அரண்மனை குடும்பம்-30குலசேகர ராஜா தன் படகுக் காரில் இருந்து இறங்கி சோகமாய் முகத்தை வைத்துக் கொண்டு மின் தகனம் நடக்கும் ஒரு அழகான கட்டடம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
அந்த மயானம் ஒரு காலத்தில் அடர்வான மரங்கள் சூழ்ந்த கடும் காடாக இருந்தது. அங்கோர் இடத்தில் ஒரு ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்குக் கீழே பிணங்கள் தகனமாகும். அதன் புகை எல்லாப் பக்கமும் பரவி மரங்களின் இலைகளில் எல்லாம் படிந்து சூழலே இருள் மயமாக இருக்கும்.

காக்கை, குருவி என்று ஒரு பட்சி கூட அந்த புகை பிடிக்காமல் அந்தப் பக்கமே வராது. சில கழுகுகளும் ஆந்தைகளும் மட்டும் ‘எங்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டில்லை’ என்பது போல மரக்கிளைகளில் அமர்ந்து கீழே நடப்பதைப் பார்த்தபடி இருக்கும்.ஒரு நாளும் ஒரு மனிதரும் அங்கே லேசான இதயத்தோடும் மூச்சோடும் இருந்ததே இல்லை. கண்ணீரும் ஒப்பாரியும்தான் அங்கே சாஸ்வதம்!

அங்கே வரும் ஒவ்வொருவரும் தங்களை ஒருமுறை பிணமாகக் கற்பனை செய்து பார்த்து தங்களுக்கும் இதுதானே இறுதி முடிவு என்று கேட்டுக் கொண்டு பின் அப்படி நினைத்தது பிடிக்காமல் வேறு நினைவுகளுக்கு மாற முயற்சிப்பார்கள். அப்படி ஒரு இடம் இப்போது மிக நவீனமாக துளியும் அச்சத்திற்கே இடமில்லாதபடி ஒரு பூங்காவாக ஆக்கப்பட்டிருந்தது. தரையெல்லாம் டைல்ஸ் பதிக்கப்பட்டு நடக்கையில் சுகமாயிருந்தது. இருபுறமும் குரோட்டன்ஸ் செடிகள் பூக்களோடு சிரித்தன.

தகனக் கட்டடம் முன் பாம்பு கடித்து இறந்துபோயிருந்த சதீஷின் உடல் போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டு முகம் மட்டும் தெரியும் விதத்தில் காடா துணிகளால் அடக்கிக் கட்டப்பட்டிருந்தது.

முகமும் நீலம் பாரித்து அடையாளமே மாறிப் போயிருந்தது. சுற்றிலும் சதீஷின் உறவினர்கள், நண்பர்கள் என்கிற ஒரு கூட்டம். சதீஷிற்கு பத்து வயதில் ஒரு மகன். மொட்டையடிக்கப்பட்டு அவன் நிறுத்தப்பட்டிருந்த கோலம் நெஞ்சைக் குத்தியது.வெள்ளை வேட்டி ஜிப்பாவில் குலசேகர ராஜா நெருங்கி வரவும் எல்லோரிடமும் ஒரு சிறு பரபரப்பு. சதீஷின் மனைவியும் கண்ணீரோடு ஏறிட்டாள்.

அவளை நேருக்கு நேர் பார்க்க குலசேகர ராஜாவுக்கு தயக்கமாக இருந்தது. பொதுவாக அவரைப் பார்த்தால் எல்லோரும் விழுந்தடித்துக் கும்பிடுவார்கள். அங்கேயும் அப்படி கும்பிட்டனர். அது அவரையும் சற்று மகிழச் செய்தது. அதே வேளை பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்பதில் ஒரு குழப்பம்… நல்ல வேளையாக “அய்யா பாத்தீங்களாய்யா... இது சாகற வயசாய்யா..? அநியாயமா செத்துட்டான்யா...” என்று ஒருவர் ஆரம்பிக்க அவர் கைகளைக் பற்றி ஆறுதல் கூறுவது போல பெருமூச்சு ஒன்றை விட்டார் கைலாச ராஜா.

