COFFEE TABLE



30 ஆண்டுகளுக்கு முன் இறந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம்!

கர்நாடக மாநிலத்தில் உள்ள தக்ஷிண கன்னடா மாவட்டத்தில்தான் இந்த விநோதம். இந்த சடங்கை ‘பிரேத கல்யாணம்’ என்றழைக்கிறார்கள். பிறக்கும் போதே இறக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும், இச்சடங்குகளை நடத்துகின்றனர்.திருமணத்திற்கான சராசரி வயது 30 என்பதால் இந்தப் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த இரு குழந்தைகளுக்கு அந்த குடும்பத்தினர் சமீபத்தில் திருமண விழாவை நடத்தினர்.

திருமண விருந்தாக மீன் வறுவல், சிக்கன் சுக்கா, மட்டன் கிரேவி உள்ளிட்ட பல வகையான உணவுகளையும் பரிமாறினர். யூடியூபரான அன்னி அருண், இதைத் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.பிறக்கும் போது உயிரிழந்த இரு குழந்தைகளுக்கு 30 ஆண்டுகள் கழித்து இப்படி திருமணம் செய்து வைப்பது அவர்களின் ஆன்மாவை நீண்ட நாட்கள் மகிழ்ச்சியுடன் வாழ வைக்கும் என அப்பகுதி மக்கள் நம்புகிறார்களாம். இந்த சடங்கை கேரள, கர்நாடக மாநிலங்களில் பின்பற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்மார்ட் ஃபோனில் இந்த 50 செயலிகளை நீக்குங்க!

சமீபத்தில் கூகுள் நிறுவனம் தன்னுடைய ப்ளே ஸ்டோரில் இருந்து 50 செயலிகளை நீக்கியுள்ளதாக Zscaler Threatlabz என்கிற சைபர் பாதுகாப்பு பகுப்பாய்வு நிறுவனம் கூறியுள்ளது. அச்செயலிகள் ஜோக்கர் என்கிற மால்வேர் வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறதாம். நீக்கப்பட்ட செயலிகளின் பட்டியல் இதோ...Universal PDF Scanner, Private Message, Premium SMS, Smart Messages, Text Emoji SMS, Blood Pressure Checker, Funny Keyboard, Memory Silent Camera, Custom-Themed Keyboard, Light Messages, Themes Photo Keyboard, Send SMS, Themes Chat Messenger, Instant Messenger, Cool Keyboard, Font Emoji Keyboard, Mini PDF Scanner, Smart SMS Messages, Creative Emoji Keyboard, Fancy SMS, Fonts Emoji Keyboard, Personal Message, Funny Emoji Message

22 ஆண்டுகளாக குளிக்காதவர்!

22 ஆண்டுகளாக ஒருவர் குளிக்காமல் இருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், பீகாரைச் சேர்ந்த தரம்தேவ் ராம் என்பவர் தன்மேல் 22 ஆண்டுகளாகத் தண்ணீர் படாமல் இருக்கிறார்.கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதா? இன்னொரு தகவல் என்வென்றால் அவருக்கு தோல் சம்பந்தமாக எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லையாம்.இப்படி 22 ஆண்டுகளாக அவர் குளிக்காமல் இருக்க அவர் சொல்லும் காரணம்தான் இன்னும் ஆச்சரியப்பட வைக்கிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள், நிலத் தகராறுகள், விலங்குகள் கொல்லப்படுவது உள்ளிட்ட சம்பவங்கள் முற்றிலும் நிற்கும் வரை குளிக்கப் போவதில்லை என உறுதிமொழி எடுத்துள்ளார். அவர் குளிக்காமல் இருந்தால் இவையெல்லாம் சரியாகும் என்று நம்புகிறார்.தற்போது 40 வயதாகும் தரம்தேவ் 22 ஆண்டுகளுக்கு முன்பு குளிப்பதை நிறுத்திவிட்டு இன்றுவரை தனது உறுதிமொழியைத் தொடர்கிறார்.

