ஹீரோவா ஜெய்யா... வேண்டாமேனு தடுத்தாங்க!



ஓடிடி வந்தபிறகு படைப்பாளிகளுக்கு சற்று சவால் கூடியுள்ளது என்றே சொல்ல வேண்டும். பல்வேறு பார்வையாளர்கள் இருப்பதால் கன்டன்ட்டை கவனமாக தெரிவு செய்கிறார்கள்.
அப்படி இயக்குநர் வெற்றிச்செல்வன் ‘எண்ணித்துணிக’ படத்தை அதிரடி ஆக்‌ஷன் படமாக இயக்கியுள்ளார். ஜெய், அதுல்யா நடித்துள்ளனர். இயக்குநர் சாய் வஸந்தின் மாணவரான வெற்றிச்செல்வனுக்கு இது முதல் படம். ஆனால், பழுத்த இயக்குநர் போல் பக்குவமாக வந்து வீழ்கிறது வார்த்தை...‘எண்ணித்துணிக’ - யாரை சொல்றீங்க?

எந்த ஒரு செயலாக இருந்தாலும் முன்னாடியே யோசிச்சு இறங்கணும். இறங்கினப்புறம் யோசிக்கக்கூடாது. அது எவ்வளவு பெரிய சூழ்நிலையா இருந்தாலும், எதிரி எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் அதுலருந்து பின்வாங்கக்கூடாது.
அதுமாதிரி ஒரு பெரிய விஷயத்துக்குள்ள யோசிச்சு இறங்குகிறார் என்னுடைய ஹீரோ. இறங்கினபிறகு அது எவ்வளவு பெரிய போராட்டமாகிறது, அதை எப்படி முடிக்கிறார் என்பதை ஆக்‌ஷன் கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லரில் சொல்லியுள்ளோம்.எஸ்.ஏ.சி, சுந்தர்.சி, சுசீந்திரன்னு பெரிய இயக்குநர்கள் படம் பண்ணுபவராச்சே ஜெய்... எப்படி அவரைப் பிடித்தீர்கள்?

இது சாமான்யனின் கதை. பாய் நெக்ஸ்ட் டோர் லுக்ல இருக்கணும். அதே சமயம் லவ்வுல வீழ்ந்த ஒரு முகமாவும் இருக்கணும். எனக்கு ஜெய் சரியா இருப்பார்னு தோணுச்சு. மைனஸ்ல இருக்கிற ஒரு கேரக்டர் எப்படி ப்ளஸ்ஸுக்கு மாறுகிறது என்பதைச் சொல்லணும். அதுக்கு ஏத்த முகமாவும், பிரச்சனை வந்தபிறகு வீரியமான ஆளாகவும் மாறணும். அதுல ஜெய் கரெக்ட்டா இருந்தார். ஒரு பெரிய ஹீரோவ போட்டா பெப் இருக்காது. ரொம்ப சாதாரண ஹீரோவ போட்டா அதுவும் பொருந்தாம போயிடும். இரண்டு வேரியேஷனுக்கும் ஜெய் செட்டாவார் என்பதால் என்னுடைய முழு சாய்ஸா இருந்தார் ஜெய்.

கதிர் என்ற கேரக்டர்ல வர்றார். ஜெய் நல்ல நடிகர்னு எல்லாருக்கும் தெரியும். படத்துல அவரோட இன்வால்வ்மென்ட் அதிகம். அப்புறம், ஜெய் மேல எல்லோரும் ஒரு கம்ப்ளைன்ட் வைப்பார்கள். ஷூட்டிங்குக்கு லேட்டா வருவார், ஏன் ஜெய்யை வைத்து படம் பண்ணப் போறீங்கனு பலர் என்னிடமே கேட்டார்கள். உண்மையைச் சொல்றேன்... ஒரு நாள் கூட ஜெய்யால் எனக்கு பிரச்னை வந்ததில்லை. 8 மணிக்கு ஃபர்ஸ்ட் ஷாட் என்றால் 7.50க்கு செட்ல இருப்பார். இந்தப் படத்தை 2 வருஷமா எடுத்தோம். ஒரே ஷெட்யூலில் எடுத்த மாதிரி ஒரே மாதிரியா உருவத் தோற்றத்தை மெயின்டெயின் பண்ணினார்.