அப்போது ஜல்லியும், போதிமுத்துவும் கூட மெதுவாக நடந்து வந்து சதீஷின் பிணத்தைப் பார்த்தனர். போதிமுத்துவுக்கு நெஞ்சை மிக வேகமாய் அடைத்தது.“சல்லி... இவன்தான் என்னை ஏற்காடு கூட்டிப்போன சதீஷ்ங்கறவன்...” என்றான் காதோரமாக.பதிலுக்கு பார்வையிலேயே ‘அமைதியாக இரு’ என்றான் ஜல்லி.அதற்குள் தன் ஜிப்பாவில் இருந்து ஒரு கவரில் வைத்து எடுத்து வந்திருந்த செக்கை எடுத்த குலசேகர ராஜா அதை அழுதபடி இருந்த சதீஷின் மனைவி முன்னால் நீட்டினார். ஆனால், அவளோ வாங்க மறுத்து விலகிக் கொண்டாள்.

குலசேகர ராஜாவுக்கு சுருக்கென்றது.விலகிக்கொண்ட அவள் “அவரைப் போகச் சொல்லுங்க... இவர் இங்க இப்படி கிடக்கவே காரணம் இவர்தான். பெரிய தொகை கிடைக்கப்போகுது, நாம இந்த ஊரை விட்டே போகப் போறோம்னு சொல்லிக்கிட்டிருந்தவர் இப்ப உலகத்தை விட்டே போயிட்டார். இவரே போனபிறகு எனக்கு பணமா பெருசு..? ஆனா, ஒண்ணு... இவர் சாவுல இவருக்கும் பங்கு இருக்கு. அந்த பாவம் இவரை சும்மா விடாது...” என்று வெடித்து அழுதாள்.

எல்லோரிடமும் சற்று ஸ்தம்பிப்பு... குலசேகர ராஜாவும் அதற்கு மேல் அங்கு நிற்கப் பிடிக்காமல் திரும்பி நடக்கத் தொடங்கினார். சிறிது தூரம் சென்றவர் தன்னிடம் துக்கம் ததும்ப பேசியவரைத் திரும்பிப் பார்த்து அழைத்தார்.அவரும் தயக்கத்துடன் ஓடினார்.“இந்தா... இதுல செக் இருக்கு. அவகிட்ட கொடுத்துடு. ஏதோ துக்கத்துல பேசிட்டா. பாம்பு கடிச்சு செத்துருக்கான்... அதுகூட தெரியாம என்ன குத்தம் சொல்றா பார். இவன் செத்த வருத்தத்தவிட இதுதான் இப்ப எனக்கு பெரிய வருத்தமா இருக்கு. நல்லதுக்கு காலமில்லய்யா.

இந்த செக்கை அவகிட்ட கொடுத்துட்டு அப்புறமா என்ன பங்களாவுல வந்து பார்... உன்னையும் கவனிக்கறேன்...” என்று சற்று புலம்பலோடு செக்கை கையில் திணித்துவிட்டு விறு
விறுவென்று காரில் ஏறிக் கொண்டு புறப்பட்டார். செக்கை வாங்கியவருக்கோ திகைப்பு!ஜல்லியும் போதிமுத்துவும் கூட ஓடிப்போய் ஆட்டோவில் ஏறிக்கொண்டு அந்தக் காரை பின்தொடர்ந்தனர்.

ஆட்டோவுக்குள் போதி முத்து ஏதோ பேச வாயெடுத்தான். ஜல்லி வாயில் விரலை வைத்து ‘அமைதியாக வா’ என்றிட ஆட்டோ விடாமல் ஓடி அரண்மனைக் குடும்ப மாளிகைக்கு வெளியே நின்றது. குலசேகர ராஜா கார் உள்ளே சென்று விட வாட்ச்மேன் பெரிய கிராதிக் கதவை ரிமோட் உதவியுடன் தானியங்கியில் மூடச் செய்தான்.வெளியே மதில் சுவர் அருகே நின்றபடி உள்ளே எட்டிப் பார்த்தான் ஜல்லி. போதிமுத்துவும் பார்த்தான். கிட்டத்தட்ட ஒண்ணரை ஏக்கர் நிலப்பரப்பில் மா, பலா, சப்போட்டா என்கிற மரக் கூட்டங்களுக்கு நடுவே சற்றே கேரள பாணியில் அந்த நாளில் கட்டப்பட்டிருந்த ராட்சஸ பங்களா! அங்கங்கே மர நிழல்களில் பல கார்கள் நின்று கொண்டிருந்தன.

