சிறுகதை - ரூ.25 ஆயிரம் கடன் கிடைக்குமா..?



மூர்த்திக்கு, மூன்று மாதங்களாக, சொல்லிக் கொள்ளும்படியான வாய்ப்பு எதுவும் வரவில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்னால், ஒரு பெரிய ஹீரோவின் படத்தில், போலீஸ் ஸ்டேஷன் வாசலில் துப்பாக்கி வைத்துக்கொண்டு நிற்கும் சென்ட்ரி வேடம் கிடைத்தது. அதுவும் இரண்டு நாட்கள்தான் கிடைத்தது. அதற்காகக் கிடைத்த இரண்டாயிரம் ரூபாய் சம்பளத்தில், மளிகைக் கடை பாக்கியில் பாதியை  மட்டுமே அவனால் அடைக்க முடிந்தது. மற்ற செலவெல்லாம் அப்படியே தேங்கி நின்றன.

அதற்குப் பிறகு போன மாதத்தில் ஒரு நாள், ஒரு பேய் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. பேய் மாஸ்க்கை மாட்டிக்கொண்டு சுடுகாட்டில் பேயாக அலைய வேண்டும். அப்படி அலைந்த நாலைந்து பேய்களில் அவனும் ஒருவன். நிஜ சுடுகாட்டில் ஷூட்டிங் என்பதால், படப்பிடிப்பு முடியும் வரை, எங்கே தம்மோடு நிஜப் பேய்களும் கலந்து விடுமோ என்கிற அச்சம் அவனுக்கு இருந்து கொண்டிருந்தது. அதற்கு சம்பளமாக ஆயிரம் ரூபாய் கிடைத்தது.

அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்... வைதேகிக்கு என்ன பதில் சொல்வது. எவ்வளவோ கனவுடன் மூர்த்தியை கல்யாணம் செய்துகொண்டவள் அவள். ஆரம்பத்தில் சினிமாவைப்பற்றி அவ்வளவாகத் தெரியாததால், மற்ற நடிகர்களைப்போல தனது கணவனும் ஒருநாள் பெரிய ஹீரோவாகி விடுவான்... கார், பங்களா என வந்து சேர்ந்து விடும் என நம்பினாள்.

ஆனால், போகப் போகத்தான் புரிந்தது அதற்கெல்லாம் பிராப்தம் வேண்டும் என்பது. இதற்கே மூர்த்திக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. தொழில் பக்தி உடையவன். தனக்கு கிடைக்கும் ஒரு சிறு கேரக்டரைக் கூட, திறம் பட செய்து முடிக்க வேண்டும் என நினைப்பவன்.

போஸ்ட்மேன், டிரைவர், டாக்டர், வக்கீல் என எத்தனையோ கேரக்டர்களை செய்து விட்டான். ஒரு டைரக்டர் கூட அவனது நடிப்பை குறை சொன்னதில்லை. ஆனால், என்னவோ தெரியவில்லை ஒரு பிரேக்தான் கிடைக்க மாட்டேன் என்கிறது. எதிர்பார்த்து எதிர்பார்த்து பத்து வருடங்கள் ஓடியதுதான் மிச்சம். நம்பிக்கை உடைபடுகிறபோதெல்லாம் அதை தாங்கும் சக்தி கொண்டவனாக இருப்பதால் இன்னும் சென்னையில் நிலைத்து நிற்கிறான்.

வைதேகியைக் கைப்பிடித்து ஆறு வருடங்கள் ஆகிறது. ஐந்து வயதில் ஒரு பையன் இருக்கிறான். மூர்த்தி, தான் நடித்த முதல் படத்தின் நினைவாக ‘மெரினா’ என பெயர் வைத்திருந்தான். வைதேகிக்கோ அவளுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கோ அந்தப் பெயர் பிடிக்கவில்லை. எவ்வளவோ எதிர்த்துப் பார்த்தார்கள். அவன் கேட்டால்தானே... விட்டு விட்டார்கள்.

நான்காவது மாதமும் தொடங்கப் போகிறது. நல்ல வேளை, ஹவுஸ் ஓனரால் தொந்தரவு இல்லை. வாடகை கொடுக்கும் போது வாங்கிக் கொள்வார். என்ன ஒன்று, அவரை எப்போதாவது திடீரென்று பார்க்கிற போது, கொஞ்சம் அசடு வழிய வேண்டியது இருக்கிறது. அதுதான் ஒரு பெரிய அவஸ்தை. சினிமாவில் அதுபோல் ஒரு காட்சி இடம் பெறும் போது, பிரமாதமாக நடித்து அசத்தும் மூர்த்தியால், அவர் முன்னால் மட்டும் நடிக்க முடியாமல் போய்விடும்.

