திருப்புமுனை





‘‘சரியான நேரத்தில், சரியான இடத்தில் இருந்தால்தான் ஜெயிக்கமுடியும்னு சொல்லுவாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் அப்படி இல்லை. நான் தப்பான நேரத்தில், தப்பான இடங்களில் இருந்துதான் வாய்ப்புகளைத் தேடி இருக்கேன். ‘இதுதான் வேணும்’னு மனசார நம்பி, அதுக்காகவே உழைச்சிட்டிருந்தா, எல்லா இடமும் சரியான இடம்தான்; எல்லா நேரமும் சரியான நேரம்தான்!’’
- தன்னுடைய போட்டோக்களைப் போலவே அழகாகப் பேசுகிறார் வெங்கட்ராம். ‘கற்றலே இன்பம்’ என்று தேடித்தேடிக் கற்றுக் கொண்டிருக்கும் ரசிகன். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என இந்திய திரை நட்சத்திரங்களின் விருப்பத்திற்குரிய புகைப்படக் கலைஞன்.

‘‘அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் இப்படியெல்லாம் இருக்கணும்னு யோசிக்கத் தெரியாதவனை, ‘பிழைக்கத் தெரியாதவன்’னுதான் உலகம் சொல்லும். நான் அப்படி அப்பா, அம்மா, சொந்தபந்தம், நட்பு என அத்தனை பேரையும் கவலைப்பட வச்சிருக்கேன். தாத்தா டாக்டர். அப்பா எஞ்சினியர். அம்மா பொதுப்பணித்துறையில் அரசு ஊழியர். இப்படி ஒரு குடும்பத்தில் பிறந்த பையன், ஆவரேஜ் மார்க் வாங்கவே திக்கித் திணறினால், கவலை வரத்தானே செய்யும்? என்னை, ‘இந்தி சீரியல் நடிகரா இருப்பாரோ’ன்னு பலர் சந்தேகத்தோட பார்ப்பாங்க. நான் பக்கா மெட்ராஸ்காரன். வட சென்னையின் ஜார்ஜ் டவுன் ஏரியாதான், நான் வாழ்க்கையைக் கற்ற பல்கலைக்கழகம்.

சொல்லிக்கொள்ளும்படி தனிப்பட்ட ஆர்வம் எதுவும் இல்லாத பள்ளி மாணவனா வளர்ந்தேன். மாமா ஒருத்தர் அமெரிக்காவுல இருந்தார். அவர் வாங்கிக் கொடுத்த கேமராவில், நேரம் கிடைக்கும்போது அப்பா போட்டோ எடுப்பார். மேலோட்டமாக இல்லாமல், கேமராவின் நுணுக்கம் அறிந்து, லென்ஸ், ஷட்டர்ஸ்பீடு போன்றவற்றைத் தெரிந்து போட்டோ எடுத்தார். அவரிடம் அதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்டேன். அப்ப அதுக்கு மேல ஆர்வம் போகலை. டிஜிட்டல் கேமரா மாதிரி இஷ்டத்துக்கு போட்டோ எடுத்துத் தள்ள முடியாது. விலைகொடுத்து ஃபிலிம் ரோல் வாங்கறதும், அதை நெகட்டிவா டெவலப் பண்றதும், போட்டோவா பிரிண்ட் பண்றதும் செலவு பிடிக்கற விஷயம். வீட்லயே கேமரா இருந்தும் அடிக்கடி பயன்படுத்தாமப் போனதுக்கு அதுவும் ஒரு காரணமா இருக்கலாம்.

பத்தாம் வகுப்பு முடிஞ்சதும் டாக்டராவோ, எஞ்சினியராவோ ஆகிறதுக்கு பிளஸ் 2வுல மதிப்பெண் அவசியம். மாணவர்களை அதிக மதிப்பெண்கள் எடுக்க வைக்கிற பள்ளியில் சேர்த்தார்கள். என் பழைய பள்ளி, குறைவான மாணவர்கள் நிறைவான ஆசிரியர்கள் என்று இருந்தது. புதிய பள்ளியில் ஏழு செக்ஷன்களில் வகுப்புகள். ஒன்றிலிருந்து பத்து வரை உள்ள வகுப்புகளின் மாணவர் எண்ணிக்கையைவிட, மேல்நிலைப் பள்ளியின் இரண்டு வகுப்புகளின் மாணவர் எண்ணிக்கை அதிகம் இருந்தது. பிரிட்டிஷ் பின்னணி உள்ள ஆங்கிலோ இண்டியன் பள்ளியில் விசாலமான வகுப்பறை, ரசனையான பெஞ்ச் எனப் பழகிய எனக்கு, இடித்துக்கொண்டு உட்காரும் வகுப்பறை நெரிசல் மிகுந்த மார்க்கெட் போலத் தெரிந்தது. இத்தனைக்கும் சென்னையின் பிரபல பள்ளிகளில் படித்த மாணவர்கள் நிறைய பேர், மார்க் அதிகம் எடுத்து எஞ்சினியரிங், மெடிக்கல் சேரும் கனவோடு அந்தப் பள்ளிக்கு வந்திருந்தார்கள்.