“சல்லி... மொரட்டு பங்களா... பெரிய காசுக்காரன்தான் போல...” என்றான் போதிமுத்து.“காசுக்காரன் மட்டுமில்ல... மோசக்காரனும் கூட...”“சரியா சொன்னே... அந்த சதீஷ் பொண்டாட்டி சொன்னதும் சத்யம். இந்த காசுக்காரனுக்காக வந்தப்பதான் செத்தான். நல்ல வேளை நான் தப்பிச்சேன்...”“அது என்னாலங்கறத மறந்துடாத...”“அட என்ன சல்லி அப்படி சொல்லிட்டே... நீதான் இப்ப எனக்கு குலசாமியே...”“சரி... சரி... புறப்படு...”“என்ன சல்லி... இவன கண்டுபிடிச்சிட்டோம். அடுத்து என்ன பண்ணப் போறோம்? புறப்படுங்கறே...”“அதை ஆசான் சொல்வாரு... இவனை எல்லாம் அவராலதான் கட்டி வளைக்க முடியும்...”“அது சரி இவன்தான் கொல பண்ணச் சொன்னவன்... மலைல யாரை பண்ணச் சொன்னான்னு தெரிய வேண்டாமா..?”“இரு ஆங்காரன்கிட்ட கேக்கேன்...” என்ற ஜல்லி காதோரம் இரு கைகளையும் வைத்து கண்களை மூடி ஏதோ முணுமுணுத்தான்.

“அவ ஒரு நாக கன்னி... அவளுக்கொரு இளைய கன்னி... மேற்க விளையாடிக்கிட்டு இருக்கா பாரு...” என்கிற ஆங்கார யட்சிணி குரல் ஜல்லியின் காதில் ஒலித்து அடங்கவும், வேகமாய் சூரியன் சரிந்தபடி இருக்கும் மேற்குப் பக்கமாய் பார்வையை ஓட விட்டான் ஜல்லி.அங்கே ரத்தியும் தியாவும் பேட்மின்டன் கோர்ட் ஒன்றில் ஷட்டில் காக் விளையாடியபடி இருந்தனர்.
“ஜல்லி... உள்ள யாரைப் பாக்கே..?”“தா... விளையாட்றாங்க பார் தாயும் மகளும்...”“அ... ஆமா...”

“அவுகதான் குறி. குறியும் உள்ளதான் இருக்கு. குறிவெச்சவனும் உள்ளயே இருக்கான்...”
“அடக் கொடுமையே...”“கோடிகோடியா பணம் சேர்ந்தாலே கொடுமைதான்...”
“ஆத்தி... அந்த குட்டிப் பொண்ணு எம்புட்டு அழகா இருக்கு..?”
“ஆனா, தலையெழுத்து தப்பால்ல இருக்கு...”
“அப்ப ரெண்டு பேரும் செத்துருவாங்களா... அவன்
கொன்ட்றுவானா..?”

“இதுக்கெல்லாமும் பதிலை ஆசான்தான் சொல்லுவார்...”
“ஏன்... ஆங்காரன் சொல்ல மாட்டானா?”
“நீ எம்புட்டு கிலோ தூக்குவே?”
“எதுக்கு கேக்கறே...”
“சும்மா சொல்லு...”

