பயோடேட்டா- திரௌபதி முர்மு



பெயர் : திரௌபதி முர்மு.

உண்மையான பெயர் : புதி பிராஞ்சி துடு.

பெயர்க் காரணம் : ‘‘சந்தாலி பழங்குடி சமூகத்தில் பெயர்களுக்கு மரணமில்லை. பெண் குழந்தை பிறந்தால் பாட்டியின் பெயரையும், ஆண் குழந்தை பிறந்தால் தாத்தாவின் பெயரையும் வைப்பது சந்தாலி சமூகத்தின் வழக்கம். இந்த வழக்கத்தின்படி பெற்றோர்கள் எனக்கு வைத்த பெயர், புதி. என்னுடைய ஆசிரியருக்குப் புதி என்ற பெயர் பிடிக்கவில்லை. அதனால் திரௌபதி என்ற பெயரை எனக்குச் சூட்டினார். மகாபாரதத்தில் வரும் முக்கிய கதாபாத்திரமான திரௌபதியை நினைவுபடுத்தும் விதத்தில் இந்தப் பெயரை ஆசிரியர் சூட்டினார்.

இதற்குப் பிறகு துர்பாடி, தோர்ப்டி என்று எனது பெயர்கள் மாறிக்கொண்டே இருந்தன. எனது இளம் வயது வரை துடு என்ற துணைப் பெயர் மட்டும் மாறாமல் அப்படியே இருந்தது. திருமணத்துக்குப் பிறகு கணவரின் பெயரான முர்முவை இணைத்துக்கொண்டேன்...’’ என்று நேர்காணலில் சொல்லியிருக்கிறார் திரௌபதி முர்மு.

பிறந்த இடம் மற்றும் தேதி : ஒடிசா மாநிலத்தின் மிகப்பெரிய மாவட்டம், மயூர்பஞ்ஜ். அங்கே வீற்றிருக்கும் பழங்குடி கிராமமான உபர்பேடாவில் ஜூன் 20, 1958ல் பிறந்தார் திரௌபதி.

தந்தை : திரௌபதியின் தந்தையான பிராஞ்சி நாராயண் துடு ஒரு விவசாயி. பிராஞ்சியும், திரௌபதியின் தாத்தாவும் கிராம சபையின் தலைவர்களாக இருந்தவர்கள்.

கட்சி : பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்.

சமீபத்திய அடையாளம் : இந்தியாவின் பதினைந்தாவது குடியரசுத் தலைவர்.

சிறப்பு : பழங்குடி இனத்தில் பிறந்து, இந்தியாவின் குடியரசுத் தலைவரான முதல் நபர் மற்றும் சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியாவில் பிறந்து, குடியரசுத் தலைவரான முதல் நபர். தவிர, ஜார்க்கண்ட் மாநிலத்தின் கவர்னராகப் பதவி வகித்த முதல் பெண், இந்தியாவில் முழு நேர கவர்னராகப் பதவி வகித்த முதல் பழங்குடிப் பெண் மற்றும் ஒடிசாவில் பிறந்து, கவர்னரான முதல் பெண் எனப் பல சிறப்புகளைக் கொண்டவர் திரௌபதி.

அரசியலுக்கு முன்பு : 1979 - 1983ம் வருடம் வரை ஒடிசாவின் நீர்ப்பாசனத்துறையில் குமாஸ்தாவாக வேலை செய்தார். பிறகு 1997ம் வருடம் வரை ராய்ரங்பூரில் உள்ள ஒரு பள்ளியில் இந்தி, ஒடியா, கணக்கு, புவியியல் கற்றுக்கொடுக்கும்
ஆசிரியையாகப் பணிபுரிந்தார்.

திருமணம்: 1980ம் வருடம் ஸ்யாம் சரண் முர்மு எனும் வங்கி அதிகாரியைத் திருமணம் செய்தார். திரௌபதி - ஸ்யாம் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள்; ஒரு மகள்.
2009லிருந்து 2015 வரையிலான காலகட்டத்துக்குள் திரௌபதியின் கணவர், இரண்டு மகன்கள், அம்மா மற்றும் அவரது சகோதரர் இறந்துவிட்டனர். இந்த இழப்பிலிருந்து அவர் மீண்டது தனிக்கதை. மகள் இத்தி முர்மு வங்கியில் பணிபுரிகிறார். மகளுக்குத் திருமணமாகிவிட்டது.

படிப்பு : ஒடிசாவின் தலைநகரான புவனேஸ்வரில் உள்ள ரமா தேவி பெண்கள் பல்கலைக்கழகத்தில் கலைப்பட்டம் பெற்றவர் திரௌபதி. இன்று இந்தப் பல்கலைக்கழகத்தின் குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவியே திரௌபதிதான்.

அரசியல் : 1997ம் வருடம் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தார் திரௌபதி. அதே வருடம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ராஜ்ரங்பூர் நகர் பஞ்சாயத்தின் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு கட்சியின் முக்கிய ஆளுமைகளில் ஒருவராக வளர்ந்த திரெளபதி, ராய்ரங்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது வருடங்களுக்கு மேலாக சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்ட திரௌபதி, ஓடிசா மாநில அரசின் மீன்வளம், கால்நடை வளர்ப்பு, வணிகம், போக்குவரத்துத்துறையில் அமைச்சராகப் பணியாற்றியிருக்கிறார். மே 2015லிருந்து 2021-ம் வருடம் ஜூலை வரை ஜார்க்கண்டின் கவர்னராக இருந்தார்.

கல்வி செயல்பாடு: 2016-ம் வருடம் குடும்பத்துக்குச் சொந்தமான 4.5 ஏக்கர் நிலத்தை பள்ளி அமைக்க தானமாக கொடுத்துள்ளார் திரௌபதி. பகத்பூரில் அமைந்துள்ள அந்தப் பள்ளியை திரௌபதியின் மகள் நிர்வகித்து வருகிறார்.

சமூகம் : சந்தாலி எனும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் திரௌபதி. மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், ஒடிசா, பீகார், அசாம் மாநிலங்களில் சந்தாலி மக்கள் அதிகமாக வாழ்கின்றனர். தவிர, வங்காள தேசம், பூடான், நேபாளம் வரை பரவியிருக்கின்றனர். இவர்களது தாய்மொழி சந்தாலி. இந்தியாவில் மட்டும் 60 லட்சத்துக்கும் அதிகமான சந்தாலி மக்கள் வசிக்கின்றனர். ஒடிசாவில் உள்ள பழங்குடிகளில் அதிகளவு கல்வி கற்றவர்கள் இவர்களே.

விருது : ஒடிசாவில் சட்டப்பேரவையால் சிறந்த சட்டமன்ற உறுப்பினருக்காக வழங்கப்படும் நீலகந்தா விருதை 2007ல் தன்வசமாக்கினார் முர்மு.

சொத்து மதிப்பு : 2009ம் வருடம் வரைக்கும் திரௌபதிக்குச் சொந்தமாக வீடு இல்லை. இன்று அவரது சொத்து மதிப்பு சுமார் 19 லட்ச ரூபாய்.

த.சக்திவேல்