குழந்தை, வார்டு பாய் மற்றும் கேங்ஸ்டர்!



‘8 தோட்டாக்கள்’ மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் ஸ்ரீ கணேஷ். இப்போது அதர்வாவுடன் ‘குருதி ஆட்டம்’ ஆடியிருக்கிறார் கல்லூரி மாணவன் லுக்கில் இருக்கும் ஸ்ரீ கணேஷ்.
இரண்டாவது படம் பண்ணுவதற்கு ஏன் இவ்வளவு காலதாமதம்?

சில காரணங்களை வெளிப்படையாகச் சொல்ல முடியாது. ‘8 தோட்டாக்கள்’ பெரிய வரவேற்பைக் கொடுத்ததை மறுக்க முடியாது. ஒரு வெற்றியில் கற்றுக்கொள்வதை விட ஒரு தோல்வியில் நிறைய கற்றுக்கொள்ளலாம் என்று சொல்வார்கள். ‘8 தோட்டாக்கள்’ பண்ணும்போது நான் சினிமாவுக்கு புதியவன். ஓர் உதவி இயக்குநராக இருந்த கொஞ்ச காலத்திலேயே படம் பண்ணினேன்.
நேர்த்தியாக படம் எடுக்கத் தெரிந்த எனக்கு சினிமாவுக்குள் நடக்கும் உள் விஷயங்கள் எதுவும் தெரியாமல் இருந்தது. படம் வெளியானதும் மக்கள் அதைப் பற்றி பேசினார்கள். இண்டஸ்ட்ரியில் பாராட்டினார்கள். ரசிகர்கள் முதல் ரஜினி சார் வரை படத்தைப் பற்றி பெருமையாகப் பேசினார்கள். அந்தப் படம் சத்யத்துல ஆறேழு வாரம் ஓடுச்சு.

நினைச்ச மாதிரி படத்த எடுத்தா அது எப்படி ஆடியன்ஸிடம் ரீச்சாகும் என்று தெரிஞ்சது. ஆனா, சினிமாவுல தொடர்ந்து இயங்கணும் என்பது லேட்டாதான் புரிஞ்சது. அடுத்த படம் பண்ணுவதற்கு கொஞ்சம் லேட்டானாலும், நிறைய லேட்டாகும்னு தெரிஞ்சது. அந்தப் பாடத்துக்குப் பிறகு தொடர்ந்து படம் பண்ணணும்னு முடிவு பண்ணியிருக்கிறேன்.

டைட்டிலில் குருதி வழியுதே...

இது பக்கா ஆக்‌ஷன் படம். ‘8 தோட்டாக்கள்’ ரிலீஸான ஒரு வாரத்தில் அதர்வா சாரிடமிருந்து ஃபோன் வந்துச்சு. ‘நாம சேர்ந்து படம் பண்ணலாமா’னு கேட்டார். ஆனா, கதையை ரெடி பண்ண ஒரு வருஷம் தேவைப்பட்டுச்சு. மதுரை பேக்டிராப் கதை என்பதால மதுரையில் தங்கி கிரவுண்ட் ஒர்க் பண்ணேன். நிறைய பேரை சந்திச்சபிறகே கதை ஒரு வடிவத்துக்கு வந்துச்சு.

அதுக்கப்புறம் அதர்வா சாரிடம் கதை சொன்னதும் எழுந்து நின்னு கட்டிப்பிடிச்சார். இத்தனைக்கும் ஃபர்ஸ்ட் ஆஃப்தான் சொன்னேன். என் நம்பிக்கையை காப்பாத்திட்டீங்கனு செகண்ட் ஆஃப்  கூட கேட்காம சம்மதம் சொல்லிட்டார். ஷூட் போறதுக்கு முன்னாடி ரெக்வஸ்ட் பண்ணி செகண்ட் ஆஃப் கேளுங்கன்னு செகண்ட் ஆஃபை சொன்னேன்.

நம்ம வீட்ல நடக்கிற மாதிரிதான் கதை ரொம்ப யதார்த்தமா இருக்கும். ஹாஸ்பிட்டலில் இருக்கும் ஒரு பத்து வயசு குழந்தை நோயாளியைச் சந்திக்கிறார் ஹீரோ. பெரிய கேங்ஸ்டருக்குள் நடக்கும் பிரச்னைக்குள் இந்த ரெண்டு பேரும் சிக்குகிறார்கள். அதிலிருந்து எப்படி வெளியே வருகிறார்கள் என்பதுதான் கதையோட உயிர்நாடி. ‘பூவிழி வாசலிலே’, ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ மாதிரியான எமோஷனல் கதை.

உங்க ஹீரோ அதர்வா என்ன சொல்றார்?

