கேப்ரில்லா to சுந்தரி… மனம் கவர்ந்த மக்கள் நாயகி



சமீபத்தில் ‘சன் குடும்பம்’ விருதுகளில் மக்களின் ‘மனம் கவர்ந்த நாயகி’ விருது பெற்றவர் கேப்ரில்லா செல்லஸ். ஆனால், இந்த நிஜப்பெயர் அவருக்கே மறந்துவிடும்போல! அந்தளவுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அவரின் ரசிகர்கள் வரை பலரும் சுந்தரி என்றே அழைக்கின்றனர்.அப்படியொரு பிணைப்பை மக்களிடம் ‘சுந்தரி’ சீரியல் ஏற்படுத்திவிட்டது. அதில் அவ்வளவு அழகாக நடித்து மக்களை வெகுவாகக் கவர்ந்துவிட்டார் கேப்ரில்லா.

‘‘இந்த பெயருக்கும் புகழுக்கும் மக்கள் மட்டும்தான் காரணம். ஏன்னா, அவங்ககிட்ட உண்மையான திறமையை காட்டினால் போதும். நிச்சயம் நம்மை ஏத்துப்பாங்க. நீ கலரா இருக்கியா... ஸ்டைலா இருக்கியானு எல்லாம் அவங்க ஒருபோதும் பார்க்கிறதில்ல. ‘நல்லா நடி. உனக்கு சப்போர்ட் பண்றோம்’னு எதார்த்தமா இருக்காங்க. அவங்கள நம்பிதான் ‘சுந்தரி’ பண்ணிட்டு இருக்கேன்...’’ என ஊர்த் தமிழில் கலகலவெனச் சொல்லும் கேப்ரில்லாவிடம் நடிப்பிற்குள் எப்படி என்றதும், ‘அதெ ஏன் கேட்குறீக...’ எனச் சிரித்தபடி ஆரம்பித்தார்.

‘‘திருச்சி அல்லித்துறைதான் என் சொந்த ஊர். அப்பா பீட்டரும், அம்மா மேரி கிளாராவும் பள்ளித் தலைமையாசிரியர்கள். நான்கு தலைமுறையாகவே ஆசிரியர் குடும்பம்தான். ஆனா, எனக்கு படிப்பு வரல. ஐந்து சப்ஜெக்ட்னா மூணுல ஃபெயிலாகிடுவேன். எனக்கு ஒரு அண்ணன் இருக்கார். அவர் பெயர் ஆண்டனி எடின்பரோ. என்னைவிட ரெண்டு வயசு மூப்பு. அவர் ரொம்ப நல்லா படிப்பார். பி.இ முடிச்சிட்டு இப்ப சாப்ட்வேர்ல வொர்க் பண்றார். அவருக்குத் திருமணமாகி ரெண்டு குழந்தைகள் இருக்கு.

நான் சின்ன வயசுல ரொம்ப டிவி பார்ப்பேன். பள்ளியில் ஆசிரியர்கள் சொல்ற முதல்வார்த்தையே அதிகம் டிவி பார்க்கக்கூடாது என்பதுதான். ஆனா, நான் முக்கால்வாசி நேரம் டிவியில்தான் நேரத்தை செலவிட்டேன். எனக்கு சினிமாவுல சேரணும்னு ஆசை வரல. அந்த டிவிக்கு உள்ளே போய் நடிக்கணும்னு நினைப்பேன்.
12ம் வகுப்பு முடிச்சதும் ஒரு காலேஜ்ல பி.ஏ ஆங்கிலம் சேர்ந்தேன். ஆறுமாசம்தான் போனேன். அதிலும் கிளாஸ்க்கு போகமாட்டேன். கல்ச்சுரல்ஸ்ல கலந்துப்பேன். அப்ப காலேஜ் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்ல இருந்தேன். ஸ்கிட், மைம்னு நிறைய பண்ணினேன்.

