‘‘என் வீட்டு பாத்ரூம்தான் உலகத்திலேயே எனக்குப் பிடித்த இடம்’’ என்கிறார் நடிகை தியா மிர்ஸா. ‘‘அமைதியான இடம். யாருடைய தொந்தரவும் அங்கு இருக்காது. நிம்மதியாக அங்கு உட்கார்ந்து மணிக்கணக்கில் புத்தகங்கள் படித்திருக்கிறேன். அதற்குத் தகுந்த மாதிரி விசாலமாகவும் அழகாகவும் பாத்ரூமை டிசைன் செய்திருக்கிறேன்’’ என்கிறார் அவர்.
தனது 25வது பிறந்தநாளை அமர்க்களமாகக் கொண்டாடி இருக்கிறார் கங்கனா ரணாவத். ‘‘சினிமாவுக்கு வந்து 8 வருஷங்கள் ஆகிவிட்டன. எனக்கும் ஒருநாள் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்கும் ஆசை இருக்கிறது’’ என்று சொல்லும் கங்கனா இப்போது தீவிர காதலில் இருக்கிறார். காதலர் நிக்கோலஸ் ஒரு டாக்டர். ‘‘எனக்குக் கல்யாணத்தில் நம்பிக்கை இல்லை. ரெண்டு பேர் காதலிச்சா, அவங்க சேர்ந்து வாழ வேண்டியதுதானே! அந்த உறவுக்கு ஒரு பேர் வச்சு, சில சடங்குகளும் செய்யணுமா என்ன?’’ என்று அதிர வைக்கிறார்.
விக்ரமின் ‘தாண்டவம்’ படத்தில் அனுஷ்கா தவிர இன்னொரு ஹீரோயினாக நடிக்கும் எமி ஜாக்சனுக்கு ஆக்ஷன் காட்சிகள் நிறைய இருக்கிறதாம். இதற்காக தீவிரமாக சண்டைப் பயிற்சி எடுத்து வருகிறார் எமி.
‘ஸ்தலம்’ என்ற ஒரே ஒரு மலையாளப் படத்தில் மட்டும் இப்போது நடித்து வருகிறார் ஜோதிர்மயி. மாங்குரோவ் காடுகளைக் காப்பாற்றப் போராடும் சுற்றுச்சூழல் போராளி வேடமாம். ‘‘இந்தக் கேரக்டருக்காக எனக்கு நிச்சயம் விருது கிடைக்கும்’’ என்கிறார் ஜோ.

சமீரா ரெட்டி முன்பெல்லாம் தண்ணீரைக் கண்டாலே அலறுவார். இதனாலே நீச்சலும் கற்றுக் கொள்ளவில்லை. ‘தேஸ்’ படத்தில் முக்கால்வாசிக் காட்சிகள் தண்ணீருக்குள்ளும் தண்ணீரைச் சுற்றியும் எடுக்கப்படுவதால் வேறு வழியில்லை. நீச்சலோடு நீர் விளையாட்டுகள் சகலத்தையும் கற்றுக்கொண்டு, தண்ணீருக்கடியில் சண்டைக் காட்சிகளில் நடித்து அசத்தியிருக்கிறார்!