கிளாமராய் வாழி காவேரி! திவ்யா துரைசாமி ஜாலி டாக்



‘‘முற்போக்கு எண்ணம், பெண்ணியம், பெண் சுதந்திரம்... எல்லாம் மெட்ரோ சிட்டி, நகரத்து மக்கள்கிட்டேதான் இருக்கும்னு நினைச்சேன். இதை என் அப்பா, அம்மாவே உடைச்சாங்க.
ஆமா... பெரிதா நகரத்து வாழ்க்கையெல்லாம் தெரியாத, ரொம்ப சின்ன வட்டத்துக்குள்ள வாழ்ந்தவங்க, நான் என்ன நினைக்கிறேனோ அதைச் செய்ய அவ்ளோ சப்போர்ட் கொடுத்தாங்க...’’ பூரிக்கிறார் திவ்யா துரைசாமி.‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’, ‘எதற்கும் துணிந்தவன்’, ‘குற்றம் குற்றமே’ என திவ்யாவின் கரியர் கிராஃப் மட்டுமல்ல, போட்டோகிராஃப்களும் இணையத்தில் டிரெண்டாகிக் கொண்டிருக்கின்றன.

காவிரி நதிக்கரையிலே பிறந்த பெண்ணாமே நீங்க?

யெஸ். பிறந்தது திருச்சில. அப்பா துரைசாமி மின்வாரியத்துல வேலை செய்து ரிடையரானவர். அம்மா சிந்தாமணி ஹவுஸ் ஒயிஃப். இன்ஜினியரிங் படிக்க சென்னை வந்தேன். காலேஜ் முடிஞ்சதும் வேலை, சம்பளம் இந்த எண்ணம் வந்துச்சு. ஒரு கம்பெனிக்காகவும் காத்திட்டு இருந்தேன். என் கூட படிச்சவங்கல்லாம் ஐடி கம்பெனில சேர ஆரம்பிச்ச நேரம் சன் டிவில நியூஸ் ரீடர் வேலைக்கான விளம்பரம் பார்த்தேன்.

ஏன் முயற்சிக்கக் கூடாதுன்னுதோ ணுச்சு. முதல் இன்டர்வியூவிலேயே செலக்ட் ஆகி ஆரம்பமே ரூ. 25,000 சம்பளம். செம ஹேப்பி. என்கூட படிச்சவங்கல்லாம் ரூ.10,000, ரூ.15,000க்கு வேலை செய்ய ஆரம்பிச்சப்ப எனக்கு சூப்பர் சம்பளம். கூடவே ஃபேமஸ் வாழ்க்கை வேற. அதைத் தொடர்ந்து அரசு சார்ந்த அத்தனை மேடை நிகழ்ச்சிகள்லயும் நான்தான் ஆங்கர்.
எப்படி சினிமா என்ட்ரி நடந்தது?

டிவி, அடுத்தடுத்து மீடியா வேலைகள், இருக்கற அத்தனை நியூஸ் சேனல்களிலும் வேலைனு பயணப்பட்டேன். அதனுடைய அடுத்த ஸ்டெப் சீரியல்ல நடிக்கலாமேன்னு தோணுச்சு. ஆனா, ஏன் மறுபடியும் சின்னத்திரைலயே திட்டமிடணும்... நடிக்கலாமேன்னு யோசிச்சேன். நானா முயற்சியை ஆரம்பிக்கறதுக்குள்ளயே எனக்கு வாய்ப்பு தேடி வந்திடுச்சு. ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’ படத்துல ‘ஹீரோயின் ஃபிரெண்ட் கேரக்டர்... நடிக்கிறீங்களா’ன்னு டைரக்டர் ரஞ்சித் ஜெயக்கொடி சார் கேட்டார்.