ஆரம்பத்துல அப்பா டான்ஸ் எல்லாம் ஆடக்கூடாதுனு சொன்னார். அதனால, வீட்டுக்குத் தெரியாமல் எழுதி வச்சிட்டு சென்னைக்கு  ஓடி வந்துட்டேன். என் தோழி ஒருத்தி சென்னையில் இருந்தாள். அவள், ‘இங்க வந்திடுடி. டான்ஸ் சேர்ந்து படிக்கலாம்’னு சொன்னதால நம்பி வந்தேன். ஊர்ல என்ன பேசுவாங்கனு கூட நினைக்கல. அதைவிட பெரிய தப்பு அம்மாவைப் பத்தி யோசிக்காமலே வந்ததுதான். ஆனா, இங்க வந்த அஞ்சு மணி நேரத்துல அப்பா அட்ரஸை கண்டுபிடிச்சு இரவோடு இரவா அழைச்சிட்டு போயிட்டார்.

அம்மா எனக்கு பெரிய சப்போர்ட். என்னை ஒருமுறைகூட அடிச்சதில்ல. அம்மாகிட்ட வந்ததும் என்கிட்ட பேசினாங்க. என்னைப் புரிஞ்சுகிட்டு தைரியம் சொன்னாங்க. அப்புறம் அந்த காலேஜ்ல இருந்து இடைநின்று இன்னொரு காலேஜ்ல நமக்கு பிடிச்சமாதிரி படிக்கலாம்னு விஸ்காம் சேர்ந்தேன்.

ஆனா, அங்கேயும் எதுவும் பிடிக்கல. சென்னைக்கு போனாதான் சரியா இருக்கும்னு நினைச்சேன். பெற்றோரின் சம்மதம் ப்ளஸ் ஆசீர்வாதத்துடன் வந்தால் மட்டுமே நல்லா நடக்கும்னு தோணுச்சு. அதனால, அந்தக் கல்லூரியில் இருந்து நின்னுட்டேன். அப்பா, அம்மா சம்மதத்துடன் சென்னைக்கு வந்தேன். இப்ப டிகிரிக்காக கரஸ்ல ஃபேஷன் டெக்னாலஜி முடிச்சிருக்கேன்.    

நான் தினமும் ப்ரேயர் பண்ணிட்டுதான் படுப்பேன். இதை என் சந்திரா அம்மாச்சிதான் கத்துத் தந்தாங்க. இரவு படுக்கப் போகும்போது, ‘சினிமாவில் சேரப் போவதற்காக தேங்க்யூ இயேசப்பா’னு சொல்வேன். ஒண்ணு நடக்கணும்னா, நடந்தமாதிரி நினைக்கணும்னு அம்மாச்சி சொல்லித் தந்தாங்க. அதை இப்பவும் நான் ஃபாலோ பண்ணிட்டு வர்றேன். அதாவது நாம் நினைக்கிற ஒரு விஷயத்திற்கு அதுவே கூட்டிட்டு போகும்...’’ என நெகிழ்கிறவர், சென்னைக்கு வந்து வாய்ப்புத் தேடி அலைந்து அதில் பல ஏமாற்றங்களையும் சந்தித்திருக்கிறார்.

‘‘சென்னைக்கு வந்ததும் காலேஜ்ல படிச்சப்ப தியேட்டர் டீம்ல எங்களுக்குப் பயிற்சி அளிச்ச சீனியரின் தொடர்பு மூலமா இங்கேயும் தியேட்டர் டீம்ல சேர்ந்தேன். அப்புறம், ஒரு ஆன்லைன் சேனல்ல விஜேவா இருந்தேன். பிறகு, ஜான் பிரதீப் அண்ணாவின் மேட்ரிக்ஸ் தியேட்டர் டீம்ல சேர்ந்தேன். அங்க போயிட்டு முதல்ல தெருக்கூத்து பண்ணினேன். கிடைக்கிற நேரங்கள்ல ஒவ்வொரு சேனலா போய் ரெஸ்யூம் கொடுத்திட்டு வர்றதும், போட்டோ எடுத்திட்டுப் போய் ஒவ்வொரு ஆஃபீஸா அலையிறதுமா இருந்தேன். சிலநேரம் ஆடிஷன் கூட எடுக்கமாட்டாங்க. ஆடிஷன் வச்சாதான் நம்மை நிரூபிக்க முடியும். அது நடக்காது. பார்த்துட்டு சொல்றோம்னு அனுப்பிடுவாங்க.  