ஆனால், அவரோ ‘ஒரு பிரச்சனையும் இல்ல... எப்ப பணம் கிடைக்குதோ அப்ப குடுங்க...’ என்பார் கூலாக. அவரை ஒருமுறை குடும்பத்துடன் ஷூட்டிங்குக்கு அழைத்துப்போய், சூர்யாவுடன் நிற்க வைத்து போட்டோ எடுத்துக் கொடுத்தான். அன்று முதல் அவர் வீட்டிலுள்ள அனைவரது வாட்ஸ் அப் டிபியும், ஃபேஸ்புக் ஐடியும் அந்த போட்டோதான்.

இந்த மாதம், எப்படியும் பழைய வாடகையையும் சேர்த்துக் கொடுத்துவிட வேண்டும் என நினைத்தான். ஆனால், அடகு வைப்பதற்கோ அல்லது விற்றுக் கொடுப்பதற்கோ அவன் கையில் நகை என்று எதுவும் இல்லை. வைதேகி போட்டுக்கொண்டு வந்த கொஞ்சநஞ்ச நகையும் ஆரம்ப காலத்திலேயே விற்று சாப்பிட்டாகி விட்டது. இப்போது என்றால் அவள் தர மறுத்திருப்பாள். சண்டை பிடித்திருப்பாள்.  

சினிமாவில் நண்பர்கள் என்றும் அவனுக்கு பெரிதாக யாரும் இல்லை. ஷூட்டிங்கில் பார்த்தால் சிரித்துப் பேசுவார்கள். ஒன்றாக உட்கார்ந்து டீ குடிப்பார்கள். டீ குடிக்கிறபோது கூட, நடித்த படங்களைப் பற்றிப் பேசுவார்களே தவிர, ஆடிசன் போன கம்பெனியைப் பற்றி மூச் விடமாட்டார்கள். அவ்வளவு உஷார். ஆனால், மூர்த்தி அப்படிப்பட்டவன்  அல்ல. வெள்ளை மனசுக்காரன்.

ஒன்றிரண்டு பேரை கொஞ்சம் பர்சனலாகத் தெரியும். அவர்களை பெயர் சொல்லி அழைக்காமல் ‘ப்ரோ’ என்றே அழைப்பான். அவர்களிடமும், கடன் கேட்க வேண்டும் என்றால் அவனுக்கு கசக்கும். காரணம், ஏற்கனவே அனுபவப் பட்டிருக்கிறான். எவ்வளவு நன்றாகப் பழகுகிறவர்களும், கடன் என்று வருகிறபோது, அவர்களுடைய உள் முகத்தைக் காட்டி விடுகிறார்கள். சொல்கிற காரணம்தான் பெரியதாக இருக்குமே தவிர, ஒரு பைசாவை இழப்பதற்கு சம்மதிக்க மாட்டார்கள். அதன் பிறகு, இவனுடனான நட்பைத் தொடர்
வதற்கும் யோசிப்பார்கள்.

தன்னிடம் மட்டும் பணம் இருந்தால், நன்பர்களுக்குக் கொடுத்து உதவுவதே தன் வாழ்வின் லட்சியமாக இருக்கும் என நினைத்துக்கொள்வான். வைதேகியிடம் அதைச் சொல்லவும் செய்தான். அவள் “உங்கள மாதிரி ஏமாளி இந்த உலகத்துல யாரும் இருக்க மாட்டாங்க... அப்படி எதாவது பணம் வந்தா, முதல்ல ஒரு வீட்டை வாங்குங்க... அதை என் பேர்ல எழுதி வைங்க...’’ என எச்சரிப்பாள். அவன் உள்ளுக்குள் சிரித்துக் கொள்வான்.

சரி, யாரிடம் கடன் கேட்டு இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்வது..? கேள்வி மனதைக் குடைந்து எடுத்தது. முடிவில், நினைவில் வந்தவன் அருணாச்சலம். மூர்த்தியுடன் ஒன்றாக காலேஜில் படித்தவன். நெருக்கமான நண்பன். எப்போதும் ஒன்றாகவே திரிவார்கள். ஒருமுறை, அவனுக்காக இவன் கவிதாவிடம் பேசி அடி வாங்கினான். கல்ச்சுரல் புரோகிராமின் போது நடக்கும் நாடகங்களில் அவன் ஹீரோவாகவும் இவன் வில்லனாகவும் நடிப்பார்கள்.