அவரது வாழ்க்கையில் பல கட்டங்களைக் கடந்தும் அவர் அந்த முடிவிலிருந்து விலகவில்லை. அதாவது தரம்தேவ் மகனும் மனைவியும் இறந்தபிறகும்கூட அவர் தலைமுழுகவில்லை எனக் கூறப்படுகிறது. விசாரணைக்குப் பிறகு தரம்தேவ் கூறியதை உள்ளூர்வாசிகள் ஊர்ஜிதம் செய்தனர்.

தங்க மகன் ஜெரேமி

இங்கிலாந்தில் பர்மிங்காம் நகரில் நடந்து வரும் 22வது காமன்வெல்த் போட்டி களில் ஏற்கனவே பளுதூக்குதலில் இந்தியாவின் முதல் தங்கக் கணக்கை மீராபாய் சானு தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், 19 வயதே நிரம்பிய மிசோரமின் இளம்வீரர் ஜெரேமி லால்ரின்னுங்கா பளுதூக்குதலில் 67 கிலோ பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இது அவருக்கு முதல் காமன்வெல்த் போட்டி. அதுமட்டுமல்ல. 300 கிலோ எடையைத் தூக்கி 67 கிலோ ஆண்கள் பிரிவில் புதிய சாதனையையும் படைத்திருக்கிறார் ஜெரேமி.

ஏற்கனவே 2018ல் யூத் ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தவர். கடந்த ஆண்டு தாஷ்கண்டில் நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டியிலும் தங்கம் வென்றிருந்தார். இதன்பிறகு முதுகுவலியால் அவதிப்பட்டவர், இப்போது இந்தச் சாதனையை செய்திருக்கிறார். தன்னுடைய ஒன்பது வயதிலேயே பளுதூக்குதலில் ஆர்வம் ஏற்பட்டு பயிற்சிக்குள் வந்தவர் ஜெரேமி. பிறகு புனே ஆர்மி ஸ்போர்ட்ஸ் இன்ஸ்டிடியூட்டிற்கு தேர்வானார். அங்கு தொடர்ந்து பளுதூக்குதல் பயிற்சி பெற்று அடுத்தடுத்த போட்டிகளில் வென்றிருக்கிறார்.

இப்போது இந்திய ராணுவம், ‘வாழ்த்துகள் நயிப் சுபேதார் ஜெரேமி’ என டுவிட்டரில் பாராட்டு மழை பொழிய, பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் வாழ்த்துகளால் ஜெரேமியை நெகிழச் செய்துள்ளனர்.

கடல் நாயகன்

கொச்சியில் உள்ள ‘கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட்’ (CSL) நிறுவனத்தால் கட்டப்பட்ட முதலாவது விமானம் தாங்கி கப்பலான IAC-1 இந்திய கப்பல் படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற பெயரில் இந்திய கப்பல்படையில் அது விரைவில் தன் பணியைத் தொடங்கும்.இந்த போர்க்கப்பலை தயாரித்ததன் மூலம் இத்தகைய கப்பல்களை தயாரிக்கும் ஆற்றல் வாய்ந்த 5 நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் உருவெடுத்துள்ளது.

இந்தியக் கப்பல் படைக்காக 1961ம் ஆண்டு முதல் 1997ம் ஆண்டுவரை பயன்படுத்தப்பட்ட விமானம் தாங்கி கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த். இங்கிலாந்திடம் இருந்து வாங்கிய இக்கப்பல் 1971ம் ஆண்டு நடந்த இந்திய - பாகிஸ்தான் போரில் முக்கிய பங்கு வகித்தது. அந்த போர்க்கப்பலின் நினைவாக இந்தியாவில் சொந்தமாக தயாரிக்கப்பட்ட IAC-1 போர்க்கப்பலுக்கு ‘ஐஎன்எஸ் விக்ராந்த்’ என பெயரிடப்பட்டுள்ளது.இந்தப் போர்க்கப்பலை உருவாக்க 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகியுள்ளது. 40 ஆயிரம் டன் எடைகொண்ட இந்த போர்க்கப்பல், 34 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களைச் சுமந்து செல்லும்.

தொகுப்பு: குங்குமம் டீம்