+1, +2 மாணவர்களுக்கு மக்கள் துணையுடன் சத்துணவு வழங்கும் அரசு உதவி பெறும் பள்ளி!அசத்தும் சென்னை பள்ளி…

பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைக்கவும், அதன்மூலம் கல்வித்தரத்தை மேம்படுத்தவும், இடைநிற்றலை தடுக்கவும் உருவாக்கப்பட்டதே சத்துணவுத் திட்டம்.
பத்தாம் வகுப்பு வரை மட்டுமே உள்ள இந்தத் திட்டத்தை மாணவர்களின் நலன் கருதி முதல்முறையாக 11 மற்றும் 12ம் வகுப்புக்கும்  நீட்டித்திருக்கிறது சென்னையில் உள்ள அரசு உதவிபெறும் ஓர் ஆச்சரியப் பள்ளி.

இதன்வழியே ஏழை மாணவர்களின் பசியை போக்கி அவர்களை அடுத்தகட்டமான கல்லூரி படிப்புக்கு நகர்த்தும் குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறது அந்தப் பள்ளி. சென்னை ஷெனாய் நகரில் இருக்கிறது திரு.வி.க. மேல்நிலைப்பள்ளி. இதில்தான் இந்த நல்ல முயற்சியை சிரத்தையாக முன்னெடுத்திருக்கிறார்கள். சரியாக ஒரு மதியவேளையில் பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்தோம். தட்டும் கையுமாக மதிய உணவை வாங்க சில மாணவர்கள் வரிசைகட்டி நிற்க, வாங்கிய சிலர் அன்று வழங்கப்பட்ட வெஜிடேபிள் பிரியாணியை ருசித்துக் கொண்டிருந்தனர்.

‘‘எங்கப் பள்ளியில் 11, 12ம் வகுப்பு படிக்கிற மாணவர்கள் மொத்தம் 215 பேர் இருக்காங்க. இதுல பலர் ரொம்ப பின்தங்கிய குடும்பத்துல இருந்து வர்றவங்க. அவங்க சாப்பாடு இல்லாததால பள்ளிக்கு வராமல் இருந்திடக்கூடாதுனு நினைச்சு கடந்த 8ம் தேதி இந்தத் திட்டத்தை முன்னெடுத்தோம்...’’ என்றபடியே பேசத் தொடங்கினார் பள்ளியின் தலைமையாசிரியர் கே.ஜான்.

‘‘இப்பள்ளி 1955ல் தமிழறிஞர் டாக்டர் மு.வரதராசனாரால் ஆரம்பிக்கப்பட்ட பள்ளி. இதை அப்போழுது முதல்வரா இருந்த காமராசர் அவர்கள் திறந்து வைச்சார். இப்ப பள்ளியின் தலைவரா மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் வேதகிரி சண்முக சுந்தரம் இருக்கார்.

இங்க சுமார் 700 மாணவர்கள் படிக்கிறாங்க. நான் கடந்த ஒன்பது ஆண்டுகளாக தலைமையாசிரியராக பணிபுரிகிறேன். எங்கப் பள்ளிக்கு பல்வேறு அமைப்புகள் உதவி செய்திட்டு வர்றாங்க. குறிப்பா, லயன்ஸ் கிளப் ஆஃப் ஸ்டெர்லிங் அவென்யூ நிறைய உதவிகள் செய்றாங்க. தானே, வர்தா புயல்கள் அப்ப பல உதவிகள் செய்திருக்காங்க. கொரோனா நேரத்துல கூட லைன்ஸ் கிளப் நிர்வாகி சங்கர் சார்  மாணவர்களுக்கு மளிகைப்பொருள்கள் வழங்கினார்.

