடி ஜோதிடரை... அவர் என்ன பாக்கணும்னார். ஒரு மணி நேரம் கழிச்சு வரச்சொல்லியிருக்கேன். எனக்கு இப்ப ஒரு தூக்கம் போட்டாகணும். இல்லேன்னா உடம்ப படுத்தும். பல காலமா இப்படி பழகிட்டேன். நீங்களும் தூங்குங்கோ. இல்ல உங்க செளகர்யம்...” என்றார்.
“நீங்க தூங்குங்க... எனக்கு இப்ப தூக்கம் வரலை. நான் புத்தகம் படிப்பேன். இல்லேன்னா டைரி எழுதுவேன்...” என்ற அசோகமித்திரன், அருகில் இருந்த ஒரு பலகையை மடிமேல் எடுத்து வைத்துக்கொண்டு டைரி எழுதத் தொடங்கினார்.

அதில் முதல் நாளுக்கான குறிப்புகளை முதலில் எழுதி முடித்தார். அதன் பிறகு நடப்பு தினத்துக்கான குறிப்பு.“நேற்றும் சரி, இன்றும் சரி... நான் இதுவரை வாழ்ந்த நாட்களில் மிகவே வேறுபட்ட நாட்களாகும். வாழ்வென்பதே பலப்பல அனுபவங்களின் தொகுப்புதான்! அவ்வகையில் பார்த்தால் நேற்றும் சரி இன்றும் சரி, எனக்கு ஏற்பட்டிருக்கும் அனுபவங்கள் வித்தியாசமானவை மட்டுமல்ல... வியப்புக்குரியவை. பெரும் ஆய்வுக்குரியவையும் கூட.

ஒருபுறம் மின்சாரம், தொலைக்காட்சிப் பெட்டி, கைபேசி, இரு சக்கர, நான்கு சக்கர மோட்டார் வாகனங்கள் என்கிற விஞ்ஞான வளர்ச்சி... மறுபுறம் பயபக்தி, தொன்மங்களின்மேல் அசைக்க முடியாத நம்பிக்கை, சீர்மையான சில பழக்க வழக்கங்கள்... நம்ப முடியாத நிகழ்வுகள்... என்று இந்த ஊர் இருக்கிறது.‘பாம்பென்று தாண்டவும் முடியவில்லை. பழுதென்று மிதிக்கவும் முடியவில்லை’ என்பார்களே... அப்படி இருக்கிறது என் மனநிலை.ஆனாலும் நான் எனது உறுதியான பகுத்தறிவு மனோநிலையை சலனித்துவிடத் தயாரில்லை.‘ஒரு விஷப்பூச்சி எப்படி வணக்கத்திற்குரியதாக ஆகமுடியும்?’ என்கிற ஒரு ஒற்றைக்கேள்வி என்னை வெகுதூரம் அழைத்து வந்திருக்கிறது.

பொட்டில் அடித்த மாதிரி ஒரு தெளிந்த பதில் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை. உயர்சாதியில் பிறந்த கனபாடிகள், தான் நம்பும் விஷயங்களைத் தயக்கமின்றி பேசி வருகிறார்.
என்னை எங்கும் அவர் வற்புறுத்தவோ, என் எதிரில் தன் செயல்களில் செயற்கையாக ஒரு மாற்றத்தையோ செய்து கொண்டதாகவும் எனக்குத் தோன்றவில்லை.

நான் சந்தித்த வைத்யர் ஞானமணி தேசிகர் ஓர் அபூர்வமனிதர் என்று மட்டும் உறுதியாகச் சொல்வேன். மனித ஆற்றலின் ஓர் உச்சமாக அவரை என் மனது கருதுகிறது. இயற்கையை நன்கு புரிந்துகொண்டு உடற்கூற்றையும் புரிந்து கொண்டு அவர் செய்யும் வைத்யம் நிச்சயமாக அற்புதம். எதனால் இந்த வைத்தியமுறை ஒரு அலோபதி வைத்தியம் போல் பல்கிப் பெருகாமல் இருக்கிறது என்பதும் புரியவில்லை. மூளையைக் கசக்கிக்கொண்டு நான் யோசித்துப் பார்த்ததில் ஓர் உண்மை விளங்கியது.

