குழந்தை கடத்தல்!





அரிசிக் கடத்தலைவிட சுலபமாகி விட்டது குழந்தை கடத்தல். மருத்துவமனைகளில், பள்ளி வாயில்களில், பேருந்து நிலையங்களில் என எல்லா இடங்களிலும் குழந்தை கடத்தல் நெட்வொர்க் பரந்து விரிந்து செயல்படுகிறது. உலகில் ஒவ்வொரு ஆண்டும் 35 லட்சம் குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். இதில் இந்தியாவே முன்னிலை வகிக்கிறது. பெண் குழந்தை கடத்தலில் தென்னிந்திய அளவில் தமிழகத்துக்கே முதலிடம்.

கோணிப்பையும், மயக்க மருந்துமாக வந்து பிள்ளை பிடிப்பதெல்லாம் அந்தக்காலம். இப்போது குழந்தை கடத்தலின் வடிவம் மாறிவிட்டது. இந்த கடத்தல் நெட்வொர்க் எப்படி இயங்குகிறது... எந்த நோக்கத்துக்காகக் குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள்... கடத்தப்படும் குழந்தையின் கதி என்னவாகிறது..?

குழந்தைக் கடத்தலுக்கு எதிரான பிரசாரத்தின் முன்னாள் தேசிய அமைப்பாளர் நம்பி, குழந்தைகள் நலச் சங்க முன்னாள் தலைவர் டாக்டர் மனோரமா, பெண் குழந்தை கடத்தலுக்கு எதிராக இயங்கிவரும் ‘ஜஸ்ட் ட்ரஸ்ட்’ இயக்குனர் ஜெபராஜ் ஆகியோரிடம் பேசினோம். அந்தக் கொடூர நிழல் உலகத்தை கண்முன் விரித்து வைக்கிறார்கள் அவர்கள்...

எச்சரிக்கை!


உலகில் அதிக லாபம் தரக் கூடிய தொழில்கள் மூன்று. ஆயுத விற்பனை, போதைப்பொருள் கடத்தல், மனிதக் கடத்தல். மனிதக் கடத்தலில் பிரதானமானது குழந்தை கடத்தல்தான். கண்டம் விட்டு கண்டம் கூட குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள்.  

கடத்தலில் 3 வகை

குழந்தை கடத்தலில் 3 வகையுண்டு. மிரட்டி பணம் பறிக்க, பணயமாகக் குழந்தைகளைக் கடத்துவது, வறுமையைப் பயன்படுத்தி படிப்பு - வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி கடத்துவது, யாருமறியா வகையில் தூக்கிச் செல்வது... பணம் பறிக்க கடத்தும் சம்பவங்களில் பெரும்பாலும் தெரிந்தவர்கள்தான் ஈடுபடுகிறார்கள். இதற்கும், பிற கடத்தல் வகைகளுக்கும் வேறுபாடுண்டு. மருத்துவமனை, பள்ளிகள், பொது இடங்களில் கடத்திச் செல்வதும், வாக்குறுதி கொடுத்து அழைத்துச் சென்று, குழந்தையை விற்பனை செய்வதும்தான் டேஞ்சர்.

6 அலர்ட் ஏரியா

தமிழகத்தைப் பொறுத்தவரை விழுப்புரம், கடலூர், மதுரை, தென்காசி, சேலம், தர்மபுரி, சென்னை பெல்ட்களில் கடத்தல் அதிகம் நடக்கிறது.

எப்படி நடக்கிறது?
இது நீளமான நெட்வொர்க். ஒவ்வொருவரும் அவரவர் வேலை முடிந்தவுடன் விலகி விடுவார்கள். முதலில் ‘ஸ்பாட்டர்’. இவர் உள்ளூரில் நன்கு அறிமுகமான நபராக இருப்பார். வறுமையில் தவிப்பவர்கள், நிறைய குழந்தைகளை வைத்துக்கொண்டு அல்லாடும் குடும்பங்களைக் குறிவைத்து சில உதவிகளைச் செய்து நல்ல பெயர் எடுப்பார். ஒரு கட்டத்தில், ‘‘ஏன் இப்படி சிரமப்படுகிறீர்கள். பெரிய பணக்காரர் வீட்டில் 3 மாதக்குழந்தை இருக்கிறது. அதோடு விளையாடிக் கொண்டிருந்தால் போதும். அவர்களே படிக்கவும் வைப்பார்கள். நல்ல சாப்பாடு, துணி எல்லாம் கிடைக்கும்...’’ என்கிறமாதிரி சொல்லி மூளைச் சலவை செய்வார். கையில் கொஞ்சம் பணத்தை வாங்கிக் கொடுத்து, அருகில் உள்ள நகரத்தில் வேறொருவரிடம் குழந்தையை ஒப்படைப்பதோடு இவர் வேலை முடிந்தது. கணக்கு செட்டில் செய்யப்படும். அந்தக் குழந்தை எங்கே செல்கிறது என்பதெல்லாம் இவருக்குத் தெரியாது.