அந்நேரம், அவரிடம் நாங்க ஒருகோரிக்கை வைச்சோம். அதாவது, ‘11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிய சத்துணவு கிடையாது. பத்தாம் வகுப்பு வரைதான் அந்தத் திட்டம். ஆனா, இவங்க சாயங்காலம் வரை ஸ்பெஷல் கிளாஸ் எல்லாம் படிக்கிறாங்க. இந்த மாணவர்களின் அப்பாவும் அம்மாவும் தினக்கூலிகளா இருக்கிறவங்க. காலையில் அவங்க வேலைக்குப் போறதால காலை உணவை நிறைய மாணவர்கள் சாப்பிடறதில்ல. ரொம்ப உடல் சோர்வுடனே பள்ளிக்கு வந்து படிக்கிறாங்க. இதனால, இடைநிற்றல் நடக்க வாய்ப்பிருக்கு. அதனால, ஒருவேளை மதிய உணவிற்கு உதவினா நல்லாயிருக்கும்’னு கேட்டோம்.

இந்தக் கோரிக்கையை ஏன் வச்சோம்னா, மதியம் பத்தாம் வகுப்பு படிக்கிற மாணவர்கள் சத்துணவுக்கு வரும்போது இவங்களும் கூட வந்து நின்னாங்க. அதை பார்த்தப்ப எங்களுக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சு. அப்பதான் இவங்க நிலை தெரிஞ்சது. இவங்களுக்காக ஏதாவது பண்ணணும்னு தோணுச்சு. அதனாலயே அவர்கிட்ட கேட்டோம். அவரும் உடனே சரினு சொல்லி இண்டியா ஃபுட் பேங்க் நெட்வொர்க்குடன் தொடர்பு கொண்டு எங்க பள்ளிக்கு எப்படி செய்வதுனு வந்து பார்வையிட்டார்.

அப்படியாக, இந்தத் திட்டத்தை அமல்படுத்தினோம்.இப்ப தினமும் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொருவிதமான உணவை வழங்கறோம். திங்கள்கிழமை சாதம், சாம்பார், பொறியல் கொடுக்குறோம். செவ்வாய்கிழமை வெஜிடேபிள் ரைஸ், வெங்காய பச்சடியும், புதன்கிழமை சாதம், சாம்பார், பொறியலும், வியாழன் வெஜிடேபிள் பிரியாணியுடன் கத்திரிகாய் தொக்கும், வெள்ளிக்கிழமை சாம்பார் சாதம், பொறியலும்னு வழங்கறோம்.

இதை எங்க பள்ளி கேன்டீனிலேயே சமையல் ஆட்களை வைத்து சமைக்கிறோம். ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் மாணவர்களுக்கு சுடச்சுட பரிமாறுறோம்...’’ என நம்மிடம் பேசிய தலைமையாசிரியர் கே. ஜான் சில மாணவர்களை அழைத்து, ‘உங்க கருத்துகளைச் சொல்லுங்க’ என்றார். ‘‘வீட்டுல அம்மாவும் வேலைக்கு போகிறதால சரியான நேரத்துக்கு அவங்களால சமைக்க முடியல. நிறைய தடவை சாப்பிடாமலே இருந்திருக்கோம். அது பழகிடுச்சு. ஆனா, இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. உடம்பும் எனர்ஜியா இருக்கு. இனி, எல்லோரும் நல்ல படிப்போம்...’’ என்றனர் உற்சாகமாக.

‘‘இத்திட்டத்திற்கு லயன்ஸ் கிளப் ஆஃப் ஸ்டெர்லிங் அவென்யூ  மற்றும் இந்தியா ஃபுட் பேங்கிங் நெட்வொர்க் அமைப்புகளும், எங்க ஆசிரியர்களும், பள்ளி ஆட்சிக் குழுவினரும் தொடர்ந்து உதவிகள் செய்து நம்பிக்கையா துணை நிற்கிறாங்க. அதனால, சிறப்பா முன்னெடுத்த கொண்டுட்டு போறோம்...’’ என்கிறார் தலைமையாசிரியர் கே.ஜான்.

ஆர்.சந்திரசேகர்