மூலிகை வைத்தியம் சில ஒழுக்கங்களை வற்புறுத்துகிறது. உடனடித் தீர்வு என்று இல்லாமல் நிரந்தரத் தீர்வுக்கு முயல்கிறது. இதற்கு சில காலம் தேவைப்படுகிறது.அலோபதி அப்படி பெரிதாக வற்புறுத்துவதில்லை. ஊசி போட்ட சில நிமிடங்களில் வலியில் இருந்து விடுதலை; பின்விளைவைப் பற்றிய அக்கறையில்லாத அப்போதைக்கான தீர்வுகள்; பத்தியங்களற்ற வைத்தியம் என்றிருப்பதால் அது பெரும் வரவேற்பைப் பெற்றுவிட்டதாகத் தோன்றுகிறது. சுருக்கமாய் சொல்வதானால், மூலிகை வைத்தியம் எனப்படுகிற சித்த வைத்ய முறைக்கு சற்று காலம் தேவைப்படுகிறது. அலோபதிக்கு அது தேவையில்லை. எனது இந்தக் கருத்து எந்த அளவுக்கு சரியானது என்று தெரியவில்லை. ஆனாலும் இதுவே என் கருத்து.

அதேபோல நமது தொன்மையான பழக்க வழக்கங்கள் உண்மையில் மகத்துவமானவை. நாம் அவற்றை நவீன வாழ்க்கை முறையில் தொலைத்துவிட்டது மறுக்கமுடியாத உண்மை.
வாரம் இருமுறை எண்ணெய்க் குளியல், தரையில் சப்பணமிட்டு அமர்ந்து வாழை இலையில் உண்பது, மண்பானையில் சமைத்துச்சாப்பிடுவது, விறகு அடுப்பைப் பயன்படுத்துவது, ஆற்று நீரை - கிணற்று நீரை வடிகட்டி பயன்படுத்துவது, கோரைப் பாயில் படுத்துறங்குவது, இலவம் பஞ்சு தலையணையைப் பயன்படுத்துவது, கடலை மிட்டாயை, பனம் பழத்தை, நுங்கினை, இளநீரை, நவாப்பழத்தை... என்று அந்தந்த பருவத்தில் அதிகம் கிடைப்பதை உண்பது; பாண்டி, கபடி, பல்லாங்குழி, பரமபதம் என்கிற விளையாட்டுகளும் கூட உடல் நலம், மனநலம் இரண்டும் சார்ந்த ஒன்றாக இருப்பதை எல்லாம் நாம் மறந்து வருகிறோம்.

இன்றைய இளைய தலைமுறைக்கு இவற்றை அறிமுகம் செய்வதும், இந்தப் பழக்க வழக்கங்களைக் காப்பதும் நம் ஒவ்வொருவர் கடமை…’’அசோகமித்திரன் அருவிப் பெருக்கு போல எழுதிக்கொண்டே போனார். நேரம் போனதே தெரியவில்லை. ஜோதிடர் கற்பக விநாயகமும் வந்து சேர்ந்தார். அசோகமித்திரனும் அறிமுகப்படுத்தப்பட்டார்.

கற்பகவிநாயகமும் பேசத் தொடங்கினார்.“நான் வந்திருக்கறதே நாளைய கிரகணம் பற்றி உங்ககிட்ட சில கருத்துகளை சொல்லத்தான்... உங்களுக்கே தெரியும், ஒரு மூணு வருஷமாவே மொத்த உலகமும் வியாதி, யுத்தம், இயற்கைச் சீற்றம்ங்கற மூன்று பெரும் காரணங்களால அவதிப்பட்டுக்கிட்டு இருக்கு. நம்ம பாரத தேசமும் இதுக்கு விதிவிலக்கில்ல. இருந்தாலும் மற்ற நாடுகளோட ஒப்பிடும்போது நமக்கு பெரிய பாதிப்பு இல்லை. காரணம்... நம் தேசத்து பக்தி கலாசாரமும் அன்றாட பூஜை வழிபாடுகளும்தான் என்பது என் அழுத்தமான கருத்து.

நாளைய கிரகண வேளைல நம்ம கோயில்ல சர்ப்பம் வந்து வழிபட்டா அது பெரிய விமோசனம். வராம போகவும் வாய்ப்பிருக்கு!”என்று அசோகமித்திரன் எதிர்பார்த்து வந்திருந்த விஷயத்தைத் தொட்டுப் பேசி அதிர்ச்சியளித்தார் அந்த நாடி ஜோதிடர்!

இந்திரா செளந்தர்ராஜன்

ஓவியம்: வெங்கி