புல்லட் புக் ஸ்டால்!



எழுத்தை விற்று பிழைக்க முடியுமா? முடியும் என நிரூபித்து இருக்கிறார்கள் புல்லட்டில் புத்தகம் விற்கும் சயன் பிரதர்ஸ். ‘‘நாங்கள் இருவரும் பிரதர்ஸ். அவன் அண்ணன் சந்துரு. நான் தம்பி கார்த்திகேயன்.
சந்துருவின் (Chandru) முதல் மூன்று எழுத்தையும் கார்த்திகேயனின் (Karthikeyan) இறுதி நான்கு எழுத்தையும் இணைத்து Chaeyan brothers...’’ எனச் சிரித்தவர்களின் கதை வித்தியாசமானது. ‘‘நாங்கள் இருவர். ஆனால், எங்களுடையது மூவர் கதை...’’ என நம்மிடம் பேச ஆரம்பித்தவர் தம்பி கார்த்திகேயன்.

‘‘எனக்கும் அண்ணன் சந்துருவுக்கும் தோழியாக மூன்றாவதாக எங்களுடன் இணைந்தவர்தான் வித்யாதரணி. 2017ல் இருந்தே மூவரும் நல்ல நண்பர்களாக இணைந்தே பயணித்தோம். வாசிப்பும் பயணமும் இணைந்த புத்தகக் காதல் பயணம் எங்களுடையது. ஒரு கட்டத்தில் எனக்கும் வித்யாவுக்குமான நட்பு காதலானது. இரண்டு ஆண்டுகள் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தபின், கல்யாணம் செய்துக்கலாம் என தோணுச்சு. வித்யா மினிமலிஸ்ட். தேவையைக் குறைத்து நிறைவா வாழும் கொள்கை உள்ளவர். தேவையற்றதையும் தேவைக்கானதாக மாற்றிவிடுவார்.
2021ல் நானும் வித்யாவும் இணையரானோம். நாங்கள் இப்போது இருப்பது திருவண்ணாமலை. இந்த நிமிடத்தை நிறைவாகவும், இன்றைய பொழுதை மகிழ்ச்சியாகவும் வாழ்கிறோம்’’ என்றவர் தொடர்ந்தார்.

‘‘நானும் சந்துருவும் எழுதி, 2018 மதுரை புத்தகக் கண்காட்சியில் வெளியிட்ட முதல் புத்தகம் ‘விளங்கா மெய்ம்மை’. இதில் 99 நுண்கதைகளும், அதற்கு இணையா 99 ஓவியங்களும் 99 பக்கங்களில் இருக்கும். ஓவியத்தையும் நாங்களே வரைந்தோம். புத்தகத்திற்கு பரவலான விமர்சனங்கள் கிடைக்க, மதுரை கல்லூரிகளில் கலந்துரையாடல்களும் நடந்தது. இதில் பெரும்பாலான கதைகள் ஒருவரி இரண்டு வரியில் முடியும். 3 வார்த்தையில்கூட கதை உண்டு. அதிகபட்சம் அரைப்பக்கத்தை கதைகள் தாண்டாது.  சிரிப்பு, காதல், காமம், இலக்கியம்னு மனித வாழ்வின் அத்தனை உணர்வுகளையும் இந்த நுண்கதைகள் உள்ளடக்கி இருக்கும். ஓவியங்களோடு ஒப்பிட்டுப் பார்க்காமல் கதைகள் புரியாது.  

நுண்கதைகள் குறித்த பிஎச்.டி மாணவிகூட, எங்கள் புத்தகத்தையும் ஆய்வுக்கு எடுத்திருக்கிறார். அடுத்து மூவருமாக மேற்குத் தொடர்ச்சி மலை நோக்கி காட்டுக்குள் பயணித்தபோதுதான் எங்கள் இரண்டாவது புத்தகத்திற்கான விதை விழுந்தது. புத்தகத் தலைப்பு ‘இக்கதை தொடங்காமலே முடிகிறது’. இது ஒரு நாவல். பௌர்ணமிக்கு முதல் நாள் இரவு ஒரு பெண் காட்டுக்குள் போவதும், அப்போது நடக்கும் விஷயங்களுமே கதை.

