ரஜினி கூட நடிக்கக் கூப்பிட்டாங்க...





ஆண்களின் ஆதிக்கம் மிகுந்த உலகில், மதிப்பு வைக்கக் கூடிய அளவில் உயரும் ஒரு பெண்ணின் பயணம் கடினமானதுதான் - அதுவும் கவர்ச்சி மிகுந்த சினிமாவில் நடிகையாக வலம் வரும் பயணம் இன்னும் கரடுமுரடானது. அப்படி மதிக்கப்படும் நடிகைகளில் சமீபத்திய இணைவு, ராதிகா ஆப்தே.

ஐஸ்வர்யா ராயின் அழகுக் கண்களில், சுஷ்மிதா சென்னின் ஆளுமையைக் கலந்தால் அதுதான் ராதிகாவின் பார்வை. நடிக்கும்போது நொடிக்கொருமுறை மாறும் முகபாவங்களில், அவர் இந்திய மேடைகளில் பல மொழிகளில் வலம் வந்த நேர்த்தி மின்னுகிறது. மராத்தி, வங்கம், இந்தி, ஆங்கில மொழி நாடகங்களில் கடந்த ஏழு வருடங்களாக மேடையேறி வரும் ராதிகா, மேற்படி மொழிகளில் ஆங்கிலம் தவிர்த்து பிறமொழி திரைப்படங்களில் நடித்த அனுபவமும் கொண்டவர். நடிப்புப் பயிற்சியைக் கல்லூரியில் படிக்கவில்லையாயினும், பல திரைப்படக் கலைஞர்களை உருவாக்கிய பூனா நகரம்தான் ராதிகா பிறந்த மண்.

வியாபார சினிமாவின் ஒப்பனைகள் பூசிக்கொள்ளாத வனப்பில் மின்னும் ராதிகாவை தமிழுக்கு அறிமுகப்படுத்திய பெருமை ராம் கோபால் வர்மாவைச் சேரும். 'ரத்த சரித்திர’த்தில் விவேக் ஓபராயின் மனைவியாக நடித்தவர், தொடர்ந்து தமிழில் பிரகாஷ்ராஜின் ‘தோனி’யில் கவனிக்க வைத்தார். இருக்கும் அழகுக்கு ‘‘கதாநாயகியாகத் தான் நடிப்பேன்’’ என்றிருந்தால் பாலிவுட் கதவுகளே பரவலாகத் திறக்கும். ஆனால், ‘‘கதை பிடித்திருந்தால் எந்த கேரக்டரும் ஓகே’’ என்று ‘ரத்த சரித்திர’த்தில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகவும், ‘தோனி’யில் பாலியல் தொழிலாளியாகவும் நடித்திருந்தது ராதிகாவின் ஆரோக்கியமான அணுகுமுறையையும் துணிச்சலையும் சொன்னது. இப்போது ருத்ரன் இயக்கும் ‘வெற்றிச் செல்வனி’ல் அஜ்மலின் இணையாக நடித்து வருகிறார் ராதிகா ஆப்தே.



‘‘இந்திய நடிகைகளுக்கு இமேஜ் முக்கியமா இருக்கே... அதுபற்றிக் கவலைப்படலையா நீங்க..?’’ என்றால், ‘‘அது எனக்குத் தேவையில்லை. ஒரு படத்துக்கான வேடத்துல நடிச்சா, சாதாரண வாழ்க்கையிலும் அவங்க அப்படித்தான் இருப்பாங்கன்னு எல்லாரும் நினைக்கிறாங்களா என்ன..? நான் அதை நம்பலை. இங்கே எனக்கு வேலை நடிக்கிறது மட்டும்தான்...’’ என்கிறார்.
‘‘அப்படின்னா பணத்துக்காக நீங்க நடிக்கலை..?’’

‘‘மீண்டும் தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. பணத்துக்காகத்தான் நடிக்கிறேன். சம்பளம் இல்லாம ஏன் நடிக்கணும்? கமர்ஷியலா நடிக்கிறதைத் தவிர்க்கிறதால அபரிமிதமான பணம் கிடைக்காம இருக்கலாம். ஆனா நல்ல நடிகைக்குப் போதுமான பணம் கிடைக்குது இங்கே. என் உணவுக்காக சம்பாதிக்கவே நடிக்கிறேன்...’’

தெளிவாக இருக்கும் ராதிகா, ‘வெற்றிச் செல்வனி’ல் நடிக்க நேர்ந்ததும் அதில் அவர் ஏற்கும் பாத்திரம் துணிச்சலானது என்பதால்தானாம். ‘‘நியாயத்தைத் தட்டிக் கேட்கற, யாருக்கும் அஞ்சாத, லாயர் பாத்திரத்தை எனக்காக டைரக்டர் ருத்ரன் இதில கொடுத்திருக்கார். அவரே கூட தான் விரும்பியது கிடைக்கும் வரை விடாத உறுதியான டைரக்டரா இருக்கார். இந்த விஷயங்கள் இந்தப்படத்தின் மேல எனக்கு நல்ல நம்பிக்கையைத் தருது...’’ என்கிற ராதிகா, எதிர்வரும் தன் திருமண விஷயத்துக்கு தமிழ்ப் பத்திரிகைகள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகக் கருதுகிறார்.

தமிழ்ப்படங்களைப் பற்றிக் கேட்டால், ‘‘தமிழ் இண்டஸ்ட்ரி பற்றிக் கொஞ்சமே கொஞ்சம்தான் எனக்குத் தெரியும். நான் பார்த்த வரையில இங்கே ஒன்று ஹீரோயிஸம் தூக்கலா ஆணாதிக்கப் படங்கள் வருது; இல்லாட்டி பெண்ணியப் படங்கள் வருது. இயல்பான படங்கள் அரிதா இருக்குன்னு நினைக்கிறேன். நந்திதா தாஸ் நடிச்ச ‘அழகி’ படம் பார்த்தேன். ரொம்பப் பிடிச்சிருந்தது...’’ என்றார். இங்கே ரஜினியும், கமலும் பற்றி நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார் ராதிகா.

‘‘நான் லண்டன்ல இருந்தப்ப ‘ராணா’ படத்துக்கான ஆடிஷனுக்கு வரச்சொல்லிக் கேட்டாங்க. அது என்ன கேரக்டருக்குன்னு எல்லாம் தெரியாது. ஆனா எப்படியும் கலந்துக்க முடியாத தூரத்துல இருந்ததால, அதைத் தவிர்க்க வேண்டியதா போச்சு...’’ என்றவருக்கு அஜித், விஜய், விக்ரம் பற்றி அதிகமாகத் தெரியவில்லை. ‘‘ரத்த சரித்திரத்துல சூர்யாவோட நடிச்சதால அவரைத் தெரியும். அவரோட அற்புத நடிப்பை அருகிலிருந்தே பார்த்து ரசிச்சேன்...’’ என்கிறார் ‘சுத்த சரித்திர’ தோரணையில்.
- வேணுஜி
 படங்கள்: புதூர் சரவணன்