தப்பு செய் வாய்ப்பில்லாத எல்லோருமே நல்லவர்கள்தான்





‘‘ஒவ்வொரு மனுஷனுக்கும் மூன்று முகங்கள் இருக்குன்னு நான் நம்பறேன்... சமுதாயத்துக்குத் தெரிஞ்ச ஒரு முகம்; குடும்பத்துக்குத் தெரிஞ்ச இன்னொரு முகம்; இவற்றோட, யார்கிட்டேயும் பகிர்ந்துக்க முடியாம தனக்குள்ளேயே வச்சிருக்கற ஒரு ரகசிய முகம். அந்த மூன்றாவது முகம் வெளியே தெரிஞ்சா சமுதாயமும் குடும்பமும் தன்னைப் பத்தி என்ன நினைக்குமோங்கிற தயக்கத்துல அதை ஒரு முகமூடி போட்டு வச்சிருக்கோம். அப்படி ஒரு மனிதனின் கதை இது...’’ என்கிறார் இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி ஹீரோவாகும் ‘நான்’ படத்தின் இயக்குநர் ஜீவா சங்கர்.

‘ஜீவா..?’
- நீங்கள் நினைப்பது சரி... மறைந்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஜீவாவேதான். ‘வாலி’ தொடங்கி அவரிடம் பதினொரு படங்களுக்கு ஒளிப்பதிவில் உதவியாளராக இருந்து, ‘ஆனந்த தாண்டவம்’ படத்தில் ஒளிப்பதிவாளரான சங்கர், ஜீவாவின் வழியிலேயே இயக்குநராகவும் இந்தப் படத்தில் அவதாரம் எடுத்திருக்கிறார். அவரது நினைவாகவே ‘ஜீவா சங்கர்’ என்றும் ஆகியிருக்கிறார்.



‘‘தனியா பண்ண ‘ஆனந்த தாண்டவம்’ படத்தை அடுத்து டைரக்டராகணும்னு முடிவெடுத்து ரெடி பண்ணிய ஸ்கிரிப்ட்தான் இது. கொஞ்சம் ‘டார்க் ஃபிலிமான’ இதுல தனுஷ், ஆர்யா, கார்த்தி போல நடிகர்கள் கிடைச்சா நல்லா இருக்கும்னு முயற்சிகள்ல இருந்தப்பதான் விஜய் ஆன்டனியை தற்செயலா மீண்டும் சந்திச்சேன். இதுல ‘மீண்டும்’ங்கிறதுக்குப் பொருள், அவர் என்னோட ஏற்கனவே விஸ்காம்ல படிச்சவர். ஒளிப்பதிவாளராகணும்ங்கற ஆசையில நான் படிக்கும்போதே ஜீவா சார்கிட்ட வேலைக்குப் போனதைப் போலவே, அவரும் படிக்கும்போதே சவுண்ட் எஞ்சினியருக்கான பயிற்சியில இருந்தார்.

மீண்டும் நாங்க சந்திச்சப்ப எங்கள் நோக்கத்துல வெற்றியடைஞ்சவர்களா இருந்தோம். நான் படம் டைரக்ட் பண்ற முயற்சியை சொன்னப்ப, அவர் நடிக்கும் ஆசையைச் சொல்லி, அவரே அந்தப் படத்தைத் தயாரிக்க இருக்கிறதா சொன்னார். அவரால நடிக்க முடியுமான்னு எனக்கு சந்தேகம் வரலை. ஏன்னா, அவரோட நடிப்பார்வம் காலேஜ் டேஸ்லேர்ந்தே எனக்குத் தெரியும்.

பொதுவா மனிதர்களை நல்லவன், கெட்டவன்னு பிரிச்சுக்கறோம். ஆனா ஒரே மனிதனுக்குள்ளே, நல்லதும் கெட்டதும் கலந்தேதான் இருக்கு. தப்பு செய்ய வாய்ப்பு இல்லாதவரை எல்லோருமே நல்லவர்கள்தான். சமுதாயமும், சூழ்நிலையும்தான் அதை முடிவு பண்ணுதுங்கிற இந்த ஹார்ட்கோர் த்ரில்லர் படத்துக்கு காமெடி, காதல்னு வழக்கமான உணர்வுகள் தேவையில்லைன்னு தோணிச்சு. எடுத்துக்கிட்ட களத்துல சொல்ல வேண்டிய விஷயத்தை ரெண்டரை மணி நேரம் சுவாரசியமா சொல்ல முடிஞ்சாலே அது என்டர்டெயின்மென்ட்தான்ங்கிறது என் எண்ணம். அதைப் படம் முடிஞ்ச இந்த சூழல்ல நம்பிக்கை வச்சே சொல்ல முடிஞ்சிருக்கு.

இது பாடல்களுக்கான படம் இல்லைன்னாலும், அவர் சிக்னேச்சரா அஞ்சு அட்டகாசமான பாடல்கள் படத்துல இருக்கு. இசையமைப்பாளரா அவருக்கு 25வது படமா அமையற இதுல, பின்னணி இசையில மலைக்க வைச்சிருக்கார். இருந்தும் இசையைத் தாண்டி இந்தப்படத்துல அவருக்கு இருக்கிற தவிப்பு, நல்ல நடிகனா அடையாளப்படணும்ங்கிறது தான். அதே போல எட்டரை வருடங்கள் நான் கத்துக்கிட்ட சினிமாவில ஒளிப்பதிவாளரா நான் ஜெயிக்கிற அவசியத்தைத் தாண்டி, இயக்குநரா அடையாளப்பட நினைக்கிறேன். இதெல்லாம் சாத்தியமானதுக்குக் காரணம், விஜய் ஆன்டனியே தயாரிப்பாளரா அமைஞ்சு எனக்கு சர்வ சுதந்திரம் கொடுத்ததுதான்.



ரூபா மஞ்சரி, அனுயா, சித்தார்த், விஜய் விக்டர், விபா, கிருஷ்ணமூர்த்தின்னு ஆறுபேர் முக்கிய கேரக்டர்கள்ல வர, விஜய் ஆன்டனி தன்னோட நடிப்பால தனியாளா இந்தப்படத்தைத் தோள்ல தாங்கியிருக்கார்னு சொன்னா அது அதிகபட்சமான புகழ்ச்சியா இருக்காது. இந்த வருடத்துல சிறந்த நடிகர்களா ரெண்டு பேரைத் தேர்ந்தெடுக்க நேர்ந்தா, அதுல ஒருத்தரா விஜய் ஆன்டனி நிச்சயம் இருப்பார்..!’’
- வேணுஜி