முதல் திருநங்கை நீதிபதியாக நடித்த இவரது மறுபக்கம் இது!
‘கார்கி’ படத்தில் முதல் திருநங்கை நீதிபதி என்னும் கேரக்டரில் நடித்தவர் திருநங்கை சுதா என்பது தெரியும்; ஆனால், தமிழகத்திலேயே முதன் முறையாக திருநங்கைகளுக்காக அமைப்பு தொடங்கி அதன் மூலம் கடந்த பத்து வருடங்களாக எங்கு, எப்போது திருநங்கைகளுக்கு உதவி வேண்டுமானாலும் ஓடி வரும் சுதாவை பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.  ‘‘நான் பட்ட கஷ்டங்களையும், சிரமங்களையும் இனியும் ஒரு திருநங்கை அனுபவிக்கக்கூடாது. அந்த எண்ணம்தான் இன்னைக்கு என்னை இங்கே பயணிக்க வெச்சிருக்கு...’’ கண்களில் அவ்வளவு வலிமையும், நம்பிக்கையும் ஒருசேர பேசுகிறார் திருநங்கை சுதா.‘‘நடிப்பிலே ஆர்வம் எல்லாம் கிடையாது. ‘கார்கி’ டீம்கிட்ட முழுமையா கதை கேட்டுட்டுதான் ஓகே சொன்னேன். எங்கயும் திருநங்கைகளுக்கு களங்கம் ஏற்படுத்துற சீன் கூடாதுன்னு சொன்னேன். ஆனா, ரொம்ப நல்ல கேரக்டர் கொடுத்தார் இயக்குநர் கௌதம் ராம்சந்திரன்.  இப்பவும் வாய்ப்புகள் வருது. என்ன செய்ய... அமைப்பு சார் வேலையே சரியா இருக்கு. அமைப்பு வேலைக்கு போக மீதமிருக்கும் நேரத்துலதான் நடிக்கலாம்னு இருக்கேன்.எனக்கு பூர்வீகம் எல்லாம் ஆந்திராதான். இப்ப திருவல்லிக்கேணிதான் ஏரியா. நான் பிடிஎஸ் (BDS - Bachelor of Dental Surgery) படிச்சிட்டு இருந்தேன். டென்டிஸ்ட் ஆக எண்ணினேன். ஆனா, படிப்பையும் என்னால தொடர முடியலை. சின்ன வயசிலேயே என்னுடைய பெண் தன்மை எனக்குத் தெரிய ஆரம்பிச்சிடுச்சு. வீட்டுக்கு பயந்து வெளிய சொல்லவே இல்ல.

என் அண்ணன் என்னை விட பதினோரு வருஷங்கள் மூத்தவர். அவருக்கெல்லாம் தெரிஞ்சா நிச்சயம் பிரச்னைதான்னு பயந்தேன். ஆனாலும் ஒரு கட்டத்துக்கு மேலே என்னால என் உணர்வுகளை வெளிக்காட்டாம இருக்க முடியல. நான் நானாக இருக்க ஏன் பயப்படணும்னு வீட்டிலே சொன்னேன். வழக்கமான அதே பிரச்னைகள்தான்.
 ஏத்துக்கவே இல்லை. என்னைக் கட்டுப்படுத்தினாங்க. அங்க இருந்த நண்பர்கள் கூட என்னை ஏத்துக்கலை...’’ என்னும் சுதா, படிப்பையும் தொடர முடியாமல், நண்பர்களும் ஏற்றுக்கொள்ளாமல் போகவே பல இன்னல்களைச் சந்தித்திருக்கிறார். ‘‘என்னை கவுன்சிலிங்க்கு கூட்டிட்டுப் போனாங்க. அதிர்ஷ்டவசமா அந்த டாக்டர் எனக்கு சப்போர்ட் செய்தார். இது இயற்கை... இதை நாம கட்டுப்படுத்த முடியாது, கூடாது... அவங்களை அப்படியே விடுங்கன்னு சொன்னார். ஆனாலும் என் குடும்பம் புரிஞ்சுக்காம என்னைய வீட்டுக்குள்ளேயே அடைச்சு வெச்சுட்டாங்க. இதுக்கு மேலேயும் இது சரிவராது; நான் நானா வாழணும்னா இங்கே இருக்கக் கூடாதுன்னு முடிவெடுத்து வீட்ட விட்டு வெளியேறினேன். சென்னை முழுமையா வேற ஒரு உலகமா இருந்துச்சு. என்னை வித்யாசமா பார்க்கலை. சகஜமா பழகினாங்க. நிறைய நண்பர்கள் சேர்ந்தாங்க. அடுத்து வாழ்க்கை என்னனு யோசிக்கும்போது அதற்கான உதவிகள் நிறைய கிடைச்சது.
ஆனாலும் அங்கீகாரமான வேலை கிடைக்கலை. நல்ல படிப்பு, நல்ல வேலை, மத்த பெண்களுக்கு எப்படி வேலைகள் அமையுமோ அப்படியான கௌரவமான வேலை வேணும்னு நினைச்சேன். நடக்கல. பொதுவா திருநங்கைகளுக்கு என்ன போராடினாலும் நடக்கக் கூடிய பாலியல் தொழில் அல்லது பிச்சை மட்டுமே ஒரே வழியா இருந்துச்சு. சரி, இதுக்கு மேலே வயிறுன்னு ஒண்ணு இருக்கே அப்படின்னு முதல் நாள் பிச்சை எடுக்க இறங்கினேன்.