சக்திவேல் என்ற வார்டு பாயா வர்றார். அதர்வா சார் இதுவரை பத்து பதினைஞ்சு படம் பண்ணியிருப்பார். ஆனா, இந்த மாதிரி பண்ணியதில்லை. அதர்வா சாரை நம்ம வீட்டுப் பையன் மாதிரி காட்டணும்னு கவனமா இருந்தேன். அதர்வாதான் ஹீரோனு முடிவு பண்ணி கதை எழுதியதால் அவருக்கு எதெல்லாம் நல்லாயிருக்கும்னு ஒரு லிஸ்ட், இதுவரை அவர் என்ன பண்ணலைனு ஒரு லிஸ்ட் எடுத்தேன். அதுல என்ன புதுசா பண்ணமுடியுமோ அதைப் பண்ணினேன்.

நம்ம வீட்டு பையன் மாதிரி ஹேப்பியா, ஜாலியா வருவார். நிறைய இடங்களில் சிரிக்க வைப்பார். இதெல்லாம் அவர் பண்ணாதது. அவருடைய ப்ளஸ்னு பார்த்தா ஸ்போர்ட்ஸ் உடல்வாகு உள்ளவர். அதுக்கேத்த மாதிரி இதுல கபடி ப்ளேயராவும் வர்றார்.  கபடி, படத்துல முக்கியமான பார்ட்.

அதுக்காக அதர்வா டிரைனிங் எடுத்தார். ‘ஈட்டி’ படத்துக்குப் பிறகு இதுல டிரைனிங் எடுத்துக்கிட்டேன்னு சொன்னார். படத்துக்காக ஒரு கபடி டோர்னமென்ட் ஷூட் பண்ணினோம். அதுல கலந்துகிட்டவங்க எல்லாருமே ரியல் ப்ளேயர்ஸ். ஸ்டேட் லெவல் கோச் ஆர்கனைஸ் பண்ணினார். ரியல் ப்ளேயர்ஸுடன்தான் விளையாடினார் அதர்வா. கலந்துக்கிட்டவங்க எங்க லெவலுக்கு விளையாடுறார்னு ஆச்சர்யப்பட்டார்கள்.

அதர்வாவுக்கும் எனக்கும் நல்ல ரிலேஷன்ஷிப் இருந்ததால் ஷூட் ஸ்மூத்தா போச்சு. என்னை முழுமையா நம்பினார். ஆக்‌ஷன் சீன்ஸ் பெரியளவில் வந்திருக்கு. இந்தியாவுல பெஸ்ட் ஆக்‌ஷன் ஆக்டர்னு அவருடன் வேலை செஞ்ச ஃபைட் மாஸ்டர்ஸ் சொல்றாங்க.

அதர்வா ஜோடியா யார் பண்றாங்க?

ப்ரியா பவானி சங்கர். வழக்கமா ஒரு படம் ஆரம்பிக்கும்போது இரண்டு மூணு சாய்ஸ் இருப்பாங்க. அப்படி ப்ரியா கதைக்கு கரெக்ட்டா இருப்பாங்கனு நெனைச்சேன். நான் கதை சொன்ன டைம்ல அவங்களுக்கு ரெண்டு மூணு படங்கள் வரிசையா இருந்ததால கால்ஷீட் இல்லன்னு சொல்லிட்டார்.  அதுக்கப்புறம் வேற ஆப்ஷன் போயிட்டேன். ஆனா, ப்ரியா இருந்தா நல்லா இருக்குமேனு மனசுல ஓடிக்கிட்டே இருக்கும். மூணு மாசம் கழிச்சு ‘, மீட் பண்ணலாமா, எனக்கு சில ஷூட் தள்ளிப்போகுது’னு கூப்பிட்டார்.

ப்ரியா இப்போ தமிழ் சினிமாவுல முக்கியமான இடத்துல இருக்காங்க. நம்ம படம் பண்ணும் போது மூணாவது படம்னு நெனைக்கிறேன். அப்பவே நெனைச்சேன் இவங்க பெரிய உயரத்துக்கு போவாங்கனு... டிவி எக்ஸ்பீரியன்ஸ் இருந்ததால் துல்லியமா நடிச்சாங்க. அதைப் பாக்கும்போது இவங்கள மையமா வெச்சு முழு ஸ்கிரிப்ட் பண்ணலாமேனு தோணும். ஒரு சீன்ல அஞ்சு டேக் இருந்தால் ஒவ்வொரு டேக்கிலும் வேரியேஷன் கொடுப்பாங்க. வெண்ணிலா என்ற டீச்சர் கேரக்டர்ல வர்றாங்க.

ஆட்டத்துல வேற யாரெல்லாம் இருக்காங்க?