இந்நேரம், ஒரு காமெடி ரியாலிட்டி ஷோல செலக்ட்டானேன். அங்க டாப் 15வது நபரா வந்து எலிமினேட் ஆனேன். அதுல சில எபிசோட் நல்லா ரீச் ஆச்சு. நிறைய ரெஸ்பான்ஸும் கிடைச்சது. ஆனா, என் முகம் வெளியில தெரியல. ஒரு ஆர்ட்டிஸ்ட்டிற்கு முக்கியமானது அவங்க வெளியில் வரும்போது பார்த்ததும் கண்டுபிடிக்கிறமாதிரி இருக்கணும். அந்த அடையாளப்படுத்துதல் இல்லாமல் இருந்தது. அதன்பிறகு குறும்படங்கள் நிறைய பண்ண ஆரம்பிச்சேன்.

டிவியில் வொர்க் பண்ணும்போது அங்குள்ள துணை, உதவி இயக்குநர்கள் குறும்படங்கள் எடுக்கிறப்ப என்னை அணுகுவாங்க. அப்படியாக நிறைய வாய்ப்புகள். அதுல ‘உண்மை அறிவாயா வண்ணமலரே’னு ஒரு குறும்படத்திற்கு பாலுமகேந்திரா சார் பெயர்ல கொடுக்கப்படுற ‘பாலுமகேந்திரா விருது’ வாங்கினேன். இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட குறும்படங்கள் நடிச்சிருக்கேன். எல்லாமே விருது வாங்கியிருக்கு. அது கடவுள் எனக்கு தந்த கிஃப்ட்னு சொல்லணும். அப்புறம், இந்த குறும்பட இயக்குநர்கள் எல்லாருமே படத்துல உதவி இயக்குநரா வேலை செய்யும்போது எனக்கு வாய்ப்பு கொடுத்தாங்க.

அப்படிதான் ‘ஐரா’ படத்துல சின்ன வயசு நயன்தாராவா நடிச்சேன். அடுத்து, ‘கே.டி என்கிற கருப்புத்துரை’, ‘செத்தும் ஆயிரம் பொன்’ பட வாய்ப்புகள் அமைஞ்சது.
இன்னும் நல்லா ஓடலாம்னு வாய்ப்புக்காக நிற்கும்போது சிலருக்கு உருவ ரீதியான எதிர்பார்ப்புகள் இருந்துச்சு. உயரமா இருக்கணும், ரொம்ப ஸ்டைலிஷா இருக்கணும்னு நினைச்சாங்க. அதனால ரிஜெக்‌ஷனாச்சு. ஆனா, யாரும் அதை என் மூஞ்சிக்கு நேரா  சொன்னதில்ல. நான் ரொம்பப் பெருமையா நினைக்கிறது என் ஸ்கின்தான். என்னை வேண்டாம்னு நிராகரிச்சால் கூட, சரி அவங்க தேவை இப்படியா இருக்குதுபோலனு எளிதா எடுத்திட்டு வந்திடுவேன்.

எனக்கு எப்பவும் என்மேல் ரொம்ப நம்பிக்கை உண்டு. என்னை எப்பவும் மட்டமா நினைக்கமாட்டேன். என்னை யாருமே பார்க்கலனு நினைச்சால்தானே அப்படி தோணணும். காலேஜ்ல படிக்கிறப்பவே நிறைய பேர் ப்ரப்போஸ் பண்ணியிருக்காங்க. சில பசங்க விரட்டியிருக்காங்க. அதனால நான் என்னை எந்தவிதத்திலும் குறைச்சலா நினைச்சது கிடையாது. அப்படி யாராவது சொன்னால் என் பதில் என்னாவா இருக்கும்னா இப்பவரை கனவுக்கன்னி சில்க் ஸ்மிதாதான். அவங்கள தாண்டி பேரழகி யாரும் கிடையாது. அவங்க கலர் டஸ்க்கி ஸ்கின்தான்னு சொல்வேன்...’’ என்கிறவர், சட்டென சுந்தரியாக மாறிவிட்டார். ஒரு ஷாட் முடித்துவிட்டுத் திரும்பியவர் மீண்டும் கேப்ரில்லா கதைக்குள் வந்தார்.  

