MUST WATCH



ராத் ஆஃப் மேன்

‘நெட்பிளிக்ஸின்’ டாப் டிரெண்டிங்கில் இருக்கும் ஆங்கிலப் படம் ‘ராத் ஆஃப் மேன்’. பெரிய நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் மில்லியன் கணக்கான பணத்தைக் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்து வருகிறது ஒரு கேஸ் டிரக் நிறுவனம். பணத்தை எடுத்துச் செல்வதற்காக பிரத்யேகமான டிரக் கொள்ளையர்களால் இடை மறிக்கப்பட்டு டிரைவரும், பாதுகாவலரும் கொல்லப்பட்டு, பணம் கொள்ளை போவது அடிக்கடி நடக்கிறது.

இந்நிலையில் பணத்தை எடுத்துச் செல்லும் டிரக் வண்டியை ஓட்டுவதற்காக புதிதாக வேலைக்குச் சேர்கிறார் ஹெச். குறிப்பிட்ட ஓர் இடத்துக்குப் பணத்தைக் கொண்டு சேர்க்கும் பணி ஹெச்சிடம் ஒப்படைக்கிறது. ஹெச்சுடன் பாதுகாப்புக்கு ஒருவரும் வருகிறார். வழக்கம் போல கொள்ளையர்களால் வண்டி இடை மறிக்கப்படுகிறது. பாதுகாப்புக்கு வந்தவர் பயந்துபோக, கொள்ளையர்களைத் துவம்சம் செய்து பணத்தைப் பாதுகாப்பாக கொண்டு சேர்கிறார் ஹெச்.

ஒரே நாளில் கேஸ் டிரக் கம்பெனி முழுவதும் பிரபலமாகிறார் ஹெச். உண்மையில் ஹெச் யார்? எதற்காக இந்த வேலைக்கு வந்தார்? என்பதே சுவாரஸ்யமான திரைக்கதை. ஆக்‌ஷன் பிரியர்களுக்கு செம விருந்து வைத்திருக்கிறது இந்தப் படம். ஹெச்சாக அதகளம் செய்திருக்கிறார் ஜேஸன் ஸ்டேத்தம். படத்தின் இயக்குநர் கை ரிட்சி.  

ஃபுட்ஃபேரி

ஒரு வித்தியாசமான சீரியல் கில்லர் படமாக களமிறங்கியிருக்கிறது ‘ஃபுட்ஃபேரி’. ‘நெட்பிளிக்ஸி’ல் காணக்கிடைக்கிறது இந்த இந்திப்படம். மும்பை மாநகரம். இரவு நேரத்தில் ரயிலில் பயணித்து வீடு திரும்பும் இளம் பெண்கள் காணாமல் போகின்றனர். காணாமல் போகும் பெண்கள் ஒரு நாள் கழித்து , ரயில் பாதைக்கு அருகில் உள்ள இடத்தில் டிராலி பேக்கில் பிணமாக கண்டெடுக்கப்படுகின்றனர். கொலை செய்யப்பட்ட எல்லா பெண்களும் மூச்சுத் திணறி இறந்திருக்கின்றனர். அவர்களுடைய பாதங்கள் வெட்டப்பட்டிருக்கிறது.

யார் மீது பாலியல் சார்ந்த வன்முறைகள் இல்லை. தவிர, ஏதோவொரு இடத்தில் கொலை செய்யப்பட்டு, டிராலி பேக்கில் வைத்து ரயில் பாதைக்கு அருகில் பிணத்தை வீசும் சம்பவமும் ஒரே மாதிரியாக இருக்கிறது. அந்த சீரியல் கில்லரை கண்டுபிடிக்க விவான் என்ற சிபிஐ அதிகாரி நியமிக்கப்படுகிறார். கொலைகாரனைக் கண்டுபிடிப்பதில் நம்பர் ஒன் அதிகாரி அவர். விவான் வந்த பிறகும் கொலைகள் தொடர்கிறது. சீரியல் கில்லரை விவான் கண்டுபிடித்தாரா என்பதே திரில்லிங் திரைக்கதை. படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை சஸ்பென்ஸை குறையாமல் வைத்திருப்பது சிறப்பு. படத்தின் இயக்குநர் கனிஷ்க் வர்மா.  

தொகுப்பு: த.சக்திவேல்