2K கிட்ஸுக்கு என்னதான் பிரச்னை..?உண்மையிலேயே இந்தத் தலைமுறையினர் சிறு ஏமாற்றங்களைக்கூட தாங்கமுடியாதவர்களா?

கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படும் விஷயம் இளைஞர்கள், குறிப்பாகக் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது.
பதின் வயதினர் சிறு சிறு விஷயங்களுக்குக் கூட தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்ற விவாதம் சமூக ஊடகங்களில் வெகுவாக நடத்தப்படுகிறது. ‘ஈராயிரம் குழவிகள்’ என்று இவர்களுக்கு கவிஞர் மகுடேஸ்வரன் பெயர் சூட்டியிருக்கிறார்.
2K கிட்ஸ் என்று செல்லமாக அழைக்கப்படும் இந்தத் தலைமுறையினர் சிறுசிறு அவமானங்கள், ஏமாற்றங்கள், தோல்விகளைக்கூட தாங்க முடியாத ஒரு தலைமுறையாக உருவாகியுள்ளனர் என்பது சமூக ஊடகங்களில் பெரும்பாலும் பதிவு செய்துகொண்டிருக்கும் முந்தைய தலைமுறையினரின் கருத்து.

கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் இந்தத் தலைமுறையினரை ட்ரால் என அழைக்கப்படும்  கிண்டல் செய்து பல்வேறு மீம்கள் வெளியிடப்படுகின்றன.

சின்னச் சின்ன பிரச்னைகளைக்கூட இவர்களால் சமாளிக்க முடிவதில்லை. நகம் வெட்டச் சொல்வது, பல் தேய்க்கச் சொல்வது, குளிக்கச் சொல்வது போன்ற சிறு அறிவுறுத்தல்களைக்கூட இவர்களால் தாங்க முடியவில்லை; அதற்காக தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றெல்லாம் பல்வேறு விதமாக மீம்கள் வெளியிட்டு அவர்களை கேலி செய்த வண்ணம் இருக்கின்றனர் முந்தைய தலைமுறையினர். பதிலுக்கு அவர்களை பூமர் அங்கிள்கள் / ஆன்ட்டிகள், வெற்று உபதேசம் செய்பவர்கள் என இளைய  தலைமுறையினர் கிண்டல் செய்கின்றனர்.

முந்தைய தலைமுறையினர் பேசும் கருத்துகள், அவர்களது மதிப்பீடுகள் எல்லாமே அரதப்பழசு என்ற பொருள் தரும் க்ரிஞ்ச் என்ற வார்த்தையால் கிண்டல் செய்கின்றனர்.கிட்டத்தட்ட இணையத்தில் ஒரு மறைமுக யுத்தம் நடந்து வருகிறது என்றால் மிகையாகாது.உண்மையிலேயே இந்தத் தலைமுறையினர் சிறு ஏமாற்றங்களைக்கூட தாங்க முடியாதவர்களா? உண்மையிலேயே தற்கொலை முயற்சிகள் இந்தத் தலைமுறையினரிடம் அதிகரித்திருக்கின்றனவா என்பதெல்லாம் விவாதத்திற்குரிய விஷயங்கள்.

இளம் தலைமுறையினர் முந்தைய தலைமுறையினர் போல் இருப்பதில்லை. அவர்கள் சிறுசிறு பிரச்னைகளுக்கும் ஏமாற்றம் அடைகின்றனர், பெரியவர்களை மதிப்பதில்லை, அவர்களிடம் ஒழுக்கம் இல்லை, வாழ்க்கையில் நன்னெறிகளைப் பேணுவது இல்லை என்றெல்லாம் சாக்ரடீஸ் காலத்திலிருந்து சொல்லப்பட்டு வருகின்றன.

வருடாவருடம் ‘இந்த வருடம் வெயில் அதிகம்’ என்று சொல்வது போல் பல்வேறு நூற்றாண்டுகளாக இந்த இளம் தலைமுறையினர் சரியில்லை என்று புகார் சொல்வது இருந்துகொண்டேதான் இருந்துவருகிறது.