அப்படி ஆரம்பிச்சு தொடர்ந்து சின்னச் சின்ன கேரக்டர் வந்துட்டே இருந்துச்சு. அப்பறம்தான் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திலே யாழினி கேரக்டர். தொடர்ந்து ‘குற்றம் குற்றமே’ படம் வரையிலும் வந்தாச்சு. ‘எதற்கும் துணிந்தவன்’ இன்டர்வல் சீன்ல சூர்யா சார் என்னைத்தான் தூக்கி தோள்ல போட்டுட்டு ஸ்லோ மோஷன்ல நடந்து வருவார். அந்த ஃப்ரேம் என்னை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கிச்சு.

ஆங்கர், மீடியா, சினிமா... வீட்டில் எப்படிப்பட்ட ரியாக்‌ஷன் கிடைச்சது?

நான் இந்த ஸ்டேஜ் வந்திருக்கேன்னா அதுக்குக் காரணம் என் அப்பா, அம்மாதான். மீடியா, சினிமா இதெல்லாம் சொல்லும் போதே பயப்படுவாங்கன்னு நினைச்சேன். ஆனா கூலா ‘ஓ சூப்பர்மா... சன் டிவியா, வாழ்த்துகள்... சூர்யா சார் படமா சூப்பர்...’னு ரியாக்‌ஷன் கொடுத்தாங்க. பெண் சுதந்திரம், பெண்கள் நினைச்சதை செய்யலாம்னு எல்லாம் கோட்பாட்டு ரீதியா தெரியாமயே தங்கள் வாழ்க்கைப் போக்குல செய்தாங்க; செய்யறாங்க. அவங்க இல்லாம நான் இல்ல.

அடுத்தடுத்த படங்கள்..?

ஒரு வெப் மூவி நடிச்சிட்டு இருக்கேன். நீலம் புரடக்‌ஷன்ல ஒரு புராஜெக்ட் போகுது. ஆனா, அது சஸ்பென்ஸ். சீக்கிரம் சொல்றேன்.

நீங்க செம டயட் பேர்வழியாமே?மீடியாவுல இருக்கும்போது பெரிசா அதிலே ஆர்வம் இல்ல. எப்ப சினிமாதான் வாழ்க்கைன்னு ஆகிடுச்சோ அப்பவே ஹெல்த்தி வாழ்க்கை முக்கியம்னு மாறிட்டேன். கார்டியோ, வாக்கிங், ஜாக்கிங் எல்லாமே உண்டு. டயட்டும் சரியா எடுத்துப்பேன். இப்ப ஓரளவுக்கு நானே எந்த ஃபுட் கட் செய்தா எந்த பார்ட் குறையும்ங்கற அளவுக்கு தெரிஞ்சு வைச்சிருக்கேன்.  சினிமாவில் உங்கள் எதிர்பார்ப்பு என்ன?

வாழ்க்கைல எல்லாத்துக்கும் ஒரு அட்டம்ப்ட் கொடுப்பேன். அது தானா நடந்தாலும் ஏத்துப்பேன். அப்படித்தான் இனிமேலும். எந்த எதிர்பார்ப்பும் இல்லை. எனக்கு நல்ல நடிகைன்னு பெயர் வாங்கிக் கொடுக்கற எந்த கேரக்டரா இருந்தாலும் ஓகே. கிளாமர் புகைப்படங்கள், கேரக்டர்களுக்கு வரும் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்றீங்க..?

அதை நான் பார்க்கறதும் இல்ல; நெகட்டிவ் கமெண்ட்களுக்கு பெரிசா ரியாக்‌ஷன் கொடுக்கறதும் இல்ல. நெகட்டிவ் கமெண்ட்கள் என் படத்துக்கும், நடிப்புக்கும் இருந்தா நிச்சயம் அதை கண்டுபிடிச்சு சரி செய்துக்குவேன். முடிஞ்ச வரைக்கும் பாசிட்டிவா இருக்கறதுதான் எனக்குப் பிடிக்கும்.
 

ஷாலினி நியூட்டன்