இத்தனைக்கும் ஸ்கிரிப்ட் மூர்த்தி எழுதியதாகத்தான் இருக்கும். நண்பனுக்காக விட்டுக் கொடுப்பான்.

இன்று, அவன் கன்ஸ்ட்ரக்ஷன் லைனில் நல்ல நிலையில் இருக்கிறான். ஆயிரம் வீடுகளுக்கு மேல் கட்டி வியாபாரம் செய்திருக்கிறான். அவர்களின் மற்றொரு நண்பனான ரவியின் தங்கை கல்யாணத்தின் போதுதான் மூர்த்தி அவனை மீண்டும் சந்தித்தான். பென்ஸ் காரில் மனைவியுடன் ஆடம்பரமாக வந்து இறங்கினான். ஒரு மினி ஜுவல்லரி ஷாப் வைக்கலாம், அவ்வளவு நகைகளை அவனது மனைவி அணிந்திருந்தாள். பார்க் அவென்யூ பர்ஃப்யூம் வாசனை மண்டபம் முழுவதும் நிறைந்தது.

அதே காரை நடிகர் விக்ரமும் வைத்திருந்ததாக மூர்த்திக்கு நினைவு. அவனுக்கு பெரிய மரியாதையும் வழங்கப்பட்டது. மூர்த்தி அவனை அடையாளம் கண்டுகொண்டு அருகில் சென்றான். “அருண்தானே...’’ என்றான். அருணாச்சலம் அவனை திரும்பிப்பார்த்தான். முதலில் அடையாளம் தெரியவில்லை. சற்று யோசித்தவன், பின் கண்டு கொண்டான். “ஹேய் மூர்த்தி...’’ என்றான். மூர்த்திக்கு, அவனுக்கு பக்கத்தில் காலியாகக் கிடந்த நாற்காலியில் உட்காரலாமா வேண்டாமா என்கிற தயக்கம் இருந்தது. அவனும் மூர்த்தியை உட்காரச் சொல்லவில்லை.
“சினிமாவுல ஆக்ட் பண்றதா கேள்விப்பட்டேன். நா சினிமா பாக்குறது இல்ல. அதுக்கு எனக்கு நேரமும் இருக்குறதில்ல...’’ என்றவன், “வருமானமெல்லாம் எப்படி... மாசம் ஒரு நாப்பதாயிரம் ஐம்பதாயிரம் கிடைக்குமா..?’’ எனக் கேட்டான்.

மூர்த்திக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அவமானமாக இருந்தது. இவனைச் சந்திக்காமலே இருந்திருக்கலாமோ எனத் தோன்றியது. அவன், “என்னப்பா பதிலையே காணோம்... நா எதுவும் தப்பா கேட்டுட்டனா..?’’ என்றான். மூர்த்தி தயக்கத்துடன் “அதெல்லாம் ஒண்ணுமில்ல... சில மாசம் அப்படி கிடைக்கும்... சில மாசம் எதுவுமே கிடைக்காது...’’
“அப்போ கஷ்டம்தான்னு சொல்லு.

அப்புறம் எதுக்கு அந்த கர்மத்தை கட்டிகிட்டு அழுதுட்டு இருக்க..? விட்டு ஒழிச்சுட்டு வேற வேலையப் பாக்க வேண்டியதுதான...’’ மூர்த்திக்கு கோபம் வந்தது. ஆனால், அதைக் காட்டிக் கொள்ளவில்லை. “அதுக்கு நா இத்தனை வருஷம் கஷ்டப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆரம்பத்துலயே விட்டொழிச்சிருந்திருக்கலாம்... கண்டிப்பா ஒரு நாள் நா பெரிய ஆளா வருவேன்...’’“உன் நம்பிக்கைய பாராட்டுறேன்...’’ என்று அவன் சொன்னபோது போன் அடித்தது.

அவன் மூர்த்தியிடம் “ஒன் மினிட்... ஜெர்மன்லேருந்து என் பார்ட்னர் பேசுறார்...’’ என்று கூறி, போனை ஆன் செய்து அழகான ஆங்கிலத்தில் பேசினான். மூர்த்தி அவனை பிரமிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பேசி முடித்து “இப்பல்லாம் நா இந்தியாவுலயே இருக்குறது இல்ல... பிஸ்னஸ் பிஸ்னஸ்னு உலகம் முழுக்க ஓடிட்டு இருக்கேன். நிக்க நேரம் இல்ல... சாப்பிட நேரம் இல்ல... படுக்க நேரம் இல்லன்னா பாத்துக்கயேன்...’’ என்றான் பெருமையாக.