‘‘அதனால, எனக்கான கதை வரும்னு நம்பிக்கையா காத்திருந்தேன். தியேட்டர்ல கவனம் செலுத்தினேன். எனக்கு எழுதுறது ரொம்பப் பிடிக்கும். ஏன்னா, என் தாத்தா சிறப்பா கட்டுரை எழுதுவார். அவரும் தலைமையாசிரியர்தான். அவர் ரேடியோவில் நாடகம் போடுவார். அவர்கிட்ட இருந்துதான் எழுத்து எனக்கு வந்திருக்கும்னு நினைக்கிறேன். நமக்கான பிளாட்ஃபார்மை நாமே கிரியேட் பண்ணலாம்னு வேலை செய்தேன்.

நான் நல்லா வாயடிப்பேன். ஊர்க்கார தமிழ் நல்லா வரும். அதை பயன்படுத்தி லாக்டவுன் அப்ப ‘கடிதாசிக்காரி’னு ஒரு நிமிட கன்டென்ட்டை நானே எழுதி, படிச்சு டிக்டாக்ல போட்டேன். அந்த வீடியோக்கள் பல லட்சம் வியூவ்ஸ் போச்சு. அதுதான் எனக்கு ‘சுந்தரி’ வாய்ப்பை பெற்றுத் தந்தது.  அதுல நிறத்தைப் பத்தி பேசியிருப்பேன். அப்ப ‘சுந்தரி’ கதைக்கு டார்க் ஸ்கின் டோன்ல ஒரு பொண்ணு வேணும்னு தேடியிருக்காங்க. அப்ப நிறைய பக்கங்கள்ல இருந்து இந்தப் பொண்ணை பாருங்கனு என்னை ரெஃபர் செய்திருக்காங்க.

அந்நேரம் ஊர்ல செட்டிலாகிட்டேன். அதிகமா இருந்த தலைமுடியைக் கூட பாய்கட் மாதிரி செய்திட்டேன். அப்பதான் ‘சுந்தரி’ பண்ண கால் வந்தது. முன்னாடி எனக்கு சீரியல் பண்ணணும்னு எண்ணம் இல்லாம இருந்தது. ஆனா, என் சந்திரா அம்மாச்சிக்காக ‘சுந்தரி’ ஒத்துக்கிட்டேன். அவங்களுக்கு சீரியல்னா ரொம்பப் பிடிக்கும். கொஞ்சம் கொஞ்சமா ‘சுந்தரி’ மக்கள்கிட்ட ரீச்சாகி, இப்ப நல்லபடியா போகுது...’’ என்கிறவர், திருமணம் செய்தது பற்றி பேசினார்.

‘‘இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாடி திருமணமாச்சு. என் கணவர் பெயர் ஆகாஷ். அவர் துணை ஒளிப்பதிவாளரா இருக்கார். ஒரு ஷூட்டிங்ல பழக்கமானோம். சினிமாவில் ஜெயிக்கணும், நிறைய விஷயங்கள் பண்ணணும்னு நினைக்கிறவர். அதை என்கிட்ட ஷேர் பண்ணுவார்.  ஒருநாள் அவர் ‘கல்யாணம் பண்ணிக்கலாமா’னு கேட்டார்.