கேவலம் என்று நாம் நினைப்பவை எங்கிருந்து தொடங்குகிறது என்கிற ஆய்வாக (evaluation), புற நிர்வாணத்தை மையப்படுத்தி (nudity) அக நிர்வாணத்தைப் பேசுவதாக புத்தகம் இருக்கும். புத்தகத்தின் தலைப்பு வட்ட வடிவில், ‘இக்கதை தொடங்காமலே முடிகிறது’,  ‘தொடங்காமலே முடிகிறது இக்கதை’, ‘முடிகிறது இக்கதை தொடங்காமலே’ என எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம்.

கோவிட் பரவலுக்கு முன்பு 2019 சென்னை புத்தகக் கண்காட்சியில் இரண்டாவது புத்தகமும் வெளியானது. நாங்கள் எழுதிய இரண்டு புத்தகங்களுமே எங்கள் சொந்த வெளியீடுதான். அதுவாகவே பல மேடைகளை எடுத்துப் பயணித்தது.என் குடும்பத்தில் யாரிடமும் எழுத்து இருந்ததாகத் தெரியவில்லை. எங்களுக்கு எழுத வந்தது. இது ஒரு கூட்டுக் கலவை. மூவருமாக இணைந்து எழுதுதல், வரைதல், பிழைதிருத்தம், புத்தக வடிவமைப்பு என பங்காற்றினோம்.  

‘ஜீன்ஸ்’ படம் பிரசாந்த் மாதிரி எங்கள் இருவரையும் வீட்டில், ஒரே உரை ஒரே உணவுன்னு வித்தியாசம் இல்லாமல் பெற்றோர் வளர்த்தார்கள். குழந்தைப் பருவத்தில் தாத்தாவிடம் தொடர்ச்சியாக கதைகேட்டு வளர்ந்தோம். தாத்தா நிறைய விஷயஞானம் உள்ளவர். அவரிடத்தில் சொல்ல கதைகள் நிறைய இருந்தது. கதை கேட்கும்போது யார் தூங்கினாலும், விழித்திருந்தவர் தூங்கியவருக்கு மறுநாள் அதே கதையைச் சொல்ல வேண்டும். இதுவே பின்னாளில் எங்களை எழுதத் தூண்டி இருக்கும்...’’ என கார்த்திகேயன் முடிக்க, சந்துரு தொடர்ந்தார்.

‘‘கதை தீர்ந்தால் பழைய கருப்பு வெள்ளை எம்.ஜி.ஆர் பட அண்ணன் தம்பி கதைகளை புனைவாக தாத்தா சொல்லுவார். இது வளர்ந்தபின்தான் எங்களுக்குத் தெரியவந்தது! இப்படித்தான் அண்ணன் தம்பி பாசம் எங்களுக்குள் ஊட்டப்பட்டது. 2020. கொரோனா லாக்டவுன் கொஞ்சமாகத் தளர்ந்து, இறுக்கமான சூழல் இருந்த நேரம் அது. எங்களின் இரண்டு புத்தகமும் சேர்ந்து வீடு முழுக்க புத்தகமாக இறைந்து கிடக்க, ஏன் நமது புத்தகத்தை நாமே விற்கக்கூடாது என முடிவு செய்து திருவண்ணாமலை கிரிவலப் பாதையின் ஸ்டோன் பெஞ்சில் கடைவிரித்தோம்.

முதல் நாளே நல்ல ரெஸ்பான்ஸ். 10 முதல் 15 புத்தகங்கள் விற்பனையானது. சைலன்ட்டான ரீடர்ஸ் நிறைய வந்தாங்க. பெஞ்சுல இருந்த புத்தக விற்பனையை புல்லட்டுக்கு மாற்றும் எண்ணத்தைக் கொடுத்தது வித்யா. இதை எப்படி பண்ணலாம் என மூவருமாக ஸ்கெட்ச் போட்டோம். கிடைக்கும் இடத்தில் புல்லட்டை நிறுத்தி, இரண்டு பக்கமும் குச்சி சொருகி, நடுவில் கட்டப்படும் கொடியில் புத்தகங்களைத் தொங்கவிட்டோம்.

கிரிவலப்பாதையில் எங்களுக்குன்னு ஒரு ஆடியன்ஸ் உருவாக ஆரம்பித்தார்கள். புத்தகம் வாங்குவதற்காகவே சிலர் தொடர்ச்சியாக வந்தார்கள். வண்டியை எங்கு நிறுத்தினாலும் குறைந்தது 5 புத்தகமாவது விற்பனை ஆகிவிடும். 2 மணி நேரம் ஒரு நாளைக்கு நின்னாலே எங்களுக்குப் போதுமானதாக இருந்தது. சென்னை, மதுரை புத்தகக் கண்காட்சிகளில் கிடைப்பதைவிட மூன்று மடங்கு வருமானம் ஒரு பெளர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிடைத்தது.