“என்னா ஒரு இருவது முப்பது கிலோவை தூக்குவேன்...”“நூறு கிலோவை தூக்குன்னா முடியுமா..?”“அதெப்படி முடியும்... பயில்வானா இருந்தா ஒருவேளை முடியலாம்...”
“அவனுக்கும் ஒரு அளவுண்டு. அப்படித்தான் ஆங்காரனுக்கும் ஒரு அளவு இருக்கு...’’‘‘சரி... இப்ப நமக்கு எது தெரியணுமோ தெரிஞ்சி போச்சு. அடுத்து..?”“இதே ஆட்டோல அடிவாரம் போய் இறங்கி மண்டப் பாறைக்கு போய் ஆசான்கிட்ட சொல்வோம். மிச்சத்த அவர் சொல்வார்...”பேசிக்கொண்டே இருவரும் காத்திருந்த ஆட்டோவில் ஏறினர். ஆட்டோகாரன் மந்திரித்து விட்ட கோழி போலவே இருந்தான்.

“ஏற்காடு அடிவாரம் போ...” என்கிற ஜல்லியின் கட்டளையைத்  தொடர்ந்து ஆட்டோவும் புறப்பட்டது.விளையாடிக் கொண்டிருந்த ரத்தி - தியாவை நோக்கி குலசேகர ராஜாவின் ஒரே மகளான மஞ்சுளா என்கிற மஞ்சுவும் பார்த்தாள்.பின் செயற்கையான புன்னகையோடு சென்று அவர்கள் விளையாடுமிடத்தை நெருங்கி “குட்டி... நீ நல்லா விளையாட்றேடா... அடுத்த சிந்து நீதான்...” என்று சொல்லி இதமாய் சிரித்தாள் மஞ்சு. ரத்திக்கு அவள் அப்படி வந்து நின்று பேசியது ஆச்சர்யமாக இருந்தது.“குட்டி... குட்டி... என்னையும் சேர்த்துக்கடா...” என்றாள் அடுத்து.

ரத்தி உடனே தன் பேட்டை அவள் கையில் கொடுத்து “இந்தாங்கக்கா... விளையாடுங்க...” என்றாள். மஞ்சுவும் விளையாட ஆரம்பித்தாள். அதை மாடியில் தன் அறையின் ஜன்னல் வழியாகப் பார்த்த கணேசனுக்கு அது மிகவே சந்தோஷமான ஒரு காட்சியாக இருந்தது.

மதியம் ஃபிலிம் டிஸ்ட்ரிபியூட்டர் பரமானந்தத்தைப் பார்த்துவிட்டு வந்த நிலையில் இறுக்கமாக இருந்த ரத்தியிடம், “எனக்கு இப்ப எதிரி அந்த அருணாச்சலம் எம்பிதான்... அவன்தான் ஏதோ பண்ணியிருக்கான். மாமா காரணமில்லை...” என்று விளக்கமாய் சொன்னதில் அவனிடமும் ஒரு மெல்லிய மாற்றம். அதே சமயம் ஏற்காட்டில் வாழைப்பழ சாமியார் சொன்ன அந்த ஆபத்து ஊர்ஜிதமாகி விட்டதில் பயம்.

“பயப்படாதே... எனக்கு எதுவும் ஆகாது. அதான் எதிரி யார்னு தெரிஞ்சிடிச்சே... இன்னிக்கே போலீஸ் ஆபீசரைப் பார்த்து பேசப் போறேன்...” என்றெல்லாம் சொல்லியிருந்ததில் ரத்தி சற்று நிம்மதியானாள். இப்போது தன்னை எப்போதும் வேண்டா வெறுப்பாகவே பார்த்து வந்த மஞ்சுளா, வலிய வந்து சந்தோஷமாகப் பேசியதில் மேலும் கொஞ்சம் மகிழ்ச்சி.அப்போது போலீஸ் ஜீப் ஒன்றில் ஏற்காடு சப்இன்ஸ்பெக்டர் சாமிக்கண்ணு பங்களாவினுள் நுழைந்து கொண்டிருந்தார்!