குழந்தையைப் பெற்றுக் கொள்பவர் பிரக்யூரர். இவர் குழந்தையை அழைத்துச் சென்று டிரான்ஸ்போர்ட்டரிடம் விடுவார். அதோடு இவர் வேலை முடிந்தது. டிரான்ஸ்போர்ட்டர், முதலில் குழந்தைக்கு துணி வாங்கித்தருவது, சினிமாவுக்கு அழைத்துச் செல்வது என்று குஷிப்படுத்துவார். ரயிலிலோ, விமானத்திலோ போகும்போது போலீஸிடம் மாட்டிக்கொண்டால் குழந்தை தன்னைக் காட்டிக் கொடுத்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த கவனிப்பு. பின்னர், எங்கு தேவை இருக்கிறதோ அங்கு பேரம் நடக்கும். முடிந்தவுடன் ஹார்பரரிடம் குழந்தையை ஒப்படைத்து விடுவார். இவர்தான் குழந்தையின் ஒட்டுமொத்த முதலாளி. அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்படும் குழந்தைகளும் இந்த வழியில்தான் ஹார்பரரைச் சென்றடைகிறது.

விலை
நான்கைந்து மாதக் கைக்குழந்தையாக இருந்தால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு லட்சங்களில் விலை பேசி விற்று விடுவார்கள். முன்பு, உடல் உறுப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவது உண்டாம். தற்போது அது இல்லை. 


கொத்தடிமை

3 முதல் 10 வயது வரையிலான ஆண் குழந்தைகள் கொத்தடிமைகளாக அனுப்பப்படுவார்கள். ஆந்திர முறுக்குத் தொழிற்சாலைகள், வடமாநில இறால் பண்ணைகள், ஹோட்டல்கள், மொசைக் கம்பெனிகளுக்கு விற்கிறார்கள். ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களுக்கு விவசாய வேலைகளுக்கும் கடத்தப்படுகிறார்கள். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வேலை... போதிய சாப்பாடு தரமாட்டார்கள். சற்று தடுமாறினாலும் அடி, உதை; கொதிக்கும் எண்ணெயை ஊற்றுவது, சூடு வைப்பது; ரொம்ப முரண்டு பிடித்தால் மரணம்தான் முடிவு!

பிச்சை

பிச்சைத் தொழில் மாபியாவாக வளர்ந்துள்ள காலம் இது. கடத்தப்படும் குழந்தைகளில் பாதிக்கும் மேலானோர் பிச்சையெடுக்கவே அனுப்பப்படுகிறார்கள். பரிதாபம் கூட்டுவதற்காக உடல் உறுப்புகளை சிதைக்கும் கொடூரமும் நடக்குமாம். 

போதைப்பொருள் கடத்தல்
குழந்தைகள் மீது சந்தேகம் விழாது என்பதற்காக போதைப்பொருள் கடத்துவதற்கு இவர்களைப் பயன்படுத்துவதும் நடக்கிறதாம். அதற்கு முன்பாக குழந்தைகளையும் போதைக்கு அடிமையாக்கி விடுவார்களாம். இதற்காக வெளிநாடுகளுக்கு குழந்தைகளை கடத்துகிறார்கள்.

வீட்டு வேலை கொடூரம்
கடத்தப்படும் பெண் குழந்தைகள் வீட்டு வேலைக்கு விற்கப்படுவதும் உண்டு. இவ்வாறு விற்கப்படும் குழந்தைகள் நரகத்தை அனுபவிப்பார்கள். சிறு தவறுக்கும் அடி உதை, சூடு, வீட்டு உரிமையாளர்கள், பிற பணியாளர்கள் மத்தியில் பாலியல் கொடுமைகள்...

பாலியல் வியாபாரம்
இது மிகப்பலமான நெட்வொர்க். பல ரகங்கள் உண்டு. ‘பீடோஃபைல்ஸ்’ எனப்படும் குழந்தைகள் மீது ஈர்ப்புள்ளவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். 3 வயது வரையுள்ள குழந்தைகள்தான் இவர்களின் இலக்கு. இதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார்கள். கோவாவில் இது அதிகம் நடப்பதாகச் சொல்கிறார்கள்.