“அதனால என்ன... நல்ல வளர்ச்சிதானே...’’ என்ற மூர்த்தி, அவனது போன் நம்பரையும் கேட்டு வாங்கிக் கொண்டான்.இப்போது, அவனிடம் உதவி கேட்கலாம் என நினைத்து, அவனது வாட்ஸப்புக்கு ‘உன்னை சந்திக்க விரும்புகிறேன்...’ என ஆங்கிலத்தில் மெஸேஜ் அனுப்பினான். அவன் ‘என்ன விஷயமாக’ எனக்கேட்டு பதில் மெஸேஜ் அனுப்பினான். மூர்த்திக்கு தனது பிரச்னையை அவனிடம் சொல்லி கடன் கேட்கலாமா வேண்டாமா என யோசனையாக இருந்தது. இருந்தாலும் நம்பிக்கையை வரவழைத்துக் கொண்டு ‘பர்சனல்’ என டைப் செய்தான்.

அதற்கு பதிலாக அவனிடமிருந்து மெஸேஜ் வரவில்லை. வாட்ஸ் அப் கால் வந்தது. மூர்த்தி ஆன் பண்ணி காதில் வைத்தான். அவன் “சொல்லுங்க மூர்த்தி...’’ என்றான். மூர்த்தி தயங்கித் தயங்கி  “கொஞ்சம் பிரச்னை... அவசரமா ஒரு 25000 ரூபாய் பணம் தேவைப்படுது... ரெண்டு மாசத்துல திருப்பிக் கொடுத்துடுவேன்...’’ என்றான். எதிர் முனையில் சிறிது நேரம் மௌனம். பின் “மூர்த்தி... நா இப்ப  சிங்கப்பூர்ல இருக்கேன். இன்னும் ஃபிஃப்ட்டீன் டேஸ் இங்கதான் இருப்பேன்.

 இங்க இருக்குற ஒரு பெரிய ஐடி கம்பெனிக்காக இருநூறு கோடி ரூபா மதிப்புல ஒரு பில்டிங் கட்டிக் கிட்டு இருக்கேன்... அதை நல்ல படியா முடிச்சா இன்னும் நிறைய காண்ட்ராக்ட் கிடைக்கும். அதுக்கப்புறம்  சென்னைக்கு வருவேன். அங்க ரெண்டு நாள் இருப்பேன். அந்த ரெண்டு நாளும் வேலை வேலைன்னு மணப்பாக்கம் சைட்லயே போயிடும்.  

பத்து ஃபிளாட்ல எட்டு ஃபிளாட் சேல் பண்ணிட்டேன். இன்னும் ரெண்டுதான் பாக்கி இருக்கு. உங்க ஆளுங்களுக்கு எதாவது வீடு தேவைப்பட்டா சொல்லு. கிளாஸிக்கா இருக்கும். அப்புறம், என் ஒய்ஃப் ஒரு டைமண்ட் நெக்லஸ் வாங்கணும்னு சொன்னா. அதுக்கு கூட போறதுக்கு நேரம் இருக்குமான்னு தெரியல. இதை முடிச்சுட்டு உடனே அமெரிக்கா போறேன். அங்க ஒரு மாசம் இருப்பேன். டொரோன்டோவுல புதுசா ஒரு காண்ட்ராக்ட்ல சைன் பண்றேன்.

அப்புறம் அங்கேருந்து ஆஸ்திரேலியா போறேன். அங்க ஒரு மாசம் இருப்பேன். அதுக்கப்புறம் என்ன புரோக்ராம்னு எனக்கு தெரியாது...’’ என நீட்டி முழங்கினான்.
மூர்த்தி “ரொம்ப சந்தோஷம்ப்பா... நா கேட்டது...’’ என இழுத்தான். அருணாச்சலம், “இவ்வளவு நேரமா நா சொல்லிட்டு இருந்தது உனக்கு புரியலையா... நா மறுபடியும் சென்னைக்கு திரும்ப நாலு மாசம் ஆயிடும்...’’ என்று கூறி போனை கட் பண்ணினான்.