கல்லூரிகளில் போல, அந்தப் பள்ளியின் மாணவர் தேர்தல் முறையாக நடக்கும். தேர்தலில் நிற்கும் மாணவர்கள் பிரசாரம் செய்வார்கள்; துண்டு பிரசுரங்கள் அச்சடித்து வழங்குவார்கள்; சுவரில் விளம்பரம் செய்து வாக்கு சேகரிப்பார்கள். மினி கவுன்சிலர் தேர்தலுக்குரிய பரபரப்புகள் இருக்கும். ஒருமுறை வகுப்பில் கணக்கு ஆசிரியர் ஒரு மாணவனை வரைமுறை மீறித் திட்டினார். நான் எந்த
விதத்திலும் அந்த சம்பவத்தில் சம்பந்தப் படவில்லை. ஆனாலும், ‘உங்க மேலதான் தப்பு சார். நீங்க அப்படிப் பேசக்கூடாது’ என்று தானாக முன்வந்து எதிர்ப்பு தெரிவித்ததும், மொத்த வகுப்பும் என் பின்னால் நின்றது. பூனைக்கு முதல் ஆளாக மணி கட்டியதால் மாணவர்கள் மத்தியில் ஒரே நாளில் பிரபலம் ஆனேன். எனக்குள் அப்படி ஒரு எதிர்ப்புணர்வு அத்தனை நாள் எங்கே ஒளிந்திருந்தது என எனக்கே தெரியவில்லை. தினம் சண்டைகளையும் வசவுகளையும் பார்த்து வளர்ந்த வடசென்னைப் பையன் என்பதால் இயல்பாக அது இருந்திருக்கலாம். பள்ளியில் அது வெளிப்பட, மாணவர் தலைவனாக என்னை நிற்கும்படி மற்றவர்கள் வற்புறுத்தினார்கள். நானும் ஒப்புக்கொண்டேன்.

வீட்டில் என்னைப் பார்த்து மிரண்டு போனார்கள். சண்டை, தேர்தல் என்று மகன் புதிய அவதாரம் எடுப்பான் என்பதை அவர்கள் எதிர்பார்க்கலை. என் பெற்றோரிடம் இருந்த நல்ல பழக்கம், ‘வேண்டாம்’ என்று சொல்வார்களே தவிர, வற்புறுத்த மாட்டார்கள். யாரும் எதிர்பார்க்காத அதிரடி முடிவுகளை நான் எடுத்தபோதுகூட, ‘நீ இதைத்தான் பண்ணணும்’ என வற்புறுத்தியதில்லை. வீட்டிற்கு விருப்பம் இல்லாமல் போனாலும், தேர்தலில் போட்டியிட்டேன். பள்ளி வளாகத்தில் ஒரு டூ வீலரை நிறுத்திவிட்டு, அதன் மேல் ஏறி, ‘நான் இதையெல்லாம் செய்வேன்’ என்று பிரசாரம் செய்ய, சுற்றி நின்று மாணவர்கள் கைதட்டிய அனுபவம் முற்றிலும் பரவசமானது. 45 சதவீத வாக்குகள் பெற்று வெற்றியடைந்தேன். மாணவர் தலைவனாக தினம் ஒரு பிரச்னையை சரிசெய்து கொடுக்க வேண்டிய பொறுப்பில், படிப்பின் தரம் முன்பு இருந்ததைவிடக் குறைந்தது. பிளஸ் 2 பொதுத்தேர்வில், நான் எதிர்த்த கணக்கு ஆசிரியரின் பாடத்தில் பார்டரில் பாஸ் ஆனேன். தமிழகத்தில் இப்போது தடுக்கி விழுந்தால் ஏதாவது ஒரு எஞ்சினியரிங் கல்லூரியில்தான் விழணும். அப்போ இந்த சூழல் இல்லை. மகாராஷ்டிர மாநிலம் சோலாபூர் அருகில் ஒரு தனியார் எஞ்சினியரிங் கல்லூரியில் சேர்ந்தேன்.
நீச்சல் தெரியாத ஒருவனை குண்டுக்கட்டாகத் தூக்கி கிணற்றில் எறிந்ததைப் போல இருந்தது கல்லூரி அனுபவம். எல்லா மாநிலத்திலிருந்தும் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்கள் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும்? ரெண்டு வாக்கியங்கள் ஆங்கிலத்தில் ஒழுங்காகப் பேசாத ஆசிரியர்கள், ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்த எனக்கு விநோதமாக இருந்தார்கள். கரும்பு விவசாயம் நடக்கிற மகாராஷ்டிராவின் பகுதி, மழைக்காலத்தில் தோகைவிரித்தாடும் மயிலைப் போல வசீகரமாக மாறியது. தூறல் போடுகிற நாளில், ஏற்ற இறக்கங்களான மலைப்பாதையில் நடக்கிற அனுபவத்திற்கு எவ்வளவு வேண்டுமானாலும் விலை தரலாம். தனக்கான மழை வரும்வரை பொறுத்திருந்து, பூமியைப் பிளந்து முளைக்கிற விதையைப்போல, எனக்குள் ஒளிந்திருந்த கலை ஆர்வத்திற்கு அந்த இயற்கை எழில் உயிர் கொடுத்தது. நண்பர்களின் கேமராவை எடுத்துக்கொண்டு தனியாக நடந்து போய், இயற்கையை ரசிக்க ஆரம்பிச்சேன். 

