‘திருச்சிற்றம்பலம்’ பார்க்க நிச்சயம் குடும்பம் குடும்பமா வருவாங்க... அழுத்தமாகச் சொல்கிறார் இயக்குநர் மித்ரன் ஜவஹர்



‘துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘புதுக்கோட்டையில் இருந்து சரவணன்’... என குடும்ப ரசிகர்களிடமிருந்து அதிகமாகவே தள்ளி இருந்தவர் தனுஷ். அவரை தாய்க்குலங்களிடமும் குழந்தைகளிடமும் சேர்த்த இயக்குநர்களில் மிகவும் முக்கியமானவர் ‘யாரடி நீ மோகினி’, ‘உத்தமபுத்திரன்’ இயக்குநர் மித்ரன் ஜவஹர்.

இதோ ‘அசுரன்’, ‘வடசென்னை’, ‘கர்ணன்’ என சென்று கொண்டிருந்த தனுஷ் மீண்டும் 100% குடும்பங்கள் கொண்டாடும் கதையுடன் களமிறங்கி இருக்கிறார். ‘‘ஆமா... சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எனது இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ‘திருச்சிற்றம்பலம்’ ரிலீஸுக்கு ரெடி...’’ உற்சாகமாகச் சொல்கிறார் மித்ரன் ஜவஹர்.‘திருச்சிற்றம்பலம்’ - எதனால் இந்தப் பெயர்? படத்துல தனுஷ் சார் பேரு அதுதான். அந்தப் பெயருக்கு பின்னாடியும் ஒரு கதை இருக்கு. தாத்தாவின் பெயரை பேரனுக்கு வச்சிருப்பாங்க. தனுஷ் சார், சின்ன பழம்; தாத்தா பெரிய பழம். இவர்கள் இருவரையும் சார்ந்த குடும்பக் கதைதான் ‘திருச்சிற்றம்பலம்’.

இந்தக் கதை எங்கே... எப்படி உருவானது?

இந்த கதையை எழுதியது தனுஷ் சார்தான். அவருக்கு நான் படம் இயக்கிய இயக்குநர் என்பதைக் கடந்து அவர் எனக்கு நல்ல நண்பர். அவரின் பல முக்கியமான படங்களின் கதை டிஸ்கஷன் தொடங்கி புரொடக்‌ஷன் ஒர்க் வரை வேலை செய்திருக்கேன். அதன் ஒரு பகுதியா நடந்ததுதான் ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ உள்ளிட்ட படங்கள். அவர் ஒரு கதையைச் சொல்லி என்னை இயக்கச் சொன்னப்ப ஆச்சர்யம் ஏற்படவே இல்ல. ஏன்னா, அவர் ஒரு இயக்குநரின் மகன்... ஒரு இயக்குநரின் சகோதரர். தவிர மிக மிக நல்ல படமான ‘பவர் பாண்டி’யை அவரே எழுதி இயக்கியிருக்கார்.

பேஸிக்காவே தனுஷ் சாருக்கு ஸ்கிரிப்ட் நாலெட்ஜ் உண்டு. அவருடன் பழகும் அனைவருமே இதை உணர்ந்திருப்பாங்க. அந்தவகைல அவர் எழுதியிருக்கும் அட்டகாசமான கதைதான் ‘திருச்சிற்றம்பலம்’. நிச்சயம் இந்தப் படம் குடும்பங்களைக் கொண்டாட வைக்கும்.

தனுஷின் வளர்ச்சி, கிராஃபை எப்படி பார்க்கறீங்க..?  

வியப்பா! அவர் நடிகராவதற்கு முன்னாடியே அவரை எனக்குத் தெரியும். பல இடங்கள்ல என்னையும் அவர் ஃபேமிலியாதான் சொல்லியிருக்கார். நானும் செல்வராகவனும் அவர் அப்பாகிட்ட உதவியாளர்களா இருந்திருக்கோம். இந்தக் கதைக்கு அவர் பொருந்துவாரா... அந்தக் கதைக்கு அவர் பொருந்துவாரா... என்கிற கேள்விகளை எல்லாம் தாண்டி தனுஷ் சார் ஒரு நல்ல பர்ஃபாமர். எந்த கதை, எந்த கேரக்டர் கொடுத்தாலும் ரொம்ப அசால்ட்டாக நடிக்கக் கூடிய திறமைசாலி.