ராதிகா, ராதாரவி முக்கியமான கேரக்டர்ல வர்றாங்க. ஸ்கிரீன்ல முப்பது, முப்பத்தஞ்சு வருஷத்துக்கப்புறம் அண்ணன், தங்கையா நடிக்கிறோம்னு பெருமிதப்பட்டாங்க. இது யதார்த்தமா அமைஞ்சது. அந்த கேரக்டருக்கு எங்கிட்ட வேற ஆப்ஷனே இல்லை. ராதிகா மேடத்தை வேற பட ஸ்பாட்ல சந்திச்சு கதை சொன்னேன். அஞ்சு நிமிஷத்துல சொல்லச் சொன்னவங்க கேரக்டர்ல இன்வால்வாகி அரை மணி நேரம் கேட்டுட்டு எப்போ டேட் வேணும், நான் பண்றேன்னு சொல்லிட்டாங்க.

இவங்களோட ‘எங்கேயும் எப்போதும்’, ‘கைதி’ படங்களில் கவனம் பெற்ற வட்சன் சக்ரவர்த்தி, ‘மண்டேலா’, ‘சாணி காயிதம்’ படங்களில் கவனம் பெற்ற கண்ணா ரவி, ‘ராட்சசன்’ வினோத் சாகர் இருக்காங்க. எல்லோரும் கவனம் பெறுவார்கள் என நம்புகிறேன்.

யுவன் மியூசிக் என்ன ஸ்பெஷல்?

கதை எழுதும்போதே யுவன் மனசுல இருந்தார். அவரிடம் இளையராஜா சாரோட எமோஷன் இருக்கும். நான்கு பாடல்கள். சாங்ஸ் கேட்டவங்க பழைய யுவன் இருக்கிறதா சொன்னாங்க. அந்தளவுக்கு வின்டேஜ் டியூன்ஸ் கொடுத்தார். படத்தைப் போட்டுக் காட்டிதான் பாடல்கள் வாங்கினேன். பேக்ரவுண்ட் மியூசிக்கை பொறுமையா பண்ணிக்
கொடுத்தார்.

தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செஞ்சிருக்கிறார். பாலசுப்ரமணியத்தோட ரைட் ஹேண்ட். மதுரை, திண்டுக்கல்னு ரோடு ரோடா சுத்தி எடுத்தார். ‘உறியடி’ விக்கி ஃபைட் பண்ணியிருக்கிறார். ஆக்‌ஷன் படம் என்பதால ஸ்டண்ட் மாஸ்டர் படம் முழுக்க இருப்பார். தயாரிப்பாளர் ராக்ஃபோர்ட் முருகானந்தம் சார் தேவையானதை பிரமாதமா பண்ணிக் கொடுத்தார்.

திட்டமிட்ட டைம்ல படம் ரிலீஸாகாதபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

ஒரு அம்மாவின் மனநிலைதான். குழந்தைக்கு உடம்பு சரியில்லனா  எப்படி  தவிப்பாங்களோ அந்தமாதிரி தவிப்பு இருந்துச்சு. கோவிட் வராம இருந்திருந்தா படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகியிருக்கும். கோவிட் ரெண்டு வருஷத்தை விழுங்கிடுச்சு. கலைஞனுக்கு பொறுமை முக்கியம். அதை இந்த காலகட்டத்துல அதிகமா கத்துக்கிட்டேன்.

வெளியில நடக்கிற சிச்சுவேஷனை நாம எதுவும் பண்ண முடியாது. நம்மை உற்றுக் கவனித்தால் உள்ளுக்குள் நடப்பவைகளை கன்ட்ரோல் பண்ண முடியும். பக்குவம் இல்லாம இருந்திருந்தா படம் வந்திருக்காது. பாதியில் நின்னு போயிருக்கலாம். இந்தப் படத்தோட பல கஷ்டங்கள் ஆடியன்ஸோட கைதட்டலா மாறியிருக்குன்னு நம்புறேன்.  

இயக்குநராக இருப்பது எந்தளவுக்கு கடினம்..?

மொத்த படத்தையும் இயக்குநர் தன் தோளில் சுமக்கணும். இது மலையைச் சுமக்கிற மாதிரி. இந்த அழுத்தம் எல்லா இயக்குநருக்கும் இருக்கிறது. அந்த சூழல் மாறணும்.  
நூறு கண்கள், கைகள், கால்கள் தேவைப்படுகிற வேலை டைரக்‌ஷன். இந்த சிஸ்டம் மாறணும். மலையாள சினிமாவுல ஒரு டீமா போய் ஒரு படத்தை முடிச்சுட்டு வருவாங்கனு கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கு அப்படி ஒரு டீம் ஒர்க் இருந்தா நல்லாயிருக்கும். எழுத்தாளன் கையில் சினிமா இருந்தா சினிமா இன்னும் நல்லா இருக்கும்.

எஸ்.ராஜா