இருப்பினும் இந்த 2 K கிட்ஸ் என்று சொல்லக்கூடிய ஈராயிரக் குழவிகளின் மனவெளிக்குள் நாம் பயணம் செய்து பார்த்தால் இவர்களைப் பற்றிச் சமூக ஊடகங்களில் சொல்வதில் கொஞ்சமேனும் உண்மை இல்லாமல் இல்லை.ஒரு மனநல மருத்துவராக பலமுறை நான் இதுபோன்ற குழந்தைகளைச் சந்தித்திருக்கிறேன். ஆப்பிள் ஐபோன் வாங்கித் தரவில்லை என்பதற்காக தன்னுடைய தகப்பனை கிரிக்கெட் மட்டையால் அடித்த ஒரு மகனை எனக்குத் தெரியும்.

அதேபோல் இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு மோட்டார் பைக் வாங்கித் தரவில்லை என்பதால் தன்னுடைய அம்மாவையே கழுத்தை நெரித்த மகனையும் எனக்குத் தெரியும். இரண்டு மணிவரை மொபைல் பார்க்காதே, சீக்கிரம் தூங்கு என்று பெற்றோர்கள் சொன்னதால் தற்கொலை முயற்சி செய்த பெண்ணையும் எனக்குத் தெரியும். நிச்சயமாக முந்தைய தலைமுறையினரிடமும் இதுபோன்ற தற்கொலை முயற்சிகள் இருக்கத்தான் செய்தன. இருந்தாலும் இந்தத்தலைமுறையில் இந்த தற்கொலை எண்ணங்கள், தற்கொலை முயற்சிகள் அதிகமாக இருக்கின்றன என்பதை நம்மால் மறுக்க முடியாது என்றே தோன்றுகிறது.

இதற்கு என்ன காரணங்கள் என்பதை நாம் முதலில் ஆராய்ந்துவிட்டு பிறகு அதற்கு தீர்வாக நாம் என்ன செய்யலாம் என்பதையும் பார்க்கலாம்.முதல் காரணம், மாறி வரும் குடும்ப அமைப்புதான். குடும்ப அமைப்பு கடந்த சில வருடங்களாக மிக அதிகமாக மாறுதல்களை அடைந்திருக்கிறது. ஜாயின்ட் ஃபேமிலி, நியூக்ளியர் ஃபேமிலி என்றெல்லாம் பல்வேறு வகையான குடும்ப அமைப்புகளைச் சொல்வார்கள்.

தாத்தா பாட்டி, மாமா அத்தை என்றெல்லாம் உறவினர்களோடு இருக்கக்கூடிய ஜாயின்ட் ஃபேமிலி என்ற முறை அருகி வந்து கொண்டே இருக்கிறது. இப்பொழுதெல்லாம். அது கிட்டத்தட்ட மியூசியத்தில் பார்க்கவேண்டிய அளவுக்கு அரிதான ஒரு பொருளாக ஆகி விட்டது. நியூக்ளியர் ஃபேமிலி என்று சொல்லக்கூடிய மிகக் குறுகிய வட்டத்தில் கணவன், மனைவி, குழந்தை இவர்களை மட்டுமே கொண்டிருக்கக்கூடிய ஒரு குடும்ப அமைப்பாக இப்பொழுது ஆகிவிட்டது.

இந்தக் குடும்ப அமைப்பினால் குழந்தைகளின் தேவைகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு 100% பெற்றோர்களின் மேலேயே விழுகிறது. தேவை எனும்போது அவர்களுக்கான உணவு மற்றும் உடை, உறைவிடம் போன்ற தேவைகள் மட்டுமல்ல... உணர்வுரீதியான தேவைகள் மிக மிக அதிகமாக தேவைப்படுகிறது இந்தக் காலகட்டத்தில்.

அந்தப் பெற்றோர்களும் முந்தைய தலைமுறை பெற்றோர்கள் போலல்லாமல் பெரும்பாலும் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்லும் பெற்றோர்களாக இருப்பதால் குழந்தைகளுடன் போதுமான நேரம் செலவளிக்கமுடியாததால் அக்குழந்தைகளைச் சமாதானப் படுத்தும் வகையில் அவர்கள் விரும்பும் விஷயங்களை உடனேயே நிறைவேற்றிப் பழக்குகின்றனர்.