ரெண்டு பேரின் அலைவரிசையும் ஒண்ணா இருந்ததால நானும் ஓகே சொன்னேன். அவங்க அப்பா தாமோதரன் மூத்த பத்திரிகையாளர். ‘நக்கீரன்’ல இருக்கார். உடனே தாமோதரன் அப்பாகிட்ட பேசினேன். அவர், ‘ஊர்ல உள்ள விஷயங்கள் பத்தியெல்லாம் எழுதிட்டு இருக்கேன். என் பையன் என்ன பண்றான்னு தெரியாதாமா’னு கேட்டார். எனக்கு அவர் பெரிய சப்போர்ட். என்னை அவருக்கு ரொம்பப் பிடிக்கும்.

இப்ப என் கணவர், தனுஷ் சார் நடிக்கிற ‘கேப்டன் மில்லர்’ படத்துல இணை இயக்குநரா வேலை செய்திட்டு இருக்கார். அவருக்கு பாலுமகேந்திரா சார் மாதிரி டைரக்‌ஷன் ப்ளஸ் சினிமாட்டோகிராபரா வரணும்னு ஆசை...’’ என்கிற கேப்ரில்லாவிடம் அவர் ஆசையைக் கேட்டோம். ‘‘இப்ப நான் மைம் பயிற்சியாளரா இருக்கேன். அதுக்காக, ‘கருப்பழகி தியேட்டர் பேக்டரி’னு ஒரு குழுவை தொடங்கி கடந்த ரெண்டு ஆண்டுகளா பண்ணிட்டு வர்றேன். இதன்வழியா விழிப்புணர்வு வீடியோவா உருவாக்கி அப்லோடு செய்றோம்.

என் கனவு ஆசையெல்லாம் ‘கருப்பழகி தியேட்டர் பேக்டரி’ பெயர்ல ஒரு நாடகக் கம்பெனி உருவாக்கணும். அப்புறம், நடிப்பை சிறப்பா செய்யணும்...’’ என உற்சாகமாக அதே சிரிப்புடன் சொல்கிறார் ‘சுந்தரி’ கேப்ரில்லா.   

சுந்தரிக்குப் பிடிச்சது...

ஊர்: அல்லித்துறைதான் ரொம்பப் பிடிக்கும். காரணம், அங்க போனா ஒரு நிம்மதியை உணர்வேன்.
சீரியல்: ‘சுந்தரி’தான். ஏன்னா, இதை நான் ஒரு திரைப்படம் மாதிரி பார்க்குறேன்.
உணவு: புளி சாதமும், பிரியாணியும். காம்பினேஷன் நல்லாயிருக்குல.  

சமையல்: இப்பதான் கத்துக்கிட்டு இருக்கேன். அம்மா சமையல் ரொம்பப் பிடிக்கும். மட்டன் பிரியாணி செமயா பண்ணுவாங்க.
அதேமாதிரி என் வீட்டுக்காரர் ஆகாஷ் ரொம்ப நல்லா சமைப்பார். அவர் செய்ற மத்தி மீன் குழம்பு அவ்வளவு சுவையா இருக்கும்.  
உடை: மாடர்ன் டிரஸ்ஸும் போடுவேன், சேலையும் அணிவேன். ஆனா, மாடர்ன் டிரஸ் விரும்பிப் போடுவேன்.

நடிகர்: வடிவேல் சார்தான். நான் இன்ஸ்பிரேஷனா நினைக்கிறது அவரைத்தான்.
நடிகை: சரோஜாதேவி அம்மாவும், மனோரமா அம்மாவும் ரொம்பப் பிடிக்கும். அவங்க வழி வரணும்னுதான் நினைக்கிறேன். படம்: இயக்குநர் சிகரம் பாலசந்தர் சாரின் ‘கல்கி’ படம்.

இயக்குநர்: கணவர்தான். ரொம்ப சிந்தனைமிக்க மனிதர். நிச்சயம் ஒருநாள் பிரகாசிப்பார்.
பொழுதுபோக்கு: எழுதுறது. அப்புறம், உட்கார்ந்து ஊர் கதை பேசறது.

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்: ஆர்.சந்திரசேகர்