மூர்த்திக்கு பொட்டில் அறைந்தது போலிருந்தது. தான், என்ன கேட்டோம்... இவன் என்ன பதில் சொல்கிறான்... தன்னால் உதவி செய்ய முடியாது என மறுத்திருந்தால் கூட, மூர்த்தி வருத்தப்பட்டிருக்க மாட்டான். அதை விடுத்து, அவனது கஷ்டத்தை கொஞ்சமும் பொருட்படுத்தாமல், தன்னுடைய பெருமையை நிலைநாட்டுவதிலேயே குறியாக இருந்ததுதான் வலிக்கச் செய்தது.  

பெருமை அடித்துக் கொள்கிற நேரமா இது... அவன் எந்த நாட்டில் இருந்தால் எனக்கென்ன... எவ்வளவு நாட்கள் இருந்தால் எனக்கென்ன... என்னுடைய தேவை என்பது 25000 ரூபாய்... கூகுள் பேவில் தட்டிவிட்டால், என்னுடைய அக்கவுண்ட்டில் வந்துவிழுந்து விடும். ஆனால், அதற்கு மனது வேண்டும். அந்த மனது அருணாச்சலத்திடம் இல்லை. அதைத்தான் அவன் நேரடியாக காட்டிக்கொள்ளாமல், சுற்றி வளைத்து மூக்கைத் தொட முயற்சிக்கிறான்...  

மூர்த்தி அருகிலுள்ள ஒரு பார்க்கில் வந்து உட்கார்ந்தான். மனதில் பல கவலைகள் ஓடின. கூடவே அருணாச்சலம் ஏற்படுத்திய அவமானமும் சேர்ந்து கொண்டது. என்ன பண்ணலாம் என தீவிரமாக யோசித்தான். அப்போது “மூர்த்தி...’’ என ஒரு குரல் கேட்டது. அவன் நிமிர்ந்து பார்த்தான். ஒரு இளைஞன் ஒடிசலாக நின்று கொண்டிருந்தான்.

“என்னைத் தெரியுதுங்களா..?’’மூர்த்தி யோசித்தான். அந்த இளைஞனுக்கு சிரிப்பு வந்தது. “என்ன மூர்த்தி அதுக்குள்ள மறந்துட்டிங்க... போன மாசத்துல ஒரு நாள் பிரசாத் ஸ்டுடியோவுக்கு எதிர்ல நா பசியோட நின்னுட்டு இருந்தப்ப, அதைத் தெரிஞ்சுகிட்டு ஹோட்டலுக்கு கூட்டிட்டு போய் எனக்கு சாப்பாடு வாங்கிக் குடுத்திங்களே... மறந்துட்டிங்களா..?’’

மூர்த்திக்கு நினைவு வந்தது. “ஆமாம்... எப்படி இருக்கிங்க..? எதாவது வேலை கிடைச்சுதா..?’’“கிடைச்சுடுச்சு... டைரக்டர் வசந்தகுமார்கிட்ட அஸிஸ்டன்ட் டைரக்டரா ஜாய்ன்ட் பண்ணியிருக்கேன்... விஷ்ணு விஷால வச்சு ஒரு படம் ஆரம்பிக்கப் போறார்... அதுல உங்களுக்கு பொருத்தமா ஒரு நல்ல கேரக்டர் இருக்கு. நாப்பது நாள் ஒர்க் வரும்... அன்னிக்கு உங்க போன் நம்பர வாங்காததுனால எப்படிடா தேடி கண்டு புடிக்குறதுன்னு தவிச்சுகிட்டு இருந்தேன்... நல்லவேளை இங்க பார்த்துட்டேன்...’’மூர்த்திக்கு தெம்பு வந்தது. கையெடுத்து அவனைக் கும்பிட்டு “தாங்க்ஸ் ப்ரோ...’’ என்றான்.

அந்த இளைஞன் “என்ன ப்ரோ நீங்க... அன்னிக்கு நா பசியோட இருந்தப்ப, என்னால உங்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு வரும்னு எதிர்பார்த்தா சாப்பாடு வாங்கித் தந்தீங்க..? அதுவும் நீங்க ஒண்ணும் பெரிய நடிகரும் இல்ல... அப்போ எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சுது... மனுஷனுக்கு மனுஷன் என்ன முடியுமோ  அதை உதவியா பண்ணணும்னு. நீங்க
பண்ணின அந்த உதவிதான், இன்னிக்கு உங்களுக்கே வாய்ப்பா திரும்பி வந்துருக்கு...’’ என்றான். மூர்த்தியின் கண்களில் நீர் கசிந்தது.

 - இயக்குநர் மணிபாரதி