மக்கள் வாசிப்பைக் குறைக்கவில்லை, நாம்தான் மக்களுக்கு தூரத்தில் வாசிப்பை வைத்திருக்கிறோம். மக்களுக்கு பக்கமாக எவ்வளவு நெருக்கத்தில் இருக்கிறோமோ, அவ்வளவுக்கு நாம் அவர்களை அடைகிறோம் எனப் புரிந்தது.அடுத்ததாக புல்லட்டோடு வித்யாவின் சைக்கிளையும் அருகில் நிறுத்தி அதையும் புக் ஸ்டாலாக்கினோம். ஒவ்வொரு முறையும் 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் புதுப்புது மனிதர்கள் கிடைத்தார்கள். நட்பு வட்டம் விரிவடைய, மூவரின் கதைகளை அவர்களும், அவர்கள் கதைகளை நாங்களும் கேட்போம்.

திருவண்ணாமலை சாதுக்களும் எங்களிடம் புத்தகம் வாங்கினார்கள். புல்லட்டை திருவண்ணாமலையோடு நிறுத்தாமல், சென்னை பயணித்து, திருவான்மியூர் பீச், பெசன்ட் நகர் பீச், மெரினா பீச், பாண்டிபஜார் என கடை விரித்ததில், புல்லட் புக் ஸ்டால் சென்னை மக்களிடமும் பரவலானது. புத்தகம் வாங்க கடைக்குச் செல்ல யோசிப்பவர்களும் புல்லட் வண்டியில் இருக்கும் புத்தகத்தைப் பார்த்து சுலபமாக வாங்கினார்கள். ஒருமுறை மெரினாவில் மீன் விற்கும் அக்கா புத்தகம் வாங்கினார்!  

இந்த நிலையில் அறிமுகம் இல்லாத புதிய எழுத்தாளர்களின் புத்தகத்தையும் விற்பனைக்குக் கேட்டு வாங்கினோம். செல்ஃப் பப்ளிஷர்ஸ் புத்தகங்கள் 200, 300 என்று குவிய, நாங்கள் படித்து இதை மக்களுக்கு சேர்க்க வேண்டும் என நினைத்த புத்தகங்களையும் அத்துடன் இணைத்தோம். கொரோனா அலையில் சிக்கிய முக்கிய பதிப்பகங்களும் எங்களைக் கேள்விப்பட்டு, விற்பனைக்கு அணுகினார்கள். இப்போது 500க்கும் மேற்பட்ட தலைப்புகளில் எங்களிடத்தில் புத்தகம் கிடைக்கிறது!

ஒரு பேக்கில் புத்தகங்கள், ஒரு பேக்பேக்கில் உடைகள் என புல்லட்டில் கிளம்பினால், பாண்டிச்சேரி, திருச்சி, மதுரை, கோவை, கேரளா என எங்கள் எல்லைகள் விரியும். சாலையோர உணவகங்களில் சாப்பிடும் நேரத்தையும், டீ குடிக்கும் நேரத்தையும் புல்லட் ஸ்டாலோடுதான் நிறைவு செய்வோம். புல்லட் எங்கே நகர்கிறது என்பதை இன்ஸ்டாவில் பதிவிடுவோம். ஒருமுறை நானும் வித்யாவும் ‘கமான் பேபி லெட்ஸ் கோ இன் த புல்லட்டு’ என கன்னியாகுமரி, நாகர்கோயில், கேரளா என 2000 கிலோமீட்டர் தூரத்தை 10 இரவு 11 பகலாக பயணித்தோம்!  

இதுவரை புத்தகம் எங்களை வறுமையில் வைக்கவில்லை. மூவரின் தேவைகளையும் புத்தக விற்பனை வருவாயில்தான் நிறைவேற்றுகிறோம். விற்பனையை பிரமாண்டப்படுத்தாமல், எளிதில் மக்களை அடையும் விதத்தில் செய்யவே விரும்புகிறோம்...’’ என்கிறார் சந்துரு.இப்போது இம்மூவரும் சின்னதாக புத்தகக் கடை ஒன்றை திருவண்ணாமலையில் தொடங்க இருக்கிறார்கள். கூடவே சிறிய கன்டெய்னர் மொபைல் புக் ஷாப்பை இணைக்கும் திட்டமும் இருக்கிறதாம்.

மகேஸ்வரி நாகராஜன்