‘பையன் நல்லா படிச்சிட்டிருக்கான்’ என்று நம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலாண்டு தேர்வு முடிவுகள் அதிர்ச்சி வைத்தியமாக இருந்தது. பெரும்பாலான பாடங்களில் பெயில். ‘எனக்கு இது ஒத்து வராது’ என்று கைதூக்கி நின்ற என்னைக் கலவரத்துடன் பார்த்தார்கள். ‘ஆர்வத்துக்கு போட்டோ எடுத்துக்கோ. வாழ்க்கைக்கு படிச்சிக்கோ’ என்று சொல்லிப் பார்த்தார்கள். ‘ஆர்வம், வாழ்க்கை, படிப்பு... இனி எல்லாமே கேமராதான்’ என்று உறுதியாக இருந்தேன். வாழ்வில் குழப்பங்களை, தெளிவுகளை, ஏற்றங்களை, இறக்கங்களைத் தந்து திருப்புமுனையாக அமைந்த முடிவு அது. என்னை சமாதானப்படுத்தி, இரண்டாமாண்டு படிக்க அனுப்பினார்கள். இயற்கையின் ஒளி விளையாட்டை ரசிப்பதிலும், இயற்கையின் பேரழகை வியப்பதிலும், மனதிற்குப் பிடித்த பெண்ணைக் காதலிப்பதிலும் நேரம் அழகானதாக மாறியது. இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள், ‘இனி இவன் எஞ்சினியரிங் படிக்கவே முடியாது’ என்பதை பெற்றோருக்குத் தெளிவாக்கியது.

ஒளிப்பதிவாளராகும் கனவோடு சென்னை திரும்பினேன். திரைப்படக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. நூலகங்களில் போட்டோகிராபி பற்றி வருகிற அத்தனை புத்தகங்களையும் தேடித் தேடி படித்தேன். பணம் கட்டி கல்லூரியில் சேர்ந்தும் படிக்க முடிந்ததில்லை; போட்டோகிராபி பற்றி எந்த ஆசிரியரும் இல்லாமல் என்னால் தானாக கற்றுக்கொள்ள முடிந்தது. இவ்வளவு நாள் தவறான திசையில் பயணித்ததும், இப்போது சரியான பாதைக்கு திரும்பியதும் புரிந்தது. மற்றவர்களின் பார்வை, ‘பையன் இப்படி வீணா பாதை மாறிப் போறானே’ என்று வருத்தமாக மாறியது. வீட்டிற்கு மூத்த பையன் நான்; எனக்குப் பிறகு இரண்டு தங்கைகள் இருக்கிறார்கள். எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமோ என்கிற பெற்றோரின் பயம் நியாயமாகவே இருந்தது.

ஒரு ஒளிப்பதிவாளரிடம் உதவியாளனாக சேர்ந்தேன். எனக்கு முன்னால் பல சீனியர்கள் அங்கே இருந்தார்கள். ஆசை இருந்ததே தவிர, பெரும்பாலானவர்களுக்கு கேமராவின் அடிப்படை தொழில்நுட்பம் பற்றிய அறிவுகூட இல்லை. இவர்களைக் கடந்து என்னை நிரூபிக்க வேண்டும். போட்டியை ஜெயிப்பது சுலபம்; அறியாமையை ஜெயிப்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. அதனால் எங்கேயும் பொருந்திப் போக முடியவில்லை.

‘போட்டோகிராபி’ என்றால் கல்யாண போட்டோகிராபராகவோ, ஸ்டுடியோவில் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கிற ஆளாகவோ பார்த்துப் பழக்கப்பட்ட சமூகத்தில், என்னை அக்கறையோடு எதிர்கொள்கிற அனைவரின் கண்களிலும் இரக்கமே மிஞ்சியது. படிப்பும் கெட்டு, சினிமா வாய்ப்பும் கிடைக்காமல் தினமும் வாய்ப்பு தேடி அலைகிறவன் வாழ்வில் உருப்படாமல் போவதுதானே ஒரே வழி. நிமிர்ந்து பார்த்தால் மூன்றாண்டுகள் முடிந்துவிட்டது. என்னோடு படித்தவர்கள் டிகிரி முடித்து வேலைக்குத் தயாராக இருந்தார்கள். நான், ‘என்ன செய்யப் போகிறோம்’ என்கிற கவலைகூட இல்லாமல் இருந்தேன். அதுதான் பெற்றோருக்கு பெரிய பயத்தைத் தந்தது.
(திருப்பங்கள்
தொடரும்...)