அந்த ஒரு நாள், நான் மட்டும் இல்லை, மத்த திருநங்கைகளையும் கூட இதைச் செய்ய வைக்கக் கூடாதுன்னு தோணுகிற அளவுக்கு சங்கடங்களையும், அவமானங்களையும் சந்திச்சேன். ஏன்னா சின்ன வயசிலே இருந்து செல்லப் பிள்ளையா, எதைக் கேட்டாலும் கொடுத்த குடும்பத்திலே இருந்தவ. எந்த கஷ்டமும் பார்த்ததே இல்லை. அந்தக் கடினமான சூழல் என்னை யோசிக்க வெச்சது...’’ என்னும் சுதா, எப்படி திருநங்கைகள் அமைப்பு ஏற்படுத்தும் அளவுக்கு முன்னேறினார் என தொடர்ந்து பேசினார்.
‘‘நிறைய தோல்விகள், புரிதல் இல்லாமை எல்லாமுமா சேர்ந்து, சரி, குறைந்தபட்சம் வேலைக்காவது போகணும்னு நினைச்சு ஒரு தன்னார்வலர் அமைப்பிலே வேலை செய்துட்டு இருந்தேன். தொடர்ந்து டாக்டர் சுனில் மேனனுடைய ‘சகோதரன்’ என்கிற முதல் தென்னிந்திய LGBT அமைப்பிலே வேலை செய்ய ஆரம்பிச்சேன். என்னுடைய சுயமரியாதை தொடங்கி அத்தனையும் எனக்குக் கிடைச்சது அங்கேதான். அந்த அறிவுகளை எல்லாம் மனசிலே எடுத்துக்கிட்டு இன்னமும் முழுமையாக திருநங்கைகளுக்கான உரிமைகள் பெறணும், அதுக்கான அமைப்பு ஒண்ணு வேணும்னு யோசிச்சு தொடங்கினதுதான் ‘தோழி’ திருநங்கைகள் அமைப்பு.
ரேஷன் கார்டு என்கிற அடிப்படை உரிமைல ஆரம்பிச்சு சக மனுஷனா, மனுஷியா திருநங்கைகள் வாழ என்ன தேவையோ அத்தனையையும் ‘தோழி’ செய்யும். இதற்கு கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் மிகப்பெரிய உதவி செய்யறாங்க. சிகிச்சை, வெளிநாடு போய் படிக்க நினைச்சா அதற்கான உதவிகள், தகுந்த வேலை, அடையாளம், பெயர் மாற்றம்... இப்படி எல்லா உதவிகளையும் ‘தோழி’ செய்யும். வீடு இல்லாத திருநங்கைகளுக்கு தோழி காப்பகமே இருக்கு. சுமார் 1000க்கும் மேலான திருநங்கைகள் அங்க தங்கியிருக்காங்க. கல்லூரியிலே படிக்கற திருநங்கைகள் தொடங்கி, ஒர்க் பண்றவங்க, சொந்தமா தொழில் செய்யறவங்க, முதியவர்கள் இப்படி நிறைய பேர் இருக்காங்க.
18 வயது நிரம்பிய எந்தத் திருநங்கையும் அவங்களுக்கு அடைக்கலம், வாழ்வாதாரம், குடும்பத்தார் மூலமா பிரச்னை இப்படி எதுவானாலும் தேவைக்கு எங்களை அணுகலாம். திருநங்கைகள் பொதுவா ஜமாதுக்குதான் போவாங்க. ரொம்ப வித்யாசமா படிச்சு மேலே வர நினைக்கற திருநங்கைகள் யோசிக்காம எங்களை அணுகலாம். ‘தோழி’ அமைப்பிலே இருந்து பல திருநங்கைகள் பெரிய பெரிய வேலைகள்ல இருக்காங்க, பெரிய கல்லூரிகள்ல படிக்கறாங்க.
முதல் டாக்டர், முதல் வழக்கறிஞர், மாடல்... இப்படி நான் என்னல்லாம் கனவு கண்டேனோ அத்தனையும் நடக்க ஆரம்பிச்சிருக்கு. கொரோனா காலத்திலே சென்னை, ஈரோடு, காஞ்சிபுரம் வாழ் திருநங்கைகளுக்கு உணவுப் பொருட்கள் சப்ளை கூட சரியா செய்திருக்கோம். ஒருசில திருநங்கைகளுக்கு சாப்பாட்டுக் கடை, டெக்ஸ்டைல் கடைகள் கூட வெச்சிக் கொடுத்திருக்கோம். நிறைய டோனர்கள் இருக்காங்க. அவங்க மூலமாவும் உதவிகள் வருது...’’ என்ற சுதாவின் லட்சியமே, இப்படி ஒரு அமைப்பை நாடி எந்த திருநங்கையும் வரக் கூடாது...
அப்படியொரு காலத்தை உருவாக்குவதே என்கிறார். ‘‘ஒவ்வொரு மனுஷனுக்கும் அவன் குடும்பத்தை விட பெரிய ஆதரவு யாரால் கொடுக்க முடியும்..? அவங்க ஒவ்வொரு திருநங்கைகளையும், திருநம்பிகளையும் ஏத்துக்கிட்டாலே எந்த அமைப்பையும் தேடி அவங்க ஓடி வரத் தேவையே இருக்காது. குடும்பங்கள் புரிஞ்சுக்கணும். அதற்கான விழிப்புணர்வுக் கூட்டங்களையும் ‘தோழி’ முன்னெடுத்து நடத்திட்டு இருக்கு. மாற்றங்கள் வரணும்; வரும்னு நம்புறேன்...’’ நம்பிக்கையுடன் சொல்கிறார் சுதா.
செய்தி: ஷாலினி நியூட்டன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|