பாலச்சந்தர் சாரின் ‘கல்கி’ படத்துல ஒரு பெண் தன்னைத்தானே உளி கொண்டு செதுக்குவது மாதிரி ஒரு ஃபிரேம் இருக்கும். அதுதான் தனுஷ் சார். என்னதான் தயாரிப்பாளர் இயக்குநர் மகனா இருந்தாலும் தன்னைத்தானே செதுக்கிக்கிட்டவர். அப்பா, அண்ணன் எல்லாம் ஒரு குறிப்பிட்ட டைம் வரைக்கும்தான் அவர் கூட கையைப் பிடிச்சுட்டு வந்தாங்க. அதுக்கு அப்புறம் ஏற்பட்ட அவருடைய வளர்ச்சி அத்தனையும் சுயமுயற்சியால் அடைந்ததுதான்.

‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் தனுஷுக்கு என்ன கேரக்டர்..?

ஒரு தாத்தா பேரனுக்கு இடையில் நடக்கற பந்தம்... அதற்கிடையில் ஒரு பெண் தோழியின் நட்பு, காதல்... இதெல்லாம் சேர்ந்து ஒரு நல்ல குடும்பப் படமா உருவாகியிருக்கு. தனுஷ் சாருக்கு என் படங்களில் எப்போதும் இருப்பது போல நல்ல பையன் கேரக்டர்தான். அப்பாவி இளைஞர்... நல்ல பையன் கேரக்டருக்கு தனுஷ் சார் எப்பவுமே மிகச் சரியான பொருத்தமா இருப்பார். இந்தப் படத்திலும் அப்படித்தான்.

நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர்... படம் முழுக்க கலர்ஃபுல்லா கதாநாயகிகள் இருக்காங்களே..?

என் படத்துல எப்பவுமே ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளம் இருப்பாங்க. இந்தப் படத்திலும் அப்படித்தான். தனுஷ் சாருக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்குமோ அதே அளவு முக்கியத்துவம் நித்யா மேனனுக்கும் உண்டு. ஷோபனா என்கிற கேரக்டர் செய்திருக்காங்க. ராஷி கண்ணா, பிரியா பவானிசங்கர் ரெண்டு பேரும் தனுஷ் சாருடைய வாழ்க்கை ஓட்டத்தில் முக்கிய ரோல்களில் கடந்து போற மாதிரி இருப்பாங்க.

இவங்க இல்லாம பாரதிராஜா சார், பிரகாஷ்ராஜ் சார், முனீஸ்காந்த்... இப்படி ஒரு பெரிய பட்டாளம் இருக்காங்க.

பாரதிராஜா சார் கூட சேர்ந்து பயணித்த நாட்கள் எப்படி இருந்துச்சு..?

என் முதல் படமான ‘யாரடி நீ மோகினி’ல கே.விஸ்வநாத் சார் கூட பணிபுரியும் வாய்ப்பு கிடைச்சது. இப்ப பாரதிராஜா சார் கூட. கேள்வி கேட்கும் நீங்களே ‘சார்’னு மரியாதையா சொல்றீங்க. அவரைப் பார்த்து சினிமாவுக்கு வந்த எங்களுக்கு எவ்வளவு மரியாதை அவர் மேல இருக்கும்!இன்னமும் ஞாபகம் இருக்கு... திருச்சி நகரத்தின் மத்தில இருக்கும் ‘மாரிஸ்’ தியேட்டர்ல ரஜினி, கமல் சார் படங்கள் வர்றப்பதான் டிராஃபிக் ஜாம் ஆகும். அந்த வழியா ஸ்கூல், காலேஜ் போன நாங்க பிரமிப்புடன் இதைப் பார்ப்போம்.

அப்படி ஒரு போக்குவரத்து நெரிசலை ஒருநாள் பார்த்தேன்; உணர்ந்தேன். இத்தனைக்கும் அன்று ரஜினி, கமல் சார் படங்கள் வெளியாகலை. ரிலீசானது ‘கடலோரக் கவிதைகள்’. கூட்டத்துக்குக் காரணம், அப்படத்தின் இயக்குநர் பாரதிராஜா.அப்படிப்பட்ட ஜாம்பவான் இயக்குநர் என் படத்தில்  நடிப்பது எனக்குத்தான் பெருமை. இதை மிகப்பெரிய ஆசீர்வாதமா பார்க்கறேன். செட்டில் எவ்வளவு சின்சியரா சீரியஸா இருந்தாலும் அதை மீறின ஒரு குழந்தைத்தனத்துடன் அவர் இருப்பார்... இதுதான் அவர் இளமையின் ரகசியம்.

