வந்தாச்சு





வலை Tamilpaa
சாணி பேப்பரில் சினிமா பாட்டுப் புத்தகங்கள் விற்பனையில் சக்கை போடு போட்ட காலம் மலையேறிவிட்டது. நேற்று ரிலீஸான பாடல் கூட இன்றைய சேனல்களில் 24 மணி நேரமும் ஓடுகிறது. ஆனாலும், இந்தக் காலத்திலும் சினிமா பாடல் வரிகளுக்காக ரசிக்கும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அவர்களுக்கான தளம்தான் www.tamilpaa.com.   கடந்த சில ஆண்டுகளில் வெளிவந்த எல்லா தமிழ்த் திரைப்படப் பாடல்களும் இந்தத் தளத்தில் இடம்பெற்றுள்ளன. பாடலை ‘க்ளிக்’ செய்தால் முழு பாடல் வரிகளும் தரிசனம் தரும். 80கள் 90களில் வந்த இனிமையான மெலடிகளும் இங்கே கிடைக்கும். பாடல்களை படம் வாரியாக மட்டுமல்லாது, பாடலாசிரியர்கள் வாரியாகவும் பட்டியலிட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

நெல்லைத் துறைமுகங்கள்

துறைமுகங்கள் வணிகத்தலங்கள் மட்டுமல்ல; பண்பாட்டு பந்தங்களை உருவாக்கும் கூடு தலமும் கூட. துறைமுகங்களின் வரலாறு, மனித வரலாறாகவே விரியக்கூடியது. தமிழ் சமூகத்தின் ஆதி அந்தங்களைப் புலப்படுத்தும் பெருமைமிகு அடையாளங்கள் பல துறைமுகங்களில் விளைந்தவைதான். அவ்விதமான தென்மாவட்டத் துறைமுகங்களை ஆய்வு செய்திருக்கிறார் காமராசு. 2500 ஆண்டுகள் பழமைமிக்க கொற்கைத் துறைமுகமே இந்நூலின் முக்கியக் களம். அத்துறைமுகத்தின் எல்லைகள், முத்துத்தொழில் வரலாறு, குலசேகரப் பட்டினம் இயற்கைத் துறைமுகம், பழைய ஏற்பாட்டில் ‘ஓபிரின்’ என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ள உவரி துறைமுகத்தில் நடந்த உலகளாவிய வர்த்தகம், தனுஷ்கோடி அழிந்த கதை, தூத்துக்குடி துறைமுகத்தின் சமகால வரலாறு என விரிவான சரித்திரத்தை எளிய மொழியில் பதிவு செய்துள்ளார்.  
(326 பக்கங்கள், விலை: ரூ.250/-, வெளியீடு: காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-24. பேச: 98404 80232.)

காற்றின் குரல்

இக்கவிதை குறுந்தகட்டில், ஜெயபாஸ்கரனின் 5 கவிதைகள் இடம்பெற்று ள்ளன. இசையும், சிறப்பு சப்தங்களும் சேர்க்கப்பட்டுள்ளது சிறப்பு. ஆலமரத்தின் கதை சொல்லும் கவிதையில், ‘‘இந்த மாபெரும் பூமியில் வாழ்கிற உரிமை மரங்களுக்கு இல்லையா..?’’ என்ற ஆதங்கமும், ஏக்கமுமாய் கவிதையை முடிக்கும்போது, நம் விழிகளில் பெருகும் கண்ணீர் ஆலமரத்தின் விதையாய் சொட்டுகிறது.

இளம்பிறை, ஜெயபாஸ்கரன், வீ.க.த.பாலன், தென்காசி மீனா, பர்வீன் சுல்தானா ஆகியோர் தங்கள் குரல் வழி 5 கவிதைகளையும் அலங்கரித்துள்ளனர். அ.தட்சிணாமூர்த்தி இசையமைத்துள்ளார். நல்ல கவிதைகளை நேசிக்க விரும்புவோர், காற்றின் குரலுக்கு செவி கொடுக்கலாம்.

(விலை: ரூ.100/-, கிடைக்குமிடம் : 14, நடேசன் நகர், ஆலப்பாக்கம் முதன்மைச்சாலை, போரூர், சென்னை. பேச: 044 -24515559.)

திசை எட்டும்

‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்’ என்று கனவு கண்டார் பாரதி. அண்மைக்காலமாக அதற்கான முயற்சிகள் ஆக்கப்பூர்வமாக நடந்து வருகின்றன. அதை ஒரு இயக்கமாக ஒருங்கிணைத்து நடத்துகிறது ‘திசை எட்டும்.’ சிற்றிதழ் தளத்தில் மொழிபெயர்ப்புக்கென இடைவெளியற்று வெளிவரும் ஒரே இதழ். நல்லி குப்புசாமி செட்டியாரின் பங்களிப்போடு வெளிவரும் இதில் ஆங்கிலம், சீனத்தோடு, பல்வேறு இந்திய மொழிகளின் ஆகச்சிறந்த படைப்பாளிகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளார்கள். எந்தப் படைப்பிலும் மொழிபெயர்ப்பின் இருண்மை நடை இல்லாதது பெரும் ஆறுதல். க.பஞ்சாங்கம் எழுதியுள்ள ‘மொழியாக்கம் என்னும் படைப்புக்கலை’ கட்டுரை, மொழிபெயர்ப்பு பற்றிய நுட்பமான செய்திகளை விவாதிக்கிறது.

(ஆசிரியர்: குறிஞ்சிவேலன், தனியிதழ்: ரூ.40/-, ஆண்டுச் சந்தா: ரூ.150/-, முகவரி: 6, பிள்ளையார் கோவில் தெரு, மீனாட்சிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி-607302, பேச: 94430 43583.)