பெண்களிடம் தங்கள் ஆண்மையை நிரூபிக்க முடியாதவர்களும் குழந்தைகளையே நாடு கிறார்கள். இவர்களின் விருப்பம் ஆண் குழந்தைகள். தமிழகத்தின் கடலோர கலைநகரத்துக்கு இதற்கெனவே வெளிநாட்டினர் வருவதாகவும் செய்தியுண்டு. அடுத்து விபசாரம். 8 முதல் 12 வயதுள்ள பெண் குழந்தைகளுக்கு இங்கு கடும் கிராக்கியுண்டாம். கன்னித் தன்மைக்கான விலை. மும்பை, டெல்லி, கொல்கத்தா, குஜராத் மாநிலங்களில் இந்தச்சந்தை கொடிகட்டிப் பறக்கிறது. முதலில் மது, போதை, போர்னோகிராபி படங்களுக்கு குழந்தைகளை அடிமையாக்கி களத்தில் இறக்குவார்களாம். எக்காலத்திலும் இவர்களிடம் இருந்து தப்ப முடியாது.

குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் போர்னோகிராபிக்கு உலகம் முழுவதும் பெரும் மார்க்கெட். குழந்தைகளை வெளிநாட்டுக்குக் கொண்டுசென்று போர்னோகிராபி படங்கள் தயாரிப்பதும் நடக்கிறதாம். 

தத்தெடுப்பு மையங்கள்
தமிழகத்தில் உள்ள பல தத்தெடுப்பு மையங்கள் முறைகேடாக செயல்படுவதாக புகார்கள் வருகிறது. குழந்தைக் கடத்தல் விவகாரத்தின் பின்னணியில் இதுபோன்ற சில மையங்கள் இருப்பதாகவும் புகார்கள் உண்டு. 

கடும் சட்டம் தேவை
மதுக் கடத்தலுக்கு எதிராகக் கூட காவல்துறையில் தனிப்பிரிவு உண்டு. ஆனால், சிபிசிஐடி போலீசார்தான் குழந்தை கடத்தல் வழக்குகளை விசாரிக்கிறார்கள். குழந்தை கடத்தல் தடுப்புப் பிரிவு, தண்டிக்க தனியாகச் சட்டம் உருவாக்க வேண்டும். கடத்தலில் உள்ள பல வடிவங்கள் பற்றி போலீசாருக்கு விழிப்புணர்வு வழங்கவேண்டும்.
- வெ.நீலகண்டன்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்

வீடுகளில்
*  அறிமுகமற்ற நபர்களிடம் பேசுவதும், அவர்கள் தரும் பொருட்களை வாங்குவதும் ஆபத்து என்று பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.

*  பிள்ளைகள் வெளியில் விளையாடும்போது கண்காணிப்பில் வைத்திருங்கள்.

*  பள்ளிக்குள் குழந்தைகள் செல்லும்வரை நின்று கவனியுங்கள்.

*  மொபைல் நம்பர்களை கற்றுக்கொடுங்கள்.

*  குட் டச், பேட் டச் பற்றிச் சொல்லிக் கொடுங்கள்.

*  ஸ்கூல் பஸ் டிரைவர், குழந்தையின் ஃபிரண்ட்ஸ் வீட்டு மொபைல் நம்பரை கையில் வைத்துக் கொள்ளுங்கள்.

*  தெருக்களில் புதிய நபர்கள் நடமாடினால் காவல்நிலையத்துக்கு தகவல் கொடுங்கள்.

*  கூட்டமான இடங்களில் குழந்தையை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

*  திடீர் கரிசனம் காட்டும் மனிதர்களை நம்பாதீர்கள்.

*  படிக்க வைப்பதாகவோ, வேலை வாங்கித் தருவதாகவோ தரும் வாக்குறுதிகளை நம்பி குழந்தையை யாருடனும் அனுப்பாதீர்கள்.

பள்ளிகளில்
*  ஆட்டோ, வேன் டிரைவர்கள், வாட்ச்மேன்களுக்கு பள்ளி நிர்வாகம் அல்லது காவல்துறை அடையாள அட்டை வழங்க வேண்டும். திடீரென இவர்கள் வேலையை விட்டு விலகினால் பெற்றோருக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

*  பள்ளி வளாகத்தைச் சுற்றிலும் கேமராக்கள் வைக்க வேண்டும்.

*  பள்ளி விட்டதும் குழந்தைகளை வாகனத்தில் ஏற்றும் பொறுப்பை ஒரு ஆசிரியர் கண்காணிக்க வேண்டும்.