இன்னொரு  முக்கியமான விஷயம்- விட்டுக்கொடுத்தல், பகிர்ந்து கொள்ளுதல். பகிர்ந்து கொள்ளுதல் என்பது பொருட்களை மட்டுமல்ல, உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளுதல். கூட்டுக்குடும்பமாகவும் பல குழந்தைகளுடனும் வளராத காரணத்தினால்  குழந்தைகளுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பது உண்மைதான். அவர்களுடைய ஈகோ ஊதிப் பெருக்கப்பட்ட ஒரு பலூன் ஆகியிருக்கிறது.

ஒரு சின்ன ஏமாற்றம், இன்னும் குண்டூசி கூட அதை உடைத்து விடுகிறது. ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுடன் நிறுத்தி விடுவதால் அந்தக் குழந்தைகளை மிக மிக அதிகமாக கவனித்து pamper என ஆங்கிலத்தில் சொல்வது போல அவர்களை போஷித்து வளர்ப்பதால் அவர்களுக்கு தாங்கள் விரும்பியது உடனே கிடைத்து விட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.

‘நான் நட்டதும் ரோஜா அன்றே பூக்கணும்’ என்ற மனப்பான்மை அதிகமாக இருக்கின்றது. இந்த ஈராயிரம் குழவிகளின் பெற்றோர்கள் 70 - 80களில் பிறந்தவர்கள். அவர்கள், தாங்கள் பட்ட கஷ்டங்களை தங்களது குழந்தைகள் பட்டுவிடக் கூடாது என்பதற்காக மிகவும் போற்றிப் போற்றி அந்தக் குழந்தைகளை வளர்க்கிறார்கள்.

பொருள்மயமாக ஆகிவிட்ட உலகில் போட்டி மனப்பான்மை மிகவும் அதிகரித்துவிட்டதால் கல்வி, வேலை வாய்ப்பு போன்ற விஷயங்கள் அதீத மன அழுத்தத்தைத் தரக்கூடியனவாக மாறிவிட்டன. ஆர்வமாக இயல்பாக இருக்கக்கூடிய அறிவைத் தூண்டக்கூடிய இடமாக இருக்க வேண்டிய கல்விக்கூடங்கள் போர்க்களம் போல் தீவிரமாகக் காணப் படுகின்றன.

இன்னொரு முக்கிய காரணமாக நாம் கருத வேண்டியது சமூக ஊடகங்களின் பெருக்கம். இதில் போலியாக பிரதிபலிக்கப் படும் அடையாளத்தை உண்மையென நம்புவதால் பல்வேறு சிக்கல்கள் உருவாகின்றன.

மேலும் ஒவ்வொருவரும் தனித்தனித் தீவாக மாறிவிட்டதால் அவர்களுக்கு இடையே உண்மையான நட்புகளும் உறவுகளும் இல்லாமல் போகிறது.

இவற்றைத் தவிர்க்க வேண்டுமானால் நாம் குழந்தை வளர்ப்புக் காலத்திலிருந்தே தொடங்க வேண்டும். குழந்தைகளுடன் நிறைய நேரம் பேசிப் பழகிக் கழிக்க வேண்டும். பெற்றவர்கள் செல்போனும் கையுமாக இருந்தால் குழந்தைகளும் அவர்களைப் பார்த்துத்தான் வளர்வார்கள்.

தற்கொலை எண்ணங்கள் திடீரெனத் தோன்றுபவை அல்ல. பல நாட்களாக அடிக்கடி யாரிடமாவது இந்த எண்ணங்களை வெளிப்படுத்தியிருப்பார்கள். அவற்றை அலட்சியப் படுத்தக் கூடாது. தன்னைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் நம்பிக்கையின்மையே பெரும்பாலான தற்கொலை எண்ணங்களுக்குக் காரணம்.

ஏமாற்றங்கள் தரும் விரக்தியும் இன்னொரு முக்கிய காரணம். தற்கொலை எண்ணங்கள் மேகங்கள் போல் தற்காலிகமானவையே. ஆனால், அந்த நேரத்தில் தலையிட்டு அவர்கள் உணர்வுகளுக்கு வடிகாலிடாவிட்டால் அது பொங்கி வெடித்துவிடும்

டாக்டர் ஜி.ராமானுஜம்