ஜெய் ஜோடியா அதுல்யா. கேரக்டர் பேர் நர்மதா. லவ், க்ளாமர் ரோல் பண்ணிய அதுல்யாவுக்கு இதுல அவங்க பண்ணாத ரோல். ஹீரோவவிட பவர்ஃபுல் கேரக்டர். ஒரு பெண்ணால் இப்படி முடியுமானு கேட்க வைப்பார். இவங்களோடு வம்சி கிருஷ்ணா, வைபவ் அண்ணன் சுனில், வித்யா பிரதீப், ‘டாணாக்காரன்’ அஞ்சலி முக்கியமான ரோல் பண்றாங்க. காமெடிக்கு குரேசி இருக்கிறார்.  ‘சத்தம் போடாதே’, ‘மூன்று பேர் மூன்று காதல்’ பண்ண தினேஷ்குமார் ஒளிப்பதிவு. மேக்கிங்ல மிரட்டியிருக்கிறார். சாம் சி.எஸ்., மியூசிக். சாம் சார் ஆர்.ஆர். ஸ்பெஷலிஸ்ட்னு தெரியும். அவருக்கு இது ஏத்த களமா இருக்கும். சாங்ஸ் யூனிக்கா கொடுத்திருக்கார். பேக்ரவுண்ட் ஸ்கோரிங் படத்துக்கு சப்போர்ட்டிவ்வா இருந்துச்சு.

எடிட்டிங் சாபு ஜோசப். ‘வல்லினம்’ படத்துக்காக நேஷனல் அவார்டு வாங்கியவர். நானும் அவரும் குளோஸ் ஃப்ரெண்ட்ஸ். ‘சத்தம் போடாதே’ படத்துல நாங்க ரெண்டு பேரும் அசிஸ்டென்ட்ஸ். நான் இப்பதான் முதல் படம் பண்றேன். சாபு ‘காஷ்மோரா’, ‘ஜுங்கா’ ‘மகாமுனி’, ‘மான்ஸ்டர்’னு 25 படங்கள் பண்ணிட்டார். தயாரிப்பாளர் சுரேஷ் சுப்ரமணியன். எடுத்த விஷயத்தை முடிக்கத் தெரிஞ்ச  தயாரிப்பாளர்.

உங்க குருநாதர் சாய் வஸந்த் இயக்கிய ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்துக்கு தேசிய விருது அறிவிச்சிருக்காங்களே... வாழ்த்து சொன்னீங்களா?
சொல்லாம இருப்பேனா! சாரிடம் பத்து வருடங்கள் வேலை செஞ்சேன். என்னுடைய குடும்பமே டீச்சிங் லைன். அப்பா, அம்மா இருவருமே தலைமை ஆசிரியர்கள். மூன்று அக்கா. அவங்களும் டீச்சர்ஸ்.

ஸ்கூல் கல்ச்சுரலில் அப்பா, அம்மா இருவருடைய பங்களிப்பு நிறைய இருக்கும். அப்போ, வீட்ல சினிமா டாபிக் நிறைய வரும். நானும் கல்ச்சுரலில் இருப்பேன். கலை ஆர்வம் அப்படித்தான் வந்துச்சு. குட் ஸ்டூடண்ட் என்பதால் அம்மாவுக்கு நான் ஐஏஎஸ் ஆகணும்னு கனவு. ஆனா, என் கவனம் சினிமா பக்கம் திரும்பியது. அப்பா, அம்மா சென்னை வந்து வஸந்த் சாரிடம் சேர்த்துவிட்டதோடு டூவிலர், ரூம் வாடகைனு என்னுடைய தேவையைப் பூர்த்தி பண்ணாங்க. இப்ப திருமணமாகி ரெண்டு பசங்க. மனைவி சுனிதா டீச்சரா இருக்காங்க. அப்பா, அம்மாவுக்குப் பிறகு நான் சினிமாவுல நிக்க காரணமா இருக்கிறார். ஃபுல் சப்போர்ட் பண்ணி வருகிறார்.

எஸ்.ராஜா