ஆவணப்படத்துக்காக தேசிய விருது பெற்ற தமிழர்!உண்மைக்கு மிக நெருக்கமானவை ஆவணப்படங்கள்தான். அப்படிப்பட்ட ஆவணப்படத்துக்கான சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை இந்த வருடம் தமிழரான ஆர்.வி.ரமணி, தான் இயக்கிய ‘ஓ தெட்ஸ் பானு’ என்ற படத்துக்காக பெற்றிருக்கிறார். சர்வதேச அளவில் ஏராளமான விருதுகளைப் பெற்றிருக்கும் ரமணியின் பூர்வீகம் தஞ்சை என்றாலும் பிறப்பு, படிப்பு, வளர்ப்பு எல்லாமே மும்பைதான். ஆனால், 88 முதல் சென்னைவாசி.

மறைந்துபோன தோல்பாவைக்கூத்து, இந்தியாவின் ஆவணப்பட முன்னோடி ஆனந்த் பட்வர்த்தன், எம்ஜிஆர் அறிமுகமாகிய ‘சதி லீலாவதி’ படத்தின் இயக்குநரான அமெரிக்கர் எல்லீஸ் ஆர்.டங்கன், சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலையில் அவதிப்படும் குழந்தைகள், சுனாமி, எழுத்தாளர் சுந்தரராமசாமி... இப்படி பல ஆவணப் படங்களை ஒளிப்பதிவு செய்திருக்கிறார் அல்லது இயக்கியிருக்கிறார்.

98 வயது நிரம்பிய ஒரு கேரள மூதாட்டியின் மறதி மற்றும் காது கேளாமை, எப்படி அவரின் கடந்த காலத்தை மீட்டு பார்வையாளர்களையும் கனெக்ட் செய்கிறது என்பதுதான் ‘ஓ தெட்ஸ் பானு’. ‘‘திருவாரூருக்கு பக்கத்து கிராமங்கள்தான் அம்மா, அப்பாவுடையது. அப்பா வேலைக்காக 1947ல் மும்பைக்கு புலம்பெயர்ந்தார். குடும்பம் அங்கே செட்டிலாகிவிட்டது.
மும்பையில் இருந்த ஒரு சவுத் இண்டியன் பள்ளியில்தான் நான் படித்தேன்.

தமிழ் மொழி ஒரு பாடமாக இருக்கும். என்னைப் போன்ற தமிழ் மாணவர்கள் அதிகமும் சில புலம்பெயர்ந்த தென்னாட்டு குடும்பப் பிள்ளைகளும்தான் இதுபோன்ற பள்ளிகளில் படித்தோம். வீட்டில் தமிழ் மொழி என்றாலும் பள்ளியிலும், வெளியிலும் இந்தி, மராட்டி மொழியில்தான் உரையாடுவோம். பள்ளி முடித்ததும் மும்பை கல்லூரியில் ஃபிசிக்ஸ் சேர்ந்தேன். கல்லூரியில்தான் ஃபோட்டோகிராஃபி பற்றிய ஆர்வம் வந்தது...’’ என்ற ரமணி ஸ்டில் ஃபோட்டோவிலிருந்து வீடியோவுக்கு மாறக் காரணம் எழுத்தாளர் அம்பைதான்.

‘‘அப்போது அம்பை என்று அறியப்படும் சி.எஸ்.லக்ஷ்மி, மும்பையில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தார். லக்ஷ்மியின் கணவர் விஷ்ணு புனே ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில்
பட்டம் பெற்றவர். ஒருமுறை தன் கணவர் என்.எஃப்.டி.சி உதவியுடன் ஒரு கதைப் படத்தை எடுக்க இருப்பதாகவும், அதில் ஸ்டில் ஃபோட்டோகிராபராக வேலை செய்ய விருப்பமா என்றும் கேட்டார். கல்லூரிப் படிப்பு முடித்திருந்த நேரம் என்பதால் ஒப்புக் கொண்டேன்.

பட ஷூட்டிங் சமயத்தில் மூவி கேமரா மேல் ஆர்வம் வந்தது. படம் முடிந்ததும் புனே திரைப்படக் கல்லூரியில் என்னை அப்ளை செய்யச் சொன்னார் லக்ஷ்மி. ஆனால், ஒரு படத்தை எடுக்கும் முயற்சியில் நாமும் இணைந்து கற்றுக்கொள்வதை விடுத்து இப்படி ஒரு இன்ஸ்டிடியூட்டில் போய் 3 ஆண்டு காலத்தையும் பணத்தையும் விரயமாக்குவது சரியா என்ற கேள்வி எழுந்தது.

லக்ஷ்மி விடாமல் அப்ளை செய் என்றார். செய்தேன். தேர்வு எழுதி பாஸானேன். இருந்தும் தயக்கம். ‘சும்மா சேர்ந்து படி. பிடிக்கவில்லை என்றால் இடையில் விலகிக்கொள்ளலாம்’ என்றார் லக்ஷ்மி.

முதல் செமஸ்டர் முடிவதற்குள் விலகிப்போய்விடலாமா என்று தோன்றியது. அந்த நேரத்தில் தில்லியில் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் நடந்தது. அங்கு உலகத் திரைப்
படம், நம் இந்திய மாணவர்கள் எடுத்த டிப்ளமோ படங்களை எல்லாம் பார்த்தேன். அப்போதுதான் சினிமாவின் மீதும், இதை கல்லூரியில் மேலும் ஊன்றிப் படிக்கவேண்டும் என்ற எண்ணமும் தீவிரமாக எழுந்தது...’’ என்ற ரமணி, புனே இன்ஸ்டிடியூட்டில் ஒளிப்பதிவை 85ல் முடித்தார்.

