கலைஞரின் மொழிகளும் மொழி ஆக்கங்களும்...கலைஞரின் எழுத்தில் பிறந்த பல வரிகள் காலத்தைக் கடந்து நிற்பவை. அப்படி நிற்கும் அவரது பொன்மொழிகளில் சில...

* அடிமையாக இருப்பவன் தனக்குக் கீழே ஓர் அடிமை இருக்க வேண்டுமென்று கருதினால், உரிமைகளைப் பற்றிப் பேச அவனுக்கு உரிமை கிடையாது...

* ஆசைகள் சிறகு ஆகலாம்; அதற்காகக் கால்களை இழந்துவிட்டுப் பறந்தால் பிறகு பூமிக்குத் திரும்ப முடியாது...

* சிரிக்கத் தெரிந்த மனிதன்தான் உலகத்தின் மனிதத் தன்மைகளை உணர்ந்தவன்...

* தவறு செய்ய ஆரம்பிக்கிறவனுக்கு அஸ்திவாரத்திலே ஏற்படுவதை விட, அதிக அச்சம் உச்சி போய்ச் சேரும்போதுதான் தோன்றுகிறது...

* உண்மையை மறைக்க முயல்வது விதையைப் பூமிக்குள் மறைப்பதுபோலத்தான்...

* தான், உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கும்போதும் தன் மக்களின் முகம் சுண்டக் கூடாது என்பதில் குறியாக இருப்பதுதான் தாய்க்குணம்...

* தோழமையின் உயிர்த் துடிப்பே துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதில்தான் இருக்கிறது...

* குச்சியைக் குச்சியால் சந்திக்க வேண்டும்... கூர்வாளைக் கூர்வாளால்தான் சந்திக்க வேண்டும்...

* அதிருப்தியாளர்கள் வளர வளர அவர்களின் மத்தியிலே அவர்களை நடத்திச் செல்லும் தலைவன் ஒருவன் தோன்றி விடுவான்...

* மனசாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது...

* சட்டசபை விவாதங்களிலும் எப்போதும் சிறப்பாகச் செயல்படக் கூடியவர் கலைஞர். ஒரு முறை, ‘தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே...’ என்று பேசிக்கொண்டிருந்த கலைஞரைப் பார்த்து, ‘கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு இதுபற்றி எதற்குக் கவலை?’ என்றார் இந்திய தேசிய காங்கிரஸைச் சேர்ந்த டி.என்.அனந்தநாயகி.
உடனே, ‘கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும்தானே போக வேண்டும்?’ என்றார்
கலைஞர்.

* எம்ஜிஆர் ஆட்சியில், தமிழக சட்டசபை சபாநாயகராக க.ராஜாராம் இருந்தார். அப்போது ஒரு விவாதத்தின்போது, எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து முழக்கமிட்டனர். கூச்சலைக் கட்டுப்படுத்த முயற்சித்தார் சபாநாயகர். ஆனால், கூச்சல் குறையவில்லை. ‘எப்படியோ போங்க. இனி உங்களை அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்...’ என்று கூறிவிட்டு அமைதியாகி விட்டார் சபாநாயகர்.

அதன்பின் எழுந்த கலைஞர், ‘இவங்களை எல்லாம் ஆண்டவன்தான் காப்பாத்தணும்னு நீங்க சொன்னீங்க. அதான் நான் எல்லோரையும் அமைதிப்படுத்தினேன். ஏன்னா, இதற்கு முன்பு ஆண்டவன் (ஆட்சியில் இருந்தவன்) நான்தானே!’ என்றார்.

* புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்... உலகத்தையே புத்தகமாகப் படித்தால் அனுபவம் தழைக்கும்...

* ஒருமுறை சட்டமன்றத்தில், மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி. சாமி பேச எழுந்தபோது, அவரை சுருங்கப் பேசச் சொல்வதற்காக, ‘அயிரை மீன் அளவுக்குப் பேசவும்’ என்று துண்டு சீட்டு எழுதிக் கொடுத்தார் கலைஞர்.

* மிஞ்சினால் கெஞ்சுவது எப்படி கோழைத்தனமோ அதைப் போன்றுதான் கெஞ்சினால் மிஞ்சுகிற வீரமும் ஆகும்...

* டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்தது குறித்து கருத்து தெரிவித்திருந்த பாமக நிறுவனர் ராமதாஸ், ‘நான் கேட்டது அறுவை சிகிச்சை... கருணாநிதி செய்ததோ முதலுதவி’ என்று கூறி யிருந்தார். இது தொடர்பாக பதில் அளித்த கலைஞர், ‘அறுவை சிகிச்சைக்கு முன்னர் முதலுதவிதான் அவசியம். சாதாரணமாக எல்லாருக்கும் தெரிந்த விஷயம் மருத்துவம் படித்த மருத்துவருக்குப் புரியாமல் இருப்பது ஆச்சர்யம்’ என்றார்.

* அனுபவம் ஒரு பள்ளிக்கூடம்... ஆனால், அதில் ஆணவக்காரர்கள் கற்றுத் தேர்வதில்லை...

* பழியுணர்வு மட்டுமே வாழ்க்கை எனக் கொண்டவர்கள், பகைவர் முயற்சியில்லாமலேயே தமக்குத் தாமே குழி வெட்டிக் கொள்வார்கள்...

* துணிவிருந்தால் துக்கமில்லை... துணிவில்லாதவனுக்குத் தூக்கமில்லை...

* கண்ணீரில் மலரும் காதல், சேற்றில் மலரும் செந்தாமரையாகக் காட்சி தருவதுண்டு...

* ‘முடியுமா நம்மால்’ என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம்... ‘முடித்தே தீருவோம்’ என்பது வெற்றிக்கான தொடக்கம்...

* நெருக்கடி நிலை காலகட்டத்தில் பத்திரிகைகளுக்கு தணிக்கை முறை அமலில் இருந்ததால், கைதுசெய்யப்பட்ட திமுகவினரின் பட்டியலை வெளியிட யுக்தி ஒன்றைக் கடைப்பிடித்தார் கலைஞர்.1976 பிப்ரவரி 3ம் தேதி அண்ணா நினைவு நாளன்று அண்ணா சதுக்கத்திற்கு மலர் வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல் என்று ஒரு பட்டியலை வெளியிட்டார். அதில் மாவட்டவாரியாக கைதுசெய்யப்பட்டவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன!

* பதவி என்பது முள்கிரீடம்  போன்றது...

* உண்மையானவனின் பின்னால் ஐந்து பேர் செல்வார்கள்... அந்த உண்மையைப் புரியாதவன் பின்னாலும் ஐந்து பேர்...

* அணு அளவு கூட இதயமில்லாத ஒருவருக்கு ஆகாயம் அளவு மூளையிருந்து என்ன பயன்..?

* இழிவு செய்யும் நண்பர்களை விட எதிர்த்து நிற்கும் பகைவர் எவ்வளவோ மேல்...

* ஒருவர் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறார் என்பதை, அவர் இறந்துபோன நாளில் இருந்து கணக்கிட்டுத் தெரிந்து கொள்ளலாம்...

* தனிமையைப் போன்ற ஒரு கொடுமையும் இல்லை; அதைப் போல் உண்மையான நண்பனும் இல்லை...