பில்லா 2 சினிமா விமர்சனம்





ஏற்கனவே இரண்டு முறை வெளியான ‘பில்லா’வின் வெற்றி, அந்தப் பாத்திரத்தின் மீது ரசிகர்களுக்கு இருக்கும் ஈர்ப்பைக் காட்டுவதாக அமைய, ‘பில்லா’வின் ஃபிளாஷ்பேக் சொல்லி கல்லாவை நிரப்பிக்கொள்ள ஒரு ப்ரீக்குவெல் கதையை இதில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சக்ரி டொலெட்டி. கான்செப்ட் ஓகேதான்... ஆனால் கதை..? அங்கேதான் சறுக்கியிருக்கிறது யானை.

டேவிட் பில்லா இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர் என்கிறார்கள். அதையும் கூட தைரியமாகச் சொல்லாமல் ‘பவளத்துறை’யிலிருந்து வருவதாகச் சொல்கிறார்கள் - புரிந்துகொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும் என்கிற முன்னெச்சரிக்கையுடன். டேவிட் பில்லாவாக அறியப்படும் அஜித்திடம் முகாமில் ஒரு காவல் அதிகாரி விவரம் கேட்கிறார். தன் பெயரைக் கூட ஜேம்ஸ்பாண்ட் பாணியில் ‘‘பில்லா... டேவிட் பில்லா...’’ என்றும், ‘‘எங்கிருந்து வர்றே..?’’ என்றால் ‘‘கடலிலிருந்து...’’ என்றும் நக்கலாகவே பதில் சொல்லும் அவர், பெற்றோர் பெயரைக் கேட்கும்போது மௌனம் சாதிக்கிறார். அதிகாரி கடுப்பாகி, ‘‘அப்ப அனாதையா நீ..?’’ என்றதும் அவரை அஜித் ஒரு முறை முறைக்கிறார் பாருங்கள்... பின்னால், அந்த ஒரே கேள்விக்காக அந்த அதிகாரியைப் போட்டுத் தள்ளவும் செய்கிறார்.



புலம் பெயர்ந்து தமிழகம் வந்த ஒரு இலங்கைத் தமிழன் ஒரு தவறான அதிகாரியால் வைரக்கடத்தலில் சிக்க வைக்கப்பட்டு, அதன் விளைவாக ஸ்டேட் லெவலில் வைரக்கடத்தல் மன்னனாகி, பின்னர் நேஷனல் லெவலில் போதை மருந்து கடத்தல் தாதாவாகி, தொடர்ந்து இன்டர்நேஷனல் லெவலில் ஆயுத வியாபாரம் செய்யும் டானாக மாறுவதுதான் பில்லாவின் கதையாம்.

கேரக்டரைசேஷனிலும், ‘பில்லாவின் பிரச்னைதான் என்ன... வந்த இடத்தில் சக தமிழனுடன் கூட ஒன்ற முடியாத அளவுக்கு ஏன் இறுமாப்புடன் திரிகிறார்..?’ என்பதற்கெல்லாம் பதிலே இல்லை. அவருடன் இருப்பவர்கள் கிடைக்கும் வேலைக்குப் போக, அவர் மட்டும் ‘‘சம்பளம் அதிகமா தருவியா..?’’ என்கிறார். ‘‘அளவுக்கு மீறி ஆசைப்படுறே...’’ என்று அறிவுறுத்தப்படும்போது, ‘‘ஆசை இல்ல... பசி!’’ என்கிறார். பசி இருப்பவன் பஜ்ஜியைத் திருடினால் மன்னிக்கலாம்; பாரதத்தையே தலைகுனியச் செய்தால்..?

ஒண்ட இடம் கொடுத்தவர்களுக்கு எதிராக தன்னிஷ்டத்துக்கு முடிவுகள் எடுத்து, அதை எதிர்த்தால் அவர்களையே போட்டுத் தள்ளும் அவர், நாட்டுக்கு நல்லது செய்ய நினைக்கும் முதலமைச்சரையும் தனக்கு உடன்படாத காரணத்துக்காகக் கொல்வது வன்முறையின் உச்சம். ஒரே ஒரு துப்பாக்கியை வைத்துக்கொண்டு ஆயுதக்கடத்தல் தடுப்புப் படையையே துவம்சமாக்கும் அவர் ஆற்றலுக்கு, இலங்கையிலேயே இருந்திருந்தால் தமிழீழமே வாங்கிக் கொடுத்திருக்கலாமே என்றுதான் தோன்றுகிறது. 

ஒப்புக்காவது நியாயம், தர்மம் காக்கப்படாத படத்தில் பாராட்டுவதற்கு விஷயங்களைத் தேட வேண்டியிருக்கிறது. தமிழ் நடிகர்களில் அஜித் மட்டுமே டான் வேடத்துக்குப் பொருத்தமானவராக இருப்பதையும், கிளைமாக்ஸில் டூப் இல்லாமல் அவர் போட்டிருக்கும் ஹெலிகாப்டர் சண்டைக் காட்சியையும் பாராட்டலாம். வில்லன்களில் மனோஜ் கே.ஜெயன், சுதன்ஷு பாண்டே, தினேஷ் லம்பாவின் நடிப்பு நன்று. ஹீரோயின்களில் பார்வதி ஓமனக்குட்டன் அழுது கொண்டேயிருக்கிறார். இன்னொரு ஹீரோயின் புரூனா அப்துல்லாவும், ஜார்ஜியா வில்லன் வித்யுத் ஜம்வாலும் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள். பாடல்கள் சுமாரான படத்தில், பின்னணி இசையும், ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவும் ஆங்கிலப் பட சாத்தியத்தைத் தந்திருக்கின்றன.

ஆனால் தமிழ் ரசிகனுக்கு நல்ல தமிழ்ப்படம் எடுக்கத் தெரியாதவர்கள் தமிழில் ஆங்கிலப்படம் எடுத்து என்ன பயன்..?
- குங்குமம் விமர்சனக்குழு