அனுபவம்





அந்த பேக்கேஜிங் தொழிற்சாலையில் இன்டர்வியூ நடந்து கொண்டிருந்தது. பாட்டில்களிலும் பிளாஸ்டிக் டப்பாக்களிலும் இருக்கும் பொருட்களை கச்சிதமாக அட்டைப் பெட்டிகளில் பேக்கிங் செய்து வெளியூர்களுக்கு அனுப்பும் வேலை.

'இப்படிப்பட்ட வேலைகளை பொறுமையாகவும் திருத்தமாகவும் பெண்கள்தான் செய்வார்கள்’ என்பதால், பெண்களை மட்டுமே இன்டர்வியூவுக்கு அழைக்கச் சொல்லியிருந்தார் எம்.டி. வாசுதேவன்.

ஆனால், ‘நம்ம எம்.டி. சரியான ஜொள்ளு பார்ட்டியாக இருப்பார் போலிருக்கிறதே’ என நினைத்த மேனேஜர் டென்சிங், இன்டர்வியூவுக்கு வந்தவர்களில் சிவப்பாக, அழகாக இருந்த பெண்களை மட்டும் செலக்ட் செய்து முதலில் வரச் சொன்னான்.

சும்மா ஒப்புக்கு அவர்களை இன்டர்வியூ செய்த வாசுதேவன், வரிசையாக எல்லோரையும் நிராகரித்துவிட்டு, பின்னால் வந்த சுமாரான பெண்களையே வேலைக்கு செலக்ட் செய்து கொண்டிருந்தார்.

இன்டர்வியூ முடிந்ததும் டென்சிங் கேட்டான், ‘‘சார்! கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க. அழகான பெண்கள் யாரையும் நீங்க வேலைக்கு எடுக்கலையே... ஏன்?’’

வாசுதேவன் பதில் சொன்னார், ‘‘அழகான பெண்களை வேலைக்கு எடுத்தா, நம்ம சூப்பர்வைசர் பையன்கள் சதா அவங்க கூட கடலை போட்டுக்கிட்டு இருப்பாங்க. வேலைதான் கெடும்!’’

‘‘எப்படி சார் இதைக் கண்டுபுடிச்சீங்க..?’’
‘‘நானும் ஒரு பேக்கேஜ் நிறுவனத்துல சூப்பர்வைசரா இருந்துதானே இப்ப இந்தக் கம்பெனிக்கு முதலாளி ஆகியிருக்கேன்!’’ என்றார் வாசுதேவன்.