(தொடரும்)

சாமியார் வருவதைப் பார்த்த அசோகமித்திரனுக்குள் பலத்த அதிர்ச்சி. மணிமொழியனாருடன் பேசியபடி இருந்தது கூட தடைபட்டுப் போனது. பார்வை சாமியார் மேலேயே இருந்தது.
“என்ன அசோகமித்திரன்... பேச்சக் காணோம்? ஏதாவது டவர் பிராப்ளமா?”“இல்ல... இல்ல ஐயா! இது அடுத்த கட்ட அதிர்ச்சி...”“என்ன சொல்றீங்க..?”“என் கனவுல வந்த அதே சாமியார் இப்ப நேர்ல என் எதிர்ல வந்துகிட்டிருக்கார்...”“ஓ... நிஜமாவா..?”

“வாட்ஸ் அப் வீடியோவுல வந்து காட்டட்டுமா?”“இல்லையில்ல... நீங்க சொல்றத நான் நம்பறேன்...”“இப்ப சொல்லுங்க... அந்த கனவு ஒரு தற்செயலான ஒண்ணுதானா..?”
“ஆய்வுக்குரிய கேள்வி... சட்டுன்னு ஒரு பதிலை என்னால சொல்ல முடியல... அவர் உங்கள பார்த்துட்டாரா..?”“பாத்துட்டார்... கிட்டேயும் வந்துட்டார்...”“அப்ப அவர் கூட பேசுங்க... எந்த நிலைலயும் உங்க உறுதியை மட்டும் இழந்துடாதீங்க. இது இரண்டு விதமாதான் இருக்கணும். ஒண்ணு, நம்பவும் முடியாத மறுக்கவும் முடியாத அமானுஷ்யம்...

இன்னொண்ணு, விசேஷமான சில பயிற்சிகளைக் கொண்டு நம்மை நமக்கே தெரியாம கைக்குள்ள எடுத்துக்கறது... இந்த இரண்டுல உங்க அனுபவம் எந்த வகைன்னு நீங்களே அந்த சாமியாரோட பேசி ஒரு முடிவுக்கு வாங்க. இப்போதைக்கு நான் முடிச்சிக்கறேன்...”மறுபுறம் மணிமொழியனார் முடித்துக்கொள்ள, அசோகமித்திரனும் எதிரில் வந்து நிற்கும் சாமியாரைப் பார்க்கத் தொடங்கினார்.

சாமியார் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை.பதிலுக்கு அசோகமித்திரனும் சிரித்தார்.“நீதான் அய்யர் வீட்டுக்கு வந்திருக்கற ஆராய்ச்சியாளரா..?” அவரிடம் ஆரம்பம். அசோகமித்திரனிடம் மௌனமான ஆமோதிப்பு.“ஆராய்ச்சி பண்ணி என்ன பண்ணப்போறே..?” - சாமியாரின் அடுத்த கேள்வி அசோகமித்திரனை சற்று இடித்தது. அழுத்தமாய் ஒரு பதில் சொல்ல விரும்பியவர் “என் அனுபவங்களை எல்லாம் புத்தகமா எழுதுவேன்...” என்றார்.“உன்னால அப்படி எல்லாம் எழுத முடியாது...” என்று சொல்லி சற்று பெரிதாகவே சிரித்தார் சாமியார்.

“நான் பல புத்தகங்கள் எழுதினவன்...”
“இருக்கலாம்... ஆனா, இங்க நீ எதுக்கு வந்திருக்கியோ அதை உன்னால எழுத முடியாது...”
“அது இருக்கட்டும்... நீங்க யார்..?”
“பார்த்தா தெரியல... பரதேசி...”
“பேர் இல்லையா..?”

“அதான் சொன்னேனே... பரதேசின்னு...”
“உங்கள நான் இப்பதான் பாக்கறேன். ஆனா, இன்னிக்கு அதிகாலை என் கனவுல நீங்க வந்தீங்க... இந்த இடம்... அதோ அந்த லிங்கம்... எல்லாம் அப்படியே வந்தது... ஆனா, அது எப்படின்னுதான் புரியல..?”“நாம வாழ்ற இந்த வாழ்க்கையே கூட ஒரு கனவுதான்... அந்த கனவு வாழ்க்கைக்குள்ள உனக்கொரு கனவா?”