மற்ற கேரக்டர்ஸ்... டெக்னீஷியன்ஸ்..?

மெயின் கேரக்டர் திரு என்கிற ‘திருச்சிற்றம்பலம்’ தனுஷ் சார். அவருடைய அப்பா பிரகாஷ்ராஜ். அவருக்கு அப்பா பாரதிராஜா சார். இவங்க கூட நித்யா மேனன்... இவங்க நாலு பேருக்கும் படத்துல ரொம்ப முக்கியமான கேரக்டர்கள். ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், ரஞ்சனி, மு.ராமசாமி,  ரேவதி அம்மாள், முனீஸ்காந்த் உட்பட எல்லாருக்கும் வெயிட்டான ரோல்.
இசை உங்களுக்கே தெரியும்... அனிருத். நாங்க நினைச்சதை விட பாடல்கள் பெரிய ஹிட் டாகி இருக்கு. அதுவும் ‘மேகம் கருக்காதா...’ பாட்டுக்கு மிகப்பெரிய வரவேற்பு. மியூசிக் அனி என்பதை விட இந்தப் படத்துல கதைக்கு அனினுதான் சொல்லணும்.

ஒளிப்பதிவு ஓம் பிரகாஷ். பிரசன்னா ஜிகே, எடிட்டர். ரெண்டு பேருமே ‘மாரி 2’, ‘பவர் பாண்டி’ உள்ளிட்ட நிறைய படங்கள் செய்திருக்காங்க. ஆர்ட் டைரக்ஷன் ஜாக்கி. ‘யாரடி நீ மோகினி’ல இருந்து என்னுடன் வேலை செய்யும் சில்வா மாஸ்டர் இந்தப் படத்திற்கு ஸ்டண்ட். கோரியோகிராபி சதீஷ் மாஸ்டர். நம்ம பொயட்டு தனுஷ் சாரும், விவேகாவும் பாடல்களை எழுதியிருக்காங்க.  

சன் பிக்சர்ஸ்..?

கனவு மெய்ப்பட்டிருக்கு. வேறு எப்படி இந்த உணர்வை வெளிப்படுத்தனு தெரியலை. ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’... இப்படி நான் இயக்கிய படங்களில் ஏற்கனவே சன் பிக்சர்ஸ் உடன் இணைந்து வேலை செய்திருக்க வேண்டியது. அப்ப மிஸ் ஆனப்ப ரொம்ப ஃபீல் செய்திருக்கேன். ‘என்னடா... நம்ம படத்துக்கு சன் பிக்சர்ஸ் ரிலீஸ் கிடைக்கலையே’னு ஏங்கி இருக்கேன்.

அந்த எதிர்பார்ப்பு ‘திருச்சிற்றம்பலம்’ வழியா ஈடேறியிருக்கு. இந்தப் படத்தை தயாரிச்சது அவங்கதான்னு பேரு. ஆனா, எங்கயும் எந்த இடத்திலும் சின்னதா கூட அவங்க தலையிடவேயில்ல. தேவையானதெல்லாம் கேட்காமலே கிடைச்சது.  

என்ன எதிர்பார்த்து ‘திருச்சிற்றம்பலம்’ படத்துக்கு வரலாம்?

பணம், பொருள், சொத்து... இதையெல்லாம் தாண்டி கடைசி காலம் வரைக்கும் நமக்கு நிற்கப் போவது உறவுகள்தான். அந்த உறவுகளுடைய முக்கியத்துவத்தை இந்தப் படத்துல பார்க்கலாம்.
குடும்பத்துடன் ரொம்ப நாளுக்கு அப்புறம் சேர்ந்து பார்க்கக் கூடிய ஒரு படம். தரமான, கமர்ஷியல் படம். படம் முடிஞ்சதும் உங்களுக்குள்ள ஹேப்பியான மூவ்மெண்ட் பூக்கும். அந்த மேஜிக்கை நிகழ்த்தத்தான் நாங்க எல்லாரும் உழைச்சிருக்கோம்.   

ஷாலினி நியூட்டன்