ஏற்றம் தரும் எம்ப்ராய்டரி ஓவியம்





கைக்குட்டையை அலங்கரிக்கிற ஒற்றைப் பூவாகட்டும்... சேலையையோ, சுடிதாரையோ பிரமாண்டமாக்கும் ஆடம்பர டிசைன்களாகட்டும்... எம்ப்ராய்டரி எப்போதுமே தனி அழகு! அடிப்படைத் தையலோடு, எம்ப்ராய்டரிங் கலையில் அனுபவமும் பயிற்சியும் இருந்தால்தான் இதில் ஜொலிக்க முடியும் யாரும்.

சென்னையைச் சேர்ந்த வசந்தி கற்றுத் தருகிற 'மாக் எம்ப்ராய்டரிங்’ கலைக்கு இப்படி எந்த அனுபவமும் பயிற்சியும் அவசியமில்லை. ஒரே ஒரு வித்தியாசம்... இந்த எம்ப்ராய்டரியை உடைகளில் போட முடியாது. ஓவியங்களில் மட்டுமே போடலாம். ‘‘எம்ப்ராய்டரிங் கத்துக்கற ஆர்வமிருந்தும், நேரமோ, வாய்ப்புகளோ இடம் கொடுக்காதவங்களுக்கு இது சரியான சாய்ஸ். சாதாரண எம்ப்ராய்டரிக்கு தேவைப்படற எந்தத் தகுதியும் இதுக்கு வேண்டாம். தைக்கற வேலைகூடக் கிடையாது. ஆனா ஒரிஜினலா எம்ப்ராய்டரி பண்ணின மாதிரியே இருக்கும். அதுதான் இதோட சிறப்பு’’ என்கிற வசந்தி, கற்றுக் கொள்ள விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?
‘‘விருப்பமான ஓவியம், வெல்வெட் துணி, பிளைவுட், ஜர்தோசி நூல் (எல்லா கலர்களிலும்), குந்தன் கற்கள், மஞ்சள் மற்றும் வெள்ளை கார்பன், பசை, ட்வீசர்... ரூ.2 ஆயிரம் முதலீடு தேவை.’’

எப்படிப்பட்ட ஓவியங்கள்?
என்ன சிறப்பு?

‘‘சாமி உருவம், இயற்கைக் காட்சிகள், கார்ட்டூன்... இப்படி நமக்குப் பிடிச்ச எந்த உருவத்தையும் இந்த ஓவியத்துல கொண்டு வரலாம். வெல்வெட் துணியை அளந்து, வெட்டி, பிளைவுட்ல ஒட்டி, அதுக்கு மேல ஓவியத்தை டிரேஸ் எடுத்துட்டு, வரைஞ்சதுக்கு மேல டிசைன் பண்றதுதான் வேலை. எத்தனை நெருக்கத்துல பார்த்தாலும் எம்ப்ராய்டரி போட்டுத் தச்சது மாதிரியே இருக்கும். இதுக்கு ஓவியத் திறமையோ, தையல் கலையோ தெரிஞ்சிருக்க வேண்டியதில்லை. யார் வேணாலும் பண்ணலாம்.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?

‘‘சின்ன சைஸ் படம் ஒன்றுக்கு ஃபிரேம் செலவு உள்பட நமக்கு 300 ரூபாய்லேருந்து 500 ரூபாய் வரைக்கும் ஆகும். பெரிசுன்னா ஆயிரம் ரூபாய் ஆகும். 20 சதவீத லாபம் வச்சு விற்கலாம். சின்ன படத்தை 3 நாட்கள்லயும், பெரியதை ஒரு வாரத்துலயும் முடிக்கலாம். கைவினைக் கலைப் பொருள்கள் விற்பனைக் கடைகள், கண்காட்சிகள், ஃபேன்சி கடைகள்ல விற்பனைக்குக் கொடுக்கலாம். கல்யாணம், கிரகப்பிரவேசத்துக்கு சிலர் வாழ்த்து வாசகங்கள், பெயர்களோட சேர்த்து செய்து தரச் சொல்லியும் கேட்கறாங்க. அதுக்கும் நல்ல வரவேற்பு இருக்கு.’’

பயிற்சி?
‘‘2 நாள் பயிற்சி. ஒரு ஓவியத்துக்கான மெட்டீரியல்களுடன் சேர்த்துப் பயிற்சிக் கட்டணம் ஆயிரம் ரூபாய்.’’
- ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்