அவர் கிண்டலாகக் கேட்டார்.“‘Life is moment’னு நானும் படிச்சிருக்கேன். அதாவது இப்ப நான் இருக்கற இந்த நொடி... இந்தத் தருணம் மட்டும்தான் வாழ்க்கைங்கறது அதோட அர்த்தம்! ஒரு கோணத்தில் அது உண்மையும் கூட. நேத்து வரை நடந்த எல்லாமே வெறும் ஞாபகமாதான் மனசுக்குள்ள இருக்கு. அதுலகூட எல்லா நாட்களும் எல்லா சம்பவங்களும் ஞாபகத்துல இருக்கான்னா இல்லை... இப்ப இந்த moment கூட ஞாபகத்துல போய் உட்காரப் போற ஒண்ணுதான்.

நாளைங்கறது விடிஞ்சாதான் நிச்சயம்... இன்னிக்கே கூட எனக்கு ஏதாவது நடந்து நான் இறந்துடலாம். எனக்கு நாளைன்னு ஒண்ணு இல்லாமலே போயிடலாம். நம்ம எல்லாருக்குமே கூட அப்படித்தான்!அதனால கைல இருக்கற காலத்தை அனுபவிச்சு வாழறதுதான் வாழ்க்கைன்னு எனக்கு நல்லா தெரியும். இது கனவு மாதிரி... ஆனா, கனவு இல்லை...”
சாமியாரின் கேள்விக்கு அடர்த்தியான ஒரு பதிலைக் கூறி முடித்தார் அசோகமித்திரன்.

“ம்... சரியாதான் சொல்லியிருக்கே... ஓரளவு வெந்தவன்தான் நீ...” என்று திரும்ப சிரித்தார் சாமியார்.“வெந்தவன்னா..?”“புரியலையா... வாழ்க்கையை புரிஞ்சி வெச்சிருக்கேன்னு சொல்ல வந்தேன்...”“இல்ல... புரிய வேண்டியது இன்னும் நிறையவே இருக்கு. உங்க விஷயமும் அதுல ஒண்ணு. உங்கள நான் பார்த்ததே இல்லை... இந்த இடத்தையும் பார்த்ததில்ல. ஆனா, என் கனவுல இந்த இடமும் நீங்களும் வந்தது எப்படி..?”“வந்து நான் என்ன பண்ணேன்..?”

“கிரகண நேரத்துல லிங்கத்துக்கு பூஜை செய்தீங்க. அப்ப ஒரு பாம்பும் வந்து அதுவும் பூஜை செய்தது... என் தலைல தன் வாயை வெச்சு ஆசீர்வாதமும் பண்ணிச்சு...”
“ஓ... இனிமே நடக்கப் போற ஒண்ணு உனக்குள்ள கனவுல நடந்துடிச்சா..?”“அப்ப அதேபோல ஒரு சம்பவம் இங்க நடக்கப் போகுதா..?”“அது நடக்கலாம்... இங்கதான் நடக்கணும்னு இல்லை. இந்த மாதிரி பல இடங்கள் இருக்கு.

அங்க எங்கயாவது நடக்கலாம்...”“இது என்ன குழப்பமான பதில்…”“இதுதான் உண்மையான பதில். ஆனா, நான் கிரகண சமயம் வழிபாடு செய்வேன். அது நிச்சயம். அப்ப சாமி வருவாராங்கறது வந்த பிறகுதான் தெரியும்...”“எந்த சாமி..?”“சித்தர் சாமிதான்... வேற யார்..?”“சித்தர் சாமியா... நான் பாம்பு வந்து வழிபடுமான்னு கேட்டேன்...”“எல்லாம் ஒண்ணுதாம்ப்பா..!”சாமியார் சொன்ன பதில் அசோகமித்திரனைக் கூர்மையாக்கியது. சித்தரும் பாம்பும் ஒன்றா... எப்படி? கேள்வி எழும்பி நின்றது.

- இந்திரா செளந்தர்ராஜன்

ஓவியம்: வெங்கி