‘‘பிறகு மும்பையில் செயல்பட்ட, அதேநேரம் எங்கள் புனே இன்ஸ்டிடியூட்டில் வகுப்புகளை எடுத்த பீர் என்றவரிடம் உதவி ஒளிப்பதிவாளராக இணைந்தேன். அவர் கலைப் படங்கள், விளம்பரப் படங்கள், டெலி சீரியல் , குறும்படங்களை அப்போது எடுத்துக்கொண்டிருந்தார். இவரிடமும் வேறு சிலரிடமும் வேலை செய்து கொண்டிருக்கையில் பலரும் இதே உதவி வேலைக்கு அழைத்தனர். இதை மாற்ற என்ன செய்யலாம் என்று யோசித்தபோது என் பொழுதுபோக்கு ஒன்று அதற்கான கதவைத் திறந்துவிட்டது.

நண்பர்களோடு வார இறுதி நாட்களில் டிரெக்கிங் போவது வழக்கம். அந்தவகையில் மும்பையில் இருந்த சிலர் ஒரு குழுவாக இமயமலையில் இரண்டாவது உயரமான மலையான கஞ்சன் ஜங்காவுக்கு ட்ரெக்கிங் போக முயன்றார்கள். இதற்கு குறைந்தது 10 லட்சம் ரூபாய் செலவாகும். யோசித்த நான் ‘இந்த கஞ்சன் ஜங்கா பயணத்தை படம் பிடித்துத் தருகிறேன்... எனக்கான செலவை குழுவினர் பகிர்ந்து கொள்ளுங்கள்’ என்றேன்.

ஆரம்பத்தில் சரி என்றவர்கள் பிற்பாடு ஏதோ ஒரு மராட்டிய குழு மட்டுமே இதற்கு வேண்டும் என்று சொல்லி என்னைக் கழட்டிவிட்டார்கள். நான் இந்தப் பயணத்துக்காக சென்னை பிரசாத் லாப்பிலிருந்து உதவி வாங்கியிருந்தேன். இந்நிலையில் கிடைத்த உதவிகளை வைத்து தமிழ்நாட்டில் உள்ள கல்வராயன் மலை, கொல்லிமலை, பச்சைமலை பற்றி படம் எடுக்கலாம் என்று புனே இன்ஸ்டிடியூட் மாணவியும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான செளதாமணி ஆலோசனை சொன்னார்.

அதன்படி ‘தளர்ந்தது’ என்ற பெயரில் அப்படத்தை எடுத்தோம். கல்வராயன் மலைவாழ் மக்கள் தங்கள் பாரம்பரியத்தை நினைவுகூரும் விதத்தில் பாடும் பாடல்களை பதிவு செய்தோம். இதைப் பார்த்த தமிழ்நாடு அரசு இந்தப்படத்தை வாங்கிக்கொண்டது...’’ என்று சொல்லும் ரமணி, விருது வாங்கிய ‘பானு’ பற்றி விவரித்தார். ‘‘2014ல் நான் எடுத்த ஒரு படத்தை தில்லியில் உள்ள பல்கலைக்கழகத்தில் திரையிடச் சென்றேன். அங்கு மாயா ராவ் என்ற தோழி பணிபுரிந்து வந்தார். அவர் வீட்டுக்குச் சென்றபோது அவரது அம்மாவைப் பார்த்தேன்.

அந்த அம்மாதான் பானுமதி ராவ். மெதுவாக நடந்துவந்தவரின் கரங்களைப் பற்றி சோஃபாவில் உட்கார வைத்தேன். அந்த நொடி, அவரைக் குறித்து படம் செய்ய முடிவு செய்தேன். அவரது கரங்களைப் பற்றியபோது ஏதோ ஒரு வகையில் அவரது மன உலகுக்குச் சென்றேன். பானுமதியின் கடந்தகாலம் பற்றி எனக்கு அப்போது தெரியாது. பின்னர்தான் அவர் ஒருகாலத்தில் சிறந்த கதகளி, பரதநாட்டிய, நாடக மேடை நடிகர் என்று தெரிந்துகொண்டேன்.

தன் அம்மாவுக்கு மறதியும், காது கேளாமையும் இருப்பதாக மாயா சொன்னதும், எல்லா மனிதர்களுமே கடந்த காலத்தை ஒரு கட்டத்தில் மறந்துதானே போகிறார்கள் என்னும் அடிப்படையில் அந்தக் குறையையே ஒரு நிறைவாகப் பாவித்து இந்தப் படத்தை 2014 முதல் 2019 வரை எடுத்தேன்.அக்காலகட்டத்தில் தில்லி அம்பேத்கார் பல்கலைக்கழகத்தில் வருகை தரும் பேராசிரியராக நான் இருந்ததால் படத்தை எடுக்க முடிந்தது.

‘பானு’வை தேசிய திரைப்பட விருதுக்காக மும்பையைச் சேர்ந்த என் நண்பர் அனுப்பச் சொன்னார். விருதுக்கு அனுப்ப சென்சார் செய்ய வேண்டும். என் படத்தை சென்சார் பண்ணுவதில் ஆர்வம் கிடையாது. என்றாலும் நண்பரின் நச்சரிப்பால் சென்சார் செய்து அனுப்பினேன். விருது கிடைத்திருக்கிறது...’’ என்று சொல்லும் ரமணி, தன் அடுத்த படங்களாக ஓவியர் ராமானுஜம், கூத்துப்பட்டறை போன்றவற்றை கையில் எடுத்திருக்கிறார்.

டி.ரஞ்சித்