பார் விளம்பரம்... வெப்சைட் கேம்...

‘‘ஒரு நாவல்ல முதலும் முடிவும் இருந்து, இடையில சில பக்கங்கள் மிஸ்ஸாகியிருந்தா சஸ்பென்ஸா இருக்கும் இல்லையா..? அதே போல ஒரு மனிதனோட வாழ்க்கையில சில காலம் மட்டும் என்ன ஆனதுன்னு தெரியாத கதையைத்தான் என் படத்துல சொல்லியிருக்கேன்..!’’ என்கிறார் லியோ விஷன் புரொடக்ஷன்ஸின் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ இயக்குநர் பாலாஜி தரணிதரன். ‘சவுண்டு எஃபெக்ட்’டில் 2000 படங்களுக்கு மேல் ஈடுபட்டிருக்கும் லியோ விஷன் நிறுவனம், படத்தயாரிப்பு நிறுவனமாக மாறியதற்கும் பாலாஜி சொன்ன ஸ்கிரிப்ட்தான் காரணம். அந்த ஸ்கிரிப்ட்டை எழுதுவதற்கும் அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்தான் காரணமாம். அது பற்றிப் பேசினார் பாலாஜி.
‘‘சென்னை ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல நான் எடிட்டிங் படிக்கும்போது சினிமாடோகிராபி படிச்ச பிரேம்குமார் எனக்கு நண்பரானார். ரெண்டு பேருமே ஸ்டேட் அவார்டு வாங்கி வெளியே வந்தோம். அவர் ஊரறிஞ்ச ஒளிப்பதிவாளராகி, ‘பசங்க’ படத்து மூலம் தேசம் அறிஞ்ச ஒளிப்பதிவாளரும் ஆகிட்டார். நான் ‘வர்ணம்’, ‘ஏன் இப்படி மயக்கினாய்’ படங்களுக்கு வசனகர்த்தாவா ஆனேன். பத்து வருஷங்களுக்கும் மேல் தொடர்ந்த எங்க நட்பிலிருந்தே ஒரு அழகான ஒரு கதை கிடைக்க, அதை ஸ்கிரிப்ட் ஆக்கினேன். அதுல ஹீரோ பிரேம்குமார்தான். இந்தக்கதை படமானா நானே ஒளிப்பதிவு பண்றேன்னார். நாலுபேர் கொண்ட எங்க நண்பர்கள் குழுவில எங்க ரெண்டு பேர் தவிர கௌதம் மேனன் அஸிஸ்டன்ட் பகவதியும், சரத்காந்த்ங்கிறவரும் இருக்காங்க. கதையை வி.எஸ்.ராஜ்குமார்கிட்ட சொன்னப்ப உடனே தயாரிக்க ஒத்துகிட்டார்.
பிரேம்குமார் கேரக்டர்ல ‘தென்மேற்குப் பருவக்காற்று’ விஜயசேதுபதி நடிக்க, பகவதி கேரக்டர்ல பகவதியே நடிக்கிறார். மத்த கேரக்டர்கள்ல ராஜா, விக்னேஷ் நடிக்கிறாங்க. ‘ஏன் இப்படி மயக்கினாய்’, ‘18 வயசு’, ‘பொன்மாலைப்பொழுது’ ஹீரோயின் காயத்ரி ஹீரோயினா நடிக்கிறாங்க. கதைப்படி நடுவில ஹீரோ இழக்கிற விஷயங்கள்ல காதலியும் அடக்கம். அப்படி அவன் ஆனதுக்கு நண்பர்களும் ஒரு காரணமா இருந்து, அதே நண்பர்கள் அதிலிருந்து அவர் மீண்டு வரவும் துணை புரியறதுதான் கிளைமாக்ஸ். இப்படி நண்பர்கள் கிடைச்சா மொட்டை மாடியிலேர்ந்து குதின்னா கூட ஒருத்தன் குதிச்சுடுவான்ங்கிற அளவுக்கு நட்பைப் போற்றும் படம். ஆனா ஒரு இடத்துலயும், ‘நட்புன்னா என்ன தெரியுமா..?’ங்கிற மாதிரி க்ளிஷே வசனங்கள், காட்சிகள் வராம பாத்துக்கிட்டிருக்கோம். ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்கூல்ல சவுண்ட் எஞ்சினியரிங் படிச்ச வேத்சங்கர், படத்துல வர்ற ஒரே டைட்டில் பாடலையும், புரமோஷனுக்கு மூணு பாடல்களையும் இசைச்சிருக்கார். பேஸ்புக்ல டீஸர், பார்கள்ல விளம்பர போஸ்டர்கள், வெப்சைட் போனீங்கன்னா பஸில் விளையாட்டுன்னு புதுசா விளம்பரப்படுத்தறோம். எங்க நாலு பேருக்கு மட்டுமே தெரிஞ்ச ஒரு கதையை உலகத்துக்கு சொல்லத்தான் இந்த ஏற்பாடு..!’’ ஜி
|